எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே!  - எம் கண்கள் உங்களைத் தேடும்!

ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் குடும்பத் தோழர்களே, தஞ்சையில் வரும் சனி, ஞாயிறுகளில் நடக்க இருக்கும் திராவிடர் கழக மாநில மாநாடு, சமூகநீதி மாநாடுகளுக்குக் குடும்பம் குடும்பமாக வாரீர்! உங்களையெல்லாம் எம்  கண்கள் தேடும் என்ற கொள்கைப் பாசமிகு அறிக்கையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ளார்.

அறிக்கை  வருமாறு:

இந்திய நாட்டின் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறி விப்புத் தரவிருக்கும் நிலையில், நாட்டில் கூட்டணிக் கான பரப்புரைச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன!

கொள்கைக் கூட்டணி ஒருபுறம் - சந்தர்ப்பவாத கூட்டணி மற்றொருபுறம்!

கொள்கை அடிப்படையிலான மதச் சார்பற்ற கொள்கைக் கூட்டணி ஒருபுறம்; எதிர்புறத்தில் ஆட்சி - அதிகாரம் இவைகளைக்  காட்டி, மடியில் கனமுள்ள வர்களையும்,  எல்லாபுறத்திலும் ஏலம் கோரும் சந்தர்ப்ப வாத அரசியல் கட்சிகளையும் வளைத்துப் போடும் மதவாத, மக்கள் விரோத கூட்டணி  அணி மறுபுறத்தில் நடைபெறுகிறது!

பி.ஜே.பி. கூட்டணி எத்தகையது?

மக்கள் சார்ந்த முற்போக்கு - மதச்சார்பற்ற - மக்கள் நலக் கூட்டணி என்பது அதிகாரபலம், ஆட்சி பலம், பண பலம் இவைகளை எதிர்த்து சாமானிய மக்களின் உரிமைக்குப் போராடும் சமதர்மக் கூட்டணி - கொள்கைக் கூட்டணியாகும். மாநில உரிமைகள், விவசாயிகளின் துயர் துடைத்தல், செம்மொழி தமிழுக்கு ஏற்படும் தடைகள், அலட்சியங்களைத் துடைத்தெறிதல், காலங்காலமாய் போராடிப் பாதுகாத்த சமூகநீதிக்கு விரோதமாக உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு; நீட்' (Neet) போன்றவை  நமது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண்ணைக் குத்தும் முயற்சியே!  இவற்றை அடியோடு கெல்லி எறிந்து, சமூகநீதிக்கு அனைத்திந்திய அளவிலேயே ஒரு பெரும் பாதுகாப்பு அரண் அமைக்கவும், மகளிருக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்டெடுப்பதில் வெற்றி காணவும் திட்டங்கள் உள்ள ஒரு சமதர்ம, சமூகநீதிக் காப்பு கூட்டணியின் வெற்றியின் தேவை அவசியமாகிறது!,

கழகத்தின் கடமை!

இந்நிலையில், கலங்கரை விளக்கு வெளிச்சம் இந்திய நாட்டிற்கே வழிகாட்டவேண்டிய மகத்தான கடமை, அறிவு ஆசான் தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகத்திற்கே உண்டு!

வாழ்வுரிமைக்கே முதல் தேவை அனைவருக்கும் அனைத்தும் என்பதுதானே!

அதனை சுமார் 100 ஆண்டுகளுக்குமேல் பிரச்சாரம் செய்து, அது நாட்டின் அரசியல் அமைப்பின் அடிக்கட்டு மானமாக ஆக்கப்பட்டதில் வெற்றி கண்ட இயக்கமாம் தந்தை பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகம் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை தொலைநோக்கோடு எடுத்து, களங்கண்டு, சமூக மாற்ற வெற்றிக் கனிகளைப் பறிக்கத் தவறவே தவறாது. நமது இயக்கத்தின் இரண்டு நாள் மாநாடுகள் - பிப்ரவரி 23, 24 - இடையில் 3 நாள்களே; தஞ்சையில் பேருரு கொண்டு, அனைத்து அறிவு சார் சிறப்புகளுடன் நடைபெற நமது கழகப் பொறுப்பாளர்கள் பம்பரம்போல் சுழன்று உழைத்து வருகிறார்கள்!

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நமது தோழர்கள் - இயக்க ஆர்வலர்கள் - அனைவரும் மக்கள் தரும் நிதியால் நடைபெறும் மகத்தான மாநாடுகள்  இவை! முனைப்புடன் - கடைவீதி வசூல் முதல் கன தனவான் களிடம் நிதி கேட்டுப் பெறும் அரும்பணியை - மானம் பாராத் தொண்டுப் பணிகளை மிகுந்த உற்சாகத்துடன் செய்து வருவது அறிய மிக்க மகிழ்ச்சி!

நம்பிக்கை வீண் போகாது!

நமது கழகக் குடும்பத்தினர் எவரும், அவர்கள்மீது தலைமை வைத்த நம்பிக்கையை  எப்போதும் பொய்யாக்கியதே கிடையாது! அதனை நியாயப்படுத்தும் வகையில் வந்துள்ள கருஞ்சட்டை இராணுவ வீரர்கள் புயல்போல் கடமையாகச் செய்து வருகின்றனர்!

இன எதிரிகள் - மதவெறியர்கள் - இவர்களை உசுப்பும் பார்ப்பன ஆதிக்க சக்திகள் இவைகளை எதிர்த்து எதிர்நீச்சல் அடித்து நமது வழிகாட்டி - அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து, கொள்கையாக நம் ரத்த நாளங்களில் உறைந்து வாழும் நிலையில், நம் பணி - அரும்பணி - பெரும்பணி - என்றும் தொடர் பணி அல்லவா!

நமது பாடிவீடாம் தஞ்சையில் சந்திப்போம்!

நமது பாசறையில், பாடி வீட்டில்தானே சந்திப்பது நமது மாநில மாநாடுகள்?

குடும்பம் குடும்பமாய் குதூகலத்துடன், பிஞ்சு, குஞ்சு, மொட்டு, முளை'' முதற்கொண்டு எவரும் பாக்கி இல்லாமல் வந்து கூடி மகிழும் குடும்பங்களின் சங்கமத்திற்கானவை அல்லவா சரித்திரம் படைக்கவிருக்கும் நமது மாநாடுகள்!

ஈராண்டுக்கு ஒருமுறையான சங்கமம்!

ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த சங்கமத்திற்கு ஈடு வேறு உண்டோ!

முதல் நாள் கழகப் பேரணி வரலாறு படைக்கும் பேரணியாக அமைதல் அவசியம்!

எனவே, அனைத்துக் குடும்பங்களும் கொள்கை முழக்க சங்கநாதம்  செய்து, வருங்கால சந்ததியினர் வாழ்வுரிமைக்குத் தக்க பாதுகாப்பு அரண் எழுப்புவதற்கு அடிக்கல் நாட்டுவோம்! அய்யா பணி முடிக்க, அன்னை யாரின் நூற்றாண்டு தொடங்கவிருக்கும் காலகட்டத்தில் நமக்கு வேறு ஏது பெருவிழா - திருவிழா எல்லாம்?

இன எதிரிகள் ஓடி, ஒளிந்திட  பகுத்தறிவுப் பகலவனின் கருஞ்சட்டைச் சீடர்களே, திரள்க! திரள்க!!

எதிர்பார்த்துக் காத்திருப்பேன்!

எனவே, எம் கண்கள் உங்கள் ஒவ்வொரு வரையும், குடும்பத்து உறவுகள் அனைவரையும் விடுபடாமல் சந்திக்கத் தேடும் கண்கள் ஆகும்!

ஈரோட்டுப் பாதை' எப்படி சரியானதோ அப்படியே நம் பார்வையும் என்றும் பழுதுபடாதது - தவறாமல் சந்திப்போம்! வாரீர் தோழர்களே, தஞ்சையை நோக்கி!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

19.2.2019

கழகக் குடும்பத்தினரே, வரத் தயாராகி விட்டீர்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner