எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு!

சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார். துறைத் தலைவரும், பேராசிரியருமான முனைவர் இராமு மணிவண்ணன், திரைப்பட இயக்குநர் கவுதமன், மாணவர் தலைவர்கள் பச்சைமுத்து, அரவிந்த், சண்முகப்பிரியா திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி மற்றும் திராவிடன் நிதியின் தலைவர் த.க.நடராசன் ஆகியோர் உள்ளனர் (சென்னை, 20.2.2019).

சென்னை, பிப். 21 இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்டி, சமத்துவ நிலையை உருவாக்கும் வழிமுறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பல்கலைக் கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையின் சார்பில் நேற்று (20.2.2019) நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கத்தில்,  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத் தரங்கத்தில், தமிழர் தலைவர் கலந்துகொண்டு, இட ஒதுக்கீட்டு கொள்கையில் நடைபெறும் மாற்றங் களும் அறைகூவல்களும் எனும் தலைப்பில் சிறப்பு ரையாற்றினார். இந்நிகழ்வு பல்கலைக் கழகத்தில் உள்ள அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று (20.2.2019) மாலை 4:30 மணிக்கு, தி.7 மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அத் துறையின் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பித்தார். துறையின் மாணவர் பச்சைமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதேபோல மாணவர் ஜெகநாதன் தமிழர் தலைவருக்கு ஆடையணிவித்து மரியாதை செய்தார். பேராசிரியர் இராமு மணிவண்ணன் எழுதிய Sri Lanka Hiding The Elephant (ஈழத்தமிழர் அழிப்பு குறித்து எழுதப்பட்டது) என்ற  புத்தகம் தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, திராவிடன் நலநிதியின் தலைவர் த.க.நடராசன், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செந்துறை இராசேந்திரன், மாநில மாணவர் கழக இணை செயலாளர் பா.மணியம்மை மற்றும் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறைசார்ந்த இருபால் மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டில் முதுகலை மாணவர் அரவிந்த் மற்றும் மாணவத் தோழர்கள் உறுதுணையாக இருந்தனர்.

பார்ப்பனர்களுக்கு 116! நமக்கு நாமம்?

எதிர்கால அரசியலை மாற்றக்கூடிய, நிர்ணயிக்கக்கூடிய, திருத்தம் செய்யக்கூடிய மாணவர்கள் மத்தியில் பேசுவது உணர்வுபூர்வமாக இருக்கிறது என்று தனது பேச்சைத் தொடங்கினார் தமிழர் தலைவர். தொடர்ந்து அவர், இந்தியாவில் மட்டும் பிறக்கும்போதே ஜாதியோடு பிறக்கும் அவலங்களைச் சொல்லி, 1854 இல் தொடங்கி இன்றைய சூழல் வரையிலுமாக சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார். அதில் பார்ப்பனர்கள் எப்படி அரசு பணியிடங்களை அபகரித்துக் கொண்டிருந்தனர் என்பதை ஆதாரங்களோடு எடுத்துச் சொன்னார். குறிப்பாக 1854 இல் ஓசூர் சிரஸ்தாராக இருந்த பார்ப்பனர் டி.கிருஷ்ணாராவ் தன்னுடைய குடும்ப உறவினர்களை மட்டுமே 116 பேரை அரசுப் பணியில் சேர்த்து விட்டிருந்த கொடுமையை ஆதாரங்களோடு எடுத்துச் சொன்னபோது, மாணவர்களும் மற்றவர்களும் திடுக்கிட்டனர். அதே தகவலை, பார்ப்பனர்களுக்கு 116, மற்றவர்களுக்கு 111 (நாமம்) என்று நமது அவலத்தையும் மாணவர்களுக்கு நகைச்சுவையோடு சொன்ன போது, மாணவர்கள் அதை சுவைத்தாலும் உண்மை இன்னும் பளிச்சென்று உறைத்ததால், விடுதலை ஏட்டின் ஆசிரியரின் உரையை நன்கு கவனிக்கத் தொடங்கினர்.

உரையாற்ற வந்த தமிழர் தலைவருக்கு துறை சார்பாக சிறப்பு செய்யப்படுகிறது. உடன் பேராசிரியர் முனைவர் இராமு மணிண்ணன் உள்ளார்.

நீதிக்கட்சி தோற்றம்!

அதன் பிறகு பிரிட்டீசார், ஒரு ஜாதியில் (பார்ப்பனர்கள்) உள்ளவர்களே எல்லா பணிகளிலும் இருக்கக்கூடாது என்று நிலையாணை (128-2) போடப்பட்டதை குறிப் பிட்டார். அதன் பிறகு W.R. கார்னிஷ் 1871 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ததையும், அதில் அரசின் முக்கிய பதவிகளில் பார்ப்பனர்களே இருப்பதையும் கண்டறிந்ததையும், வெறும் 3 விழுக்காடே உள்ள பார்ப் பனர்கள்தான் மக்கள் சார்பில் அரசுக்கு ஆலோசனைகள் சொல்லக்கூடிய நிலை இருந்ததையும் கண்டறிந்தனர் என்பதையும், அதன் தொடர்ச்சியாக 19 ஆம் நூற்றாண்டில் நீதிக்கட்சி வந்தது, 1926 இல் சுப்பராயன் தலைமையில் அமைந்த மந்திரி சபையில் முத்தையா முதலியார் இடஒதுக்கீடு கொண்டுவந்தது, சுதந்திரம் பெற்றபிறகு இடஒதுக்கீடு செல்லாது என்ற சூழல், அதற்கு தந்தை பெரியார் ஆற்றிய எதிர்வினை, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டிற்கு அமைக்கப்பட்ட காகாகலேல்கர் கமிசன், மண்டல் கமிசன், அதற்கு திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள், மாநாடுகள் என்று பட்டியலிட்டு 69 விழுக்காடு வரலாற்றையும், அதற்காக சந்தித்த சவால்களையும் சேர்த்துச் சொன்னார்.

நமக்கு வந்தா தகுதி திறமை?

அவாளுக்கு வந்தா தேவையில்லை!

தொடர்ந்து அவர், பொருதளாதார இடஒதுக்கீடு எப்படி செல்லாது என்பதற்கான பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளைச் சொன்னார். இதற்கெல்லாம் காரணமாக நீதித்துறையில் இடஒதுக்கீடு வராததுதான் என்பதையும் சேர்த்துச் சொன்னார். காலமெல்லாம் நம் மக்கள் இடஒதுக்கீடு பெற்றுவிடக்கூடாது என்பதற்காக, தகுதி திறமை என்னாவது? என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தவர்கள்தான், இன்றைக்கு 10 விழுக்காடு கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் எல்லா ஏழைகளுக்கும் அல்ல. உயர் ஜாதி ஏழைகளுக்கு. ஒரு நாளைக்கு ரூ.2300 வருமானம் பெறக்கூடிய உயர்ஜாதி ஏழைக்குத்தான்  அது பொருந்தும் என்று நகைச்சுவை இழையோட நடப்பை சுட்டிக்காட்டினார்.

இடஒதுக்கீட்டுக்காக ஒவ்வொருவரும் போராளிகளாக மாறவேண்டும்!

இடஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டிருக்கிற அறைகூவல்களைச் சொல்லி, இவைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டுமென்றால் இடைவிடாமல் விழிப்புணர்வோடு நாம் அனைவரும் ஒற்றுமையோடு இடஒதுக்கீட்டுக்கான போராளிகளாக வேண்டும் என்றும், ஒருவிரல் மூலம் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறி தனது மிகநீண்ட உரையை நிறைவு செய்தார். அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றின் முக்கிய தகவல்களை சாறுபிழிந்து கொடுத்தது போலவும், மேலிருந்து பரும்மதையும் பார்த்ததைப்போலவும் தெளிவுபடுத்தினார். அதன்பிறகும் அரை மணிநேரம் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பேராசிரியர் ராமு மணிவண்ணன் பெருமிதம்!

இறுதியாக துறையின் பேராசிரியர் நன்றி தெரிவித்துப் பேசினார். அவர் தனது உரையில், ஆசிரியர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தங்களுக்கு பெருமையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக இருந்தது என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார். தமிழர் தலைவரின் உரையைக் கேட்டிருந்த பார்வையாளர்கள், அது சரிதான் என்பதை அங்கீகரித்து பலத்த கையொலி எழுப்பினர். நிகழ்ச்சி நிறைவடைந்து மாணவர்களும் பேராசியர் பெருமக்களும் மிகுந்த மனநிறைவோடு கலைந்து சென்றனர். முதுகலை மாணவி சண்முகப் பிரியா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

10% இடஒதுக்கீடு கூடாது ஏன்? புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது!

ஆவடி மாவட்டக் கழகத்திலிருந்து உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், அம்பத்தூர் முத்துகிருஷ்ணன் மற்றும் வடசென்னை மாவட்ட மாணவரணிச் செயலாளர் வ.ம.வேலவன், பெரியார் புத்தக நிலையத்திலிருந்து தோழர் விமல்ராஜ், தென்சென்னை மஞ்சுநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் உண்மை, பொருளாதார ரீதியில் 10% இடஒதுக்கீடு கூடாது ஏன்? ஆகியவற்றை  மாணவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வழங்கினர். மாணவர்கள் நிகழ்ச்சியை கண்டு களித்ததோடு 400 ரூபாய் மதிப்புள்ள இயக்கப் புத்தகங்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner