எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும்!

தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை

சென்னை, அக்.16-  தமிழின் பெருமையை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது; திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி, உலகம் முழுவதும் பரப்பும் சக்திகளை அடையாளம் காணவேண்டும் - முறியடிக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (15.10.2018) மாலை சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழியக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

கால இடைவெளியில்லாமல்...

மிகுந்த எழுச்சியோடு காலை முதல் இரவு வரை இடைவெளியில்லாமல் தமிழர்களை ஒன்று சேர்த்து, காலமும் இடைவெளியில்லை - இடத்திலும் இடைவெளியில்லை - போற்றுதலிலும் இடைவெளி யில்லை என்று சொல்லக்கூடிய அளவில், சிறப்பாக இங்கே அனைவரையும் ஒன்று சேர்த்திருக்கக்கூடிய தமிழியக்கத்தின் தோற்றுநர்  அன்பிற்குரிய சகோதரர் வி.அய்.டி. நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தர் சகோதரர் விசுவநாதன் அவர்களே,

தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தணல் எரிய வேண்டிய நேரத்தில் எரியவேண்டும்!

இந்த அரங்கத்தில் காலை முதற்கொண்டு சிறப்பான பணி செய்திருப்பதை தோழர்கள் எல்லோரும் பாராட்டினர். ஒரு சிறப்பான பணியை நம்முடைய விசுவநாதன் அவர்கள் செய்திருக்கிறார் என்பதை அவர்கள் அனைவரும் குறிப்பிட்டார்கள்.

தணல் குளிரும்

தமிழர் ஒன்று சேர்ந்தால்'' என்று புரட்சிக்கவிஞர் தமிழியக்கத்தில் சொன்னார்.

அந்தத் தணல் குளிர்ந்திருக்கிறது இப்பொழுது. ஆனால், தணல் ஒரே அடியாகக் குளிர்ந்துவிடக்கூடாது. தணல் எரிய வேண்டிய நேரத்தில், எரியவும் செய்ய வேண்டும், அதுதான் மிகவும் முக்கியமானது.

இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம்!

அந்த அடிப்படையில், இங்கு குறிப்பாக சொல்ல வேண்டுமானால், எனக்கு 10 மணித்துளிகள் உரையாற்ற கொடுத்திருக்கின்றார்கள். அதற்குள்ளாக ஒரு சில கேள்விகளை மட்டும் உங்கள் முன் வைக்கின்றேன்.

தமிழர்கள் என்று சொல்லும்பொழுது தமிழியக்கம் - இது தொடரவேண்டும் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், கட்சிகள் என்றால், அதற்குரிய ஒரு இலக்கு உண்டு. அந்த இலக்கை அடைந்தவுடன், அதன் வேலை முடிந்துவிடும். இயக்கம் என்றால், இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம். ஆகவே, அதில் எந்தத் தயக்கமும் கிடையாது. எனவேதான், அவர் தொடங்கியிருப்பது தமிழியக்கம் - எனவே, இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும்.

மொழியைப்பற்றி தந்தை பெரியார்!

இந்த நேரத்தில், தமிழர்களை ஒன்று சேர்த்திருக் கின்றோம் என்று சொல்கின்ற நேரத்தில், ஒரே ஒரு மிக முக்கியமான பிரச்சினை என்னவென்று சொன்னால், நாம் தமிழர்கள் என்று சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள், மொழியைப்பற்றி சொல்லுகின்றபொழுது, தமிழ் வாழ்க!'' என்று 1938 இல் இந்தி எதிர்ப்பில் தொடங்கினார்கள். அந்தக் காலகட்டத்தில், தமிழ் வாழ்வதற்கு வெறும் மொழியைப்பற்றி மட்டுமல்ல, தமிழியக்கம் என்பது வெறும் மொழியினுடைய பெருமை, மொழியினுடைய ஆற்றல், மொழியினுடைய பரவல் இவைகளை மட்டும் பார்த்தால் போதாது.

தமிழியக்கத்தின் பணி என்ன?

அதுபோலவே, மிக முக்கியமாக கவனிக்கவேண் டியது, தமிழ் மொழியை - வெறும் மொழிக்காக மட்டும் பார்க்கக்கூடாது. எத்தனையோ மொழிகள் இருக்கின்றன - அதில் தமிழ் செம்மொழி, எம்மொழி என்று பெருமைப்படுகின்றோம் என்றாலும்கூட, ஒரு பண்பாட்டுப் பெட்டகம் - அதைத்தான் எண்ணிப் பார்க்கவேண்டும். நம்முடைய இலக்கியங்களை சுட்டிக் காட்டுகிறோம் என்றால், திருக்குறளை எடுத்துக்காட்டி இங்கே எல்லாத் தோழர்களும் சொன்னார்கள். ஆனால், நம் இல்லங்களில் தமிழிலக்கியப் புத்தகங்களை நாம் அடுக்கி வைத்திருப்போம் - கொஞ்ச நாள்களுக்கு எடுக்காமல், பிறகு அந்தப் புத்தகங்களை எடுத்துப் பார்த்தால், உள்ளே செல்' அரித்திருக்கும். அட்டைகள் இருக்கும், உள்ளே பக்கங்கள் இருக்காது. அதுபோல நண்பர்களே, இங்கே முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி என்னவென்றால், தமிழியக்கத்தின் பணி என்ன?

மிக முக்கியமான பணி - தமிழ் உணர்வு என்பது மொழி உணர்வு மட்டுமல்ல - ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைப் புறக்கணித்து, தோற்கடிக்கக்கூடிய பணியை செய்தாகவேண்டும்.

எந்த அளவிற்குப் பண்பாட்டுப் படையெடுப்பு இருக்கிறது என்பதை உங்களுக்குத் தொட்டுக் காட்டு கிறேன்.

திருக்குறள் உலகப் பொதுமறை - எங்குமே இல்லாதது - இத்தனை மொழிகளிலே அதனை மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்றெல்லாம் இங்கே நம்முடைய சகோதரர்கள் இந்த மேடையில் முழங்கினார்கள். இதோ ஒரு புத்தகம், இந்தப் புத்தகம் திருக்குறள் - ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எழுதப்பட்டு இருக்கிறது.

மனுதர்ம சாஸ்திரத்தின் மறுபதிப்புதான் திருக்குறளாம்!

தமிழில் எழுதினால், நம்மோடு, தமிழ்கூரும் நல்லு லகத்தோடு போய்விடும் என்பதற்காக, இதைத் தாண்டி எங்கே போயிருக்கிறது என்று சொன்னால், உலகம் முழுவதும் போகவேண்டுமானால், ஆங்கிலத்தில் அதனை மொழி பெயர்த்தால்தான், அந்தத் திருக்குறள் உலக அளவிற்குப் பரவும் என்பதற்காக ஆங்கிலத்தில் திருக்குறள் அண்மையில் வெளிவந்திருக்கிறது. ஆனால், அதன் நோக்கம் வேறு.

மனுதர்ம சாஸ்திரத்திலிருந்து வந்தது திருக்குறள்.  மனுதர்ம சாஸ்திரத்தின் மறுபதிப்புதான் திருக்குறள் என்று இருக்கிறது. எழுதியிருப்பவர் யார் தெரியுமா? நாகசாமி என்ற ஒரு அறிஞர்', இதை எழுதி (அப்பொழுது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முட்டாள்' என்று சொல்லுங்கள் என்றார்) - நாங்கள் அறிஞர்' என்று ஒருவரை சொல்லுகின்றோம் என்றால், எந்தப் பொருளில் சொல்லுகின்றோம் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். நம்முடைய வைகோ எப்பொழுதுமே துடிப்பு மிகுந்தவர் - அவருக்கு எப்பொழுதுமே கோபம் வந்துவிடும், முட்டாள் என்று சொல்லுங்கள் என்கிறார். நான் அவரை முட்டாள் என்று சொல்லவில்லை. ஏனென்றால், அவர்தான் அந்த உலகத்திற்குப் பெரிய அறிஞர். அந்த உலகத்து அறிஞர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளவேண்டும். எத்தகைய ஆபத்து வந்திருக்கிறது?

தமிழுக்கு வளர்ச்சி ஏற்படுவது என்பதைவிட, தமிழுக்கு ஏற்படும் நோய். குழந்தையை வளர்க்கிறோம் - தாயினுடைய கடமை என்ன? நோயிலிருந்து அந்தக் குழந்தையைப் பாதுகாக்கவேண்டும் அல்லவா! வேளாண்மையில் பயிரைப் பாதுகாக்கவேண்டுமானால், உரம் போட்டால் மட்டும் போதுமா? அந்தப் பயிர்களில் எங்கெங்கெல்லாம் பூச்சி வந்திருக்கிறதோ, அந்தப் பூச்சிகளை ஒழிக்க அங்கெல்லாம் பூச்சி மருந்து அடிக்கவேண்டாமா? அந்தப் பணியை செய்வதற்குத்தான் இப்பொழுது தமிழியக்கம் முற்படவேண்டும். அதை செய்தால்தான், தமிழியக்கம் சரியான பாதையில் செல்கிறது என்று அதற்குப் பொருள்.

நாம் இவரை விரோதித்துக் கொள்ளலாமா? அவரை விரோதித்துக் கொள்ளலாமா? என்று நினைக்கக்கூடாது. தமிழ்ப் பகைவர்கள் நம்முடைய பகைவர்கள். தமிழை வாழ வைக்கக்கூடியவர்கள் நம்முடைய நண்பர்கள். துணிச்சலோடு இறங்குவோம்.

நீதிமன்றத்தில் தமிழ் இருக்கிறதா?

தமிழுக்கு ஏன் இந்த நிலை?

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!! என்று சொல்வதற்கு அழகாக இருக்கிறது. கோவிலுக்குள் சென்றால், தமிழ் இருக்கிறதா? சட்டம் போட்டும், உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் தமிழ் உள்ளே போக முடிகிறதா? அதேபோன்று, நீதிமன்றத்தில் தமிழ் இருக்கிறதா? வீதிமன்றத்திலும் இல்லை - நீதிமன்றத்திலும் இல்லை. நாம்தான் இதனை இன்றைக்கு செய்து கொண்டிருக்கின்றவர்களாக இருக்கிறோம்.

தமிழர்களுக்குப் புத்தாண்டு - நண்பர்களே! தமிழ் இயக்கம் செய்யாவிட்டால், வேறு எந்த இயக்கம் செய்யும்?  தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லி, பிரபவ, விபவ, சுக்கில என்று ஆரம்பிக்கிறார்களே, அது தமிழ்ப் புத்தாண்டா? 60 ஆண்டுகளில் ஒரு சொல், தமிழ்ச் சொல் உண்டா? இதைக் கேட்கவேண்டாமா? இதைக் கேட்டவர் தந்தை பெரியார். நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன் - எனவேதான், தந்தை பெரியார் அவர்கள், மொழியைப் பார்க்கும்பொழுது சொன்னார்கள், பழைமையைப் பேசாதீர்கள்; ஏ.கே.47 அதற்கும் மேலே இருக்கின்ற ஆயுதங்களும்தான் இன்றைக்குப் பயன்படும். ஆகவே, மொழி என்பது ஒரு போர்க் கருவி. ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கின்ற நேரத்தில், ஒரு போர்க் கருவியாக மொழி பயன்படவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

அந்த அடிப்படையில், இந்த நாகசாமி என்ற பத்மபூஷன் விருதினைப் பெற்றவர். (பாரத ரத்னா விருதிற்கு அடுத்தபடியாக இருப்பது பத்மபூஷன் விருது). இதற்காகத்தான் அவருக்கு பத்மபூஷன் விருது. நண்பர்களே, தனிப்பட்ட நபர்களைப்பற்றி பேசுகின்றோம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்று போர்க் களத்தில் புரிந்துகொள்ளாவிட்டால், நாம் தோற்றுப் போக நேரிடும். இதுவரை தமிழுக்கு வந்த ஆபத்து அப்படிப்பட்ட ஆபத்துகள்தான்.

களத்தில் நிற்பதற்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டவேண்டிய நேரம் இது!

புரட்சிக்கவிஞர் அவர்கள் அந்தக் காலத்தில் உருவாக்கியதுதான் தமிழியக்கம் - அந்தத் தமிழியக்கத்தை இன்றைக்கு நாம் புதுப்பிக்கின்றோம் என்று சொன்னால், அது பாராட்டப்படவேண்டிய பணி - வரவேற்கவேண்டிய பணி - ஆனால், களத்தில் நிற்பதற்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டவேண்டிய நேரம் - இந்த நேரம்.

எனவேதான், உலகத் தமிழர்கள் - ஒரு தேசிய இனம் வெற்றி பெறாது போனதற்குக் காரணம் எது? தந்தை பெரியார் அழகாக சொன்னார், காலில் போட்ட விலங்கு பளிச்சென்று கண்களுக்குத் தெரியும். பொருளாதார படையெடுப்பு - அடிமைத்தனம் கைகளில் போட்ட விலங்கு அதுவும் கண்களுக்குப் பளிச்சென்று தெரியும்.

பண்பாட்டுப் படையெடுப்பு, பண்பாட்டு அடிமைத்தனம் மூளையில் போட்ட விலங்கு - அது கண்களுக்குத் தெரியாது - ஈரோட்டு சம்மட்டியால் மட்டும்தான் அதனை உடைத்தெறிய முடியும் என்பதைக் காட்டியதால்தான், இன்றைக்குத் தமிழ்நாட்டில், தமிழனுக்கு இசை என்று சொன்னால், தெலுங்கிலே பாடவேண்டும். தமிழனுக்கு, தமிழில் பாட்டுப் பாடினால், ஒரு காலத்தில் துக்கடாப் பாட்டு பாடுகிறான் என்று சொன்னார்கள். இன்றைக்கும் வானொலியில் என்ன நிலை? என்பதை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.

எனவேதான், தமிழியக்கத்தில், தமிழர்களை நீங்கள் சேர்த்திருக்கிறீர்கள் - அதனை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். எது நம்மை இணைக்கிறதோ - அதனை வரவேற்போம்; அகலப்படுத்துவோம். எது நம்மை பிரிக்கிறதோ - அதனை அலட்சியப்படுத்துவோம்.

இது அற்புதமான நிகழ்ச்சி - இதனை விரிவுபடுத்துவோம். ஆனால், அதேநேரத்தில், நீங்கள் செய்யவேண்டிய பணியை சுட்டிக்காட்டவேண்டியது எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்களுடைய கடமையாகும். அது என்னவென்று சொன்னால்,

வேற்றுமையில் ஒற்றுமை - இது அருமையான தத்துவம். அதனடிப்படையில்தான், நாம் பலரும், பல கட்சிகள், மற்ற அமைப்புகளில் இருந்தாலும், இங்கே ஒன்று திரட்டியிருக்கிறோம். அதற்காகப் பாராட்டுகள். ஆனால், ஒற்றுமையில் வேற்றுமை இருக்கக்கூடாது. அதுதான் மிக முக்கியமானது. ஒற்றுமையில், வேற்றுமையை உருவாக்குகிறார்கள். அதைத்தான் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களும், மற்றவர்களும் இங்கே சொன்னார்கள்.

மதத்தால் பிரிந்து கிடக்கிறான், ஜாதியால் பிரிந்து கிடக்கிறான், சங்க காலம் என்று சொன்னால், ஒன்றுபட்ட காலம். இப்பொழுது சங்க காலம் என்றால், ஜாதி சங்க காலம். அதுதான் மிக முக்கியம். புதிது புதிதாக ஜாதித் தலைவர்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, மாவட்டங்களுக்குப் பெயர் வைத்தார். ஜாதித் தலைவர்களின் பெயர்களை வைத்தபொழுது, அதனை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். அந்த ஜாதித் தலைவர்களின் பெயரை வைத்தவுடன், அந்தந்த ஜாதியை சேர்ந்தவர்கள் முழுப் பக்க விளம்பரங்களை நாளிதழ்களில் கொடுத்தார்கள். பெரம்பலூர் மாவட்டத்திற்கு விளம்பரத்தை யாரும் கொடுக்கவில்லை. காரணம், திருவள்ளுவர் மாவட்டம் என்று பெயர் வைத்திருந்தார்கள். திருவள்ளுவர் என்ன ஜாதி என்று இன்னும் முடிவிற்கு வரவில்லை. அந்த மாவட்டம் மட்டும்தான் தப்பித்தது. (கைதட்டல், சிரிப்பொலி).

இராஜராஜனுக்கு ஜாதி முத்திரை குத்துகிறார்கள். ஆகவேதான், ஜாதியால் பிளவுபட்டு இருக்கக்கூடாது; மதங்களால் பிளவுபடுத்தக் கூடியவர்கள் - இந்த நாட்டையே இன்றைக்கு சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்சினுடைய தலைவர் கோல்வால்கர் பஞ்ச் ஆஃப் தாட்ஸ்'' என்ற நூலில், திருக்குறள் ஒரு இந்து மதத்தைப் பரப்பும் நூல் என்று எழுதி இருக்கிறார். தமிழியக்கம், தமிழின் பெருமையை சொன்னால் மட்டும் போதாது தோழர்களே, தமிழுக்கு வருகின்ற நோய்க் கிருமிகளைத் தடுத்தாகவேண்டும்; நோய்க் கிருமிகளை அழித்தாகவேண்டும். அந்தப் பணியையும் உங்கள் பணிகளில் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, கருத்துகள் உடன்பாடானதாய் எடுத்துக்கொள்ளுங்கள் - எடுத்துக்கொள்ளத் தயங்காதீர்கள். பயணத்தைத் தொடருங்கள், அந்தப் பயணத்திற்காக வேந்தர் அவர்களே நீங்கள் சிறப்பாக செய்த பணிக்கு - நாங்கள் தயாராக இருப்போம். களத்திற்கு உடனடியாக உங்களைப் போன்ற கல்வியாளர்கள் வர முடியாது - ஆனால், எங்களைப் போன்ற போராளிகள் எப்பொழுதும் வர முடியும். எனவேதான், அணிகள் பலவாக இருந்தாலும், பணிகள் ஒன்றுதான் என்ற உறுதியை உருவாக்கிக் கொண்டு, வாய்ப்பளித்தமைக்கு நன்றி, வணக்கம்!

வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழியக்கம் தொடக்க விழா

உலகத் தமிழர் அனைவரும் ஒரே குடைக்கீழ் தமிழியக்கம் உலகளாவிய அமைப்பின் தொடக்க விழா நேற்று (15.10.2018) காலை முதல் இரவு வரை சென்னை பாரிமுனை இராசா அண்ணாமலை மன்றத்தில் முழு நாள் தொடர் நிகழ்ச்சியாக நடைபெற்றது. தமிழ், தமிழர் உணர்வுடன் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமானவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் திரண்டு வந்து கலந்துகொண்டனர். தமிழியக்கத்தின் நிறுவனத் தலைவர் வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தர் கோ.விசுவநாதன் ஒருங்கிணைப்பில் பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள் தமிழியக்கத் தொடக்கவிழாவில் கலந்துகொண்டனர். .

காலை முதல்  இரவு வரை தொடர் நிகழ்வுகள் நடந்தன. காள்கோள் காதை, தீந்தமிழ்த் திறவுகோல் நூல் வெளியீட்டு விழா, நீர்ப்படைக் காதை, தமிழிசைக் காதை நாடுகாண் காதை, ஊடகக்காதை, கல்வெட்டுக் காதை, வாழ்த்துக்காதை உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும்  தமிழியக்கத்தின் பெயரால் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

தமிழியக்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்  பாரதிஇணைப்புரை வழங்கினார்.

நீர்ப்படைக்காதை அமர்வில் பாராட்டரங்கம் திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

மாலைநேர நிகழ்வாக, தமிழ்நாடு பெயர் மாற்றப் பொன்விழா கல்வெட்டுக்காதையில் நடைபெற்றது. பெற்றவ ளுக்கே பெயர் சூட்டிய பேரறிஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழியக்க துணைச் செயலாளர் முனைவர் சாரதா நம்பிஆரூரன் வரவேற்றார். தமிழியக்கப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் அரங்க அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் அருணன், முனைவர் சுந்தரவல்லி, கவிஞர் நந்தலாலா  கருத்துரையாற் றினர். தமிழியக்க சென்னை மண்டலச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்கு வேந்தர் கோ.விசுவநாதன் பயனாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்தார். சிறப்பு விருந்தினர் களுக்கு பேராசிரியர் அப்துல் காதர் பயனாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.

வாழ்த்துக்காதை நிகழ்வு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் நடைபெற்றது. தமிழியக்க பொறுப்பாளர்களுக்கும், தமிழறிஞர்கள் குடும் பத்தினருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. மறைமலையடிகள் மகன் மறை.தாயுமானவன், மருமகள் சாரதா நம்பி ஆரூரன், கி.ஆ.பெ.விசுவநாதன் மகள் மருத்துவர் கி.ஆ.பெ.வி.மணி மேகலை, அண்ணல்தங்கோ மகன் அருள்செல்வன் உள்ளிட் டவர்களுக்கு தமிழியக்கத் தலைவர் கோ.விசுவநாதன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். தமிழியக்க மாநில செயலாளர் மு.சுகுமார் வரவேற்றார். தமிழியக்கத்தின் நோக்கம், இலக்குகுறித்து தமிழியக்க நிறுவனத் தலைவர் வேந்தர் கோ.விசுவநாதன் விளக்கவுரை யாற்றினார். புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி, புதுச்சேரி சட்டமன்றத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்திய யூனியன் முசுலீம்லீக்   தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.ப.தியாக ராசன், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக் கரசர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தமிழ் மய்ய இயக்குநர் ஜெகத்கஸ்பர், இந்திய தேசிய லீக் பஷீர் அகமத், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, தமிழக வாழ்வுரிமைகட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பலர் உரையாற்றியதைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியு ரையாற்றினார்.

தமிழியக்க தமிழக மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்து நன்றிகூறினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிறை வுரையாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், இரா.தமிழ் சாக்ரடீஸ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner