
சென்னை, ஜூலை 12- மாணவர்களின் நலன் கருதி தி.மு.க. ஆட்சியில்தான் கல்வித் துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியுள்ளார்.
கேள்வி:- 2013 ஆம் ஆண்டு செப்டம்பரில் இலங்கை வடக்கு பகுதியில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சொல்லியிருக்கிறாரே?.
பதில்:- ஆனால் தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாக தெரிகிறது. தேர்தல் நடத்துவதுகூட பிறகு இருக்கட்டும். இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதை எதிர்த்த மற்ற விடுதலைப்புலிகள்; பூசா முகாமுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப்புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டிவிட்டனர். இதனால் வவுனியா சிறையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கலவரம் ஏற்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து வவுனியா சிறையில் இருந்த 201 கைதிகளும், அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் தமிழ் கைதிகள் பலர் காயமடைந்துள்ளதோடு, கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்து விட்டார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிமலரூபன் உடலை பெற்றுக்கொண்ட அவரது பெற்றோர், தங்கள் மகன் உடலை வவுனியாவில் தகனம் செய்யப்போவதாக கூறினர்.
ஆனால் இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு கூட அனுமதி மறுத்து கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நிமலரூபனின் உடலை தகனம் செய்துவிட்டார்களாம். நிமலரூபனின் உடல் முழுக்க ரத்தம் படிந்திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத்துவமனையிலே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது, மாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற்காகத்தான் டெசோ மாநாடு நடைபெறுகிறது.
கேள்வி:- தீண்டாமை'' அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே "தலித்''களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாக சொல்லப்படுகிறதே?.
பதில்:- அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம்.
அதைவிட கொடுமை, வேற்று ஜாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு ஜாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?.
கேள்வி:- பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களில் 50 சதவிகிதத்தினர் கல்லூரிக்கு செல்லும் முதல் தலைமுறையினர் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறதே?.
பதில்:- ஆமாம், உண்மை. 2006-க்கு முன்னர் ஒரே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வந்த கல்வித் துறையை, தி.மு.க. ஆட்சியிலே தான் பள்ளி கல்வித்துறை எனவும், உயர் கல்வித்துறை எனவும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இரண்டு அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டன.
கிராமப்புற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையற்ற ஒரு சுமையாகவும், செலவுமிக்கதாகவும் இருந்த தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 5-3-2007 அன்று பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது.
நுழைவுத்தேர்வு இருந்தபோது, 2006 இல் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையின் மூலம் சேர்ந்த கிராமப்புற மாணவர் எண்ணிக்கை 24,670 மட்டுமே. நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டபின், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 2007 இல் 34 ஆயிரத்து 69 எனவும், 2008 இல் 50 ஆயிரத்து 589 எனவும், 2009-இல் 54 ஆயிரத்து 73 எனவும், 2010 இல் 76 ஆயிரத்து 73 எனவும் அதிகரித்தது.
இந்தியாவிலேயே முதன்முறையாக 2010-2011 ஆம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து கலந்தாய்வு முறையில் தொழிற்கல்வி பட்டப்படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டு; அரசுக்கு 168 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டில் சேர்ந்து பயிலும் 67,405 மாணவ மாணவியரும்; இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேர்ந்து பயிலும் 10,750 மாணவ மாணவியரும் பயனடைந்தனர்.
பொறியியல் கல்லூரிகளில் மேலும் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில்வதற்கு உதவும் வகையில் 2008-2009 ஆம் ஆண்டு முதல், பொறியியற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை தி.மு.க. அரசு அனைத்து பிரிவினருக்கும் குறைத்தது.
அதாவது, பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 55 சதவீதம் என்பதை 50 சதவீதம் எனவும்;
பிற்படுத்தப்பட்ட கிறித்துவ வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 50 சதவீதம் என்பதை 45 சதவீதம் எனவும்;
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 45 சதவீதம் என்பதை 40 சதவீதம் எனவும்;
பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தேர்ச்சி இருந்தால் போதும் என்பதை 35 சதவீதம் எனவும் இந்த அரசு குறைத்ததால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.
தி.மு.க. ஆட்சியில் மேற்கொண்ட முன்னுதாரணமான முயற்சிகளின் பயனாகத்தான் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர 1,80,071 மாணவர்கள் விண்ணப்பித்ததில், 86,997 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்ற பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களாவர். தமிழ் மொழியில் படித்தவர்கள், பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால், 2006 ஆம் ஆண்டு 15,000 பேர் என்ற அளவில் இந்த எண்ணிக்கை தற்போது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை என்ற அளவிற்கு உயரவும் தி.மு.க. அரசுதான் காரணம் என்பதையும் அந்த ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் தாய்மொழியில், அதாவது தமிழ் மொழியிலேயே படிக்கும் வசதியும் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் செய்யப்பட்டது. உயர் கல்வித்துறையிலே தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்கு முன்னேற்றங்கள் செய்யப்பட்டன என்பதை இந்த விவரங்கள் தெளிவாக்குமென்று நம்புகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கலைஞர் கூறியுள்ளார்.