எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்!'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை

பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவாமி அசீமானந்தா உட்பட 4 பேரை தேசிய புலனாய்வு நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா ரயில் பானிபட் வழியே சென்று கொண்டிருந்த போது அதன் இரண்டு பெட்டிகளில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 68 பேர் உயிர் இழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டது. இந்த வழக்கில் 8 பேர் குற்றம்சாட்டப்பட்டனர்.

இந்த 8 பேரில் வெடிகுண்டு தாக்குத லுக்கு மூளையாக செயல்பட்ட சுனில் ஜோசி 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்டார். (அதுவும் மர்மம்தான்)

முக்கிய குற்றவாளியான சுவாமி அசீமானந்தா என்றழைக்கப்படும் நாபா குமார், லோகேஷ் ஷர்மா, கமல் சவுகான் மற்றும் ராஜிந்தர் சவுத்ரி ஆகிய நான்கு பேர் என்.அய்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

மீதமுள்ள 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மூவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்த மார்ச் `11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ் தான் பெண் ஒருவர் இந்த வழக்கு தொடர்பாக சில சாட்சியங்களை முன் வைக்க அனுமதி கோரியதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புல னாய்வு நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அசீமானந்தா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பளிப்பதற்கு முன் பாகிஸ்தான் பெண் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜகதீப் சிங் தள்ளுபடி செய்தார்.

அசீமானந்தா ஒப்புதல்

இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர், 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியானமுன்னாள்ஆர்.எஸ்.எஸ். காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டில்லி உயர்நீதி மன் றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்கு மூலமே தந்திருந்தார்.

'கேரவன்' பேட்டி

கேரவன் ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத செயல்களை வெளிப்படையாக அவர் ஒப்புக் கொண்டதோடு இதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்று அவர் கூறினார். டெல்லி மாநகர் நீதிமன்றத்திலும் இதேபோல் ஒப்புதல் வாக்குமூலம் தந்த பிறகும் இப்போது டில்லி சிறப்பு நீதிமன்றம் அவரை நிரபராதி என்றும் அவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை என்றும் விடுதலை செய்துவிட்டது. கேரவன் ஏட்டில் அவரது பேட்டி வெளி வந்தவுடன், வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் இவை உண்மைக்கு மாறானவை என மறுத்தன. அதைத் தொடர்ந்து அவரது பேட்டியின் ஒலி நாடா இணையத்தில் ஒலிப்பதிவாக வெளியிடப்பட்டது.

நான் அசீமானந்தாவை பேட்டி கண்டபோது அவர் தான் சித்தரவதை செய்யப்பட்டதாக சொல்வதையும், தன் ஒப்புதல் வாக்குமூலங்கள் கட் டாயப்படுத்திப் பெறப்பட்டவை என்பதையும் மறுத்தார். குண்டு வெடிப்புக்காக தன்னை சி.பி.அய். கைது செய்தபோதுதான் இதையெல்லாம் சொல்ல நல்ல நேரம் வந்துவிட்டது. இதற்காக என்னை தூக்கில் போடலாம். அதனாலென்ன, எப்படியும் எனக்கு வயதாகிவிட்டது என்று முடிவெ டுத்ததாக சொன்னார்.

அவரோடு நான் நடத்திய உரை யாடல்களில், அசீமானந்தா தான் ஈடுபட்ட இந்த சதியின் விவரங்களை மேலும் மேலும் விரிவாகவே தெரிவித்தார். அவ ருடன் என்னுடைய மூன்றாவது, நான் காவதுசந்திப்புகளின்போது,அவர் இந்த பயங்கரவாத செயல்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்.சின் உச்சமான தலை மையின் ஒப்புதலுடன் நடந்தவை என்று கூறினார். அப்போது சங்கத்தின் செயலாளராகவும் இப்போது தலைவராகவும் இருக்கும் மோகன் பகவத் மட்டத்தில் இந்த ஒப்புதல் தரப்பட்டது.  இது நடப்பது மிக முக்கியம். ஆனால் இதில் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சம்பந்தப்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பகவத் தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா இந்த வன்முறையைப் பற்றி என்னிடம் கூறினார்.

ஜூலை 2005இல் நடந்த ஒரு கூட்டம் பற்றி அசீமானந்தா எனக்கு சொன்னார். சூரத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். சந்திப்புக்குப் பின்னர், பகவத்தும் தற்போது அமைப்பின் சக்தி வாய்ந்த ஏழு உறுப்பினர் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருக்கும் இந்திரேஷ் குமாரும், இரண்டு மணி நேரம் பயணம் செய்து குஜராத்தில் அசீமானந்தா வசித்துக் கொண்டிருந்த டாங்க்ஸ் பகுதி கோவிலுக்கு வந்தார்கள்.

கூட்டுச் சதி

கோவிலிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றங் கரையில் இருந்த ஒரு கூடாரத்தில் அவர்கள் அசீமானந்தாவையும் அவர் கூட்டாளிகளில் ஜோஷியையும் சந்தித்துப் பேசினார்கள். திட்டத்தை இரு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் அங்கீகரித்தார்கள். பகவத், நீங்கள் இதை செய்ய வேண்டும் என்றார். இந்திரேஷ், இதை சுனிலுடன் சேர்ந்து செய்யுங்கள். நாங்கள் நேரடியாக சம்பந்தப்பட மாட்டோம். ஆனால் இதைச் செய்வதில், இதில் நாங்களும் உங்களுடன்தான் இருக்கிறோம் என்றார்.

சுவாமிஜி, நீங்கள் இதைச் செய்வதால் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. எதுவும் தப்பாக நடக்காது. இதை கிரிமினல் குற்றமாக யாரும் ஆக்க முடியாது. நீங்கள் இதைச் செய்தால், மக்கள் யாரும் ஒரு குற்றத்தை நாம் செய்ததாக சொல்லப் போவதில்லை. அது நம் சித்தாந்தத்துடன் பொருந்தியதாகவே பார்க்கப்படும். இது ஹிந்துக்களுக்கு மிகவும் முக்கியம். தயவுசெய்து செய்யுங்கள். நிச்சயமாக, எங்கள் ஆசிகள் உண்டு. எங்கள் ஆசிகள் உண்டு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா தெரிவித்தார்.

விசாரணை அமைப்புகள் பதிவு செய்த குற்றப் பத்திரிகைகளில் குமார் சதிகாரர்களுக்கு தார்மீக ஆதரவும் நடைமுறையில் பொருள் ரீதியான ஆதரவும் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், பகவத் போன்ற மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் யார் பெயரும் அதில் சம்பந்தப்படுத்தப்படவில்லை. குமாரை ஒரு முறை சி.பி.அய். விசாரித்தது. பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடர்ந்தபோது, அசீமானந்தா, பிரக்யா சிங் மட்டத்துக்கு அடுத்த மட்டத்தில் இருப்பவர்களின் சதித் தொடர்பு பற்றி விசாரணையை எடுத்து செல்லவில்லை. (இந்தச் சதித் திட்டத்தில் குண்டுகள் தயாரித்து வைத்தவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட பலருடனும் தொடர்புகள் ஏற்படுத்தி அனைவருக்குமான இணைப்பு இழையாக செயல்பட்டதாக கருதப்படும் ஜோஷி 2007 டிசம்பரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்).

இதற்குமுன் இன்னொரு முக்கிய குற்றவாளியாக சிறையில்  அடைக்கப்பட்டிருந்த பிரக்யா சிங் என்ற பெண் சாமியார் விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner