எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து வருவதாகவும், அதற்கான தீர்வாக நிறுவனத்தையேகூட மூடிவிடலாமா என்பது குறித்தும் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி வருவதாக அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது.

2014 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்கள், அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மக்கள் நலனைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், தனியார் தொழிலதிபர்களை ஊக்குவித்து வரும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. டிராய் எனும் தொலைத்தொடர்புத்துறை கட்டுப்பாட்டு அமைப்பு இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அளவிடமுடியாத அளவுக்கு வளர்ச்சி பெறுவதும், பிற நிறுவனங்கள் சரிவை சந்திப்பது மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனமும் நட்டத்தையே சந்தித்து வருகிறது என்பதன்மூலம் அத்துறையில் அரசின் செயல்பாடுகள் ஏற்கத்தக்கதாக இல்லை என்பது உண்மையாகி வருகிறது.

ஜியோ என்கிற பெயரில் அம்பானி குழுமத்தினரால் ஏற்படுத்தப்பட்டு, அத்துறையில் கொடி நாட்டிக் கொண்டி ருக்கின்ற நிலையில், அரசு கட்டுப்பாட்டின்கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் நட்ட அறிக்கையை அளித்துள்ளது. மேலும், மூடுவதற்கான ஆலோசனையையும் அரசே கேட்டுள்ளதாக வெளியாகின்ற தகவல் மத்திய அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

இதுபோன்று பொதுத்துறை நிறுவனத்தின் சரிவுக்கு, குறைந்த அரசு, நிறைந்த நிர்வாகம் எனும் முழக்கத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரதமர் மோடியின் அரசு அளிக்கக் கூடிய பதில் என்னவாக இருக்கும்? ஜியோ வருகைக்குப்பின்னர் ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் சில மூடுவிழாவை நடத்திவிட்டன. மக்களின் பெரும் நம்பிக்கையாக இருப்பது பொதுத்துறை நிறுவனம்தான். ஆனால், அந்நிறுவனத்தைக் கட்டிக்காப்பாற்றி, வளர்த்திட மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பது நிரூபணமாகி வருகிறது.

பி.எஸ்.என்.எல்.லின் எதிர்காலம்?

பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய அளவுக்கு நட்டத்தை சந்தித்துள்ள அமைப்பாக பி.எஸ்.என்.எல். உள்ளது. 2015-2016 நிதியாண்டில் ரூ.4,859 கோடியும், 2016-2017 நிதியாண்டில் ரூ.4,786 கோடியும், 2017-2018 நிதியாண்டில் ரூ.7,992 கோடியும் நட்டமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் ஒட்டுமொத்த நட்டக்கணக்கில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நட்டம் 25 விழுக்காடு அளவில் உள்ளது. இதுபோன்ற தொடர் நட்டங்களால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து அறிக்கை அளிக்கையில், மேலும் முதலீடு செய்யாமல் இருத்தல், செய்துள்ள முதலீட்டைத் திரும்பப் பெறுதல் அல்லது நிறுவனத்தை மூடிவிடுதல் குறித்து ஆலோசித்து வருவதாக அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் நட்டம் காரணமாக அத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை (விருப்ப ஓய்வு என்கிற பெயரால்) பணியிலிருந்து  முன்னதாகவே  அனுப்புவதற்கான திட்டத்தை  மத்திய அரசு அறிவிக்க உள்ளதாம்.  பணியிலிருந்து ஓய்வு பெற உள்ள பணியாளர்களை  முன்னதாகவே ஓய்வு பெறச்செய்யும் வகையில் ஓய்வு பெறும் வயதைக் குறைப் பது என்று பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளில் முதன்மையானதாக நிறுவனத்தை மூடுகின்ற திட்டமும் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி நிறுவனத்தை மூடினால் ஏற்படக்கூடிய நிலைமைகுறித்து அதிகாரிகளிடம் அரசு கருத்து கேட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறை செயலாளர் ஒப்புதல்

தொலைத்தொடர்புத்துறை செயலாளர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு கோரியுள்ளார்.

மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பி.எஸ்.என்.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் சிறீவத்சவா நிறுவனத்தின் நிதிநிலை மோசமடைந்துள்ளது குறித்து அறிக்கை அளித்தார். சந்தையில் ரிலையன்ஸ், ஜியோ வருகைக்குப்பின்னரே நட்டங்கள் அதிகரித்து வந்துள்ளதாகவும், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது மற்றும் முன்னதாகவே ஓய்வு அளிக்கின்ற திட்டம்குறித்தும்   கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறை செயலாளர் பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகளிடம், நட்டத்தை சரிகட்ட, அரசு முன்பாக உள்ள அனைத்துவித ஆலோசனைகளையும் அளிக்க வேண்டும். உதாரணமாக, இப்போதுள்ள நிலையில் நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்வதை நிறுத்திக்கொள்வது,  நிறுவனத்தை மூடுவது அல்லது நிதி ஆதாரங்களை மீட்டெடுப்பதுகுறித்து ஆலோசனைகளை அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஓய்வு வயதைக் குறைக்கத் திட்டம்!

நட்டத்தை ஈடுகட்ட ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்வதன்மூலம், விருப்ப ஓய்வு மற்றும் ஓய்வு வயதை குறைப்பது. நிறுவனத்தில் பணியாற்றுவோரின் வயதைக் குறைத்து, 60 வயதிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைத்து, விரைந்து அவர்களை ஓய்வு பெறச் செய்வது, விருப்ப ஓய்வின்மூலம் பணிபுரிவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம் நிதி பற்றாக்குறையை சரி செய்யலாம். இதன்மூலம் ரூ.3,000 கோடி நிதியை சேமிக்கலாம் என்றும் நிறுவனம் அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் ஊழியர்களில் 56 வயதிலிருந்து 60 வயதுவரை உள்ளவர்களை கட்டாய ஓய்வு  அல்லது கட்டாய விருப்பு ஓய்வு பெறச் செய்வதன்மூலம் சுமார் 67,000 ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறுவார்கள்.

பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் (சுமார் 33,846 பேர்) விருப்ப ஓய்வின்கீழ்  வெளியேற்றப்படும்போது, நிறுவனத்துக்கு ஊதியத்துக்கான நிதியில் ரூ.3,000 கோடி சேமிப்பாக இருக்கும். அவர்களை வெளியேற்றும்போது ரூ.6,900 கோடியிலிருந்து ரூ.6,300 கோடிவரை ஊழியர்களுக்கு அருட்கொடையாக அளிப்பதற்கான செலவாகும்.

மேலும், நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள கட்டடங்கள், மனைகள் ஆகியவற்றைக்கொண்டும்  நிதியைப் பெறலாம். அந்த வகையில் நிறுவனத்துக்குச் சொந்தமாக ஒட்டுமொத்தமாக ரூ.15,000 கோடி மதிப்பில் கட்டடங்கள், மனைகள் உள்ளன. அதன்மூலம் 2 அல்லது 3 ஆண்டுகளில் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் முலமாக நிதிநிலையை சரி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner