எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடகத்தில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதி

காவிரி நடுவர் மன்றம் - உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமானதே!

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது


காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு களுக்கு விரோதமாக கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து திருச்சிராப்பள்ளியில் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சிகளைக் கடந்து இலட்சக்கணக்கில் பங்கேற்குமாறு  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய பி.ஜே.பி. அரசு - சட்ட விரோதமாக - காவிரி நடுவர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இவற்றின் தீர்ப்புகளையெல்லாம் துச்சமாக மதித்து, கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளித்துவிட்டது.

இந்த அபாயத்திலிருந்து நாட்டை மீட்டிட தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், அவசர அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பையும், உணர்வையும் வெளிப் படுத்தும் வகையில், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திருச்சி யில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது சரியான - தேவையான முடிவாகும்.

நியாயமாக ஆளும் அரசு கூட்டியிருக்க வேண்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதை அவர்கள்  செய்யத் தவறியதால், எதிர்க்கட்சித் தலைவர் கூட்டி, தன் கடமையைச் சரியாக செய்துள்ளார்.

கருநாடக மாநிலத்தில் மேகதாது அணையினைக் கட்டிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ள தானது - அப்பட்டமான சட்ட மீறலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு மீறலுமாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன?

இதுகுறித்து 15.2.2018 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அடங்கியிருப்பது என்ன?

1. காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்கவேண்டும்.

2.  2007 இல் நடுவர்மன்றம் 192 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.

3. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்குக் குறைவாக கிடைக்கும்.

4. தமிழகத்திற்கான ஒதுக்கீடு குறைப்பால் கருநாடகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக கிடைக்கும்.

5. தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

6. காவிரி நீரை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது.

7.பெங்களூரு குடிநீர் பயன்பாட்டிற்கு கூடுதலாக 4.75 டிஎம்சி நீர் வழங்க உத்தரவு.

8. கருநாடகாவுக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி அளித்த நிலையில், அது 284.75 டிஎம்சியாக உயர்வு.

9. தமிழகத்திற்குக் குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சியில் 4.75 டிஎம்சி நீர் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு.

10. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் காவிரியில் 284.75 டிஎம்சி நீர் கருநாடகாவுக்கு கிடைக்கும்.

11. கேரளா (30 டிஎம்சி) புதுச்சேரி (7 டிஎம்சி) என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை.

12. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு.

13. தீர்ப்பின் மாதாந்திர அடிப்படையில் தமிழகத் திற்கு கருநாடகா நீரைத் திறக்க வேண்டும்.

14.பெங்களூருவின் குடிநீர் தேவை, தமிழக நிலத்தடி நீர் இருப்பு குறித்து நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

15. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த சில பிழைகள் இந்த தீர்ப்பில் சரிசெய்யப்பட்டு விட்டன.

16. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த ஓரிரு பிழைகள் சரி செய்யப்பட்டதால் அது இறுதித் தீர்ப்பாக இருக்கும்.

17. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

18.நடுவர் மன்ற உத்தரவு இறுதி செய்யப்பட்டு விட்டதால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.

19. சென்னை மற்றும் மைசூரு மாகாணங்கள் இடையே 1892, 1924 ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங் கள் செல்லும்.

20. சென்னை, மைசூரு மாகாண ஒப்பந்தங் களின்படி, காவிரியில் தமிழக அனுமதியின்றி அணை கட்ட முடியாது.

இவ்வாறு தெளிவாக, திட்டவட்டமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருக்கும்போது,

கருநாடக மாநில அரசு இவற்றை மீறுவதும், இதற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டுவதும் எதைக் காட்டுகிறது?

இந்தியாவில் சட்ட ஆட்சியும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புகள் என்பவையும் செல்லுபடியாகத்தக்கவை அல்ல என்று இதன்மூலம் ஆகிவிடவில்லையா?

சிவசமுத்திரம் நீர் மின் திட்டத்திற்கான விரிவான அறிக்கையை கருநாடகம் அனுப்பியபோது - அதனுடன் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கருநாடக மாநில அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதியளிக்காது என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறினாரே - அது என்னாயிற்று? நீரின் மேல் எழுதிய எழுத்தா?

இந்த நிலையிலிருந்து மத்திய அரசு பின் வாங்கியது ஏன்? முரண்பட்டது ஏன்?

இது என்ன அரசியல் விளையாட்டா? இதன் எதிர் விளைவு எங்கே போய் முடியும் என்பதை சிறிதேனும் சிந்தித்தார்களா?

அரசியல் நோக்கமே இதன் பின்னணியில் இருக்கிறது

தமிழ்நாடு, பி.ஜே.பி.யை முற்றிலும் கைவிட்ட நிலையில், கருநாடகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர் தலில் ஆதாயம் அடையலாம் என்ற அரசியல் நோக்கமே இதன் பின்னணியில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

சட்டத்தையும், தீர்ப்புகளையும் அரசியல் லாப நோக்குக்காக காலில் போட்டு மிதிக்கும் மத்திய பி.ஜே.பி. அரசு பாசிச கொம்பு முளைத்து அலைகிறது என்பதற்கு வேறு சான்றும் வேண்டுமோ!

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் கூட்டம் (29.11.2018) சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுத்துள்ளது.

கட்சி பேதமின்றி தமிழ்நாட்டு மக்கள் திருச்சி ஆர்ப் பாட்டத்தில் இலட்சக்கணக்கில் பங்கேற்று தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்து உணர்வை, கொந்தளிப்பை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் மன்றம் எல்லா மன்றங்களையும்விட வலிமை படைத்ததாகும். அதனைச் செயல்படுத்திக் காட்டுவோம் - வாரீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner