எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா?

சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா?

சிறீவில்லிபுத்தூரில்  தமிழர் தலைவர் கொள்கை முழக்கம்

சிறீவில்லிபுத்தூர், பிப்.18   சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும்; நாட்டில் சமூக மாற்றம் ஏற்படவேண்டும் என்று பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு ஒரு கட்சி, அமைப்பு உண்டா? இத்தகைய  ஓர் இயக்கத்தின் பிரச்சார கூட்டங்களுக்குக் காவல்துறை அனுமதி மறுக்கலாமா? என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மதுரை மண்டல இளைஞரணி மாநாடு

17.2.2019 அன்று  சிறீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மதுரை மண்டல கழக இளைஞரணி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: சிறீவில்லிபுத்தூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மதுரை மண்டல இளைஞரணி மாநாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய உரை என்பது ஒரு 40 அல்லது 50  நிமிடங்கள் இருக்கலாம்; ஆனால், இங்கே ஏற்பட்டி ருக்கின்ற பல்வேறு சூழ்நிலைகள், இன்றைக்கு நாட் டில் இருக்கக்கூடிய விரும்பத்தகாத போக்கு இவற் றையெல்லாம்பற்றி பேசவேண்டுமானால், மணிக்கணக்கில் பேசவேண்டும்.

மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்!

இன்றைக்கு நம்முடைய திராவிட சமுதாயத்தை நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள் ஏராளம்! ஏராளம்!! அதிலும் குறிப்பாக, மத்திய - மாநில அரசுகள் என்பவை எப்படி மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள் என்பதை சற்று நேரத்திற்கு முன் இட ஒதுக்கீடு பிரச்சினையிலேயே நம்முடைய கழக துணைத் தலைவர் அவர்களும், மற்ற தோழர்களும் இங்கே சொன்னார்கள். இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.  இவைகளையெல்லாம் எடுத்து விளக்கவேண்டும். திராவிடர் கழகம் பதவிக்குப் போகின்ற கட்சியல்ல; ஆனால், யார் பதவியில் இருந்தால், இந்த நாடு நலம் பெறுமோ அவர்களை அடையாளம் காட்டுகின்ற பொறுப்புள்ள ஒரு சமுதாய இயக்கமாகும்.

தமிழர் தலைவரிடம் மாநாட்டு நன்கொடை

சிவகங்கை மண்டல தலைவர் சாமி.திராவிடமணி பிராட்லா மூலம் ரூ. 1,00,000, விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி  ரூ. 30,000, விருதுநகர் மாவட்ட செயலாளர் விடுதலை ஆதவன்  ரூ. 10,000, கழகப் பொதுக்குழு உறுப்பினர் வானவில் மணி  ரூ. 10,000, மதுரை மண்டல தலைவர் பவுன்ராசா  ரூ. 10,000.

சமுதாய இயக்கம், சமுதாயப் புரட்சி இயக்கம்!

எனவே, நாங்கள் பதவிக்குப் போகிறவர்களோ, புகழ் தேடுகிறவர்களோ, எங்களுக்காக பொருள் தேடுபவர்களோ அல்ல. அப்படிப்பட்ட ஒரு சமுதாய இயக்கம், சமுதாயப் புரட்சி இயக்கத்தினை உலகத்தில் தேடிப் பார்த்தாலும், எங்கும் கிடையாது. எல்லா இடங் களிலும் பதவிக்குப் போகவேண்டும்; ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் பார்த்தால், இதுபோன்ற ஒரு அறிவு கொளுத்துகின்ற இயக்கம் கிடையாது.

திராவிடர் கழகம் அறிவு கொளுத்துகின்ற இயக்கம்; மக்களுடைய அறியாமையைப் போக்குகின்ற இயக்கம்; மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய சமத்துவமின்மையை, பேதத்தை ஒழிக்கின்ற ஒரு இயக்கம்.

எங்களுடைய போராட்டங்கள், அறப்போராட்டங்களாகத்தான் இருக்கும்

நாங்கள் கேட்கிறோம், எங்களுடைய பிரச்சாரம் இங்கே நடைபெறக்கூடாது என்று தடை செய்தவர்களைப் பார்த்துக் கேட்கிறோம்; குறுக்கே நின்றவர்களைக் கேட்கின்றோம்;  எங்களுடைய கருத்துகளை நாங்கள் இன்றைக்குச் சொல்கிறோம். நாங்கள் சொல்வதில் தவறு இருக்கிறது என்று சொன்னால், நாங்கள் சொல்வதில் ஆதாரமில்லை என்று சொன்னால், நாளைக்கு அவர்கள் இங்கே கூட்டம் போடட்டும்; அவர்களுக்கும் அந்த உரிமையைக் கொடுங்கள்; நாளைய மறுநாள் நாங்கள் இங்கே வருவோம். அதுதான் மிக முக்கியமானது. எனவே, கருத்தை கருத்தால் சந்திப்பது என்று சொன்னார்கள் அல்லவா, நம்முடைய தோழர்கள் இங்கே! அதுபோன்று, கருத்துகளைச் சொல்வதற்கும், கருத்துரிமையைச் சொல்வதற்கும் நமக்கு உரிமை உண்டு. இது ஜனநாயக நாடு; இது பாசிச நாடல்ல. நெருக்கடி காலம் அறிவிக்கப்படாமல் இருக்கிறதோ என்று அய்யப்படக்கூடிய அளவிற்கு, தேவையில்லாமல் காவல்துறையை, ஆளுங்கட்சியினர் அல்லது பார்ப்பனர்கள் அவர்களுடைய ஏவுகணை போன்று நினைக்கிறார்கள். அதற்குக் காவல்துறை அதிகாரிகள் பலியாகி விடக்கூடாது. இன்னுங்கேட்டால், சட்டம் - ஒழுங்கை மதிப்பதில், உலகத்திலேயே இருக்கக்கூடிய அமைப்புகளில், இந்தியாவில் இருக்கக்கூடிய அமைப்புகளில், திராவிடர் கழகத்தைப்போல ஓர் அமைப்பை விரல் விட்டுக் காட்டுங்கள்; நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் நடத்திய போராட்டங்கள் ஏராளம்; நாங்கள் அதைத் தொடர்ந்து நடத்துகின்றோம். அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி, நாளைக்கும் சரி, எங்களுடைய போராட்டங்கள், அறப்போராட்டங்களாகத்தான் இருக்கும். காவல் துறையினுடைய முன் அனுமதியோடு, அவர்கள் மறுத்தாலும், சட்ட ரீதியாக என்ன ஒத்துழைப்புக் கொடுக்க முடியுமோ, அதனை செய்து - சட்டம், ஒழுங்கு, பொது அமைதி, இவைகளுக்குக் குந்தகம் இல்லாமல் நடக்கக்கூடிய இயக்கம், எங்களுடைய இயக்கமாகும்.

எங்களை நீதிமன்றத்திற்குப் போகச் சொன்னார்கள், இந்த ஊர் காவல்துறை அதிகாரிகள்

எங்கேயாவது கலவரம் நடந்திருக்கிறது எங்களுடைய பேச்சால் என்பது யாராவது எடுத்துக்காட்டட்டும். இதை நான் சொல்வதைவிட, இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கி, எங்களை நீதிமன் றத்திற்குப் போகச் சொன்னார்கள், இந்த ஊர் காவல்துறை அதிகாரிகள்.

அவர்கள் சொன்னதை காப்பாற்றவில்லை. என்னிடம் வந்து, இந்த ஊரில் திருவிழா நடக்கிறது; வேறு வேறு காரணங்களைச் சொல்லி, நம்முடைய மாநாட்டினை ஒத்தி வைக்கச் சொல்லுகிறார்கள், நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டனர்.

நாம் காவல்துறைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பவர்கள்; நாம் அறிவுப் பிரச்சாரம் செய்பவர்கள்; அதை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் ஒன்றும், மிகப்பெரிய அளவில் தவறு ஒன்றும் நடந்துவிடாது; வானம் இடிந்து கீழே விழுந்துவிடாது; அவர்கள் தள்ளிப் போடச் சொன்னால், தாராளமாக நீங்கள் தள்ளிப் போடுங்கள்; காவல் துறைக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள் என்று சொன்னோம்.

அவர்கள் இளைஞர்கள்; எங்களுக்கு வயதாகிவிட்டது; இளைஞர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான உணர்வோடு இருக்கமாட்டார்கள்; ஆனால், எங்களுடைய கட்டுப்பாடுதான், அவர்களை ஒரு கட்டுக்குள்ளே வைத்திருக்கிறது.

நாங்கள் இன்னமும் சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்

ஒருவர் பெருந்தன்மையாக நடந்துகொண்டால், நம்மு டைய காவல்துறை அதிகாரிகளுக்கு வருத்தத்தோடு சொல் லிக் கொள்கிறேன், அதைப் பலவீனம் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடக்கூடாது. ஏனென்றால், காவல்துறை அதிகாரி களும் நம்முடைய இனத்தைச் சார்ந்தவர்கள்தான், பெரும் பாலும். அவர்கள் அந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதற் காகத்தான், நாங்கள் இன்னமும் சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

உங்களுக்குத் தெரியும், 30, 40  ஆண்டுகளுக்குமுன் நம்முடைய ஊர்வலத்தில், பேரணியில் எழுப்பப்படும் முழக்கங்கள் என்ன தெரியுமா? அய்.ஜி.யெல்லாம் அவாளு; கான்ஸ்டபிள்தான்யா  நம்மாளு'' என்று முழக்கங்களை எழுப்புவோம். அதற்குப் பிறகுதான் அய்.ஜி.யாக நம்மாள் வந்தார்; அதற்குப் பிறகுதான் டி.ஜி.பி.யாக நம்மாள் வந்தார்.

ஒரு நூறாண்டுக்கு முன்பு, பெரியார் இந்த இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு காவல்துறை அதிகாரிகளாக உயர் ஜாதிக்காரர்கள்தான் இருப்பார்கள்; நம்முடைய ஆள்கள் எல்லாம் காவலர்களாகத்தான் இருப்பார்கள். நாம் யாருக்கும் தனிப்பட்ட முறையில் விரோதிகள் அல்ல; தனிப்பட்ட முறை யில் யாரும் பயனடையவேண்டும் என்று பேசக்கூடியவர் களும் அல்ல. ஒரு சமுதாயத்தின் நலத்திற்காகப் பேசக்கூடிய வர்கள்.

நாங்கள் எதற்காகப் பாடுபடுகிறோம்?

ஒரு நூறாண்டுக்கு முன்பு, காவல்துறையில் அடிமட்டத் தில்தான் நம்மாள்கள் இருப்பார்கள்; மேல்மட்ட அளவில் அவாள்கள்தான் இருப்பார்கள். ரைட்டர் பதவியில் 35, 40 ஆண்டுகாலம் இருப்பார்கள்; ரைட்டர் அய்யா, ரிட்டையர் அய்யா'' என்பார்கள். இது பழைய காலம்; இன்றைக்குத்தான் டி.ஜி.பி.யாக, அய்.ஜி.க்களாக நம்மாள்கள் வந்திருக்கிறார்கள். அதற்காகப் போராடியவர்கள்தானே நாங்கள். எங்களுடைய அண்ணன், தம்பிகள் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவா நாங்கள் பாடுபடுகிறோம்?

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது. கல்வியை கொடுத்தால்தானே, அவன் படித்துவிட்டு, உத்தியோகத்திற்கு வர முடியும். இதுதானே மனுதர்மம்; பார்ப்பனர்கள் மனம்  நொந்து போகிறது, வெந்து போகிறது என்று சொல்கிறார்களே, நாணயம் இருந்தால், பார்ப்பனர்கள், அது இந்த ஊர் பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி, எந்த ஊர் பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் சொல்லட்டும்.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது இந்து மதம் எங்கே போகிறது?'' அக்னி ஹோத்தரம் தாத்தாச்சாரியார் எழுதிய புத்தகம் இது. வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான்.

நக்கீரன் பத்திரிகையில் அவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் இந்து மதம் எங்கே போகிறது?  என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது. 101 வயதில் இறந்தார் அவர்.

நாங்கள் பேசுவதில் தவறு இருந்தால், அடுத்த நாள் கூட்டம் போட்டு பேசுங்கள்; நீதிமன்றத்தில் வழக்கும் போடுங் கள். அது காவல்துறையாக இருந்தாலும், பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி. அங்கே அவர்களைச் சந்தித்து, விளக்கவேண் டியவைகளை, எஞ்சியவற்றை விளக்கவேண்டிய வாய்ப் பைப் பெறுவோம்.

நாட்டில் விஞ்ஞானிகள் குறைவாகத்தான் இருப்பார்கள்!

கவுரவமாக, பெருந்தன்மையாக நடக்கிறோமே என்று நினைக்காதீர்கள்; ஆட்கள் குறைவாக இருக்கின்ற கட்சி என்றும் நினைக்காதீர்கள். நாட்டில் விஞ்ஞானிகள் குறை வாகத்தான் இருப்பார்கள்; நோபல் பரிசு பெற்றவர்கள் அதைவிட குறைவாகத்தான் இருப்பார்கள். அவ்வளவுதூரம் போகவேண்டாம், நேற்றைய முன்தினம் ஒரு பயங்கரவாதி யின் செயலால், நம்முடைய 40 ராணுவ வீரர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அதில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு நாம் வீர வணக்கம் செலுத்தவேண்டும். அப்படிப்பட்ட ராணுவத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இராணுவத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்; நம்மு டைய நாட்டின் மக்கள் தொகை 125 கோடி பேர். ஆனால், ராணுவத்தில் 125 கோடி பேரா இருக்கிறார்கள்? காவல் துறையை எடுத்துக்கொள்ளுங்கள்; உள்ளூரில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்காக இருப்பதுதான் காவல்துறை. வெளிநாட்டுப் படையெடுப்பு வராமல் பார்த்துக் கொள்வது தான் இராணுவம். ஆனால், அந்த இராணுவத்தினர், மக்கள் தொகையில் இரண்டு, மூன்று சதவிகிதம்தானே இருப்பார்கள். சதவிகித கணக்கா பார்ப்பது? அந்த ராணுவத்திற்கு அவர்கள் சர்வபரிகாரம் செய்யக்கூடியவர்கள், நேற்றைய முன்தினம் இறந்தவர்களைப்போல. அதுபோன்று, கருஞ்சட்டை ராணுவம் தங்களைத் தாங்களே தியாகம் செய்துகொண்டு, இந்த நாட்டில் இருக்கின்ற சமுதாய இழிவை, உரிமையற்ற போக்கைத் தடுக்கவேண்டும்; மீட்டெடுக்கவேண்டும் என்று பாடுபடுகிறது.

யாரையும் புண்படுத்துவது எங்களுடைய வேலையல்ல;

எல்லோரையும் பண்படுத்துவதுதான் எங்களுடைய வேலையாகும்.

"இந்து மதம் எங்கே போகிறது?''

இந்து மதம் எங்கே போகிறது?'' நூலில் அக்னிஹோத்தரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்:

ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்'' என்கிறார் இராமானுஜ தாத்தாச்சாரியார்.

பெண்களை, ஆரியப் பெண்கள் உள்பட அவர்கள் நமோ சூத்திரர்கள்'' என்றுதான் அழைக்கிறார்கள்.

இந்த நாட்டு ஜாதிமுறை எப்படி இருக்கிறது என்பதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாக சொல்லி யிருக்கிறார்.

equality and inequality

சிறீ வில்லிப்புத்தூர்

மதுரை மண்டல இளைஞரணி மாநாடு

வரவேற்புரை: மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன்

தலைமை: விருதுநகர் இளைஞரணி தலைவர் கோவிந்தன்

கழகக்கொடி ஏற்றி உரை: மாணவர் கழகம் எழில்மதி, கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வழக்குரைஞர் வைகுந்தம் (சிறீவில்லிப்புத்தூர்), சாத்தூர் அசோக் (மாவட்ட ப.க. தலைவர்), திமுக நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், மாநில கழக வழக்குரைஞரணி செயலாளர் சித்தார்த்தன், திமுக இலக்கிய அணி பொறுப்பாளர் அன்னக்கொடி, விருது நகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் விருதை வசந்தன் விருதுநகர் மாவட்ட செயலாளர் விடுதலை ஆதவன், பொதுக்குழு உறுப்பினர் வானவில்மணி, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் பகீரதன், இராஜபாளையம் நகர தலைவர் சிவக்குமார், இராஜபாளையம் நகர செயலாளர் பாண்டி முருகன்

பொதுச்செயலாளர் ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் செல்வம், தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் எடிசன்ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாநில ப.க. துணைத் தலைவர் நல்லதம்பி, மதுரை மண்டலத் தலைவர் பவுன்ராசா, மதுரை மண்டல செயலாளர் முருகேசன், மதுரை மண்டல இளைஞரணி செயலாளர் அழகர்.

நன்றியுரை: மகளிரணி கார்த்திகா.

சுடுகாட்டிலும் ஜாதி!

சமத்துவம் - சமத்துவமின்மை என்ற இரண்டு நிலைகள் மட்டுமல்ல; சமத்துவம் - சமத்துவமின்மை நம்முடைய நாட்டில் எப்படி இருக்கிறது என்றால், ஜாதியினால், பிறவி இழிவினால், பிறக்கும்பொழுதே ஒருவன் ஜாதியோடு பிறக்கிறான்; வாழும்போதும் அவன் ஜாதியோடு வாழ்கிறான். இறந்ததும் சுடுகாட்டிற்கு அந்த ஜாதியோடுதான் போகிறான். சுடுகாட்டிலும் அந்த ஜாதி இட ஒதுக்கீடு இருக்கிறது. இன்னமும் அது நடந்துகொண்டிருக்கிறது.

இதுதான் பிரச்சினை. அசல் மனுதர்மம் புத்தகம் யாருக்காவது வேண்டும் என்றால், இங்கே விற்கப்படுகிறது, அதனை வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். நாங்கள் ஆதாரமில்லாமல், கற்பனையாக சொல்லவில்லை. இந்து மதம் எங்கே செல்கிறது?'' என்ற நூலில் உள்ளவற்றைப் பார்ப்போம்:

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மனு? வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.

அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மனு பிளவாக்கியது.

கூடவே, இவர்களைத் தாண்டி சூத்திரர்கள் என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.''

இதைத்தான் இராமானுஜ தாத்தாச்சாரியார் சொல்கிறார், அதை நாங்கள் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.

சூத்திரர்களுக்கு எதை கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக்கூடாதாம்; இதை நம்முடைய நாட்டில் இருந்த சேரன், சோழன், பாண்டியன் அனைவரும் பின்பற்றினார்கள். எனவே, மனுநீதி ஆட்சிதான் நடைபெற்றது.

தப்பித் தவறி முழுப் பெரும்பான்மையோடு மோடி அரசு வந்துவிட்டால்,

இந்திய அரசியல் சட்டம் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அந்த அரசியல் சட்டத்தையே தூக்கி எறிந்துவிட்டு, மனுதர்மத் தைத்தான் அரசியல் சட்ட இடத்தில் வைக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கை; பா.ஜ.க. வினுடைய கொள்கை; நாளைக்குத் தப்பித் தவறி முழுப் பெரும்பான்மையோடு மோடி அரசு வந்துவிட்டால், இந்திய அரசியல் சட்டம் சென்றுவிடும்; அதற்குப் பதிலாக மனுதர்மமே வென்றுவிடும்.

மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்? எதைக் கொடுத்தாலும் சூத்திரர்களுக்கு கல்வியை, அறிவைக் கொடுக்காதே'' என்று.

உலகத்தில் வேறு எங்கேயாவது இதுபோன்று உண்டா?

உலகத்தில் வேறு எங்கேயாவது இதுபோன்று உண்டா? நிற பேதம் என்று சொல்லக்கூடிய அமெரிக்கா, ஆப்பிரிக்கா வில்கூட வெள்ளைக்காரன் - கருப்பன் என்றுதான் இருக்கிறது; கருப்பர்கள் நீக்ரோ என்று அழைக்கப்பட்டார்கள்.  கருப்பர்களோடு நாங்கள் அமர மாட்டோம் என்றிருந்த காலம் போய், கருப்பரே அதிபராக வரக்கூடிய அளவிற்கு சமுதாய மாற்றம் வந்துவிட்டது. ஆனால், அங்கே கூட நீக்ரோக்கள் படிக்கக்கூடாது என்று சொல்லவில்லை.

இதோ என் கைகளில் இருப்பது அண்மையில் மறைந்த பேராசிரியர் க.ப.அறவாணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர்  அவர்கள் எழுதிய தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?'' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.

பார்ப்பன வில்லுக்கு அம்புகளாக மாறுகின்றார்கள்

நாங்கள் எதற்காகப் பாடுபடுகிறோம் என்பதை நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எங்களை எதிர்க்கின்ற நண்பர்கள், அவர்கள் இந்து முன்னணியாக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.,யில் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாத மக்கள்; அவர்கள் எங்களுடைய சகோதரர்கள். அவர்கள் ஏதோ புரியாமல், ஆகா, வீரமணி இங்கே வரக்கூடாது'', திராவிடர் கழகம் வரக்கூடாது'' என்று சொல்வார்கள். ஆனால், அவர் களே அய்ந்து ஆண்டுகள் கழித்து எங்களை அழைத்து கூட்டங்களை நடத்துவார்கள். இது வரலாறு. ஏதோ ஒரு காரணத்தை யாரோ சொன்னார்கள் என்பதற்காக பார்ப்பன வில்லுக்கு அம்புகளாக மாறுகின்றார்கள். அதனால், எங்களுக்கு அவர்களின்மேல் வருத்தம் கிடையாது.

இன்றைக்கு அவர்கள் பிள்ளைகள் வாய்ப்புகளை அனுபவிக்கிறார்களே, அது என்ன? அவர்களைத் தவிர மற்றவர்களுக்கா?  69 சதவிகித இட ஒதுக்கீடு வந்திருக்கிறதே - திராவிடர் கழகம் இல்லை என்றால், அந்த வாய்ப்பு வந்திருக்குமா? அதை தகர்க்கவேண்டும் என்பதற்காகத் தானே, மோடி அரசு 10 சதவிகிதம் என்று பொருளாதார அடிப்படையில் உள்ளே நுழைத்திருக்கிறது. அதைத் தட்டிக் கேட்பதற்கு நாங்கள் இல்லை என்றால், அதைக் கேட்பதற்கு நாதியே இல்லை.

உயர்ஜாதியினருக்கும் நாங்கள்தான் கேட்கிறோம்!

காவல்துறையில் ஏன் இட ஒதுக்கீடு இல்லை என்பதை உயர்ஜாதியினருக்கும் நாங்கள்தான் கேட்கிறோம்.

காவல்துறையில் பெண்கள் ஏன் அதிகாரிகளாக வருவதில்லை என்பதை நாங்கள்தானே கேட்கிறோம்.

ஏன் நீதிபதிகளுக்குப் போதிய இடம் இல்லை; எங்களு டைய ஆட்கள் நீதிபதிகளாக வரக்கூடாதா? வழக்குரைஞர் களுக்குப் பஞ்சமா? அவர்கள் நீதிபதிகளாக வரவேண்டாமா? என்பதை நாங்கள்தான் கேட்கிறோம்.

இதை நாங்கள் கேட்பதினால், பாதிக்கப்படுகின்றவர்கள் பார்ப்பனர்கள். ஏனென்றால், நூறாண்டுகளாக அதை அனுபவித்துக் கொண்டு வந்துவிட்டார்கள். நாங்கள் என்ன சொல்லுகிறோம், உனக்கு இருக்கிற உரிமையை நீ அனுபவி. சொந்த அண்ணன் -தம்பியாக இருந்தாலும், பாகப் பிரிவினை என்று வந்தால் என்னாகும்? தமிழ்நாட்டில் ஒரு பழமொழியே உண்டே! தாயும், பிள்ளையும் ஒன்று என்றாலும், வாயும், வயிறும் வேறு'' என்று. தாய்க்கும், பிள்ளைக்குமே அந்த நிலை என்றால், நீ யார்? உங்களுக்கும், எங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் எங்கே இருந்து வந்தீர்கள் என்பதை உங்களுடைய ஆளே சொல்லியிருக்கிறாரே!

நாங்கள் சொல்வது அத்துணையும் உண்மை; மரண வாக்குமூலம் போன்றது

ஆதாரப்பூர்வமாக நாங்கள் சொல்கிறோம். யாரையும் தாக்குவதற்காக அல்ல. பெரியார் ஒருமுறை சொன்னார், நாங்கள் சொல்வது அத்துணையும் உண்மை; மரண வாக்குமூலம் போன்றது'' என்றார்.

மரண வாக்குமூலம்தான்; நானே இங்கே வந்து உரையாற்றுகிறேன் என்றால், 35 வருஷ போனஸ் காலம்தான். மம்சாபுரத்தில் தாக்கப்பட்டு, என் மூக்கு உடைபட்டு, இங்கே வந்து பேசினேன். அதோடு முடிந்து போயிற்று என்று நினைத்தார்கள். அடித்தவர்களை ஆளைக் காணோம்; அதுமட்டுமல்ல, அடிக்கத் தூண்டியவரே என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்.

நீங்கள் வந்து எம்.ஜி.ஆர். சிலையை திறக்கவேண்டும்'' என்றார்.

நான் திறக்கவேண்டிய அவசியம் இல்லை என்றேன்.

மன்னிக்கவேண்டும்; எனக்குத் தெரியாது என்றார் அவர்.

தமிழர்களுக்காகப் பாடுபடுகிறவர்கள்தான் நாங்கள்!

எங்களுக்குத் தனிப்பட்ட யார்மீதும் கோபம் கிடையாது. அதேபோன்று இங்கே உள்ள காவல்துறை அதிகாரிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால், அவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாக இருக்கவேண்டும் என்று சில அதிகாரிகள் நினைக்கிறார்கள். தயவு செய்து அப்படி இருக்காதீர்கள். ஏனென்றால், மூன்று மாதத்தில் ஆட்சி மாறும்; அப்பொழுது அந்த அதிகாரிகள் எங்கே வந்து நிற்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அப்பொழுதும்  தமிழர்களுக் காகப் பாடுபடுகிறவர்கள்தான் நாங்கள்.

பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?'' அதில் பக்கம் 156-157 இல் ஒரு கருத்தை அவர் சொல்கிறார்:

"தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?

காலந்தோறும் தமிழருடைய கல்வி அறிவு போதுமான தாக இல்லை; சுத்தமாக இல்லை. 1901 இல் ஆங்கிலேயரால் எடுக்கப்பெற்ற  முதல் மக்கள் தொகை அறிவிப்பின்படி தமிழருள் படித்தோர் தொகை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவுதான்; 99 பேர் படிக்காமல் இருந்தனர்.  அக்காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லச் செல்லத் தமிழர் கல்வி கற்றதற்கான தடயங்கள் மிகமிகக் குறைவாக உள்ளன. அல்லது இல்லாமலே உள்ளன. நாயக்கர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், பிற்காலச் சோழர் காலம், பல்லவர் காலம், களப்பிரர் காலம், சங்ககாலம் எனப் பின்னோக்கிப் பார்க்கும்பொழுது கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, சீனம், யூத நாடுகளைப் போல மக்கள் நிறுவன வழி கல்வி கற்றதற்கான அல்லது கல்வி கற்பித்ததற்கான தடயங்களே இல்லை. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை கிட்டத்தட்ட 1000 ஆண்டு களில் அரசர்கள், பிராமணர்கள் நான்கு வேதங்களையும் கற்க மானியங்கள் வழங்கிய செய்திகள், அரசர் ஆட்சிதோறும் காணப்படுகின்றன. எந்தச் செலவுமில்லாமல் இலவசமாகப் பிராமணர்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு அரசே மானியங்கள் வழங்கிற்று என்ப தற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன'' என்று பேராசிரியர் க.ப.அறவாணன் குறிப்பிடுகின்றார்.

இப்படி நடந்த இடத்தில், இந்தக் கொடுமைகளை மாற்றி, இன்றைக்கு நூற்றுக்கு எழுபது பேர் படித்திருக்கிறார்கள் என்று சொன்னால், அது யாரால்? நீங்கள் வருஷா வருஷம் கொண்டாடிய சரசுவதி பூஜையினால் அல்ல நண்பர்களே! பெரியார் என்ற மாமனிதர் - நீதிக்கட்சி என்ற திராவிட இயக்க ஆட்சி - கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசர் அவர்க ளுடைய ஆட்சி - இதெல்லாம் வந்ததினால்தான், இன்றைக்கு இவ்வளவு பெரிய மாற்றம்.

60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல் என்ன?

திரும்பிய பக்கமெல்லாம் பள்ளிக்கூடங்கள்; உயர்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் வந்திருக்கின்றனவே, இது எப்படி நடந்தது? கல்விப் புரட்சி நடந்ததினால்தான் - அமைதிப் புரட்சி நடந்ததினால்தான் - இந்த இயக்கம் குரல் கொடுத்ததினால்தான் நண்பர்களே! இல்லையானால், ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல் என்ன? ராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாரே - அந்தத் தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்? குலக்கல்வித் திட்டத்தைக் கடைபிடித்திருந்தால், காவல் துறை அதிகாரிகளாக நம்மாட்கள் வந்திருக்க முடியுமா?

6 ஆயிரம் ஆரம்பப் பள்ளிக்கூடங்களை மூடினாரே, 1953 ஆம் ஆண்டில். எஞ்சிய பள்ளிக்கூடங்களில் பிள்ளை கள் அரை நேரம் படிக்கவேண்டும்; அரை நேரம் அவரவர் குலத்தொழிலை செய்யவேண்டும் என்றாரே - வெளுக் கின்றவன் பிள்ளை வெளுக்கவேண்டும்; சிரைக்கின்றவர் பிள்ளை சிரைக்கவேண்டும்; வீதி கூட்டுகின்றவர் பிள்ளை வீதி கூட்டவேண்டும்; மலம் எடுக்கின்றவர் பிள்ளை மலம் எடுக்கவேண்டும்; பார்ப்பான் மட்டும் படிக்கவேண்டும்.

தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் இல்லாவிட்டால்...

இதுதானே வருணாசிரம தர்மம்; இதை எதிர்த்துக் கேட்ப தற்கு, தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் இல்லாவிட்டால், இந்த நாட்டில் அது தொடர்ந்திருந்தால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் எல்லாம் லண்டனிலும், சுவிட்சர் லாந்திலும் பணியில் இருந்திருக்க முடியுமா? நம் பிள்ளை களுக்கு அறிவோ, ஆற்றலோ குறைவா என்றால், கிடையாது. வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தார்கள். வாய்ப்பு கொடுத் தால்தானே நம் பிள்ளைகள் தங்களை நிரூபிப்பார்கள்.

நான் இன்றைக்கு எம்.ஏ., பி.எல். படித்திருக்கலாம்; எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. எங்கள் குடும்பத்தில் கல்லூரிக்குப் போன முதல் ஆள் நான்தான். கல்லூரிக்குப் போனவுடன்தானே, என்னுடைய அறிவை வெளியில் காட்ட முடிந்தது. இல்லை என்றால் ஓம், ரீம், கிரீம்'' என்று சொல்லிக்கொண்டு, பஜனை செய்து கொண்டுதான் இருந்தி ருக்க வேண்டும்.

94 வயது வாழ்ந்த தந்தை பெரியார் அவர்கள், சிறுநீர் இயல்பாகப் போக முடியாத அளவிற்கு, அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஒரு குழாய் போட்டு, அந்தக் குழாயின்மூலம் எப்பொழுதும் சிறுநீர் வடிந்துகொண்டே இருக்கும்; அதை ஒரு பாட்டிலினுள் வைத்து; அந்தப் பாட்டிலை ஒரு வாளியில் வைத்துக்கொண்டு, இரண்டு பேர் உதவியுடன்தான் எழுந்திருப்பார்; உட்காருவார்.

உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள்; எனக்கோ ஆறு கால்கள்

பெரியார் வேடிக்கையாக சொல்வார், உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள்; எனக்கோ ஆறு கால்கள்; என் இடது பக்கம் என்னைப் பிடித்துக் கொள்கிறவருக்கு இரண்டு கால்கள்; வலது பக்கம் என்னைப் பிடித்துக் கொள்கிறவருக்கு இரண்டு கால்கள்; எனக்கு இரண்டு கால்கள்; ஆக மொத்தம் ஆறு கால்கள்'' என்பார்.

அய்யோ, அம்மா என்று வலியால் முனகிக்கொண்டே யாருக்காகப் பாடுபட்டார் தந்தை பெரியார்? இன்றைக்கு இந்தக் கொள்கை வரக்கூடாது என்று நினைக்கிறீர்களே? இதற்கு ஆதரவாக இருக்கக்கூடிய பெருமக்களே, நீங்கள் தயவு செய்து எண்ணிப்பாருங்கள்; இந்த இயக்கம் இல்லா விட்டால், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் என்னாவது? அதை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். அதற்காக இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கின்றோமே! இந்த இயக்கம் பாடுபட்டதினால்தானே இட ஒதுக்கீடு. இல்லை யென்றால், இட ஒதுக்கீடு வந்திருக்காதே! அரசியல் சட்டத் திருத்தம் யாருக்கு? மூன்று அரசியல் சட்டத் திருத்தங்கள், திராவிடர் கழகத்தினால் வந்தது.

இந்து முன்னணி சகோதரர்களே, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அம்பாக இருக்கின்ற புரியாத தமிழனே, மூடனே நினைத்துப் பார்.

மூன்று அரசியல் சட்ட முக்கிய திருத்தம்!

எந்த இயக்கத்தின் பிரச்சாரக் கூட்டம் நடக்கக்கூடாது என்று நீங்கள் தடுக்கிறீர்களோ, அரசியல் சட்டம் அளித்திருக் கின்ற சட்ட உரிமைப்படி, அந்த உரிமையை நாங்கள் இன்றைக்கு வாங்கியிருக்கிறோம் என்பது பிறகு, இந்திய அரசியல் சட்டத்தில், மூன்று அரசியல் சட்ட முக்கிய திருத்தம், சமூகநீதிக்காக திராவிடர் கழகத்தால்  வந்தது என்று பதிவாகியிருக்கிறது. இதை யாராவது மறுக்க முடியுமா? அது யாருக்காக? திராவிடர் கழகத்துக்காரர் பிள்ளைகளுக்காகவா? காவிச் சட்டை, சிவப்புச் சட்டை, வெள்ளைச் சட்டை, சட்டை இல்லாத பிள்ளைகளுக்கெல்லாம் சேர்த்துத்தானே நாங்கள் பாடுபடுகிறோம். எங்களுடைய குரல் வெளியே வரக்கூடாது என்றால், கொள்ளையடிப்பவர்கள், கொள்ளையடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

காவல்துறை இருப்பதினால்தான், இந்த ஊருக்கு அமைதி; அதுபோன்று திராவிடர் கழகம், இந்த நாட்டின் காவல்துறை; இந்த நாட்டினுடைய உரிமைத் துறை என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆகவே, அந்த அடிப்படையில்தான் இந்தக் கருத்தைச் சொல்கிறோம். முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் - தந்தை பெரியார் கிளர்ச்சி செய்ததால்தானே, வந்தது. நேரு பெருந் தன்மையோடு அதை ஏற்றுக்கொண்டு, அம்பேத்கர் எழுதி, திருத்தி, 15(4) கல்வி, இட ஒதுக்கீடு வந்ததா? இல்லையா?

இது யாரால் வந்தது? சத்ய சாய்பாபா கையைத் தூக்கிய தால், பொத்தென்று கீழே விழுந்ததா? அல்லது கடவுள்களால் ஏற்பட்ட பலனா இது?

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுளால், உன்னை எப்படிக் காப்பாற்ற முடியும்?

சர்வ சக்தி வாய்ந்த கடவுள் என்று சொல்வார்கள்: அப்படி சர்வ சக்தி வாய்ந்த கடவுளைப் பூட்டி வைத்தால்கூட, காணாமல் போய்விடுகிறது. அதற்கென்றே தனி பிரிவு ஒன்று காவல்துறையில் இருக்கிறது; கடவுளர்கள் வெளிநாடுகளுக் குக்  கடத்திச் செல்வதைத் தடுப்பதற்கென்றே.

பெரியார்தான் சொல்வார், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுளால், உன்னை எப்படிக் காப்பாற்ற முடியும்?'' என்று கேட்பார்.

எங்களுக்கும், கடவுளுக்கும் என்ன தனிப்பட்ட சண்டையா? கிடையவே கிடையாது. எங்களுடைய உரிமை, எங்களுடைய இனம், எங்களுடைய உழைக்கின்ற மக்கள் -பாடுபடுகின்ற மக்கள் - மலத்தினை தலையில் தூக்கி சுமக்கின்றார்களே எங்கள் தோழர்கள் - வயல்களில் முழங்கால் சேற்றில் நின்று பாடுபடுகிறார்களே எங்கள் தாய்மார்கள் - ஒரே ஒரு புடவை - அதற்கு மாற்று கிடையாது - அதைத் துவைத்து, ஒரு முனையை மரத்தில் கட்டிக்கொண்டு, இன்னொரு முனையை உடலில் சுத்திக்கொண்டு, மானத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார்களே, எங்கள் சகோதரிகள் - அதுபோன்று உயர்ஜாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடிய வர்களில் யாராவது உண்டா? அந்தக் கடவுளை வைத் துத்தானே இந்தப் பேதா பேதங்கள்!

வர்ணாசிரம தர்மத்தைப்பற்றி பேசுகிறார்கள், ஜாதியைப் பற்றி பேசுகிறார்கள் என்று சொல்கிறார்களே, அதைப்பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

அரசியல் சட்டத்தில் மூன்று திருத்தம் என்று சொன்னேன்;

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம், 1951 இல்

இரண்டாவது, 69 சதவிகிதத்திற்காக ஜெயலலிதா அவர் கள் முதலமைச்சராக இருந்தபொழுது கொண்டு வந்தது. அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்தது திராவிடர் கழகம்.

மூன்று பார்ப்பனர்களை வைத்து வேலை வாங்கிய இயக்கம்!

மூன்று பார்ப்பனர்களை வைத்து வேலை வாங்கிய இயக்கம் இது. 69 சதவிகித மசோதாவை தமிழகத்தில் ஒரு மனதாக நிறைவேற்றியவர்  தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா; அவர் ஒரு பார்ப்பனர். நாடாளுமன்றத் தில் அந்த மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர் பிரதமராக இருந்த இன்னொரு பார்ப்பனரான நரசிம்மராவ்;  அந்த சட்டத்திற்குக் கையெழுத்துப் போட்டு நிறைவேற்றியவர் மூன்றாமவர் குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா என்ற பார்ப்பனர்.

எங்களைத் திரும்பிப்போ என்று சொல்கின்ற நண்பர்களே, நாங்கள் எதற்காக இங்கே வந்தோமோ அந்த வேலையை முடித்துவிட்டுத்தான் போவோம். அவர்கள்மேல் எங்களுக்குக் கோபம் கிடையாது. அவர்களைத் திருத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்காக 69 சதவிகித சட்டம் நிறைவேற்றப்பட்டு, 9 ஆம் அட்டவணையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதே பார்ப்பனர்கள் என்ன சொன்னார்கள் அன்றைக்கு? இட ஒதுக்கீட்டினால், தகுதி போச்சு, திறமை போச்சு, இவர்கள் எல்லாம் வரக்கூடாது என்று சொன்னார்கள். இன்றைக்கு அவர்களுக்குப் பத்து சதவிகித இட ஒதுக்கீடு என்கிறார்களே, அப்பொழுது தகுதி திறமை என்னாச்சு? இதுதான் பார்ப் பனர்கள்; இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் என்ன தெரியுமா?

மத்திய அரசின் பல்கலைக் கழகங்கள் - அய்.அய்.டி., .அய்.எம்.எஸ். மத்திய பல்கலைக் கழகம் போன்ற நிறுவனங் களில், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோருக்குப் போதிய இட ஒதுக்கீடு இல்லை. அது 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம்.

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம்

76 ஆவது அரசியல் சட்டத் திருத்தம்

93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் இத்தனைக்கும் இந்த இயக்கம் பாடுபட்டது. எங்களை நாங்களே வருத்திக்கொண்டுதான் பாடுபடுகின்றோம். பொதுச்சொத்துகளுக்கு நாசம் விளைவித்திருக்கின்றோமா? பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்திருக்கின்றோமா? காவல்துறைக்கு நாங்கள் இடையூறாக இருந்திருக்கின்றோமா? என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.

பார்ப்பனர்களைப்பற்றி விவேகானந்தர்!

ஆர்.எஸ்.எஸ். நண்பர்களே, நீங்கள் அதிகமாக பேசுகிறீர் களே, சுவாமி விவேகானந்தர்ப்பற்றி, அவர் பார்ப்பனர்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

The complete works of Swami Vivekananda Vol-III

அதில்,

வேதத்தை நீங்கள் மட்டும்தான் படிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்; இங்கு நான்கு ஜாதிகள் கிடையாது. பூணூல் போடுகிற உரிமை மூன்று ஜாதிகளுக்குத்தானே உண்டு. நான்காவது ஜாதிக்குக் கிடையாதே!

சுலோகம் 61; அத்தியாயம் 4

சூத்திரன் ராசாவாயிருக்கும் இராச்சியத்திலும், வேதம் அறியாதவர்கள், தருமமறியாதவர்கள் பாஷண்டிகள் இவர்கள் வசிக்கும்படியான கிராமத்திலும் சமீபத்தில் சண்டாளர் வசிக்கின்ற கிராமத்திலும் வாசஞ்செய்யப்படாது.

மனுதர்மத்தின் இந்த வாசகத்தையே அப்படியே எடுத்து விவகானந்தர் கையாளுகிறார்.

சூத்திரர்கள் ஆளுகின்ற மாநிலம், ஆட்சி என்று சொன்னால், அவர்கள் நீங்கள் இருக்கலாமா, சாஸ்திரப்படி. மூட்டை முடிச்சுகளுடன் வெளியே கிளம்புங்கள் என்று சொல்கிறார் விவேகானந்தர்.

பார்ப்பனர்களை நோக்கி விவேகானந்தர் கேள்வி கேட்கிறார்.

காலங்காலமாகப் படித்தவர்கள் நீங்கள்; உச்சநீதிமன் றத்தை எடுத்துக்கொண்டால், பார்ப்பனர்கள் எத்தனை பேர் நீதிபதிகளாக உள்ளனர். ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கூட நீதிபதியாக இன்று இல்லை.

சமூகநீதிக்காகப் பாடுபடுகின்ற இயக்கம்

சமூகநீதி என்பது அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டு இருக்கின்ற உரிமையாகும். எனவேதான் நண்பர்களே, இந்த இயக்கம் என்பது இருக்கிறதே, முழுக்க முழுக்க சமூகநீதிக்காகப் பாடுபடுகின்ற இயக்கமாகும்.

இன்னொரு மிக முக்கியமான கருத்து என்னவென்றால், அடிப்படை உரிமைகள் நமக்கு எப்படி உண்டோ, எப்படி நாம் நீதிமன்றத்திற்குச் சென்று, பேச்சுரிமையை இங்கே நிலைநாட்டி இருக்கின்றோமோ, அதேபோன்று அடிப்படைக் கடமைகள் என்ற ஒன்று உண்டு.

அரசியல் சட்ட சரத்தின் கடமையைச் செய்வது திராவிடர் கழகம்தானே!

நிறைய பேருக்கு இந்தத் தகவல்கள் தெரியாது. வழக்குரைஞர்களில்கூட சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

Fundamental Duties 4A
It shall be the duty of every citizens of India -
to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;

ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கின்ற கடமை என்னவென்றால், மிக முக்கியமாக அறிவியல் மனப்பான் மையை வளர்க்கவேண்டும்; பெருக்கவேண்டும். ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்கும் பேதமில்லை. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தொடாதே, பார்க்காதே, நெருங்காதே என்று சொல்லக்கூடாது. அவனுக்கு சமவாய்ப்பை சமத்துவத்தைக் கொடுக்கவேண்டும். அதுதான் மனிதநேயம். யார் நோயாளியாக இருக்கிறார்களோ, அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்புவதுபோன்று, மிக முக்கியமான அளவிற்கு வாய்ப்புகளைப் பெறவேண்டும்.

மூடநம்பிக்கையில் உழலாதீர்கள். இதனால் நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து.

சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கினார்கள்!

அதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

தமிழகத்தில் கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சியின் முயற்சியால், மத்தியில் காங்கிரசு தலைமையில் இருந்த ஆட்சியினால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத் திற்காக 2 ஆயிரம் கோடி ரூபாயினை செலவு செய்தார்கள். அந்தத் திட்டத்தை முடக்குவதற்காக, அது இராமன் உருவாக்கிய பாலம் என்று ஒரு கற்பனையை உருவாக்கி, பிரச்சாரம் செய்து, நீதிமன்றத்தில் செல்வாக்கு அவர்களுக்கு இருக்கிறது என்பதற்காக, 6 பார்ப்பனர்கள் சேர்ந்து, மக்கள் வரிப்பணத்தினை 2 ஆயிரம் கோடி ரூபாயினை முடக்கி விட்டார்களே! அதற்கு மூடநம்பிக்கைத்தானே காரணம்.

எதை எடுத்தாலும், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள். சீர்திருத்தம். இதை திராவிடர் கழகத்தினைத் தவிர வேறு யார் கேட்பார்கள். இதுபோன்ற கூட்டங்களைப் போடுவதும் அதற்காகத்தானே! மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும்; பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்படவேண்டும்; ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்பதுதானே எங்களுடைய நோக்கம்.

சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் இந்த  யும் செய்யும் இயக்கம், இந்த இயக்கம்தானே! இதை செய்ய வேண்டாம் என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்?

அறிவியலை நீங்கள் புறக்கணிக்க முடியுமா? மின்சாரம் இல்லாமல், இன்றைக்கு இருக்க முடியுமா? பவர் கட் என்றால், அது கடவுளுக்கும் சேர்த்துதானே! மின்சாரம், அறிவியல் இல்லையா?  இன்றைக்கு எல்லோருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறதே - ஆனால், நம்மால் என்ன செய்கிறான், செல்போனில், சோதிடம் சொல்கிறேன், ராசிபலன் சொல்கிறேன் என்கிறார் கள். விஞ்ஞானத்தை, அஞ்ஞானமாக்குகிறார்கள்.

மேலைநாட்டுக்காரர்கள் செவ்வாய்க் கோளுக்கே சென்று வருகிறார்கள்; ஆனால், நம் நாட்டில் செவ்வாய் தோஷம் என்று பல ஆயிரக்கணக்கான பெண்கள் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். அறிவியல் மனப்பான்மையை சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம், இந்த இயக்கத்தைத் தவிர வேறு இருக்கிறதா?

எனவே நண்பர்களே! நீங்கள் அறிவியல் மனப்பான் மையைப் பரப்பவேண்டும்; ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கவேண்டும்.

ஜாதி ஒழிக என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லுமா?

நாங்கள் இங்கே இவ்வளவு நேரம் பேசியிருக்கிறோம்; அதை நீங்கள் அப்படியே நம்பவேண்டாம்; உங்கள் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பாருங்கள்; நாங்கள் பேசிய தில் உண்மை இருக்கிறதா? இல்லையா? நாங்கள் சுயநலத் திற்காக பேசுகிறோமா? பொதுநலத்திற்காகப் பேசுகிறோமா? என்று.

ஆகவே நண்பர்களே, நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த இயக்கம் மக்களுக்காக! இந்த இயக்கம் சமுதாய இயக்கம்!

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது ஜாதிகளை பாதுகாக்கவேண்டும் என்று சொல்கின்ற இயக்கம்.

தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொன்னால் மட்டும் போதாது! ஜாதிகளை ஒழிக்கவேண்டும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் கேட்டபொழுது,

கடவுள் இல்லை என்று சொல்கின்ற உங்களுக்கு, அர்ச் சகர் எந்த ஜாதியாக இருந்தால் என்னவென்று கேட்டார்கள்.

இது கொள்கைப் பிரச்சினையல்ல; ஒரு மனிதனுக்கு இருக்கின்ற உரிமை; இன்னொரு மனிதனுக்கும் வேண்டும் என்பதுதான்.

இந்தியாவினுடைய முதல் குடிமகனாக இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதை நாங்கள்தானே கண்டித்தோம். வேறு எந்த இயக் கம் கண்டித்தது? தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரே கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று பெரியார் சொன்னதின் நோக்கம் என்ன? மோட்சத்தில் முன்சீட் கிடைக்கவேண்டும் என்பதற்காகவா?

ஒரு மனிதனுக்கு இருக்கின்ற உரிமை இன்னொரு மனிதனுக்கு மறுக்கப்படக் கூடாது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார். ஆகமங்கள் படித்திருக்கவேண்டும் என்றார்கள்; உடனே தகுதி உள்ள அர்ச்சகர்களை தயார் செய்யவேண்டும் என்று சொன் னார்கள். வைஷ்ணவ ஆகமத்திற்குத் தனிப் பயிற்சி; சிவ ஆகமத்திற்குத் தனிப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

ஆனால், இந்தக் கொள்கை இன்றைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. சபரிமலைக்குப் பெண்கள் உள்ளே போவது போன்று, அந்தக் கொள்கை எப்படி வந்திருக்கிறது என்று சொன்னால், மதுரையில் இன்றைக்குப் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சார்ந்தவரை கோவிலில் நியமனம் செய்திருக் கிறார்கள். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும்.

ஆண்டாள் கோவிலில் நீதிபதியை அவமதிப்பதா?

மாநிலத்தில் இருக்கக்கூடிய ஒரு அரசு, அண்ணாவின் பெயரைத் தாங்கியிருக்கிறதே தவிர, அண்ணாவின் கொள்கைகள் ஒன்றுமில்லை. அதை நினைத்தால் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.

இங்கே கூட்டம் நடைபெறக்கூடாது என்று தடுக்கிறார்களே, இதே சிறீவில்லிபுத்தூர் கோவிலில் சில வாரங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் என்ன?

பார்ப்பனர்கள், மற்றவர்கள் உள்ளே சென்றிருக் கிறார்கள். அவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்பட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சென்றிருக்கிறார். அவர்கள்தான் கடவுளை காப்பாற்றி, உத்தரவெல்லாம் போட்டிருக்கிறார். அந்த நீதிபதி ஆண்டாள் கோவிலுக்கு, குடும்பத்தினருடன் வந்திருக் கிறார். அவருக்கு எந்த மரியாதையும் செய்யவில்லை. அவர் உள்ளே போக முடியவில்லை.

இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றால், என்மீது வழக்குப் போடட்டும்; தவறு என்றால், நாங்கள் நீதிமன்றத்திற்கு வந்து வாதாடுகின்றோம்.

அந்த நீதிபதி சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு, கோபம் வந்து, சட்டென்று கோவிலுக்குள் செல்கிறார். அவரைப் பிடித்து பார்ப்பான் தள்ளிவிட்டார். மறுபடியும் அவர் உள்ளே செல்ல முயற்சி செய்கிறார்.

எதற்காக என்னை தள்ளுகிறீர்கள்? என்று கேட் கிறார்.

நீங்கள் சட்டை அணிந்திருக்கிறீர்கள் என்று பார்ப் பனர்கள் சொல்கிறார்கள்.

சட்டையை கழற்றி விட்டு வருகிறேன் என்று சொன்னாலும், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதன் செல்ல முடிகிறது; கோவில் கருவறைக்குச் செல்ல முடியவில்லை. செவ் வாய்க் கிரகத்தைவிட கோவில் கருவறை என்ன தூரமா?

தமிழனுக்கு, தமிழ்நாட்டிற்கு ஜாதியில், வருணாசிரம தர்மத்தில், இதுபோன்று நடக்கிறது என்று சொன்னால், இது அரசியல் சட்ட விரோதம் அல்லவா? உயர்நீதி மன்றத்தின் மூத்த நீதிபதி ஒருவருக்கே இந்த நிலை. தமிழன் என்ற ஒரே காரணம்; சூத்திரர் என்ற ஒரே காரணம்.

இதுபோன்ற ஒரு சம்பவம் இன்றைக்கும் நடைபெறுகிறது என்றால், இந்த இயக்கம் இல்லாவிட்டால் என்னாகும்?

காவல்துறை நண்பர்கள் தயவு செய்து நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள். எங்களால் எந்த இடையூறாவது ஏற்பட்டிருக்கிறதா? திராவிடர் கழகம் ஊர்வலம் நடந்தால், கடைகள் எல்லாம் திறந்தே இருக்கும்; எந்த ஆபத்தும் இருக்காதே? திராவிடர் கழகம் மாநாடு நடைபெற்றால், எந்த ஆபத்தும் ஏற்படாது. எங்களால் எங்கேயாவது கலவரம் நடைபெற்றிருக்கிறதா?

என்னைப்பற்றி நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

நீதிமன்றத்திற்குச் சென்றதால், சில சங்கடங்கள் இருந்தாலும், ஒரு பெரிய லாபம் என்னவென்றால், வீரமணி தலைமையில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடை பெறும்போது, ஒரு இடத்தில்கூட எந்தவிதமான பிரச்சினை கள் வராத அளவிற்கு இயக்கத்தை நடத்திக் கொண்டு போகிறவர்கள். ஆகவே, அவர்களுடைய கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கலாம்'' என்று பதிவு செய்திருக்கிறார்கள், நீதிபதிகள்.

தவறு செய்துவிட்டு, காவல்துறையினரிடமிருந்துகூட தப்பித்துப் போகலாம்; திராவிடர் கழகத்தினரிடமிருந்து தப்பிக்க முடியாது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கட்டுப்பாடான இயக்கம் இது.

இந்த இயக்கம் பகுத்தறிவை சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம். ஜாதி ஒழிப்பை, பிறவி பேதத்தை ஒழிக்கின்ற இயக்கமாகும். பிறவி பேதம் என்று சொல்கின்றபொழுது, பிறப்பினாலே பேதம். உயர்ந்த ஜாதிக்காரன் - தாழ்ந்த ஜாதிக்காரன்; பார்ப்பான் - பறையன்; பிராமணன் - சூத்திரன் என்று எதுவுமே இருக்கக் கூடாது. மனிதன் என்றுதான் இருக்கவேண்டும்.

எங்களுடைய இயக்கம் பிரச்சாரம் செய்தால்தான், ஜாதிக்கலவரங்கள் நடைபெறாது; ஜாதிக்கலவரங்கள் கூடாது; மதக் கலவரங்கள் கூடாது; மதவெறி எந்த ரூபத்தில் வந்தாலும், அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

காவல்துறைக்கும் உதவி செய்வது, எங்கள் இயக்கம்தான். மக்கள் மத்தியில் கலவரங்களை உண்டாக்காமல் தடுக்கும் எங்கள் இயக்கப் பிரச்சாரத்தை அரசாங்கமே ஊக்குவிக்கவேண்டும்; அரசியல் சட்டப்படி!

ஆனால், நரி வலமும் போகவேண்டாம்; இடமும் போகவேண்டாம்; மேலே விழுந்து பிறாண்டாமல் இருந்தால் சரி என்று பழமொழி சொல்வதுபோன்று நடந்துகொள்வதா?

எனவே, நண்பர்களே! சிந்தித்துப் பாருங்கள்.

நாங்கள் பொதுக்கூட்டம் நடத்துவதினால், எந்தவிதமான சங்கடங்களாவது இந்த ஊருக்கு உண்டா? ஆகவேதான், நன்றாக நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் பேசிய கருத்தில் தவறு ஏதாவது இருந்தால், நீங்கள் சுட்டிக்காட்டுங்கள். ஆதாரம் இல்லாமல் நாங்கள் பேசினோம் என்றால், அதை நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.

எனவேதான், இந்தக் கருத்தினைக் கேட்டு நீங்கள் நன்றாக சிந்தித்து, யோசித்து, திராவிடர் கழகத்தில் இளைஞர் களே வந்து சேருங்கள்! பகுத்தறிவாளர்களாக மாறுங்கள்!

கருப்புச் சட்டையை இன்றைக்கு எல்லோரும் போடு கிறார்கள்; நேற்றுகூட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள்கூட கருப்புச் சட்டை அணிந்துகொண்டு போராடிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் கருப்புச் சட்டை அணிவதற்கு என்ன காரணம் என்றால், போராட்டத்திற்குக் கருப்புச் சட்டைதான் அடையாளம்; சமூகநீதிக்குக் கருப்புச் சட்டைதான் அடையாளம். நீதிபதிகளும், வழக்குரைஞர் களும் கருப்புச் சட்டைதான் அணிகிறார்கள்.

அடிக்கடி வருவோம் - கூட்டம் போடுவோம்!

ஆகவேதான், கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்; சமுதாயத்தைக் காக்கின்றவன்; கல்வியை அனைவருக்கும் கொடு என்று சொல்கின்றவன்; உத்தி யோகத்தை அனைவருக்கும் கொடு என்று சொல்கின்றவன்; அதனடிப்படையில்தான், 10 சதவிகித பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்பட அனைத்தையும் எதிர்க்கின்றோம் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,

மீண்டும் அடிக்கடி நாங்கள் இங்கே கூட்டம் போடுவோம்; இனிமேல் நீதிமன்றத்திற்கு எங்களைப் போகக்கூடிய நிலையினை ஏற்படுத்தாதீர்கள்; அந்த நிலை மாறும்; நிச்சயமாக மாறும். இங்கே கூட்டங்களைப் போடுங்கள் என்று அவர்களே கேட்கக்கூடிய அளவிற்கு வரும்.

எனவேதான், தென்மாவட்டங்களில், ஏற்கெனவே ஜாதிக்கலவரங்கள் வந்தபொழுது, திராவிடர் கழகம்தான் சென்று பிரச்சாரம் செய்தது. அதனை மறந்துவிடாதீர்கள் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

-  இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner