Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வ(வி)ழியால் தமிழர்களாக இருந்தால்தான் முன்னேற்றம்! தமிழர் தலைவர் அரிய விளக்கவுரை

ஈப்போ, ஏப். 17- நாம் மொழியால் மட்டும் தமிழர் களாக இருந்தால் போதாது. வழியால் தமிழர்களாக வரவேண்டும். இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நமது தமிழினம் முன்னேற்றமடையும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரையாற்றினார்.

மலேசிய நாட்டின், ஈப்போவில் நடைபெற்ற மலேசிய தமிழர் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் (14.4.2012) ஆற்றிய உரை வருமாறு:

நான் இந்த நகரத்தின் மாப்பிள்ளை

மலேசியத் திருநாட்டில் இப்படி நல்ல மாநாடு இங்கே கூட்டப்பட்டிருப்பது ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியிருக்கிறது என்று நினைக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையிலே எனக்கு அறிமுகம் தேவையில்லை என்று சிறப்பாகச் சொல்லி ஏதோ ஒரு அறிமுகம் எந்த அறிமுகம் எனக்குத் தேவையோ அந்த அறிமுகத்தை நிறைவாக செய்தார் தோழர் அருள் அவர்கள். நான் ஒரு பெரியார் பெருந்தொண்டன் என்பதுதான் எனக்கு இருக்கின்ற மிக முக்கியமான அறிமுகம் (கைதட்டல்).

எனவே அந்த அறிமுகத்தை அவர்களும் சொன்னார்கள். பெரியவர் மாணிக்கம் அவர்களும் நினைவூட்டிக் கொண்டிருந்தார்கள். நான் ஈப்போவில், மலேசியத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமையாகக் கருதுகிறேன். உறவோடு கலந்து கொள்கிறேன். நண்பர்கள் சிலருக்குத் தெரியும். நான் இந்த நகரத்தின் மாப்பிள்ளை. எனவே ஈப்போ எனக்குப் புதிதல்ல. எனவே இங்கே இருக்கிற தமிழர்களை சிறப்பான முறையில் எத்தனையோமுறை சந்தித்திருக்கிறோம். அவர்களோடு கலந்துரையாடியிருக்கின்றோம் என்று சொன்னாலும் கூட இன்றைய சூழலிலே இப்படி ஒரு மாநாடு நடைபெறுகிறது. அதுவும் வள்ளுவரை மிகைப்படுத்தி காலையிலே வள்ளுவர் சிலையைத் திறந்தபொழுது அங்குள்ள நிலைமையை சூழலே புதுமையாக இருந்தது. என்ன வேகமாக எரிகிறது என்று மாண்புமிகு துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்கள் கேட்டார். அப்பொழுது நான் அவர்களிடத்திலே சொன்னேன்.

அறிவுச்சுடரை ஏற்றியவர் வள்ளுவர் அல்லவா!

அறிவுச்சுடரை ஏற்றியவர் வள்ளுவர். ஆகவேதான் இரண்டு பக்கமும் சுடர்கள் எரிகின்றன. ஏனென்றால் தமிழர்களுக்கு இப்பொழுது தேவையானது அறிவுச் சுடர். இருட்டிலே இருந்து அவர்களை வெளியிலே கொண்டு வரவேண்டும்.

அதற்கு வள்ளுவம்தான் சரியான வாழ்வியல் வழிகாட்டி. இந்த நேரத்திலே ஒன்றை நான் சொல்ல வேண்டும். நான் பொதுவாக இப்படி கலந்து கொள்ளுகிறபொழுது எந்த கருத்தாக இருந்தாலும், அந்தக் கருத்தை அவரவர்கள் சொல்லுவதற்கு உரிமை உண்டு. ஒரு பொது அரங்கத்திலே பல பேர் பேசுகிற நேரத்திலே எல்லோரும் ஒரே கருத்தோடு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தேவையுமில்லை. அது ஆரோக்கியமானதாகவும் இல்லை.

மாறுபட்ட கருத்தாக இருந்தாலும்

மாறுபட்ட கருத்துக்கள் எப்போதுமே வரவேற் கப்பட வேண்டும். அதற்கு நாம் மூடுவிழா செய்துவிடக் கூடாது. அதற்குத் தடைகள் ஏற்படுத்தக் கூடாது.

ஏனென்றால் வந்திருக்கின்றவர்கள் சிறப்பான வர்கள் அவர்கள் அறிவுக்குத் திரைபோடாதவர்கள். அவர்கள் சிந்திக்க வேண்டியவர்கள்.
வள்ளுவருடைய பெருமையே எதனால்? பகுத்தறி வாளராகிய நாங்கள், தந்தை பெரியாருடைய தொண்டர்களாக இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்கள் வள்ளுவத்தை மிகப்பெரிய அளவுக்கு ஆதரிப்பது பரப்புவது வள்ளுவம் வாழ்வியலாக மாறவேண்டும் என்று சொல்லுவது மக்களுக்கு ஒளியூட்டக் கூடியதாக அமைய வேண்டும் என்று சொல்வதினுடைய நோக்கமே வள்ளுவருடைய பெருமையே எங்கிருக்கிறதென்றால் 1330 குறள்கள் எழுதினார் என்பது அல்ல.

வள்ளுவர் குறளில் சிறப்பு எது தெரியுமா?

மாறாக எத்தனையோ சிறப்புகளை வள்ளுவரை அவருடைய குறளைப் பற்றிச் சொன்னதாக இருந்தாலும் வள்ளுவருடைய குறளிலே ஒன்று மற்ற மத நூல்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு வள்ளு வருடைய திருக்குறளிலே உண்டு.

அது என்ன என்று சொன்னால் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொன்னார். எனவே எந்தக் கருத்தாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதே. உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறது என்று பார்த்து அதை ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஏற்றுக் கொள்.

மெய்ப்பொருள் காணுங்கள் அதுதான் மிக முக்கியம். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் என்று இரண்டு முறை சொன்னார். வெவ்வேறு இடங்களில் வள்ளுவர் சொன்னதினுடைய அடிப்படையே ஒரு பொருளை கேட்டறிந்து கொள்வது அல்லது பார்த்துத் தெரிந்து கொள்வது.

எந்த நிலையாக இருந்தாலும் உன்னுடைய அறிவு, ஆய்வு என்ன சொல்லுகிறது என்று எண்ணிப் பாருங்கள் என்று சொன்னார். இதுதான்

வள்ளுவரு டைய குறளிலே மிகச் சிறப்பு.

நம்பு - நம்பாவிட்டால் நரகம்

இதற்கு முன்னால் இருந்த நூல்களைப் பற்றி எல்லாம் சொன்னார்கள் அல்லவா?  நம்பு நம்பா விட்டால் நரகம். ரவுரவாதி நரகம் அங்கே போட்டு உன்னை வாட்டுவார்கள். உனக்கு நரகத்தில் பலவித மான தண்டனைகள் உண்டு என்று நம்ப வைத்தார்கள். அச்சுறுத்தினார்கள்.
ஏற்றுக்கொள்ளாவிட்டால் உனக்கு நல்வாழ்வு கிடைக்காது என்று பயமுறுத்திய நேரத்திலே உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறது. அதற்கு முன்னுரிமை கொடு என்று சொன்னார்கள். என்னைப் பெரியார் தொண்டன் என்று இங்கு அறிமுகப் படுத்தினார்கள்.

உன் அறிவு என்ன சொல்லுகிறதோ...!

தந்தை பெரியார் எங்கே உரையாற்றினாலும் அவர் தன்னுடைய உரையைத் தொடங்கும் பொழுதும் சரி, இறுதியிலே முடிக்கும்பொழுது சரி. நான் சொன்ன கருத்தை எல்லாம் சிந்தித்துப் பாருங்கள். யார் சொன்னாலும் ஏற்காதீர்கள்.

உங்களுடைய அறிவு என்ன சொல்லுகிறதோ அதைக் கேட்டு அதன்படி நடங்கள் என்றுதான் தனது உரையைத் துவக்குவார் தந்தை பெரியார் அவர்கள்.

ஒரு முறை தந்தை பெரியார் அவர்கள் கல்லூரியிலே பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது ஒரு மாணவர் எழுந்து துணிச்சலாகக் கேட்டார். யார் சொன்னாலும் நம்பாதே என்று சொல்லுகின்றீர்களே!

நீங்கள் சொல்வதை நம்ப வேண்டுமா?

அப்படியானால் நீங்கள் சொல்லுவதை நம்புவதா? இல்லையா? என்று கேட்டவுடனே பெரியார் சொன்னார் சிரித்துக் கொண்டே, நான் சொல்லுவதை யும் நம்பாதே. உன்னுடைய அறிவு என்ன சொல்லு கிறதோ அதற்கே முன்னிடம் கொடு என்று தான் பதில் சொன்னார். தமிழர்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்னாலே ஓர் அற்புதமான வாய்ப்பு.

ஒரு பண்பாட்டின் மீது படை எடுப்பு நடந்த பொழுதுதான் வள்ளுவர் குறளை எழுதி இப்படி எச்சரிக்கை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானோம்.
எனவேதான் சில கருத்துக்களை தமிழர்களுக்கு எடுத்து வைக்கிற பொழுது தாராளமாக அந்தக் கருத்துக்களை எடுத்து வைக்கக் கடமைப்பட்டிருக் கின்றோம்.

அதுவும் எங்களைத் தெரிந்து அழைத்திருக்கின்ற பொழுது எங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்வது எங்களுடைய உரிமை. என்னுடைய கடமையும் கூட. யாருக்காகவும் நான் பின்வாங்கப் போவதுமில்லை.

அருள்கூர்ந்து நண்பர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

என்னுடைய கருத்தை எனக்கு எடுத்துச் சொல்ல உரிமை உண்டு. அந்தக் கருத்து ஏற்புடையதென்றால் அதைத் தள்ளுவதோ அது உங்களுடைய உரிமை. கொள்ளுவதற்கும், தள்ளுவதற்கும் உரிமை இருக்கின்ற காரணத்தால் தான் அதைத் தள்ளுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்ற அடிப்படையிலே இந்தக் கருத்துக்களைத் தெளிவாகச் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

இருந்தாலும் நமது டத்தோ அமைச்சர் அவர்கள் பேசும் பொழுது சொன்னார். மிக அருமையான ஒரு கருத்தைச் சொன்னார்.

பழம் பெருமை பேசி காலத்தைத் தள்ளுவதோ?

வெறும் பழம் பெருமையைப் பேசிக் கொண்டே காலத்தை தள்ளாதீர்கள் என்று சொன்னார். நம்முடைய மாநாடுகளிலே, நம்முடைய கருத்தரங்குகளிலே மொழியைப் பற்றி, இலக்கியங்களைப் பற்றியெல்லாம் பேசும்பொழுது புதிய பார்வை காலத்திற்கு ஏற்ப வேண்டும் என்று மிக முக்கியமாகச் சொன்னார்கள். அதுவும் நம்முடைய வாழ்வியலுக்கு மிக முக்கியமாகத் தேவை. பேராசிரியர் ராஜேந்திரன் அவர்கள் இதைப் பற்றி மிக அருமையாகச் சொன்னார். எப்படி மீள்மனம் இருக்க வேண்டும் என்பதை மிக அருமையாகச் சொன்னார். அந்த அடிப்படையிலே மிக முக்கியமாகச் சிந்திக்க வேண்டும்.

மெய்ப்பொருள் காண்பதறிவு என்பது எது நமக்கு நன்று, எது நமக்குத் தீமை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாம் சரிதான். ஆகவே எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். காலம் காலமாக இருந்தது என்பதற்காக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதைவிட தலையாய மூடநம்பிக்கை வேறு கிடையாது.

அந்த மூடநம்பிக்கையிலிருந்து தமிழன் தன்னை விடுவித்துக் கொண்டால் ஒழிய அவன் மூளையிலே சேர்த்து வைத்திருக்கிற குப்பையை ஒருபோதும் தூக்கி எறிந்துவிட முடியாது.

எனவேதான் தமிழர்கள் ஒன்றுபட வேண்டுமானால் ஜாதிக் குப்பையைத் தூக்கி எறியவேண்டும் என்று பெரியார் அவர்கள் முழங்கிய நேரத்திலேதான் தமிழர்கள் என்ற உணர்வே தோன்றியது.

இல்லையானால் எல்லோரும் அங்கே தனித்தனி தான் என்று சொல்லக்கூடிய அளவிலேதான் இருக்கிறது. இது என் ஜாதி. இது உன் ஜாதி என் றெல்லாம் சொல்லக்கூடிய நிலையிலிருந்து இன்றைக்கு மாறியிருக்கிறது என்று சொன்னால் தமிழர்கள் என்றொரு அடையாளம் சாதாரணமான அடை யாளம் அல்ல. அதிலே கூட தமிழர்கள் என்று வருகின்ற பொழுது மதத்தால் மாறுபட்டவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் இனத்தால் தமிழர்கள், மொழியால் தமிழர்கள், தமிழர்களுக்கு என்ன வரையறை என்று சொல்லும்பொழுது பேரறிஞர் அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னார்கள்.

தமிழர்கள் என்றால் தமிழ் மொழி பேசுகிறவர்கள் எல்லாம் தமிழிலே எழுதுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று எளிதாகக் கொண்டு விட முடியாது.

அண்ணா சொன்ன அற்புத விளக்கம்

மாறாக அழகாக விழிப்பாக அண்ணா அவர்கள் சொன்னார்கள். நல்ல ஆங்கிலம் பேசுகிறவர்களை எல்லாம் ஆங்கிலேயர்கள் என்று ஒப்புக் கொள்கிறார் களா? ஆங்கிலம் பேசுவதினாலேயே நாம் ஆங்கிலேயர் களாக ஆகிவிடமுடியுமா? முடியாது ஒரு போதும்.
அதற்கு வழி என்ன என்று சொல்லும் பொழுது அண்ணா அவர்கள் அவருக்கே உரிய அற்புதமான முறையில் மூன்று சொற்களினாலே சொன்னார்கள்.

மொழியால் தமிழன், வழியில் தமிழன், விழியால் தமிழன் என்று சொன்னார்கள். இந்த மூன்றும் ஆழமான பொருள் கொண்டவை. வார்த்தைகள் எளிது. பொருளோ ஆழமானது. ஆனால் நண்பர்களே நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

வழியால் தமிழர்களாக இருக்க வேண்டும்

நாம் மொழியால் தமிழர் மட்டுமல்ல. நாம் வழி யாலும் தமிழர்களாக இருக்க வேண்டும். நம்முடைய நாட்டில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்றிருந்த நாட்டில் எப்படி ஜாதிகள் வந்தன?

ஜாதியைப் பின்பற்றக் கூடியவர்கள், ஜாதியை நம்பக் கூடியவர்கள் தொடர்ந்து ஆதிக்க நிலையில் இருந்திருந்தால் தமிழ் கூறும் நல்லுலகத்தின் சூழ்நிலை எந்த அளவுக்கு இருந்திருக்கும்?

மனித நேயத்தோடு

எனவே நம்மைத் தமிழர்களாக ஆக்கி, அதைவிட மேலாகி தமிழர்களாக நிற்கிறோமா, மனித உறவோடு நிற்கிறோமா என்று எண்ணிப் பார்க்க வேண்டிய அந்தக் கட்டத்திற்கு நாம் வந்தாக வேண்டும்.

எனவே மனிதம் என்பது மிக முக்கியம் ஆனால் மனிதத்தை எங்கேயிருந்து தொடங்குவது என்று சொல்லும்பொழுது அவரவர்களுக்கு வீடுகள் எப்படி முகவரிக்குரிய இடமோ அதுபோலவே அவரவர் களுடைய மொழியும், அவரவர்களுடைய இனமும் மிக முக்கியமானது.
மலேசிய தமிழர்களின் உணர்வு

அந்த வகையிலே மலேசியத் தமிழர்கள் அற்புதமான வகையிலே இந்த உணர்வைத் துவக்கியிருக்கிறார்கள். தமிழ்கூறும் நல்லுலகம், தமிழ்நாடு என்று இருந்தாலும் அங்கே எல்லாம் பல்வேறு சோதனைகள்.

காலையிலே கூட அமைச்சர் அவர்கள் சொன்னார். பாடல்கள் மற்றவைகள் எப்படி எப்படி வந்து கொண்டிருக்கின்றன என்று. நான் கூடச் சொன்னேன். மோசமான பாடல்கள் எல்லாம் வந்திருக்கின்றனவே என்று சொன்னபொழுது இங்கே அந்த அளவுக்கு மோசமடையவில்லை. தமிழர்கள் உணர்வோடு இருக்கிறார்கள்.

கடல் கடந்த மண்ணிலாவது உணர்வோடு இருக்கிறார்களே என்று சொன்ன பொழுது ஆம்! தமிழ்நாட்டிலே இருக்கின்ற ஊடகங்களைப் போல தமிழ்நாட்டிலே இருக்கின்ற தொலைக்காட்சிகளைப் போல இங்கே மோசமான அளவுக்கு நிறைய வாய்ப்புகள் இல்லாது விட்டதினால்தான் கெட்டுப் போகாத தமிழர்களாக இந்த விழுதுகள் பலமாக இருக்கின்றன.

வேர்கள் கொஞ்சம் அரித்துக் கொண்டிருக்கின்ற சூழல்கள் இருந்தால்கூட அதைத் தாங்கும் நிலை இருக்கிறது.

- (தொடரும்)



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்