எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. பெயரில் பாயும் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!

நீதிக்கட்சி ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் முழக்கம்

சென்னை, நவ.21   திராவிட இயக்கத்தால், நீதிக்கட்சி யால் பலன் அடையாத  தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் உண்டா? இப்பொழுது ஏற்பட்டுவரும் ஆபத்து பா.ஜ.க. பெயரால் பண்பாட்டுப் படையெடுப்பு - அதனை முறியடிப்போம்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நீதிக்கட்சியின் 102 ஆம் ஆண்டு விழா

நேற்று (20.11.2018) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நீதிக்கட்சியின் 102 ஆம் ஆண்டு விழா'' சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

அற்புதமான வரலாற்று உரை

உங்களையெல்லாம் சந்திக்கின்றபொழுது எனது பாசம் மாறாத சகோதரர் மாண்புமிகுவாக இருப்பது தற்காலிகம், மானமிகுவாக இருப்பது நிரந்தரம் என்ற உணர்வை மிகத் தெளிவாகப் புரிந்து, இங்கே சிறப்பான ஒரு வரலாற்றுப் பெருமைமிகுந்த வரலாற்றுப் பேருரை - டாக்டர் டி.எம்.நாயர் அவர்களுடைய ஸ்பர்டாங்க் பேருரை என்பது அருகிலுள்ள சேத்துப்பட்டில் உள்ள ஸ்பர்டாங்க் சாலை என்று நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள், அங்கே அவர் ஆற்றிய உரை இருக்கிறதே, அவ்வுரை காலங்காலமாக என்றைக்கும் பேசப்படக்கூடிய உரை - அத்தகைய ஒரு அற்புதமான வரலாற்று உரையை ஆற்றிய எனது அருமை சகோதரர் - என்றென்றைக்கும் கூர்மழுங்காத திராவிடத்தின் போர்வாள். அருமை சகோதரர் மானமிகு வைகோ அவர்களே,

நிகழ்ச்சியினுடைய தலைவர் மேனாள் துணை வேந்தர்,  உயர்கல்வி மன்றத்தின் மேனாள் மாநில துணைத் தலைவர் என்கிற பெருமையையெல்லாம் பெற்றிருக்கக்கூடிய எங்கள் பெருமைக்குரிய முனைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் மானமிகு ராமசாமி அவர்களே,

நினைத்துப் பார்க்கிறேன், எத்தனைத் துணைவேந் தர்கள், எத்தனைப் பேராசிரியர்கள், எத்தனை முனை வர்கள், எத்தனை மருத்துவர்கள், எத்தனை அய்.பி.எஸ். அதிகாரிகள், எத்தனை அய்.ஏ.எஸ். அதிகாரிகள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்பொழுது, இது திராவிடர் இயக்கம் தந்த அருட்கொடை அல்லவா - தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தந்த ஒப்பற்ற அறக்கொடை அல்லவா என்று நினைத்துப் பார்த்து பெருமைப்படக்கூடிய வகையில் இருக்கக்கூடிய பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசன் அவர்களே,

மிகத் தெளிவான முறையில் வரவேற்புரையாற்றிய திராவிட வரலாற்று ஆசிரியர் - அன்பிற்குரிய திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் முனைவர் மங்கள முருகேசன் அவர்களே,

இந்நிகழ்வில் இணைப்புரை வழங்கும் கழக வெளி யுறவுத் துறை செயலாளர் குமரேசன் அவர்களே,

கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கக்கூடிய இணை செயலாளர் முனைவர் தானப்பன் அவர்களே,

முக்கிய அறிவிப்பு

திருச்சி - லால்குடி - விருத்தாசலம்

மாவட்டத் தோழர்களுக்கு...

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் உடல்நிலை காரணமாக மேற்கண்ட அவரின் பொறுப்பு மாவட்டங்களுக்குச் செல்ல முடியாத நிலையில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் இந்த மாவட்டங்களின் கூடுதல் கண்காணிப்புப் பொறுப்பையும் ஏற்பார் என்று அறிவிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாவட்டத் தோழர்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

அறிவார்ந்த அரங்கத்தைச் சார்ந்த பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் இயக்கத்தினுடைய குரலாக....

என்னுடைய உரை நீண்ட உரையாக இருக்காது. நான் ஏற்கெனவே பழைய வரலாற்றையெல்லாம் தயாரித்துக் கொண்டிருந்தேன், அதையெல்லாம் சொல்லவேண்டும் என்று. ஆனால், யார் கூட்டினாலும் ஒரே விடைதான் என்பதைப்போல, திராவிடர் இயக்கத்தினுடைய குரலாக, என்னுடைய அருமை சகோதரர் இன்றைக்கு ஆற்றியிருக்கின்ற அற்புதமான உரையை வழிமொழிகின்ற பணியை மட்டுமே நான் இப்பொழுது செய்கிறேன்.

அவ்வளவு அற்புதமாக அவர் உரையாற்றி இருக்கிறார். மாற்றம் ஒன்றுதான் என்றைக்கும் மாற்றம் இல்லாதது என்று மார்க்ஸ் அவர்கள் சொன்னதை, மற்ற அறிஞர்கள் சொன்னதையெல்லாம் அடிக்கடி நண்பர்கள் சுட்டிக்காட்டுவார்கள்.

ஒரு புலி சிங்கமாகி இருக்கிறது!

இங்கே ஒரு மாற்றம் நம் முன் நிகழ்ந்திருக்கிறது. ஒரு புலி சிங்கமாகி இருக்கிறது. புலியின் உறுமல்தான் பல இடங்களில், இதற்குமுன்னால். இங்கே நாம் கேட்டது, சிங்கத்தின் கர்ஜனை. சிங்கத்தின் முன்னால், சிறுநரிகள் வாலாட்டக்கூடாது, அதுதான் மிகவும் முக்கியமானது. ஆகவே, நீங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிறு நரிகளைப்பற்றி சிந்திக்காதீர்கள். அந்த சிறு நரிகள் தானே மண்ணைக் கவ்விக் கொண்டு போகும். நாய்க் கறிகளை விற்றான் என்று சொல்லக்கூடிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன நம்முடைய நாட்டிலே. அரண்மனை நாய்களைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.

எதிர்ப்புகளையெல்லாம் திராவிட இயக்க வரலாற்று வயலில் உரங்களாக ஆக்கிக் கொள்வோம்!

சிங்கம், நாய்களைப்பற்றி கவலைப்படக்கூடாது; ஈரோட்டு சிங்கத்தின் வழி வந்தவர்கள் நாம். ஆகவே, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். அய்யாவும், அண்ணாவும் நமக்குப் போதித்திருப்பது - எதிர்ப்பு இருந்தால், அந்த எதிர்ப்புகளையெல்லாம் நம்முடைய திராவிட இயக்க வரலாற்று வயலில் உரங்களாக ஆக்கிக் கொள்வோம். அந்த உரங்களாகப் போடப்படுபவைகள்  அசிங்கங்களாகக்கூட இருக்கும். அந்த அசிங்கங்கள்தான் பிறகு பயிர்களாக, விளைச்சலாக வரக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறது.

ஆகவேதான், இதில் மிக முக்கியமான செய்தி - வரலாற்றை எல்லோரும் எடுத்துச் சொல்லிவிட்டார்கள். நாம் அடுத்து செய்யவேண்டிய பணி என்ன? இந்தக் காலகட்டத்தில். இதை மட்டுமே உங்களுக்கு நினை வூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இந்த உணர்வுபூர்வமான ஒரு செய்தியை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

மீண்டும் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகம்!  அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகம்'' மீண்டும் அரங்கேறும். இராவணனாக வைகோ - நீதிதேவனாக ஆசிரியர் கி.வீரமணி.

- நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவிப்பு

திராவிட இயக்கத்தின் பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்

சிறப்புக் கூட்டத்தில் நீதிக்கட்சி தொடர்பான திராவிடர் கழக வெளியீடுகளை தமிழர் தலைவர் வெளியிட,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார்.

முதலாவது நம்முடைய திராவிட இனத்தவர்கள் டி.எம்.நாயரும், சர்.பிட்டி.தியாகராயரும், நடேசனாரும், தந்தை பெரியாரும் இப்படி பல தலைவர்கள் நம்முடைய இயக்கத்தில் தொடர்ந்து அந்தக் காலகட்டத்தில் நமக்கு அறிவுறுத்தி, நமக்கு அறிவு ஆசான்களாக, வழிகாட்டிகளாக இருந்ததினுடைய விளைவுதான், இன்றைக்கு அதனுடைய தாக்கம்தான் - எவ்வளவு நன்றி மறந்தவர்களாக இருந்தாலும்கூட, ஒவ்வொருவரும் திராவிட இயக்கத்தின் பயனை அனுபவித்துக் கொண்டி ருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய வீட்டிலும் படித்த பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்று சொன்னால், சூத்திரன் வீட்டிலே, பஞ்சமர் வீட்டிலே,  படித்தவர்கள், பெரும் பதவிகளில் இருந்து வருகின்றனர். நான் இந்த வார்த்தைகளை சொல்வதற்காக நீங்கள் மன்னிக்க வேண்டும். வருணாசிரம தர்ம முறைப்படி எப்படி இருந் தது என்பதை நினைவூட்டுவதற்காகத்தான் நான் அப்படி சொல்கிறேன். ஏனென்றால், நாம் இதை நினைவூட்டியாக வேண்டும். நம்முடைய பழைய நிலை எப்படி இருந்தது என்று வருங்கால சந்ததிகளுக்குத் தெரியவேண்டும். அதற்காக இதைச் சொல்கிறேன்.

இந்த இயக்கம் இல்லாவிட்டால், இங்கே தோழர்கள் தனித்தனி தலைப்புகளிலே சொன்னார்கள்.

நம்முடைய அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்திருக்க முடியுமா? இதோ ஒரு செய்தி.

Hinduism in India Modern and Contemporary Movements

ஆஸ்திரேலியாவில் இருக்கக்கூடிய பேராசிரியர்கள், மிகப்பெரிய அளவிற்கு உலகத்திலுள்ள பேராசிரியர்களை எல்லாம் அழைத்து Hinduism in India: Modern and Contemporary Movements  ஒரு புத்தகம்; Hinduism in India:The Early Period என்கிற இன்னொரு புத்தகம். இந்த புத்தகத்தில் உலகளாவிய நிலையில், நம்முடைய கருத்துகள் போய் சேர்ந்து, மனுதர்மத்தினுடைய யோக்கி யதை என்ன? எந்தக் கருத்தை ஒரு நூறாண்டுக்கு முன், நம்முடைய பெருமான் - நாயர் பெருமான் என்று தந்தை பெரியார் சொல்கிறார். நாயர் அவர்களைப் பெரியார் பாராட்டுகிறார். பெரியார் காங்கிரசில் இருக்கிறார். நீதிக்கட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். வரதராஜூலு நாயுடு, இராஜகோபாலாச்சாரியார், திரு.வி.க. ஆகியோர் மேடையில் இருக்கும்பொழுது தந்தை பெரியார் பேசினார்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, நாயர் சொன்னார், இதற்கெல்லாம் பதிவுகள் இருக்கின்றன. பல செய்திகள் நமக்குக் கிடைக்காமல் மறைத்துவிட்டார்கள். தேடிக்கொண்டிருக்கிறோம் - புதையலையெல்லாம் தேடித் தேடி, எப்படி கீழடி அகழ்வாய்வில் திராவிட வரலாற்றை, திராவிட இனத்தினுடைய கலாச்சாரத்தை, பண்பாட்டை நாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றோமோ - அதுபோல, கண்டுபிடிக்கவேண்டிய செய்திகளில் ஒன்றை அவர் சொன்னார்.

டி.எம்.நாயர் பேசுகிறார்!

அப்பொழுது நாயர் சொன்னார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் கண்ணியமிக்க தலைவர் அவர்கள். நிச்சயமாக எந்தக் காங்கிரசை நம்பி சுதந்திரத்தைப் பெற்றால், சுயராஜ்ஜியத்தைப் பெற்றால், எல்லாவற்றிலும் சமூகநீதிக் கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தார்களோ - அவர்களே எங்கள் இயக்கத்திற்கு வருகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை. அண்மையில்தான் இருக்கிறது'' என்று நாயர் சொன்னார்.

அதேபோல, பெரியாரும் நீதிக்கட்சிக்கு வந்தார்.

எனவே, இந்த இயக்கத்தினுடைய பாரம்பரியம் என்னவென் பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆனால், இன்றைக்கு நம்முடைய இன எதிரிகள், கேவலமான  சூழ்ச்சிப் பொறியை வைத்திருக்கிறார்கள். அதிலே ஒரு சூழ்ச்சிப் பொறி - அருமையாகச் சொன்னார், தொட்டுக் காட்டினார் வைகோ - திராவிட இயக்கத்தினுடைய அடிப்படைக் கொள்கைகளை எந்தக் கொம்பனாலும் அழித்துவிட முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் திராவிடர் இயக்கம் இருக்கிறது. ஒவ்வொருவருடைய வீட்டிலும் படித்திருக்கிறார்கள், பத விக்குப் போகவேண்டும் என்கிறார்கள். 69 சதவிகித இட ஒதுக்கீட்டினால்தான் இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த் தப்பட்டவர்கள் உத்தியோகத்திற்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் உத்தியோகத்திற்குப் போனது யாரால் என்று அவர் களுக்குத் தெரியாது.

நாம் இன்றைக்குத் தொலைக்காட்சியைப் பார்த்து அதனுடைய பயன்களை அனுபவிக்கின்றோமே, அந்தத் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் பெயரை நினைத்துப் பார்த்திருக்கிறோமோ? தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆகவே, அதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசிய மில்லை. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர், மனித சமுதாயத்திற்காக அதனைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

ஒரு பண்பாட்டுப் பாதுகாப்பு இயக்கம்!

அதுபோலவே, நம்முடைய சமூக விஞ்ஞானியான தந்தை பெரியார் தந்திருக்கின்ற அந்தக் கருத்துகள் காலத்தை வென்றவை! இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கின்ற  இந்த இயக்கத்தை வெறும் அரசியல் பார்வையோடு பார்க்காதீர்கள். இது ஒரு பண்பாட்டுப் பாதுகாப்பு இயக்கம்.

இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு இருக்கிறதே, அது பல வடிவங்களில் வந்துகொண்டிருக்கிறது. வடநாட்டிலே இராமன் கோவிலை வைத்து ஏன் அரசியல் நடத்துகிறான்?

எல்லா இடங்களிலும் மோடிக்குத் தோல்வி - மோடி அரசுக்குத் தோல்வி - பா.ஜ.க.வுக்குத் தோல்வி - அவர்கள் வாங்கிய வாக்கு சதவிகிதம் சரிந்துகொண்டே வந்திருக்கிறது - அத்தனை இடைத் தேர்தல்களிலும் - கணக்குப் போட்டு சொல்லியிருக்கிறார்கள்.

பா.ஜ.க.விற்கு இனிமேல் தோல்விகள்தான்!

2014 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தீர்களேயானால், அவர்கள் தோல்வி அடைந்துதான் வருகிறார்களே தவிர, வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. இந்தப் புள்ளிவிவரத்தின்படி. 27 இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன என்று சொன்னால், வெறும் நான்கு  இடங்களில் மட்டும்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு முதலமைச்சர் தொகுதி, ஒரு துணை முதலமைச்சர் தொகுதி, அதுவும் இராமன் குடியிருக்கின்ற மாநிலத்தில், இராமன் விமான தளம் வரக்கூடிய மாநிலத்தில். இராமன் கோவில் கட்டப்போகிறோம் என்று புரூடா விடப்படுகின்ற மாநிலத்தில். அந்த இடங்களில் எல்லாம் பி.ஜே.பி. தோல்வி.

எப்பொழுதெல்லாம் பி.ஜே.பி.,க்கு தோல்வி ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் கைக்கொடுக்கக்கூடியவன் அங்கே இராமன் - எப்பொழுதெல்லாம் திராவிட இயக்கத்திற்குக் கொஞ்சம் சோர்வு, தயக்கம் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் கைக்கொடுக்கக்கூடியவன் இராவணன் தென்னாட்டிலே என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எல்லாம் ஆட்டம் கண்டுவிட்டது

அந்த அடிப்படையில், இன்னமும் அவர்களுடைய எண்ணம் என்னவாக இருக்கிறது? ஒரு பக்கத்தில் பொருளா தாரத்தில் இழப்பு - இன்னொரு பக்கத்தில் சி.பி.அய்.க்குக்கூட மரியாதை இல்லாமல் அங்கேயும் லஞ்சம். பிரதமருடைய மிக முக்கிய ஆலோசகராக, நிழல் பிரதமராக நடந்துகொண்டிருக்கக் கூடியவர் அஜித்டோவல் என்கிற ஒரு அதிகாரி என்று சொன் னால், அவரைப்பற்றி உச்சநீதிமன்றத்தில்  புகார் போயிருக்கிறது என்றால், ஆட்டம் கண்டுவிட்டது - எல்லாம் ஆட்டம் கண்டு விட்டது.

ரிசர்வ் வங்கிக்கு ஆளுநரை அவர்கள்தான் நியமித்தார்கள். ஏற்கெனவே ஆளுநராக நியமிக்கப்பட்டவர், அந்தப் பதவி வேண்டாம் என்று சென்று விட்டார். நாளந்தா பல்கலைக் கழகத்தில் பொறுப்பேற்ற அமர்த்தியா சென் போன்றவர்கள் அந்தப் பதவி வேண்டாம் என்று போய்விட்டார். இப்படி எல்லாருமே போய்விட்ட பிறகு, கடைசியாகப் போகப் போகி றவர் ஒருவர்தான் - அவர் பெயர் மோடி.

தாயத்து வியாபாரிகள்தான் - இந்தக் காவி வியாபாரிகள்!

பழைய மூர் மார்க்கெட்டில் மோடி வித்தை என்று சொல்லி, கீரியும், பாம்பும் சண்டை போடப்போகிறது - தாயத்துகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அந்தத் தாயத்துகளையெல்லாம் விற்றுவிடுவார்கள். கடைசிவரைக்கும் கீரியும், பாம்பும் சண்டை போடவே போடாது. அதுபோன்று, தாயத்து வியாபாரிகள்தான் - இந்தக் காவி வியாபாரிகள் தமிழ்நாட்டில் வந்திருக்கிறார்கள்.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது இரண்டு நாள் களுக்கு முன்பு வந்த ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை.

அந்த ஏட்டில்,  இராமர் கோவில் மீண்டும் செய்தியில்!

தலைப்புப் போட்ட புத்திசாலிக்கு நன்றி! இராமர் கோவில் மீண்டும் செய்தியில்தான் - செயலில் வர முடியாது. அதனை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் நீங்கள்.

திராவிட இயக்கத்தைக் கண்டு எவ்வளவு மிரண்டு இருக் கிறார்கள் - ஒரு எச்சரிக்கை சொல்லவேண்டும் என்றால், அதைத்தான் சகோதரர் வைகோ அவர்கள் இங்கே தெளிவாகச் சொன்னார்.

தாமிரபரணி புஷ்கரணி விழாவாம்!

இப்பொழுது உருமாற்றங்களை வைத்து வருகின்ற நேரத்தில், நேரிடையாக சமஸ்கிருதம் - நேரிடையாக இந்தி என்றால், நம்முடைய மக்கள்  எதிர்க்கின்ற உணர்ச்சியோடு இருக்கிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் புதுப்புது திரு விழாக்களைக் கண்டுபிடிக்கிறார்கள். புஷ்கரணி - தாமிரபரணி புஷ்கரணி. அட்சய திருதி - அந்த நாளில் தங்கம் வாங்கினால், நகைக் குட்டி போடுமாம். நாரதர் ஜெயந்தி - ஆபரேசன் செய்து, பிரசவ மருத்துவமனைக்குச் சென்று, பிறந்த நாள் குறித்து கொண்டாடுகிறார்களா? இதைவிடக் கொடுமை அனுமான் ஜெயந்தி. அனுமான் காற்றுக்குப் பிறந்தான் என்று எழுதியிருக்கிறார்கள் புராணத்தில். காற்றுக்கு எப்படி பிறக்க முடியும் என்பது பிறகு - காற்றுக்கு எந்த வழியாகப் பிறப்பான்? அனுமான் ஜெயந்தி என்றெல்லாம் அவர்கள் கொண்டாடுவதினுடைய நோக்கம் என்னவென்றால், அதைத் தான் லேசாகச் சுட்டிக்காட்டினார் சகோதரர்.

பிள்ளையார் சிலை வைத்தால் 5000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என்று வடநாட்டுப் பணம் புரளும். அதுவும் எங்கே வறுமை இருக்கிறதோ அங்கே செய்கிறார்கள்; எங்கே சாராயக் கடைகள் இருக்கிறதோ அங்கே போகிறார்கள். பிள்ளையார் ஊர்வலம் - அந்த ஊர்வலத்தில் செல்பவர்கள் எல்லாம் டாஸ்மாக்கோடுதான் செல்கிறார்கள்.

எனவே, கூலிப் படைகளாக தமிழர்களைப் பிடிக்கிறார்கள். எனவே, தமிழர்களே, கூலிப்படைகளாக மாறாதீர்கள். உங்களை விற்றுக் கொள்ளாதீர்கள், திராவிடர்களே. அவர்களுக்குப் பலம் எப்பொழுதுமே கிடையாது. அவர்களுடைய சூழ்ச்சி யினால்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்திகளை நன்றாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இராமன் கோயில், இராமாயணம் இங்கே ஏன் எடுபட வில்லை. இராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று கேட்டார்கள்.

குமரியார் என்றைக்கும் குமரியார் -

ஒருபோதும் கிழவியார் ஆகமாட்டார்

வாழ்நாளிலேயே அரசியலில் தவறு செய்யாத காமராசர் அவர்கள், ஆச்சாரியாரோடு கூட்டு சேர்ந்தார். துக்ளக்'கில் வெளிவந்த அட்டைப் பட கார்ட்டூனை பெரிய பெரிய போஸ்டர் அடித்து தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி எல்லா இடங்களிலும் ஓட்டியது. இதோ சாட்சியத்திற்கு குமரிஅனந்தன் இருக்கிறார். குமரியார் என்றைக்கும் குமரியார் - ஒருபோதும் கிழவியார் ஆகமாட்டார் அவர்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அன்றைக்கு அந்தப் போஸ்டர்களை ஓட்டினார்கள்.

தினமணி' ஏடு என்ன செய்தி வெளியிட்டது தெரியுமா? இராமன்மீது கை வைத்தார்கள் - ஒழிந்தார்கள் என்று.

தேர்தல் முடிவு வந்தது. இராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்னால் - 138; அடித்த பிறகு 184.

நாங்கள் எதையும் ரகசியமாக செய்யக்கூடியவர்கள் அல்லர்!

நாங்கள் அடிக்கவில்லை அதுதான் உண்மை. பெரியார் சென்ற ஊர்வலத்தின்மீது செருப்பை வீசினார்கள், காவிகளான ஜனசங்கத்தினர். ஒரு செருப்பை வீசினால், இன்னொரு செருப்பைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து வைப்பவர் அல்லவா நம்முடைய தலைவர். அதை அவமானம் என்று நினைக்கக்கூடியவர் அல்ல! ஊர்வலத்தில் எறிந்த செருப்பு நம்முடைய தோழர்கள்மீது விழுந்தது. உடனே நம்முடைய தோழர்கள் ஆத்திரப்பட்டு, பின்னால் வந்த இராமர் படத்தின்மீது அடித்தனர். இதுதான் நடந்தது. திட்டமிட்டோ, தீர்மானம் போட்டோ, ஏற்பாடு செய்தோ அதனை நடத்தவில்லை. நாங்கள் எதையும் ரகசியமாக செய்யக்கூடியவர்களும் அல்ல.

பெரியார் ஒருமுறை சொன்னார், பார்ப்பானைக் குத்து என்று நீ சொல்கிறாய் என்றனர். அப்பொழுது பெரியார் சொன்னார்,  நான் ரகசியமாக செய்யமாட்டேன். இன்ன பார்ப்பானை, இன்ன இடத்தில், இன்ன ஆள், இத்தனை மணிக்குக் குத்துவான் என்று போலீஸ் ஸ்டேசனில் எழுதிக் கொடுத்துவிட்டுத்தான், நாங்கள் செய்வோம்'' என்று.

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை தளபதி அழகிரிசாமி சொல்வார், நாங்கள் இங்கே வருவதற்குமுன், கணக்கு எழுதி விட்டுத்தான் வந்திருக்கிறோம். திரும்பிப் போனால்தான் எங்களுக்கு உறுதியே தவிர வேறொன்றும் இல்லை'' மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய அந்த உணர்வுகள் உள்ளது இந்த இயக்கம்.

ஆகவே, இங்கே இராமர் எடுபடவில்லை. வடநாட்டில் இராமனை தேர்தல் பிரச்சினையாக்கியவுடன், அதற்காகத்தான் பெரியார் அங்கே சென்றார். உத்தரப்பிரதேசத்திற்கு பெரியா ரோடு நான் உதவியாளனாகச் சென்றேன்.

இங்கே தந்தை பெரியார் அவர்கள் எழுதிய இராமாய ணத்திற்கு மறுப்பாக இராஜகோபாலாச்சாரி அவர்கள், சக்கர வர்த்தி திருமகன் என்று எழுதினார்.

கலைஞர் அவர்களின் சக்கரவர்த்தியின் திருமகன்''

அதற்கு அருமையான மறுப்பை ஓங்கி அடித்த பெருமை யாருக்கு உண்டென்றால், நம்முடைய உள்ளங்களில் மறைந்தும் மறையாமல் வாழ்கின்ற நம்முடைய கலைஞர் அவர்கள் எழுதிய சக்கரவர்த்தியின் திருமகன்''. இந்த வாரம் இராஜாஜி எழுதுவார் - அடுத்த வாரம் முரசொலியில் கலைஞர் அவர்கள் எழுதுவார்.

இராமாயணத்தைப் பிய்த்துப் பிய்த்து சொன்னது - இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே, அந்தப் பாத்திரங்கள் கற்பனையாக இருந்தாலும், அதைத் தெளிவாக எடுத்துப் பிய்த்துப் பிய்த்து சொன்னது எங்களுடைய இயக்கம். அதனால், நீங்கள் தலைகீழாக நின்றாலும், இராமன் இங்கே செல்லுபடியாக மாட்டான். இங்கே செல்லுபடியாகாத சூழ்நிலை. வடநாட்டிற்குச் சென்ற பெரியார், லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் பேசுகிறார். இந்திரா காந்தி அம்மையாரை தோற்கடித்த ராஜ் நாராயணன் அவர்கள் தலைமை தாங்கு கிறார். மேல்சபை தலைவராக இருந்தவர்.

இராமனுக்கு சாமி அவர் - இராமசாமி;

அது தெரியுமா உனக்கு?

அந்தக் கூட்டத்தில், அய்யாவினுடைய புத்தகமான இராமா யண பாத்திரம் என்கிற நூலை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ‘‘Ramayana a True Reading'' என்று தலைப்பிலான நூல். புலவர் இமயவரம்பன், நான் எல்லோரும் விற்றுக்கொண்டிருக்கிறோம். ஒரு நடுத்தர வயது அம்மையார் அவர்கள் அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, உடனே அந்தப் புத்தகத்தை கிழித்து கால்களில் போட்டு மிதித்து, இராமன், சீதையைப்பற்றி பேசக் கூடாது; அது புனிதமானது என்று ஓடி வந்தார்கள். மேடையில் இருந்த ராஜ் நாராயணன் அவர்கள் தாவிக் குதித்து ஓடிவந்து, பெரியார் பேசுவார்; அவர் எங்கே இருந்து வந்திருக்கிறார் தெரியுமா? அவருடைய பெயர் தெரியுமா? இராமனுக்கு சாமி அவர். இராமசாமி. அது தெரியுமா உனக்கு? ஆகவே, பெரியார் அவர்கள் பேசுவார்'' என்றார்.

பெரியார் அவர்கள் வழக்கம்போலவே பேசினார்.  அவரு டைய உரையை இந்தியில் மொழி பெயர்த்து சொன்னார்கள், பலத்த கைதட்டல்கள். இருந்த புத்தகங்கள் அனைத்தும் தீர்ந்து போயிற்று.

சச்சி இராமாயணம்

அய்யா அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு, லலயி சிங் யாதவ் என்பவர் ஒருவர் வந்து, அய்யா இந்தப் புத்தகத்திற்கு எனக்கு உரிமை கொடுக்கவேண்டும் - இந்தி மொழியில் சச்சி இராமாயணம் என்று வெளியிடவேண்டும், அதற்கு அனுமதி வேண்டும்'' என்று கேட்டார்.

கரும்புத் தின்னக் கூலியா? தாராளமாக உரிமை கொடுக் கிறேன் என்று பெரியார் சொன்னார்.

அந்த நூலும் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது. காங்கிரசு ஆண்ட உத்தரப்பிரதேசத்தில் அந்த நூலுக்குத் தடை செய்தார்கள்.

அந்தத் தடையை எதிர்த்து லலயி சிங் யாதவ் அவர்கள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றார். கருத்துக்குத் தடை போடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உத்தரப்பிரதேச நீதிமன்றத்திலேயே, அவர்களுடைய உயர்நீதிமன்றத்திலேயே, கருத்துரிமை அரசியல் சட்டப்படி பெரியார் அவர்கள் இந்தக் கருத்தைச் சொல்வதற்கு உரிமை உண்டு. இராமாயணத்திலேயே எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன. இராமனும், சீதையும் தங்கை என்று இருக்கின்றன என்றெல்லாம் விரிவாக அவர்கள் சொல்லி, ஆகவே, அந்த நூலுக்குத் தடை போட்டதை ஏற்க முடியாது என்றார்கள்.

அப்படி இருந்தும் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. எந்தத் தைரியத்தில் அவர்கள் செய்தார்கள் என்றால், நெருக்கடி காலம் அது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

நல்ல வாய்ப்பாக ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் நீதிபதி யாக இருந்து, அற்புதமான தீர்ப்பு எழுதினார்.

ஆயிரம் பூக்கள் மலருவதுபோல, ஆயிரம் எண்ணங்கள் வரவேண்டும். உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றத் தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

ஆகவே, உத்தரப்பிரதேசத்திலேயே, உச்சநீதிமன்றத் தீர்ப் பின்படி இராமனை - இராமாயணத்தை தோலுரித்த நூலை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பொழுது இராமன் கோவில் கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், என்ன அர்த்தம்?

அதே கோஷ்டிதான் இங்கே, அழகப்பா பல்கலைக் கழகத்தில், எம்.ஏ. படிப்பிற்கு இலக்கியத்தில் விமர்சனங்கள் - இலக்கிய ஆய்வுகள் எல்லாம் உண்டு. அந்த எம்.ஏ., பாடத்தில், பிரச்சினைக்குரியதாக எடுத்துக்கொண்டு, அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் - இந்த நூலை - நிறைய பேர் கவனித்து இருக்கமாட்டார்கள். தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்று சொன்னாரே, அதுபோன்று, யாரோ ஒரு ஆள் - காரைக்குடிக்காரர் யார் பின்னணியில் இருந்திருப்பார்கள் என்று தெரியும். அதற்கெல்லாம் அரண்மனை நாய்கள்தான் பின்னணி.

ஏற்பட்ட எழுச்சியைக் கண்டு ஒரே நாளில் மாற்றினார்கள்

திடீரென்று ஒரு அறிவிப்பு வருகிறது - அழகப்பா பல்கலைக் கழகத்தில் அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் பாடத் திட்டம் நீக்கப்பட்டது - அதற்குப் பதிலாக இன்னொரு பாடத் திட்டம் வைக்கப்பட்டது என்று அறிவிப்பு வருகிறது.

திராவிடர் இயக்கம் தூங்கிக் கொண்டிருக்கமாட்டோம் நாங்கள் - மீதி நேரம் எல்லாம் போர் வாள் உறையில் இருக்கும். களம் என்று வந்துவிட்டால், போர் வாள் எப்படி உறையில் இருக்கும்? பாசறையிலிருந்து வெளியே வரவேண்டியதுதானே - அதனைக் கண்டித்து அறிக்கை கொடுத்தோம். நான்கூட வெளியிட்ட அறிக்கையில், இதனை ஒரு மாதத்திற்குள் பழைய பாடத் திட்டத்தையே வைக்கவேண்டும் என்று சொன்னேன். ஆனால், அந்தப் பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பதிவா ளரும், ஏற்பட்ட எழுச்சியைப் பார்த்தவுடன், ஒரே நாளில் மாற்றி னார்கள்.

இதுவரை எதற்கும் வாய்த் திறக்காத மோடி, பிரதமர் மோடி - தமிழ்நாட்டில் அதிகமாக பதில் சொல்லாத மோடியின் கைத்தடி அமித்ஷா ஆகிய இருவரும் - 24 மணிநேரத்தில் பதில் சொன்ன ஒரே விஷயம் - பெரியார் சிலைதான்.

பெரியார் சிலையைபற்றி பேசியவுடன், உடனே மன்னிப்புக் கேள்'' என்று சொன்னார்கள். அப்படியாவது தமிழ்நாட்டில் கொஞ்சம் வலை போட்டுப் பார்க்கலாமா? என்று இலை போட்டு அழைத்தார்கள். நடந்ததா? நடக்கவில்லை.

பெரியாருக்கும் - அண்ணாவுக்கும் ஒரு வேறுபாடு என்ன வென்றால்,

அய்யா பெரியார் அவர்கள் நேரிடையாக, ஏ.கே.47 துப்பாக்கிப் போன்று அடிப்பார்.

அண்ணா அவர்கள், நிதானமாக, கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்காரி வசனத்தில் சொல்வார், பாம்பு வரவேண்டும்; அடித்தவுடன் சாகக்கூடாது; கொஞ்சம் கொஞ்சமாக சாகவேண்டும்'' என்பார்.

அண்ணா அவர்களின் நீதிதேவன் மயக்கம் நாடகம்!

நீதிதேவன் மயக்கம்' என்ற நாடகத்தில் அண்ணா அவர்களே நடித்தார். அண்ணா இராவணனாக, கம்பீர உருவ மாக இராவணன் இருப்பார் என்பதெல்லாம் வேறு; அண்ணா அவர்கள் குள்ளமாக இருப்பதால், குள்ள இராவணன். இராவ ணன் கூண்டில் நிற்பார்; கம்பராக யார் வேடம் போடுவார்கள் என்றால், ஈழத்து சிவானந்த அடிகள்தான். நீதிதேவனாக, நம்முடைய இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்தான்.

நிறைய தகவல்கள் நீதிதேவன் மயக்கம் நூலில் உள்ளன. விடுதலை'யிலும் அந்த நூலில் உள்ளவற்றை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.

பொங்கல் விழா என்பது திராவிடர் விழா - தமிழர் விழா!

இந்தச் சூழ்நிலையில், பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கவேண்டும். அவர்கள் எந்தெந்தத் துறையில் வந்திருக்கிறார்கள். இசைத் துறையா? நாடகத் துறையா? கலைத் துறையா? எந்தத் துறையில் அவர்கள் நுழைந்தார்களோ - அதிலெல்லாம் நாமும் நுழைந்தோம். இப்பொழுது  அவர்கள் பக்தித் துறையில் நுழைகிறார்கள். அதற்காகத்தான் நாம் பொங்கல் விழா என்று கொண்டாடுகிறோம். பொங்கல் விழா என்பது திராவிடர் விழா - தமிழர் விழாவினைக் கொண்டாடவேண்டும். மூடநம்பிக்கை விழாக்களைக் கொண்டாடக்கூடாது.

அண்ணாவிற்குப் பிறகு, கம்பராஜபுரம், கே.எம்.ராஜகோபால் அவர்கள் உயரமானவர் - உத்திரமேரூரில் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர். இதே பெரியார் திடலில், நீதிதேவன் மயக்கம் நாடகம் போட்டோம். கம்பராக சி.வி.எம்.அண்ணாமலை அவர்கள் நடித்தார்.

ஆர்.எஸ்.எஸ். ஏட்டின் ஒப்புதல்!

இப்பொழுது மிக முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், பண்பாட்டுப் படையெடுப்பை  கடுமையாக எதிர்க்கவேண்டும். இவ்வார ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம்' எழுதுகிறது:

பா.ஜ.க. - காங்கிரசு மாறி மாறி ஆட்சியில் வருவது தவறில்லை. இது ஆர்.எஸ்.எஸ்.சினுடைய நிலை.

பா.ஜ.க. - யாரை உண்மையான பகைவராக நினைக்கிறது என்பதைப் பாருங்கள்.

பா.ஜ.க. - காங்கிரசு மாறி மாறி ஆட்சியில் வருவது தவறில் லையாம். ஆனால், எந்தக் கொள்கையும் இல்லாத இந்த மாநிலக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பது  நாட்டிற்கு மிகுந்த கேடா கும் என்று விஜயபாரதம்' எழுதுகிறது.

மீண்டும் நீதிதேவன் நாடகம் நடத்தப்படும் - இராவணனாக வைகோ!

இராமர் கோவில் கட்டுவோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், திருவிழாக்களை உண்டாக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், ஒரு முக்கிய அறிவிப்பை இப்பொழுது வெளியிடுகிறேன். அண்ணா விட்ட பணி - மீண்டும் நீதி தேவன் நாடகம் நடத்தப்படும் -இராவணனாக வைகோ தோன்றுவார்.

நீதிதேவன் பாத்திரத்தில் நான்!

உடனே அவர் என்னைத் திருப்பிக் கேட்டார் - நீங்கள் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடியுங்கள் என்று கேட்டார்; நீதிதேவன் பாத்திரத்தில் என்னை ஏற்கச் சொல்லியிருக்கிறார்.

இங்கே  நம்முடைய குமரி அனந்தன் அவர்கள் ஒரு அற்புதமான செய்தியை சொல்லியிருக்கிறார். பொதுவாழ்க் கையில், பெண்களுக்கெல்லாம் உரிமை கொடுத்தவர் - சுயமரி யாதை இயக்கத்திற்குத் தலைவராக இருந்தவர் நம்முடைய டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் அவர்கள்.

தந்தை பெரியாரின் பெருந்தன்மை!

இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் - பதவி, பதவி, தலைமைப் பதவி என்றெல்லாம்  சொல்கிறார்களே அவர்களுக்காக இதைச் சொல்கிறேன் - சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் தந்தை பெரியார். ஆனால், அந்த இயக்கத்திற்கு அவர் தலைவராக இல்லை. ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தால், நிறுவனத் தலைவர் என்று நாம் சொல்கிறோம். டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனார் அவர் களைத் தலைவராக்கிவிட்டு, தந்தை பெரியார் அவர்கள், துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

என்ன பெருந்தன்மை! அவருக்கு எது முக்கியம் என்றால், கொள்கை முக்கியம். அதுமட்டுமல்ல, தளபதிகளும் மிக முக்கியம். சரியானவர்களை அடையாளம் கண்டு, வரவேண்டும்.

டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனார் அவர்களுக்குப் பெயரே அச்சம் அகற்றிய அண்ணல்.''

அழகாக சொன்னாரே வைகோ - வளர்ந்த நாடு அமெரிக்கா - அந்த நாட்டிற்குச் சென்று, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கருப்பனும், வெள்ளைக்காரனும் பேருந்தில் ஏறுவதற்குப் போராட்டம் நடத்தினார். நாயை விட்டுக் கடிக்கச் சொன்னார்கள். அங்கேயும் நாய் இருந்திருக்கிறது - அதுவும் அரண்மனை நாய்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள். பெரிய அளவிற்குப் படத்தோடு - அந்த ஒரு படம்தான் புரட்சியை உண்டாக்கியது என்று.

நீதிக்கட்சி நிறைவேற்றிய தீர்மானம்!

பேருந்துக்கு உரிமம் வழங்கக்கூடிய உரிமை ஜில்லா போர்டு தலைவர்களுக்குக் கிடையாது. சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை, டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனார் நாடார். 1929 ஆம் ஆண்டுகளில் ஜாதியை ஒழித்தவர்கள் இவர்கள். இரண்டு பேரும் தீர்மானம் போட்டார்கள் - தாழ்த்தப்பட்டவரை பேருந்தில் ஏற்றமாட்டேன் என்று சொன்னால், அந்தப் பேருந்தின் உரிமை ரத்து செய்யப்படும் என்று.

இப்படி உரிமையை வழங்கிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். சிலர் இன்றைக்குக் கேட்கிறார்கள், திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று.

குமரிஅனந்தன் அவர்களின் கோரிக்கை!

குமரிஅனந்தன் அவர்கள் ஒரு செய்தியை சொல்லியி ருக்கிறார்.

சமூகப் புரட்சியை செய்தவரின் பெயரால் அமைந்த சவுந்திரபாண்டியனார் அங்காடித் தெரு - பாண்டிபஜார் என்று அழைக்கப்படுகிறது. முந்தைய பெயரே நிலைக்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசி, முதல்வர் கலைஞரிடம் வேண்டுதல் வைத்தேன். அதனை ஏற்று அவ்வாறே சவுந்தர பாண்டியன் கடைத்தெரு என்று அழைக்கவேண்டும் என்று அவர் ஆணையிட்டார். இப்பொழுது அங்குள்ள காவல் நிலையத்தில் மட்டுமே அவ்வாறு பொறிக்கப்பட்டு உள்ளது. கடைகளில் முகவரிகளில் எல்லாம் பாண்டிபஜார் என்றே பொறித்துள்ளார்கள். நாம் யாது செய்யலாம், வழிகாட்டுங்கள் என்று.

தார்ச்சட்டியோடு வருவோம்!

வைகோ முன்னிலையில், இவ்வளவு பேர் முன்னிலையிலும், எல்லா வியாபாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கி றோம். இல்லையானால், தார்ச்சட்டியோடு வருவோம். புதிதாக உங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்த மாட்டோம். சவுந்திர பாண்டியனார் பெயரை பெயர்ப் பலகையில் எழுதுவோம். அதற்காக நீண்ட தூரம் நடக்கவேண்டாம் நம்முடைய குமரிஅனந்தன். அவர் நடந்து நடந்து களைத்துவிட்டார். எங்களோடு வந்தால் போதும். முதலில் அதனை வேண்டு கோளாக வைப்போம். வணிகர்கள் நல்லவர்கள். நல்ல உள்ளங்கள் படைத்தவர்கள்தான், யாரும் மறுக்கமாட்டார்கள்.

பனை நல வாரியம்

ஒருமுறை நான், முதலமைச்சர் கலைஞர் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபொழுது, என்னங்க வீரமணி, பனை நல வாரியம் ஒன்றை உருவாக்கவிருக்கிறோம். அதற்கு யாரை தலைவராகப் போடலாம் என்று சொல்லுங்கள் என்றார்.

உடனே நான், பனை மரத்தைப்பற்றியே பேசிக் கொண்டிருப் பவர் ஒருவர் இருக்கிறார் என்றேன்.

புரிந்துகொண்டேன், நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று. குமரிஅனந்தன்தானே என்றார்.

நானும் அவரைத்தான் நினைத்தேன் - நான் நினைத்தைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள் என்று சொல்லி, உடனே செயலாளரை அழைத்துத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லச் சொன்னார்.

அப்படிப்பட்ட இயக்கம் திராவிடர் இயக்கம். கொச்சைப் படுத்துவது அல்ல; அல்லது மக்களைப் பார்க்க அஞ்சுவது அல்ல இந்த இயக்கம்.

வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார், வளர்க திராவிடர் இயக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner