எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத் தோழர்களை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காக தி.மு.க.வை ஆதரிக்கமாட்டோம் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்  மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி

வேலூர் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் புகழாரம்

வேலூர், மார்ச் 11  மிசா' கைதிகளாக திராவிடர் கழகத் தோழர்கள் சிறையில் இருந்தபோது, மத்திய உள் துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி சென்னை வந்தபொழுது, ஆளுநர் மாளிகையில் சந்தித்தார் அன்னை மணியம்மையார். அப்பொழுது தி.மு.க.வை ஆதரிப் பதில்லை என்று எழுதிக் கொடுத்தால், திராவிடர் கழகத் தோழர்களை விடுதலை செய்வோம் என்று உள்துறை அமைச்சர் சொன்னபொழுது, அது மாதிரி எல்லாம் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்று முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்தவர் அன்னை மணியம்மையார் என்று புகழாரம் சூட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

10.3.2019 அன்று வேலூரில் நடைபெற்ற அன்னை மணி யம்மையார் பிறந்த நாள் - நூற்றாண்டு விழாவில்  திராவி டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  அவரது உரை வருமாறு:

உள்துறை அமைச்சர் போட்ட நிபந்தனையும் - அன்னை மணியம்மையாரின் நிராகரிப்பும்!

உள்துறை அமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டி யாரை நெருக்கடி நிலை காலத்தில் சந்திக்கிறார் அன்னை மணியம்மையார்.

எதற்காக எங்கள் தோழர்களை சிறையில் வைத்தி ருக்கிறீர்கள்; அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்'' என்று உரிமை யோடு கேட்கிறார்கள். அவர்களுடைய சந்திப்பு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.

உள்துறை அமைச்சர், ஆளுநரைப் பார்க்கிறார். அன் றைய ஆளுநராக இருந்தவர்  மோகன்லால் சுக் காடியா, இராஜஸ்தானிலிருந்து வந்தவர்.

ஆளுநர் அவர்கள், திராவிடர் கழகத் தோழர்களை விடுதலை செய்வதற்கு நாங்கள் உத்தரவு போடுகிறோம். ஆனால், ஒரு நிபந்தனை; அந்த நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டால், அவர்களை அடுத்த நிமிடமே விடுதலை செய்கிறோம்'' என்று சொல்கிறார்.

என்ன சொல்லுங்கள்?'' என்று அம்மா அவர்கள் கேட்கிறார்.

கலைஞர் கருணாநிதி தலைமையில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கமாட்டோம், என்று ஒரு அறிக்கை விடுங்கள்; அதுபோதும்'' என்றார்.

உடனே அம்மா அவர்கள் சிங்கம் போன்று எழுந் தார்; நாங்கள் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்; எங்கள் தோழர்கள் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும் சிறையிலேயே இருக்கட்டும்; அங்கேயே மடிந்துபோகட்டும்; எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது எங்களுடைய வேலையல்ல'' என்று சொல்லி, பெரியாரின் குரலாக அந்தக் குரல் ஒலித்தது; ஒரு வீர முழக்கம் ஒலித்தது. பல பேருக்குத் தெரியாத செய்தி இது.

எனவேதான், ஆற்றல் மிகுந்த தலைவராக, மனிதநேயம் மிக்க தாயாக இப்படியெல்லாம் இருந்திருக்கக்கூடிய அன்னையார் அவர்களுடைய நூற்றாண்டு விழா, அவர் பிறந்த மண்ணிலே இவ்வளவு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

லத்தேரியை மணியம்மை பவுண்டேசன் தத்தெடுக்கிறது!

லத்தேரி அரசு பள்ளிக்கூடம், மணியம்மை பவுண் டேசன் சார்பாக, அந்த ஊரும்கூட தத்தெடுக்கப்படுகிறது என்பதை இங்கே மகிழ்ச்சியோடு இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்ததாக, தாய்மார்களுக்கு ஏற்படும் புற்றுநோய் கண்டறிய பெரியார் மணியம்மை மருத்துவ முகாம் இங்கே நடைபெறும். மற்ற மற்ற தொண்டறமும் தொடர்ந்து நடை பெறும்.

இந்தக் காலகட்டத்தில் நண்பர்களே, எந்த நோக் கத்திற்காக நாம் போராடினோமோ, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள், அதேபோல, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, அந்தக் கொள்கைகளுக்கு நேர் எதிரான ஒரு சூழல், கடந்த அய்ந்தாண்டுகளாக இந்த நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதுதான், மோடியின் ரூபத்தில் இருக்கக்கூடிய பா.ஜ.க. ஆட்சி என்ற பெயராலே, ஆர்.எஸ்.எஸினுடைய ஆட்சி.

சமுகநீதியின் வேரில் வெந்நீரை ஊற்றி...

மோடி வித்தைகள் என்பது சாதாரணமானதல்ல. இன்றைக்குத்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்திருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி. அன்று ஒரு விரல் புரட்சி நடைபெறவேண்டும். எந்த வாக்குறுதிகளையும் மோடி அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, நம்முடைய சமுகநீதிக்காகவே, திராவிடர் இயக்கம் பிறந்த இயக்கமாகும். இந்த சமுகநீதியின் வேரில் வெந்நீரை ஊற்றி, சமுகநீதியை வீழ்த்தவேண்டும் என்பதற்காகவே, கடைசியாக ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை மூன்றே நாள்களில் நிறைவேற்றினார்கள். எந்த அரசியல் சட்டத் திருத்தமாவது, மூன்றே நாளில் நிறைவேற்றப்பட்டு, அய்ந்தாவது நாளில் நடைமுறைக்கு வந்ததாக வரலாறு உண்டா?

சமுகநீதியை சாய்ப்பதற்காக, உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்கிறார்கள். நாளிதழ்களில் விளம்பரம் போடுகிறார்கள்; இரயில்வேயில் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை; அதில் 10 சதவிகிதத்தை பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு உடனே கொடுக்கவேண்டும் என்று. இவர்கள் அடையாளம் காட்டும் ஏழைக்கு என்ன அடையாளம் தெரியுமா? ஒரு நாளைக்கு 2,300 ரூபாய் சம்பாதிக்கின்றவர்கள், மோடியின் கணக்கில் ஏழை. இது என்ன கொடுமை!

காரணம், பார்ப்பனர்களுக்கு இடம் வேண்டும்; உயர்ஜாதிக்காரர்களுக்கு இடம் வேண்டும். பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்; பிராமணன் - சூத்திரன். இதுதான் நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்னாரே, அப்படியென்றால், 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கவேண்டுமே, செய்தாரா?

"சப்கா சாத்; சப்கா விகாஸ்''

சப்கா சாத்; சப்கா விகாஸ்'' என்று முழக்கமிட்டார். அதுகூட தமிழில் கிடையாது; சாத்தும் இல்லை; விகாசும் இல்லை. அதுதான் மிகவும் முக்கியம். மக்கள் எல்லாம் சேர்ந்து, முத்திரையைக் குத்தவேண்டும்; அந்த முத்திரைக்காக, ஒரு பொத்தானை அழுத்தவேண்டும், அதுதான் மிக முக்கியம்.

அந்தப் பொத்தானை நீங்கள் சரியானபடி அழுத்தினால் போதும், அதுதான் ஒருவிரல் புரட்சி என்பது!

ஒவ்வொரு குடிமகனுடைய கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார்கள். இப்பொழுது விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயை பிச்சை போடுகிறார்கள்.

15 லட்சம் ரூபாய் எங்கே? 2 ஆயிரம் ரூபாய் எங்கே?

அதுகூட அவருடைய கட்சிப் பணம் கிடையாது; நம்முடைய வரிப் பணம். அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டிக் கையே! என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோன்று  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது ஒவ்வொரு வித் தையைக் காட்டுவார். இதுவரையில் எந்தப் பிரதமராவது, தன்னுடைய மார்பு அங்குலத்தைச் சொல்லி, வாக்கு கேட்டிருக்கிறார்களா?

56 அங்குலம் மார்பளவுள்ள பிரதமராம்!

56 அங்குலம் மார்பளவுள்ள ஒரு பிரதமராம்; பிரதமர் என்ன குஸ்திக்கா செல்கிறார்? ஏழைகளுக்காகப் பாடுபடுகின்ற பிரதமராம் அவர்; அவர் அணிகின்ற உடை 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது; இங்கே பேசும் பொழுது, மேக் இன் இண்டியா'', மேக் இன் இண்டியா'' என்று பேசுவார். ஆனால், இவர் அணிகின்ற உடை வெளிநாடுகளிலிருந்து வரும்.

படித்த பட்டதாரி மாணவர்கள் வேலை கிடைக்க வில்லை என்றால், பக்கோடா கடை வையுங்கள் என்கி றார்கள். மறுபடியும் மோடி ஆட்சிக்கு வந்தால், பக்கோடா கடை அல்ல, பஜனை மடம் நடத்துங்கள் என்பார்.

18 வயது நிறைந்த நம்முடைய இளைஞர்களுக்கு வாக்குரிமை கொடுத்தவுடன், அவர்கள் கணினி படித்ததினால், காரணம், நீதிக்கட்சி; திராவிட இயக்கம், வகுப்புவாரி உரிமையினால். அந்த உரிமையினால், பட்ட தாரிகள் ஆகிவிட்டனர்; கிராமத்தில் இருந்த முத்தன் மகன் முனியன், சுப்பன் மகன் சூரன் எல்லோரும் குழாய் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் கணினியில் இணையத்தைத் தட்டியவுடன்,  சப்கா சாத்; சப்கா விகாஸ்'' என்ற கோஷத்தை நம்பி, ஏதோ புதிதாக செய்வார் என்று நம்பி, இளைஞர்கள் ஏமாந்தார்கள். இருக்கின்ற வேலையையும் போய்விட்டது. 10 லட்சம் இளைஞர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஜால்ரா தட்டும் ஆட்சி!

தமிழ்நாட்டில் திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. ஏற்றுமதிகள் முடங்கின. புதிதாக எங்கே தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன? இதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால், மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டுகின்ற ஒரு அமைச்சரவைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது.

அடிமைத்தனத்தை ஒழிப்பதுதான் நம்முடைய இயக்கத்தின் வேலையாகும். 20 அம்சத் திட்டத்தை ஒரு அம்மையார் கொண்டு வந்தார். அதில் கொத்தடிமை ஒழிப்புத் திட்டம் என்ற ஒன்று உண்டு.

அந்தக் கொத்தடிமை ஒழிப்பு மற்ற இடங்களில் நடப்பதைவிட, முதலில் கோட்டையில் நடப்பதுதான் மிகவும் முக்கியம். இதுபோன்ற ஒரு கொத்தடிமை அமைச்சர்களை வேறு எங்கேயும் பார்க்க முடியாது.

யாரை வேண்டுமானாலும், அப்பா என்று அழைக்க முடியுமா?

மோடியைப் பார்த்து, டாடி என்கிறார்கள்; இது என்ன கொடுமை? அப்பனைக்கூட அடையாளம் தெரியாத அளவிற்கு ஆகிவிட்டீர்களே? யாரை வேண்டுமானாலும், அம்மா என்று அழைக்கலாம்; யாரை வேண்டுமானாலும், அப்பா என்று அழைக்க முடியுமா? டாடி ஆக முடியுமா? கேடிகளுக்கு வேண்டுமானால், டாடியாக இருக்கலாமோ? காமராசர் ஆட்சியை நாங்கள் கொடுப்போம் என்கி றார்கள். உங்களுக்கும், காமராசருக்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும், அப்துல் காதருக்காவது சம்பந்தம் உண்டு.

நம்முடைய ஆள் கேட்பான், அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்று. நாங்கள் சொல்வோம், சம்பந்தம் உண்டு  என்று. ஏனென்றால், அமாவாசை அன்றைக்கு அப்துல் காதர் கறி, மீன் வாங்கச் சென்றால், மிகவும் மலிவாகக் கிடைக்கும்.

காமராசரை உயிரோடு தீ வைத்துக் கொல்ல முயற்சி செய்த கூட்டம் ஆர்.எஸ்.எஸ். கூட்டமல்லவா!

காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி, அதைப் பதிவு செய்யவேண்டும் என்று தொலைநோக்கோடு சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

மயக்க பிஸ்கெட்டுகளைக் கண்டு ஏமாறலாமா?

காமராசர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று சொல்வது, மற்றவர்களைச் சொல்வது; இங்கே வந்தவுடன், ஜெயலலிதாவிற்குப் பாராட்டு; எம்.ஜி.ஆருக்குப் பாராட்டு எல்லாம் செய்கிறார்கள். மயக்க பிஸ்கெட்டுகளைக் கண்டு ஏமாறலாமா?

ரயிலில் பயணிக்கும்பொழுது சிலர் மிகவும் பணிவோடு சொல்வார்கள்; இந்த பிஸ்கெட்டை சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். அவனும் சாப்பிடுவான்; இவர்களுக்கும் எடுத்துக் கொடுப்பான். ஓகோ, அவர்தான் சாப்பிடுகிறாரே, நாமும் சாப்பிடுவோம் என்று இவர்கள் சாப்பிடுவார்கள். இந்த பிஸ்கெட் வேறு; அந்தப் பிஸ்கெட் வேறு. பிரித்து வைத்திருப்பார்கள்.

இவர்கள் சாப்பிட்ட பிஸ்கெட் மயக்க பிஸ்கெட். அதைச் சாப்பிட்டவுடன், மயக்க நிலைக்குச் சென்றுவிடுவார்கள். இவர்கள் கொண்டு வந்த பொருள்கள் எல்லாம் காணாமல் போய்விடும். வேட்டியாவது மிஞ்சியதே என்பதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.

"எங்கள் முதுகை நாங்களே தட்டிக் கொள்கிறோம்!''

மயக்க பிஸ்கெட்டுகளைக் கூட்டணி என்ற பெயராலே, கூட்டணியா அது. கூட்டணியல்ல அது. கொள்கை யற்றவர்கள். கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள்; ஏலம் போடுகிறார்கள்; யார் அதிகம் பேரம் கொடுக்கிறார்களோ, அவர்களோடுதான் கூட்டணி. இதுபோன்ற ஒரு அசிங்கமான அரசியலை நாங்கள் தவிர்த்திருக்கிறோம் என்று நினைக்கின்றபொழுது, எங்கள் முதுகை நாங்களே தட்டிக் கொள்கிறோம்.

ஓட்டிற்காக, பதவிக்காக தன்னையே விற்றுக்கொள்ளா தீர்கள்; புரட்சிக்கவிஞர் அவர்கள் தொலைநோக்கோடு எழுதியிருக்கிறார். உன்னை விற்காதே!'' என்று. ஆனால், இன்றைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான் நண்பர்களே, வாக்காளப் பெரு மக்களே, இந்த நூற்றாண்டு விழாவில் நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதி என்னவென்றால்,

தமிழ்நாடு பெரியார் மண்!

தமிழ்நாடு அன்னை மணியம்மையார் மண்!

தமிழ்நாடு திராவிட மண்

தமிழ்நாடு சமுகநீதியைப் பெற்றெடுத்து, இந்தியாவிற்கே வழிகாட்டிய மண்!

'ஆவி'யை நம்பியிருந்தால் காவியோடு சேருவார்களா?

இந்த சமுகநீதிக்கு எதிராக இருக்கக்கூடிய காவியும் - ஆவியும் இணைந்து வரக்கூடிய அந்த நிலை இருக்கிறதே - காவிக் கட்சி - ஆவிக் கட்சி. அந்த ஆவியைகூட அவர்கள் கடைசிவரை நம்பவில்லை. அப்படி நம்பியிருந் தால், காவியோடு சேருவார்களா?

டயர் நக்கிகள்'' என்று ஒரு பெரிய மனிதர், தனியே கட்சி வைத்திருப்பவர் சொன்னார். இப்பொழுது அவர் எங்கே சென்றிருக்கிறார்? என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும். இதற்குமேல் கீழே இறங்குவதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஏனென்றால், கீழிறக்கமாகப் பேசி எங்களுக்குப் பழக்கம் கிடையாது.

தி.மு.க. கூட்டணியைப் பார்த்து பொத்தானை அழுத்துங்கள்!

எனவேதான், கொள்கையற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல வாய்ப்புதான். ஏனென்றால், தனித்தனியாக அவர்களுக்குப் பொத்தானை அழுத்தவேண்டாம்; தனித்தனியாக ஒவ்வொன்றைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு பொத் தான்தான்; எங்கே இருக்கிறது உதயசூரியன் என்று பாருங்கள்; எங்கே இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி என்று பாருங்கள். சூரியனா? கையா? தி.மு.க. கூட்டணியைச் சார்ந்த சின்னமா? அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; அந்தப் பொத்தானை அழுத்துங்கள்.

சின்னங்களையே இப்பொழுது சின்னாபின்னப்படுத்தி விட்டார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள்; அந்த மோடி மஸ்தானுக்கு வசதியாக, வாக்குகளைப் பிரிப்பதற்காக, பா.ஜ.க.வினுடைய பி டீம் இருக்கிறது; அது வசனம் பேசுபவராக இருக்கலாம்; ஒப்பனை போடுகிறவர்களாக இருக்கலாம். நாதசுரம் வாசித்தால், அதை ரசிப்பதோடு சரி; அதற்காக அவரை முதலமைச்சராக்கிவிட முடியுமா? நன்றாக மேளம் தட்டினால், அவரைக் கொண்டு வந்து துணை முதலமைச்சராக்கிவிட முடியுமா? நன்றாக ஓவியம் வரைந்தால், நல்ல ஓவியக்காரர் என்று சொல்லலாம்; அதுபோன்று ஒரு நல்ல கலைஞர் என்றால், அவரைப் பாராட்டவேண்டிய நேரத்தில்  பாராட்டலாம். ஒரு ஆள் புரிந்துகொண்டார், புரிந்துகொண்டு, இன்னும் வித்தைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

இன்னொரு ஆள் பார்த்தீர்களேயானால், சுழன்று சுழன்று வந்து கொண்டிருக்கிறார். எப்படி வந்தாலும் நண்பர்களே, தமிழ்நாட்டில் இனிமேல் நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை என்பதை, தாய்மார்களில் இருந்து தொடங்கவேண்டும். அன்னை மணியம்மையாருடைய இந்த நூற்றாண்டு விழாவில், நீங்கள் கவனத்தோடு இருக்கவேண்டும்; மீண்டும் ஏமாறக்கூடாது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சொல்வார்,

தமிழன் கீழே விழுவதைப்பற்றிக்கூட கவலையில்லை; ஆனால், நேற்று விழுந்த இடத்திலேயே இன்றும் விழு கிறானே, அதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது'' என்பார்.

வருகின்ற தேர்தல் என்பது வெறும் அரசியல் தேர்தல் அல்ல!

ஆகவே, நண்பர்களே! நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள், வருகின்ற தேர்தல் என்பது வெறும் அரசியல் தேர்தல் அல்ல; இரண்டு கூட்டணிகளுக்கிடையே நடை பெறும் போட்டி என்று நினைக்காதீர்கள்.

வருங்கால சமுதாயம் மானத்தோடு வாழ வேண்டுமா?

உரிமையோடு வாழ வேண்டுமா?

அனைவருக்கும் அனைத்தும் என்பதை கொள்கை யாகக் கொண்டிருக்கவேண்டுமா?

எல்லாருக்கும் எல்லாமும் என்ற கொள்கை இருக்கவேண்டுமா?

அல்லது

வடநாட்டுக்காரர்கள், ஒருபக்கம் கார்ப்பரேட் முத லாளிகள்; இன்னொரு பக்கத்தில் பார்ப்பன பனியாக்களின் கூட்டணி; உயர்ஜாதிக்காரர்களின் கூட்டணி; அதற்காக காவி ரூபத்தில் இருக்கக்கூடிய நிலை இருக்கவேண்டுமா?

பணத்திற்காக உங்களை விற்றுக்கொள்ளாதீர்கள்

இதுதான் இன்று நிர்ணயிக்கப்படவேண்டியது - எனவேதான், உங்கள் வாக்குகள், அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், கொள்ளையடித்திருப்பவர்கள் பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள் - பணத்திற்காக உங்களை விற்றுக்கொள்ளாதீர்கள்; அது ஒழுக்கமல்ல; எனவேதான், உங்களுக்குப் பணம் கொடுக்கிறார்களே, அது அவர்களுடைய பணமா? கொள்ளையடித்த பணம்தானே என்று நீங்கள் நினைத்தால், என்ன செய்யவேண்டுமோ, அப்படி முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், பொத்தானை அழுத்தும்பொழுது மட்டும் ஜாக்கிரதையாக இருங்கள்; பொது ஒழுக்கம் கெடக்கூடாது என்று நினைப்பவர்கள் நாங்கள். இப்படி சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால், வேறு வழியில்லை. நீங்கள் உங்களை விற்றுக் கொள்ளாமல், அன்னை மணியம்மையார் பிறந்த நாளான இன்றைக்குத்தான் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

நல்ல முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்; தமிழ்நாட்டைக் காப்பாற்றுவோம். தமிழ் நாட்டை டில்லிக்கு அடமானம் வைத்துவிட்டார்கள். நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, மாநில உரிமைகள் அடிபட்டுப் போகின்றன. புயல் பாதிப் பிற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டால், 1,500 கோடி ரூபாய்கூட கொடுப்பதற்குத் தயாராக இல்லை.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல்கூட தயாராக சொல்லாத ஒரு பிரதமர். அல்லது ஒரு ஆறுதல் அறிக்கையைகூட விடவில்லை.

ராணுவத்தின் வெற்றியை, காவி வெற்றியாக சித்தரிக்காதீர்கள்!

இப்பொழுது பார்த்தீர்களேயானால், ராணுவத்தைக் காட்டி, நாங்கள்தான் செய்தோம் என்று சொல்கிறார்கள். வடாற்காடு மாவட்டம்தான், ராணுவத்திற்கு அதிகமான ஆட்களை அனுப்புவது, நீதிக்கட்சி காலத்திலிருந்து.

எனவேதான், ராணுவத்தின் வெற்றியை, காவி வெற்றியாக சித்தரிக்காதீர்கள்; இராணுவம் அனைவருக்கும் பொதுவானது. பாகிஸ்தானோ, இன்னொரு நாட்டவனோ வந்தால், சீனப் படையெடுப்பின்போது, அண்ணா அவர் கள், பெரியார் அவர்கள், மற்றவர்கள் எல்லாம் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை என்று ஒன்றுபடவில்லையா!

எனவே, தேச பக்திக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லை. எங்களுக்குத் தேசம் உண்டு; உங்களுக்கு எந்தத் தேசமும் கிடையாது; ஆகவே, உங்கள் தேச பக்தி வேஷம் நடக்காது. அந்த முறையில், அதைக் காட்டி ஏமாற்றலாம் என்று நினைக்காதீர்கள்.

சரியானவர்களைத் தேர்ந்தெடுங்கள்!

எனவேதான் நண்பர்களே, இன்றைக்கு அறிவிக் கப்பட்ட தேர்தல் என்பது இருக்கிறதே, அன்னை மணியம்மையார் அவர்களுடைய பிறந்த நாள் நூற்றாண்டு தொடங்குகின்ற நேரத்தில், அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்தத் தேர்தலில், சரியானவர்களைத் தேர்ந்தெடுங்கள்.

இருள் அகலவேண்டுமானால்,

அறியாமை என்கிற இருள் அகலவேண்டுமானால்,

சமத்துவமின்மை என்கிற இருள் அகல வேண்டு மானால்,

இந்த நாட்டிலே வாய்ப்பின்மை என்கிற இருள் அகல வேண்டுமானால்,

உதயசூரியனின் வெளிச்சம் ஒன்றினால்தான் முடியும்; அதன்மூலமாகத்தான் மற்ற இருள்கள் அகலும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி இருக்கிறதே, அது கொள்கைக் கூட்டணி.

எனவே, அந்தக் கூட்டணிக்கு நீங்கள் வாக்களிப் பதன்மூலமாக, வெறும் அரசியலாகப் பார்க்காதீர்கள். எங்களுக்கு அரசியல் மேடையல்ல; வருங்கால சந்ததியினுடைய வாழ்வு பாது காக்கப்படவேண்டும்; வருங்கால இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவேண்டும்; வருங்காலத்தில் தமிழ்நாடு தொழிற்சாலைகளாக மிளிரவேண்டும்.

இவை எல்லாம் நடைபெறவேண்டுமானால், சரியான முடிவு எடுங்கள் என்று கூறி,

இது ஒரு அற்புதமான நிகழ்ச்சி; எங்களுடைய குடியாத்தம் தோழர்கள், நம்முடைய அமைப்புச் செயலாளர்கள் அத்துணை பேரும் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள்.

அவர்களின் பெயர்களைத் தனித்தனியே சொல்ல நேரமில்லை. எல்லோரையும் அழைத்ததாகக் கருதிக் கொண்டு, வெளியூர்களிலிருந்து வந்திருப்பவர்கள் பத்திரமாக ஊர் திரும்புங்கள் என்று சொல்லி,

அத்துணைப் பேருக்கும் பாராட்டுகள்!

அற்புதமாகக் கலை நிகழ்ச்சிகளை நடத்திய மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், ஒத் துழைத்த அத்துணைப் பேர்களுக்கும், விருது பெற்ற பெருமக்களுக்கும் வாழ்த்துகளைக் கூறி என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்!

வாழ்க அன்னை மணியம்மையார்!

வளர்க பகுத்தறிவு!

வருக புத்தாட்சி, நல்லாட்சி!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner