
பெங்களூரு, ஜூன் 30- கருநாடக மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது.
சட்டவிரோத சுரங்க முறைகேடு விவகாரத்தில், லோக் அயுக்தா நீதிமன்றம் எயூடிரப்பா மீது குற்றம் சாட்டியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு கருநாடக பாரதீய ஜனதா அரசு தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகிறது.
எடியூரப்பாவின் பரிந்துரையின்படிதான் சதானந்த கவுடா புதிய முதலமைச்சர் ஆனார். தற்போது சதானந்த கவுடாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எடியூரப்பா, அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை முதலமைச்சராக்க முயற்சி செய்து வருகிறார்.
முதலமைச்சர் சதானந்த கவுடாவுக்கு எதிராக எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சதானந்த கவுடாவை நீக்க வேண்டும், அவருக்கு பதிலாக ஜெகதீஷ் ஷெட்டரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மேலிடத்தை அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், பாரதீய ஜனதா மேலிடம், இந்த பிரச்சினையில் எந்த முடிவையும் எடுக்காமல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும்வரை பிரச்சினையை தள்ளிப்போட முடிவு எடுத்துள்ளது. இந்த நிலையில் கட்சி மேலிடத்திற்கு நிர்பந்தம் கொடுப்பதற்காக எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் 9 பேர் நேற்று திடீரென்று ராஜினாமா செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, பெங்களூருவில் உள்ள அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரின் வீட்டில் நேற்று காலை எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூடினார்கள். மூத்த அமைச்சர் சி.எம்.உதாசி தலைமையில் நடந்த இந்தக் கூட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்தில், 9 அமைச்சர்கள் உதாசியிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ஷோபா 2. ஜெகதீஷ் ஷெட்டர் 3. முருகேஷ் நிராணி 4. பசவராஜ பொம்மை 5. ரேணுகாச்சார்யா 6. உமேஷ் கத்தி 7. ரேவுநாயக் பவுமகி 8. சோமண்ணா 9. சி.எம்.உதாசி.
பின்னர் நேற்று இரவு 7 மணியளவில், ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் இருந்து அவர் நீங்கலாக 7 அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை எடுத்துக் கொண்டு முதலமைச்சரின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு முதலமைச்சர் சதானந்த கவுடாவை அவர்கள் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.
ஜெகதீஷ் ஷெட்டர் நேரில் வராததால் அவரது ராஜினாமா கடிதத்தை சதானந்த கவுடா ஏற்கவில்லை. பின்னர் ஜெகதீஷ் ஷெட்டரும் நேரில் சென்று ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அமைச்சர் ஷோபா வெளியூர் சென்று இருப்பதால் அவரால் வர இயலவில்லை.
ராஜினாமா கடிதங்களை வாங்கிய சதானந்தகவுடா, அமைச்சர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக கட்சி மேலிட தலைவர்களுடன் அவர் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவரிடம், அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்கவும் வேண்டாம், நிராகரிக்கவும் வேண்டாம். குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று, கட்சி மேலிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
9 அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து இருப்பது, கருநாடக பாரதீய ஜனதா முதலமைச்சர் சதானந்த கவுடாவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
சதானந்த கவுடா தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 23 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 9 பேர் ராஜினாமா செய்து உள்ளனர். சட்டசபையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களின் பலம் 121 ஆக உள்ளது.
அவர்களில் எடியூரப்பா-ஜெகதீஷ் ஷெட்டர் அணியில் 60 பேரும், சதானந்த கவுடா அணியில் 61 பேரும் உள்ளனர்.