எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது!

* அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பிறகு நமது சாதனைகளைத் திரும்பிப் பார்த்தால், நமக்கே வியப்பாக இருக்கிறது. அவர்கள் தந்த சுடரைத் தூக்கிப் பிடித்து இலட்சியங்களை ஈடேற்ற நமது கடமைப் பயணத்தைத் தொடருவோம் என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

நம்அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்அவர்கள் மறைந்து 41ஆண்டுகள் ஆகும் நிலையில், வருத்த மும், துயரமும் நம் அனைவரையும் கப்பிக் கொண் டிருந்தாலும், அய்யா அவர்கள் இயக்கச் சொத்துகளைக் காக்கும் பொறுப்பையும், கடமையையும் அன்னை யாரிடம் ஒப்படைத்தார் - அம்மா அவர்கள் அந்தக் கடமையைச் சிறப்புடன் செய்து வரலாறு படைத்தார்.  கழகத் தலைவராகவும் பரிமளித்தார்!

சென்னை பெரியார் திடலின் முகப்பில் உள்ள ஏழு அடுக்கு மாடிக் கட்டடத்தைக் கட்டி முடித்தார்; பொறியாளர் என்.எஸ்.ஏகாம்பரம் அவர்கள் அதற் குப் பெரிதும் உதவியவர்; இன்னமும் தனது 89 ஆம் ஆண்டிலும் அதே இயக்க உணர்வோடும், கொள் கைப் பற்றோடும் இருந்து வருகிறார் - அவரது வாழ்வி ணையர் டாக்டர் சரோஜினி அம்மையார் உள்பட.

அன்னை மணியம்மையார் வளர்த்த கல்வி நிறுவனங்கள்

அன்னையாரின் சொத்துக்களை அவர்கள் அய்யா மறைந்த ஓராண்டுக்குள் - தனது உடல் நலிவை எண்ணி அவசர அவசரமாக பொது அறக்கட்டளையாக்கி (பெரியார் - மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்) - பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையாக்கி, அதன் காரணமாக கடந்த 38, 39 ஆண்டுகளாக தஞ்சை வல்லத்தில் பெரியார் நூற்றாண்டுப் பாலிடெக்னிக் காலேஜ், உலகின் முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி, பிறகு பெரியார் - மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம், 38 ஆண்டுகளாக திருச்சி மருந் தியல் கல்லூரி மற்றும் அன்னை அவர்களால் திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் அதன் மேல்நிலைப்பள்ளி விரிவாக்கம், புதிய பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகம்மைக் குழந்தைகள் இல்லத்திற்குப் பல புதிய கட்டடங்கள், பள்ளிகளின் விரிவாக்கம் இப்படி வளர்ச்சி என்பது சிறிதும் தளர்ச்சியின்றி நடைபெற்று வருகிறது.

சிறுகனூர் 'பெரியார் உலகம்!'

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறு கனூரில் உள்ள 35 ஏக்கர் பெரியார் - மணியம்மை அறக்கட்டளைக்கான நிலத்தில், பெரியார் உலகம் உருவாக்கத் திட்டமிடப்பட்டு, பல கட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இயக்கக் குடும் பத்தவர்கள் அங்கே 2 ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற மாநாட்டின்போது நேரில் கண்டு அக மகிழ்ச்சியுற்றனர்!

இவ்வாண்டு அன்னையாரின் நூற்றாண்டுத் தொடக்க விழா மாநாடு  வேலூரில் - 2019 மார்ச் 10 இல் மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது - மக்களின் மகத்தான பேராதரவு - கட்சி, ஜாதி, மதம் கடந்து சிறப்பான ஒத்துழைப்பைப் பெற்று, நடந்து வரலாறு படைத்தது!

ஈ.வெ.ரா.மணியம்மை பவுண்டேஷன்

"ஈ.வெ.ரா.மணியம்மை பவுண்டேஷன்'' என்ற புதிய கல்வி மற்றும் பகுத்தறிவு, அறிவியல் மனப்பான் மையை வளர்க்கும் நோக்கும், பாலின வேறுபாடுகளை விரட்டிடும் இயக்கம் தொடங்கப்பட்டு, முதல் பணியாக லால்குடி வட்டம் தச்சங்குறிச்சி என்ற கிராமத்தில் அன்னையார் பெயரில் ஒரு சிறந்த மேல்நிலைப்பள்ளியை உருவாக்கிட அடிக்கல் 16.3.2019 அன்று அன்னையார் நினைவு நாளில் நாட்டப்பட்டது!

கழகத்தின் மகளிரணி, மகளிர்ப் பாசறை, இளை ஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, மருத்து வரணி, வழக்குரைஞரணி புடைசூழ பொலிவோடும், வலிவோடும் செயல்பட்டு வருகிறது!

அறப்போர்களும், அடைமழைப் பிரச்சாரமும் நடைபெற்ற வண்ணம் உள்ளன!

எளியவனான நான் மகிழ்ச்சி அடைகிறேன்!

எளியவனான எனக்குக் கிடைத்த பேறு குறித்து எல்லையற்ற மகிழ்ச்சியை - உற்சாகத்தைப் பெறுகி றேன்!

1. தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 2. திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா

3. சிங்கப்பூரில் அந்நாளில் சுயமரியாதை இயக்கத் திற்காகப் பாடுபட்டு வளர்த்த தமிழவேள் கோ.சாரங்கபாணி நூற்றாண்டு விழா - சென்னையில்

4. அன்னையாரின் நூற்றாண்டு விழா

5. திராவிடர் மாணவர் கழக பவள விழா

- இதனுடன் சுயமரியாதை இயக்கப் பொன்விழா - திராவிடர் கழகப் பொன்விழா போன்ற பல்வேறு விழா மாநாடுகள் நடந்த வண்ணம் உள்ளன.

எத்தனை எத்தனை சாதனைகள்!

இவை எல்லாவற்றையும்விட சமுகநீதிக்காக (மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த வைக்க) தொடர் போராட்டங்கள் 16, இந்தியா முழுவதும் 42 மாநாடுகள்.

எம்.ஜி.ஆரின் வருமான வரம்பு ஒழிப்பு போராட்டம்

69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காத்திட அரசியல் சட்டத் திருத்தமும், 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பு எல்லாம் நம் இயக்கத்தின், உழைப்பின் அறுவடைகள்.

1. அய்யா காலத்தில் முதல் இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம் (1951).

2. பிறகு அவர்தம் தொண்டர்கள் முயற்சியால் 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் (69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்)

3. 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் - மத்திய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி யில் இட ஒதுக்கீடு

4. 2006 இல் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

5. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் - தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நிலை! இப்படிப் பலப் பல!

முற்போக்கு இயக்கங்களுக்கெல்லாம் தாய்க்கழகம் திராவிடர் கழகம்!

எண்ணிப் பார்த்தால் வியப்பே மிஞ்சுகிறது!

இதற்கிடையில் நம்முன் முளைத்த துரோகக் களை யெடுப்பும்' - கொள்கைப்  பயிர் வளர்ப்பும் இன்னொரு பக்கம்! வல்லடி வழக்குகளையும் எதிர்கொண்டு வெற்றி!

நம் இயக்கத்தை தமிழ்நாட்டின் அனைத்து முற் போக்கு இயக்கங்களுக்கும் தாய்க் கழகமாக, கலங்கரை விளக்கு வெளிச்சமாக இருப்பதை மற்றவர்கள் ஏற்றுப் பேசிடும் நிலை - எம்மை மேலும் பணியாற்றிட ஊந்து சக்தியாக இருக்கிறது!

அடிக்க அடிக்க எழும்பும் பந்து, அடக்க அடக்க வளரும் நம் கொள்கை, மிரட்டல் பார்ப்பனியம் வீழும் அளவுக்கு நம் இயக்கத்தின் வீச்சும், வேகமும், வீரியமும், அவற்றால் ஏற்பட்ட  விளைச்சல்களே இதற்குக் காரணம் என்ற மகிழ்ச்சி!

அய்யா - அம்மா தந்த அந்த அறிவுச் சுடரை உயரப் பிடித்து, இலட்சிய ஓட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்!

ஒத்துழைப்புக் கொடுத்துவரும் அனைவருக்கும் நன்றி! நன்றி!

லட்சியப் பயணங்கள் முடிவதில்லை!

நமது பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

களைப்பு - நமக்குத் தெரியாத ஒன்று!

கடமை ஒன்றே நமக்கு உரித்தானது!

ஒத்துழைக்கும் கொள்கைக் குடும்பமே!

உங்களுக்கு எமது உளப்பூர்வ நன்றிகள்! நன்றிகள்!!

உங்கள் தொண்டன், தோழன்,

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

18.3.2019

சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner