-பேரா.சுப.வீ. நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம்!

சென்னை, மே 20-நாம் மீண்டும் பதவிக்குச் செல்வோம் என்பதைவிட, நம் இனத்தின் மான மீட்பு பற்றிச் சிந்திப்போம் - செயல்படுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் 5 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் 15.5.2012 அன்று மாலை நடைபெற்றது. அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
1950களில் சிலம்புச் செல்வர் மா.பொ.சி. திராவிட இயக்க எதிர்ப்பைத் தொடங்கி வைத்தார். 1990களின் நடுவில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஒரு பொய் முழக்கம் புறப்பட்டது. மீண்டும் திராவிட மாயை என்று திராவிடர்கள் பலரே பேசத் தொடங்கி உள்ளனர் என்று வரிசையாக இங்கே ஒரு பெரிய பட்டியலே போட்டிருக்கிறார். நீங்கள் இவற்றையெல்லாம் படிக்க வேண்டும். ஒவ்வொரு ஆதாரத்தையும் இங்கே மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லியிருக்கிறார்.
மாவட்ட முன்சீப் தேர்வில் நம்மவர்கள்
இன்றைக்கு பலன்பெற்றவர்கள் யார்? இன்று ஒரு செய்தி, விடுதலையிலே கூட சுட்டிக் காட்டி யிருக்கிறோம். அண்மையிலே நடந்த டிஸ்ரிக் முன்சீஃப், அதே போல டிஸ்டிரிக் சப் மேஜிஸ்ரேட் என்று சொல்லக்கூடிய குற்றவியல் நடுவர், மாவட்ட நீதிபதிகள் தேர்விலே பெரும் அளவுக்கு வெற்றி பெற்றவர்கள் யார் என்று சொன்னால், பிற்படுத்தப் பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்ளும், தாழ்த்தப்பட்டவர்களும்தான். முன்னேறியவர்கள் வெறும் 5 பேர்தான் வந்திருக்கிறார்கள் என்று இந்து பத்திரிகை போட்டு மனம் குமுறியிருக்கிறது. இவை, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பதற்கு அடை யாளமா? திராவிடம் இல்லையானால் இவர்கள் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா? எண்ணிப் பார்க்க வேண்டாமா?
தாழ்த்தப்பட்ட சமூக முதல் நீதிபதியை நியமனம் செய்தவர் யார்?
முதன் முதல் சென்னை உயர்நீதிமன்றத்திலே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நீதிபதி நூறு ஆண்டு வரலாற்றில் இல்லையே என்று பெரியார் கேட்டு, அதை ஒரு மாதத்திற்குள்ளாக செயல்படுத்திக்காட்டியவர்தான் இங்கே அமர்ந்தி ருக்கிற நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
இன்றைக்கு ஏன் ஆரியம் அவர் மீது சீறுகின்றது? ஒரே வார்த்தையில் சொன்னார். இது மூன்றாம்தர அரசு அல்ல, இது சூத்திர மக்களுக்காக இருக்கிற சூத்திர அரசு என்று சொன்னார். சூத்திர அரசுன்னு சொன்னதுதான் ஆரியத்தை பாதிக்க வைத்தது. அதற்கு தந்திரங்கள், சூழ்ச்சிகள் - இதுவரை ஆரியம் நேரிடையாக வென்றதில்லை. நம்முடைய கை களைக் கொண்டே நம் கண்களில் குத்த வைத்தி ருக்கிறார்கள்.
டெசோ தொடருகிறது
முள்வேலிக்குள்ளே ஈழத்தமிழர்கள் அவதிப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லும் போது - இது வரையிலே ஈழத்தமிழர்களுடைய பிரச்சினை உலகத்தின் பார்வைக்கு முதன்முதலாக விழுந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் மேலும் அழுத்தம் தேவைப்படுகின்றது. எனவே டெசோ மீண்டும் களத்தில் இறங்குகிறது. இதைக்கண்டு பார்ப்பான் ஏன் சீறுகிறான்? அவன் சீறுவது நமக்குப் புரிகிறது. என்? விபீசணர்கள் முன்னாலே போய் நிற்கிறார்கள்? இதுதான் ஆரியத்தினுடைய அணுகுமுறை, அவர்கள் நேரிடையாக வராமல் நம்முடைய அண்ணன் தம்பிக்குள்ளேயே விபீச ணர்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.
ஆரியர் - திராவிடர் ரத்தக் கலப்பு
பெரியார் சொன்னாரே ஆரியமும், திராவிடமும் கலந்தாச்சு! அது எங்களுக்கு ரொம்ப நாளைக்கு முன்னாலேயே தெரியும். இதுக்கு இரத்த பரி சோதனை அவசியமில்லை. தமிழர்களுடைய பண் பாட்டுத் துறையிலே எந்தப் பார்ப்பான் ஏற்றுக் கொள்கிறான்? சுந்தரனார் ஏன் சொன்னார் மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதின்னு? இன்னமும் அதன் நிலையென்ன?
நீதிமன்றம் ஓடுகின்றானே பார்ப்பான்?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொன்ன உடனே நீதிமன்றம் ஓடுகிறானே பார்ப்பான். ஓய்வறியாத ஒருவருக்கு ஓய்வு என்று சொல்லியிருக்கிறார். மேலும் உற்சாகத் துடன் உரையாற்ற சில நேரங்களில் ஓய்வு தேவைப்படு கிறது.
90 வயது இளைஞராக இருந்து மறுபடியும் களம் காணப்போகிறார். அவ்வளவுதானே தவிர வேறல்ல. பெரியாரிடத்தில் பயின்றவர்களுக்கு உழைப்பு என்பது என்ன? ஆட்சிக்கு போனால்தான் உழைப்பா? கோட்டைக்குள் இல்லையென்றால் அந்த நேரத்தில் மீண்டும் டெசோவை இன்னும் வேகப்படுத்துவார்கள். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இறுதி வெற்றி நமக்கே என்கிற வாய்ப்புகளை உருவாக்குவார்கள். இந்த வரலாற்றை இளைஞர்களுக்கு நாம் சொல்லியாக வேண்டும். அந்தப் பணியைத்தான் தோழர் சுப.வீ.அவர்கள் இந்தப் புத்தகங்கள் மூலமாக செய்து வருகிறார்கள்.
பொழுதுபோக்கு நூல்கள் அல்ல இவை
இந்தப் புத்தகங்கள் பொழுது போக்குக்காக படிக்கிற புத்தகங்கள் அல்ல. கூனன் நிமிறுவான். குருடன் விழிபெறுவான். வீழ்ந்தவன் எழுவான். வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி வரும். விசையொடிந்ததேகத்தில் வன்மை வரும் என்கிற அளவுக்கு முறுக்கேறிய சிந்தனைகளை இங்கே ஆக்கி இருக்கிறார்கள். இல்லையென்றால், என்னா கும்? ஆகிக்கொண்டு இருக்கிறதே. மின்சாரத் தட்டு பாட்டினால்தான் இருட்டா? சமுதாய இருட்டு அதைவிட பயங்கரமாக இருக்கிறதே. இதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அறிவு வெளிச்சம் என்று வேண்டாமா?
1927லே, திராவிட இயக்கங்கள் தொடங்கி, வேகமாக நடந்த காலத்தில் - எங்களைப் போன்ற வர்கள் எல்லாம் பிறக்காத காலம். அந்த கால கட்டத்திலே திராவிடர் இயக்கம் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் போது இதே சென்னைத் தலை நகரத்திலே, அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் நடந்த சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாட்டின் நடவடிக்கைகள். திராவிடர் இயக்கத்திற்கு பல நேரங்களில் ஆவணங்களே இல்லை. அது ஒரு பெரும் குறைபாடு. அது வரலாற்று உணர்வைக் குறைத்திருக்கிறது. அதையெல்லாம் தேடிப்பிடித்து திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவிலே செய்து கொண்டு இருக்கிறோம். இப்போது தயாராகிக் கொண்டிருக்கிற ஒரு நூல் இது. அதில் ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லு கிறேன். திராவிடத்தால் வீழ்ந்தோமா? எழுந்தோமா? சுப.வீ. நிறைய ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறார். கூடுதலாக சில செய்திகளை பெரியார் தொண்டன் என்கிற முறையிலே ஒரு சமுதாயப் பணியாளன் என்ற முறையிலே இந்த அறிவார்ந்த அவையிலே எடுத்து வைக்கிறேன். இங்கிருக்கிற இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1927லே தந்தை பெரியார், பனகல் அரசர், இன்னும் பல தலைவர்கள் கர்நாடகத்தில் இருந்து ஆந்திரத்தில் இருந்தெல்லாம் வந்து கலந்துகொண்டு சென்னையிலே இரண்டு நாட்கள் நடந்திருக்கிறது. அந்தக் காலத்திலே இளைஞர்களை வழி நடத்திய வர் சுரேந்திர நாத் ஆரியா என்பவர். அவர்தான் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்திருக்கிறார். இரண்டு தீர்மானங்களை மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். திராவிடத்தால் எழுந்தோம் என்ப தற்கு என்ன ஆதாரம் என்பதற்கு இதைப் பார்த்து இனி மேல் பேசுபவர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு திண்ணைப் பிரச்சாரத் திலே நீங்களெல்லாம் பதிலுரை சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இதை இங்கே சுட்டிக்காட்டு கிறோம்.
சூத்திரர் - ஒழிப்புத் தீர்மானம்
இந்த மாநாட்டிலே ஜன சங்கர கண்ணப்பர் திராவிடன் பத்திரிகை ஆசிரியர். பல தீர்மானங்கள் நிறைவேறுகின்றன. 1927லிலே சென்னையிலே அந்த மாநாட்டிலே பெரிய பந்தல், பெரிய ஆடம்பரம், இவ்வளவும் இருந்தது. மாநாட்டுக்கு பெயர் பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாடு அந்த மாநாட்டிலே பல தீர்மானங்கள் . அவற்றிலே முக்கிய மான தீர்மானம் கீழ்க்கண்ட தீர்மானத்தை ஜே.எஸ். கண்ணப்பர் முன்மொழிந்தார். சென்னை மாகாண அலுவலக ஆவணங்களில் சூத்திரர் என்ற சொல் பயன்படுத்தப்படுவதை இந்த மாநாடு கவலையுடன் பார்க்கிறது.
1927-லே அரசாங்கப் பதிவுகளில் நமக்கெல்லாம் என்ன பேரு தெரியுங்களா? நம்ம பெயர்களுக்கு முன்னால் சூத்திரன்னு பதிவாயிருந்தது. அரசு ஆவணங்களிலே சூத்திரன் என்றிருந்தது. பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக் கையிலான மக்களுக்கு அவர்களின் சுயமரியாதை உணர்வுக்கு பெரும் இழிவை ஏற்படுத்துவதாக இது அமைந்ததாகும்.
இதனை நீக்கத்தான் இந்தத் தீர்மானம்
எனவே, பழைய ஆவணங்களிலுள்ள இது போன்ற குறிப்புக்களை நீக்குவதுடன், அலுவலக ஆவணங்களில் சூத்திரர் என்ற சொல் எப்போதும் பயன்படுத்தக்கூடாது என்று அனைத்துத் துறைக ளுக்கும் ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று இந்த மாநாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது. என்று தெளிவாக எடுத்துச்சொல்லி, இந்தத் தீர்மானம், பார்ப்பனர் அல்லாத மக்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தின் சுயமரியாதை பற்றியதாகும்.
இதுவரை சூத்திரர் என்பதை மக்கள் ஒரு பெரிய மரியாதை போல ஏற்றுக்கொண்டு வந்துள்ளனர். ரிக்வேதம் மற்றும் மனுதர்ம சாஸ்திரத்தின்படி சூத்திரர்கள் என்றால் தாசி மக்களான அவர்கள் பார்ப்பனர்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் ஆவர்.
இந்தப் பட்டமும், அதனால் வரும்இழிவைவிட மோசமான இழிவு வேறெதுவும் இருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் வடசென்னையில் கறுப்பன் நகர் பிளாக் டவுன் என்று அழைக்கப் பட்டதை விட, மிகவும் மோசமானது. மக்களின் பெரும் எதிர்ப்பு காரணமாக நல்ல வாய்ப்பாக அது ஜார்ஜ் டவுன் என்று மாற்றப்பட்டது. சென்னை யிலே பிளாக்டவுன்தான் ஜார்ஜ் டவுன் என்று மாற்றப்பட்டது. அந்த எதிர்ப்பு காரணமாக அதை உதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள். பஞ்சமர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட பிரிவு மக்கள் கூட, அவ்வாறு தாங்கள் அழைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இப்போது ஆதிதிராவிடர்கள் என்றழைக்கப்படு கிறார்கள். இது திராவிடர் இயக்கத்தின் சாதனை. டாக்டர் நடேசனார்தான் தீர்மானம் கொடுத்த வர்கள். இதுதான் வரலாறு.
மீண்டும் மனுதர்மம் எச்சரிக்கை!
இன்றைக்கு எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்தால், ஒரு நொடிப் பொழுது நிலைமை தலைகீழாக மாறி பழைய சூத்திரன் வந்துவிடுவான். அரசாங்க ஆவணங்களிலே கூட சூத்திரன் என்று பதிவு செய்துவிடவேண்டும் என்று சொன்னால் நம்மாள் என்ன சொல்லுவான்? நல்ல ஆழ்வார்கள், நல்ல அடிமைகள் என்ன சொல்லுவான்? சூத்தி ரன்னு பச்சை குத்தணும்ணு என் நெத்தியில் குத்துன்னு சொல்லுவான். (பலத்த கைதட்டல்). இந்த திராவிடர் இயக்கம் இன்லை என்றால் நெத்தியைக் காட்டுவான், புத்தியைக் காட்ட மாட்டான். புத்தியைக் காட்ட வைத்த இயக்கம் எது நண்பர்களே? அப்படிப்பட்ட உணர்வைக் காட்ட வேண்டும். (பலத்த கைதட்டல்).
இந்தக் காலகட்டத்திலே பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன என்று நினைக்காதீர் கள். திராவிடத்தால் எழுந்தோம். எழுந்து கொண்டி ருக்கிறோம். அது நிலைக்க வேண்டும் என்றால், இன்று வெளியிட்டிருக்கிற ஆவணங்கள் (புத்தகங்கள்) ஆயுதங்கள். அதுதான் முக்கியம். இது வெறும் காகிதங்கள் அல்ல. ஆயுதங்கள். எண்ணிப் பார்க்க வேண்டாமா? உணர்ச்சி வர வேண்டாமா? இதோ பாருங்கள். கலைத்துறையிலே இருக்கிற வர்களுக்குத் தெளிவாகத் தெரியும். நம்முடைய சமுதாயத்தில் பரத நாட்டியத்திலே உயர்ந்த இடத்திற்கு வந்தவர் பால சரஸ்வதி அவர்கள். -(தொடரும்)