
சென்னை, ஜூன் 16- சென்னை நகரில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதாலும், திடீர் திடீரென மின் தடங்கல் ஏற்படுவதாலும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பாக்கெட் பால் அடிக்கடி கெட்டு விடுகிறது.
குளிர்சாதன பெட்டி (பிரிட்ஜ்) சரியாக இயங்காத காரணத்தால் கடைகளில் வாங்கும் பாலை வீடுகளுக்கு கொண்டு சென்று உபயோகப்படுத்தும் போதும் பால் கெட்டு விடுகிறது.
இதேபோல் அதிகாலையில் இறக்கப்படும் பாக்கெட் பாலை வாங்கி உடனே உபயோகப்படுத்தாவிட்டாலும் சில சமயங்களில் கெட்டு விடுகிறது.
இது குறித்து பல்வேறு புகார்கள் வந்த காரணத்தால் ஆவின் நிருவாகம் முன் ஏற்பாடாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி திடீர் ஆய்வு நடத்தினார்.
இதில் அரசு துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ஆவின் நிருவாக இயக்குனர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி கூறியதாவது:-
முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அறிவித்துள்ள பல்வேறு பால் வளத்திட்டங்களின் பயனாக ஒன்றியங்கள் மூலம் தற்போது பால் கொள்முதல் தினமும் 25.50 லட்சம் லிட்டராக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
எனவே பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தரமான பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் பண்ணைகளில் இருந்து குறித்த நேரத்தில் பால் வண்டிகளை அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோடை காலத்தில் மிக அதிக அளவில் வெப்ப நிலை இருப்பதால் பாலின் தரம் குன்றாமல் இருப்பதற்காக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, சரியான குளிர்பதன நிலையில் பதப்படுத்தி அனுப்ப வேண்டும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் பொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேவையான பால் மற்றும் பால் பொருள்களை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது பால் கெட்டுப் போகாமல் இருக்க குளிர் சாதன பெட்டியுடன் கூடிய வாகனத்தில் பால் பொருள்களை கொண்டு செல்லவும் தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஆவின் நிருவாக இணை இயக்குநர் சுப்பையன், பொதுமேலாளர் குமாரவேல் பாண்டியன், அதிகாரி துரைசாமி மற்றும் ஆவின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளை 18004253300 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.