எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை!

விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும்!

பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அவை தங்குத் தடையின்றித் தொடர்கின்றன. இதற்கொரு முடிவு எட்டப்படவேண்டும்  என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை  வருமாறு:

அரூர் கோட்டப்பட்டியில் அண்ணாமலை - மலர் இணையரின் மகள் சவுமியா. அரசு மேல்நிலைப் பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்செல்வி சவுமியா.

கயவர்களின் வெறிச்செயல்

தீபாவளி  விடுமுறைக்கு வீடு வந்த அவர், காலைக் கடன் கழிக்க ஊருக்கு வெளியே சென்றபோது கடந்த 6 ஆம் தேதி ரமேஷ், சதீஷ் என்ற இரண்டு பேர் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியுள்ளனர். தன்னை காத்துக் கொள்ள சவுமியா போராடினார். ஆனால், அந்தக் கயவர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். உடம்பெல்லாம் காயங்கள், ரத்தமாக வழிந்த நிலையில் பெற்றோரிடம் சவுமியா முறையிட, செய்வதறியாது தவித்த அவர்களும், கோட்டப்பட்டி காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர்.

காவல்துறையின் அலட்சியம்!

ஆனால், காவல்துறையினர் புகாரை வாங்காமல், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாமல், காய மடைந்த மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பாமல் காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர். என்னே மனிதாபிமானமற்ற கொடுமை!

இதனை அடுத்து பெண்ணின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் புகார் செய்த பிறகு, இந்தப் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெளியே வந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கையைக் காவல்துறை பதிவு செய்துள்ளது.

மக்கள் போராட்டம்

காப்பகத்தில் மிகவும் மோசமான உடல் நிலையில் சவுமியாவை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். உதிர இழப்பு மற்றும் பெண் ணுறுப்புப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உடல்நிலை மோசமடைந்த சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து காவல்துறையினரைக் கண்டித்து ஊர் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி னார்கள். அவர்களுக்கு ஆதரவாக 24 கிராம மக்களும் திரண்டனர்.

மாவட்ட ஆட்சியாளர் வந்ததும், சவுமியாவின் உடலை வாங்க மாட்டோம், உடலை வெளிமாவட்டத்தில்தான் உடற்கூறு ஆய்வு செய்யவேண்டும் என்று வலியுறுத் தினார்கள். அதன்படியே அக்கோரிக்கை ஏற்றுக் கொள் ளப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த மக்களும் வைத்த முதன்மையான கோரிக்கை, வழக்கை விசாரித்து வரும் கோட்டப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் முத்துக் கிருஷ்ணன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தான். அவர் மீது சரமாரியான புகார்களை மக்கள் அள்ளி வீசினர்.

பெற்றோர் புகாரைக் கொடுத்தும் முத்துக்கிருஷ்ணன் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்று முதல் குற்றச்சாட்டைக் கூறினர்.  குற்றவாளிகளையும் கைது செய்யாமல், அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிக்க விட்டதாக இரண்டாவது குற்றச்சாட்டை கூறினர். சவுமியா பாலியல் வன்கொடுமை வழக்கை பாலியல் வன்முறை முயற்சி என்று பதிவு செய்ய முயன்றதாக மூன்றாவது குற்றச்சாட்டைக் கூறினர்.

குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்த ஆய்வாளரைப் பதவிநீக்கம் செய்தே ஆக வேண்டும் என்று ஒருமித்த குரல் பலமாக எழுந்தது. இதையடுத்துதான், தற்போது அவர் இடம் மாற்றப்பட்டு, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி புதிய விசாரணை அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரியை இப்படி மாற்றி உத்தரவிட்டது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்று கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக பெற்றோர் புகார் கொடுத்த உடனேயே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் சவுமியாவை காப்பாற்றியிருக்கலாம் என ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் கூறினர்.

சேலம் தளவாய்ப்பட்டியில்...

இதுபோலவே சேலம் ஆத்தூர் அருகே தளவாய்ப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படித்து வந்த ராஜலட்சுமி என்ற சிறுமியிடம், அதே பகுதியில் வசித்து வந்த தினேஷ் குமார் என்பவன் பாலியல் சீண்டல்களை செய்துள்ளான். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே அடுத்தடுத்த வன்மத்தை அரங்கேற்றி வந்துள்ளான்.  தன்னால் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி, இதை தன் பெற்றோரிடம் சொல்ல, இதனை அடுத்து அவர்கள் தினேசைக் கண்டித்துள்ளனர். மேலும் ஊர் பெரியவர்களிடம் புகார் தெரிவிக்க உள்ள தாகவும் கூறினர். இதனை அடுத்து தினேஷ் என்ற அந்த இளைஞன் ராஜலட்சுமி பள்ளிக்குச் செல்லத் தயாராகிக்கொண்டு இருக்கும்போது அவரது தாயார் முன்னிலையிலேயே அரிவாளைக் கொண்டே அந்த சிறுமியின் தலையை வெட்டிவிட்டு, வெளியில் அவனுக் காக காத்திருந்த அவனது மைத்துனனது இருசக்கர வாக னத்தில் ஏறி அங்கிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்து விட்டார். என்னே விபரீதம் - கொடுமை!

இராமநாதபுரம் ஆலங்குளத்தில்....

இராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியின் மகள் மாலதி (21). பி.ஏ. தமிழ் பட்டதாரியான இவரைக் கடந்த செப்டமர் 29 ஆம் தேதி முதல் காணவில்லை. கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரைக் காதலித்து வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மாலதியின் தாயார் கலைச்செல்வி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோச மங்கை செல்லும் வழியில் ரயில்வே கேட் அருகில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும், எலும்புகள் மற்றும் பெண்ணின் துணிகள் சில கிடப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காணாமல் போன  மாலதி தான் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் எஞ்சியிருந்த எலும்புகளை சேகரித்த காவல்துறையினர் உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் இடமாற்றம்!

இந்நிலையில் புகார் கூறப்பட்ட சிவக்குமாரை  காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டதாக உத்தரகோசமங்கை காவல்துறையினர்மீது மாலதியின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து  மாலதி காணாமல் போன புகார் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காத திருஉத்தரகோசமங்கை காவல்நிலைய சார்பு ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர்  ஆகிய இரு வரும் இராமநாதபுரம் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் கண்டு எடுக்கப்பட்ட எலும்புகள் பகுப்பாய்வுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அதன் முடிவுகளுக்குப் பின்னரே எரிக்கப்பட்டு கிடந்தது மாலதிதானா எனத் தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படு கிறது. இதனால் இந்த வழக்கில் குழப்பம் நீடித்து வருகிறது.  பெற்றோர்கள் இவ்விவகாரம் குறித்து ஊடகவிய லாளர்களிடம் பேசும்போது, காவலர்களிடம் புகார் கொடுக்கச் சென்றபோது படித்த பெண் யார் கூடவும் போயிருப்பாள், என்று அலட்சியமாகக் கூறியுள்ளனர். மேலும் புகார் கூறப்பட்ட நபரை அழைத்து விசாரித்து விட்டு பெண் உன்னிடம் வந்திருந்தால் கொண்டுவந்து விட்டுவிடு'' என்று கூறி கொலையாளியை அனுப்பி வைத்துள்ளனர்  என்று பெண்ணை இழந்த பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

அண்மைக்காலமாக பெண்கள் பாலியல் வன் கொடுமை என்பது தொடர் கதையாகிவிட்டது. காவல் துறையினரின் அலட்சியமும் இதற்குக் காரணமே! தவறு செய்த காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டாலே பெரிய தண்டனை என்பதுபோல ஒரு சித்திரத்தைக் காட்ட முயலுகிறது அரசு.

சம்பந்தப்பட்ட காவல்துறையினர்மீது கிரிமினல் குற்றத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பெண்கள் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்படுவது என்பது மன்னிக்கப்படவே முடியாத தலைகுனிய வேண்டிய கேவலமான குரூரமாகும்.

இவற்றைப்பற்றி எல்லாம் மாநில அரசுக்கு அக் கறையோ, கவலையோ இருப்பதாகத் தெரியவில்லை. வேதனை - வெட்கம்!

பெண்கள் பாலியல் பொருளாகப் பார்க்கப்படும் கொடுமைக்கு முடிவு கட்டப்படவேண்டும். குற்றவாளி கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து காலம் கடத்துவது, தப்பிப்பது என்பது இதுபோன்ற குற்றங்களில் நடந்திட அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு விரைவாக கடுந்தண்டனை கொடுக்க முடியுமோ அது நடந்திடவேண்டும். இதுகுறித்து ஒத்தக் கருத்துள்ளவர் களுடன் கலந்து உரிய முடிவெடுக்கப்படும்.

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

13.11.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner