எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

நமது சிறப்புச் செய்தியாளர்

சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையிலும், அவர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் இருக்கும் ஆளுநர், அதற்கான பொறுப்பை அவர் ஏற்கவேண்டிய நிலையில், தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப அழைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை நேற்று (11.10.2018) திராவிடர் கழகத் தலைவர் விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்மொழிய, கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தீர்மானத்தை ஆதரித்தனர்.

சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை 84 ஆண்டு வரலாறு படைத்த விடுதலை' ஏட்டின் சார்பில் நடத்தப்பட்ட பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்பும் - பாராட்டும்'' எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நக்கீரன்' ஆசிரியர் கோபால் அவர்கள்மீதும், நக்கீரனில் பணியாற்றுவோர் 35 பேர்மீதும் சென்னை பெருநகரக் காவல்துறை ஏவியுள்ள வழக்கு இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தையும் கடந்து வாசிங்டன் போஸ்ட்' எழுதும் அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆளுநர் தொடர்பாக நக்கீரனில் எழுதப்பட்ட கட்டுரைக்கு ஆறு மாதம் கழித்து வழக்குத் தொடுப்பு என்பது பொது அறிவுள்ளவர்கள் மத்தியில் ஏளனமாகத்தான் கருதப்படும்.

பாராட்டப்பட்டவர்கள்

நக்கீரனில் கட்டுரை எழுதியதற்காக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால். கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவமனைக்குச் சென்ற நேரத்தில், தளபதி மு.க.ஸ்டாலின் தடுக்கப்பட்டபோது, நான் ஒரு நோயாளி என்கிற முறையில் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி, நினைத்த காரியத்தை முடித்தவரும், தி.மு.க. தலைவர் பொறுப்பு ஏற்ற பின், பெரியார் திடலுக்கு அதுவும் ஒரு போராட்ட உணர்வோடு கூடியிருக்கும் ஒரு கூட்டத்திற்கு முதலாவதாக வருகை தந்துள்ளவருமான தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்,

கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, நீதிமன்றத்திற்கு நான் ஒரு வக்கீல் குமாஸ்தா என்று கூறி, நீதிமன்றத்திற்குள் நுழைந்த தோழர் இரா.முத்தரசன் ஆகியோருக்குச் சால்வை போர்த்தி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் விடுதலை' ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்கள்.

ஒருவரைக் கைது செய்யவேண்டுமானால் அதற்குமுன் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வரையறுத்துக் கொடுத்ததையெல்லாம் சட்டை செய்யாமல் நக்கீரன் கோபால் வழக்கில், அவை காலில் போட்டு மிதிக்கப் பட்டுள்ளன.

புனேவுக்குச் செல்லுவதற்காக விமான நிலையம் சென்றிருந்த நிலையில், அங்கு வைத்துதான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

என்ன காரணத்துக்காகக் கைது - எந்தப் பிரிவின்கீழ் கைது என்பதெல்லாம் முறைப்படி கைது செய்யுமுன் சொல்லியாகவேண்டும். இதில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமற்ற நெருக்கடி நிலை நிலவுகிறதா?' என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை அர்த்தமிக்கதாகும்.

தமிழ்நாடு அரசோ, காவல்துறையோ தன்னிச்சையாக இந்தக் கைது நடக்கவில்லை. மாறாக ஆளுநர் மாளிகை யிலிருந்து வந்த புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நட வடிக்கையாம். ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் வந்து விட்டதாலேயே எந்தவித விதிமுறைகளும் கடைபிடிக்கத் தேவையில்லை என்பது எழுதப்பட்ட சட்டமா - எழுதப்படாத சட்டமா?

ஆளுநர் என்ற கோலுக்கு ஆட்டம் போடும் தமிழ்நாடு அரசு எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்தக் கைதினை மேற்கொண்டது?

அவசரக் கோலத்தில் ஆத்திரத் தொனியில் வாயு வேகத்தில் செயல்பட்ட அ.தி.மு.க. அரசு அய்.பி.சி.124 இன் கீழ் கைது செய்திருக்கிறது.

அய்.பி.சி.124 என்ற பிரிவு சற்றும் பொருத்தமற்றது என்று இன்று பல தளங்களிலும் விமர்சிக்கப்படுகிறது.

ஏன்? வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட்டே அதனை ஏற்றுக்கொள்ளாமல் நக்கீரன் கோபால் அவர்களை சிறைக்கு அனுப்பாமல் சொந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மாஜிஸ்ட்ரேட் நிலையில் உள்ள ஒரு நீதிபதி இந்த அளவுக்கு முதுகெலும்பு உள்ளவராக செயல்பட்டது என்பது அசாதாரணமானதுதான்.

ஆளுநர் தூண்டுதலால் அ.இ.அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் 84 ஆண்டு வரலாறு படைத்த மூத்த நாளேடான விடுதலை சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் - பாராட்டும்!!'' எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டத்திற்கு ஒரு நாள் இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று (11.10.2018) மாலை சென்னை பெரியார் திடலில் அக்கூட்டம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கெல்லாம் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றமும், மைதானமும் மக்களால் நிறைந்து காணப்பட்டது.

கூட்டத்திற்கு விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்தார். விடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

அவர் தன் வரவேற்புரையில் "இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழியவேண்டும்?'' எனும் தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் 1933 டிசம்பர் 29 ஆம் தேதியிட்ட குடிஅரசு' இதழில் எழுதினார். அதன்மீது பாய்ந்ததுதான் ராஜ துவேஷப் பிரிவான 124-அ (இப்பொழுது நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கின் பிரிவு 124).

வெள்ளைக்காரன் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறது என்பது ஆரோக்கியமானதுதானா?

அந்த வழக்கில் தந்தை பெரியார் வழக்கம்போல எதிர் வழக்காடவில்லை; மாறாக அறிக்கை ஒன்றினைக் கொடுத்தார்.

நான் ஏழெட்டு வருட காலமாக, சுயமரியாதைச் சமதர்மப் பிரச்சாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும், பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டும் என்பது அப்பிரச்சாரத்தின் முக்கிய தத்துவமாகும்.

இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும், அதற்காகப் பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவை இல்லாமல் பிரச்சாரம் செய்வதும் குற்றமாகாது.

இந்நிலையில், சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி அல்லது இந்தப் பிராதுக்குப் போதிய ஆதாரமில்லையென்று நியாயத்தையும், சட்டத்தையும் லட்சியம் செய்து வழக்கைத் தள்ளிவிட்டாலும் சரி, இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப்பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்!'' என்று இன்றைக்கு 84 ஆண்டுகளுக்குமுன் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.டபிள்யூ.வெல்ஸ் அய்.சி.எஸ். முன் தாக்கல் செய்தவர்  தந்தை பெரியார் என்ற வரலாற்றுத் தகவலைக் கூறிய விடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன், அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் இதுபோல பத்திரிகையாளர்களை அச்சுறுத்திய போக்கினை எடுத்துக் கூறினார். 2011-2016 கால கட்டத்தில் 213 வழக்குகள் ஏவப்பட்டதை எடுத்துக் கூறினார்.

முக்கிய தீர்மானம்: ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!

விடுதலை ஏட்டின் சார்பில் நேற்று (11.10.2018) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் - பாராட்டும்'' என்ற நிகழ்வில் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

"ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள பத்திரிகை சுதந்திரத்தைப் பறித்து, மக்களாட்சியின் குரல் வளையை நெரிக்கும் வகையில், நக்கீரன்' ஆசிரியர் கைது என்ற சூழ்ச்சி நிறைந்த வெள்ளோட்டம் நீதிமன்றத்தில் பெரு வீழ்ச்சியடைந்துள்ளது. கவர்னர் மாளிகை குறிப்பிட்டபடி இ.பி.கோ.124 இதற்கு எந்த வகையிலும் பொருந்தாது என்று நீதிமன்றம் ஏற்க மறுத்ததன் மூலம், இதற்கான முழுப் பொறுப்பை ஏற்க வேண்டியவரான கவர்னரை டில்லி திரும்ப அழைக்க வேண்டும் என்று இக் கூட்டம் ஒரு மனதாக மத்திய அரசை வற்புறுத்துகிறது.''

மேற்கண்ட தீர்மானத்தை திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்மொழிய, அதனை ஏற்கும் வகையில் அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

ப.திருமாவேலன்

கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் உரையாற்றுகையில், நக்கீரன் கோபால் அவர்களைப் பாராட்டுவது என்பது எங்களை நாங்களே பாராட்டிக் கொள்வதற்கு ஒப்பாகும். மக்களின் மனசாட்சியைப் பிரதிபலிக்கும் ஏடுதான் நக்கீரன்.

நக்கீரனில் ஒரு கட்டுரை வெளிவந்தது; அது தங்களைப் பாதிக்கக் கூடியது என்று ஆளுநர் கருதினால், முதலில் குறைந்தபட்சம் விளக்கம் கேட்கவேண்டாமா? அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டாமா? எடுத்த எடுப்பிலேயே கைது நடவடிக்கைதானா?

பி.ஜே.பி.யின் சித்தாந்தத்துக்கு எதிராக யார் எழுதினாலும் அவர்கள்மீது வழக்கு என்ற நிலை இன்று நாட்டில் பொதுவாக நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.

தோழர் அ.குமரேசன்

தீக்கதிர்' சார்பாக உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் தோழர் அ.குமரேசன் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது.

இந்தப் பிரச்சினையில் நக்கீரன் கோபால் அவர்களைப் பாராட்டுவதைவிட, முன்ஜாமீன் கொடுக்காமல் விடுதலையே செய்த மாஜிஸ்ட்ரேட் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகம் இல்லை. இது பத்திரிகையாளர்களுக்குக் கிடைத்த வெற்றியே!

தமிழ்நாட்டின் ஊடக வரலாறு எழுதப்படுமேயானால், நக்கீரன் கோபால் அவர்களின் பெயரைத் தவிர்த்துவிட்டு எழுதிட முடியாது என்றும் குறிப்பிட்டார் தோழர் அ.குமரேசன்.

பத்திரிகை சுதந்திரம் என்ற வரிசையில் உலக அளவில் 138 ஆம் இடத்தில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்ற தகவலையும் தோழர் அ.குமரேசன் சரியாகவே குறிப்பிட்டார்.

இந்து என்.ராம்

இந்து' என்.ராம் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

நக்கீரன்' கோபால் கைது என்பது சட்டப்படி தவறானது - முட்டாள்தனமானது - மூர்க்கத்தனமானது என்று குறிப்பிட்ட என்.ராம் அவர்கள், ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார் என்றவுடன் கட்சி, அரசியல் என்பவற்றையெல்லாம் கடந்து அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்த பாங்கு வரவேற்கத்தக்கதாகும்.

ஒரு குறுகிய காலகட்டத்தில் இப்படியொரு கூட்டத்தை ஆசிரியர் வீரமணி அவர்கள் ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் - பாராட்டத்தக்கதுமாகும்.

நக்கீரன் கோபால் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, நானும் அந்த நீதிமன்றத்திற்குச் சென்றேன். சற்றும் எதிர்பாராமல் நீதிபதி என் கருத்துகளையும் கேட்டபொழுது, இந்தப் பிரிவின்கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு இருப்பது சற்றும் பொருத்தமானதல்ல. ஆளுநர் பணிகளை கோபால் எங்கே தடுத்தார்? எப்படி தடுத்தார்? என்பதற்கு நியாயமான ஆதாரங்கள் இருக்கின்றனவா? இந்தப் பிரிவின்கீழ் தண்டனை அளிக்கப்பட்டால் கருத்துரிமைக்கு எதிரான அபாயகரமான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்று கூறினேன்'' என்று இந்து ராம் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்த வழக்கின்மூலம் ஆளுநர் தேவையில்லாமல் சர்ச்சைக்கு இழுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இந்து ராம் குறிப்பிட்டார். உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்த முடியாத ஒரு பலகீனமான மாநில அரசு இந்தக் காரியத்தை ஏன் செய்யவேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினார் அவர்.

கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ.,

மணிச்சுடர்' ஏட்டின் சார்பாக பேசிய, இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் மாநில செயலாளரும் - சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.எம்.அபுபக்கர் தன் உரையில் சட்ட விரோதமாக நடைபெற்றுள்ள காரியங்களுக்குக் காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டிய காலம் வரும், தி.மு.க. ஆட்சி அமையும் காலகட்டத்தில் அது நடைபெறும் என்றும் எச்சரித்தார். ஆளுநர் தமக்கென்று உள்ள பணிகளைச் செய்யாமல் இதுபோன்ற காரியங்களில் ஏன் இறங்கவேண்டும் என்ற வினாவையும் அவர் எழுப்பினார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா

மக்கள் உரிமை' இதழின் ஆசிரியரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எச்.ஜவாஹிருல்லா நக்கீரன் கோபால் வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புப் புத்துணர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தவர்கள்மீது ஏன் வழக்குத் தொடுக்கக் கூடாது என்ற வினாவையும் பேராசிரியர் எழுப்பினார். கோபால் அவர்கள் தன் புலனாய்வை மேலும் தொடரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தோழர் இரா.முத்தரசன்

ஜனசக்தி' ஏட்டின் சார்பில் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:

நக்கீரன்' கோபால் கைதுக்கு என்ன காரணம் என்று சொல்லும்போது மாநில அமைச்சர் கூறும் பதில் என்ன தெரியுமா? ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். ஆளுநர்தான் நாட்டை ஆள்கிறாரா?

நக்கீரன்' கோபால் ஓர் உதவியை முக்கியமாக செய்துள்ளார். பேராசிரியர் நிர்மலா தேவியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் விசித்திரமான சில காரியங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அதுதான் பூணூல் போட்டவர்களுக்கு ஒரு நீதி - பூணூல் போடாதவர்களுக்கு வேறொரு நீதி என்னும் நிலையாகும். இந்த நிலை நீடித்தால் சட்டத்தின்மீதும், ஆட்சியின்மீதும் எப்படி நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட முடியும் என்ற நியாயமான வினாவைத் தொடுத்தார்.

தமிழ்நாட்டில் துண்டறிக்கைகளை விநியோகம் செய்யக்கூடஉரிமை இல்லை என்பது வெட்கக்கேடானதாகும். இது ஒரு பாசிசப் போக்காகும் என்றார்.

'நக்கீரன்' கோபால் ஏற்புரை

பாராட்டுப் பெற்ற நக்கீரன் கோபால் அவர்கள் தனது ஏற்புரையில் கூறியதாவது: இதே பெரியார் திடலில் ஏற்கெனவே எனக்குப் பாராட்டு கிடைத்தது. இராமானுஜ தத்தாச்சாரியாரிடம் நக்கீரன்' பேட்டி கண்டு, அதனை ஒரு நூலாக வெளியிட்டதற்காக சீறிரங்கத்தில் ஒரு பாராட்டு விழாவைத் திராவிடர் கழகம் நடத்தியது. மூன்றாவதாக இன்று ஒரு பாராட்டினை ஆசிரியர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். என்னிடம் தொலைப்பேசியில் பேசினார் ஆசிரியர். நாளை மறுநாள் பெரியார் திடலில் கூட்டம் ஏற்பாடு - நீங்கள் வருகிறீர்கள் - அவ்வளவுதான் என்று கூறி, நான் பேசுவதற்குக்கூட வாய்ப்பைக் கொடுக்கவில்லை என்ற கூறினார் நக்கீரன் கோபால்.

124 - பிரிவின்கீழ் என்னை கைது செய்தார்கள். நீதிமன்றம் சென்றதற்குப் பிறகுதான் எந்தப் பிரிவின்கீழ் நான் கைது செய்யப்பட்டேன் என்ற விவரமே தெரிய வந்தது.

124 - செக்சன் போட்டிருக்கிறார்கள் - அதன்படி ஆளுநரைப் பணி செய்யவிடாமல் நான் தடுத்திருக்கவேண்டும் - அவ்வாறு நான் தடுத்ததாக ஏதாவது ஆதாரம் உண்டா?

ஆளுநர் சென்னாரெட்டி திண்டிவனம் அருகே பயணித்தபோது அ.தி.மு.க.வினர் மறியல் செய்யவில்லையா? அவர் பயணத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லையா? நியாயமாக அப்பொழுதுதானே இந்த 124 பாய வேண்டும்.

எனக்கு நீதிமன்றத்தில் விடுதலை' கிடைத்தது என்றால், அதற்குக் காரணம் மக்களின் எழுச்சி, பத்தரிகையாளர்களின் ஆதரவு, இங்கு மேடையில் அமர்ந்துள்ள தலைவர்களின் பங்களிப்புதான் என்றும் குறிப்பிட்டார்; நக்கீரன்' பணி வழக்கம்போல தொடரும் என்றார்.

தமிழர் தலைவர் 'விடுதலை' ஆசிரியர்

விடுதலை' ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:

இன்றைக்கு ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அளித்த புகாரின் பெயரில் கைது நடவடிக்கை என்கிறார்கள். நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியா - ஆளுநர் ஆட்சியா?

அய்.பி.சி. 124 என்ன கூறுகிறது? ஆளுநர், குடியரசுத் தலைவர்களின் பணிகளை -  அவர்களை செய்யாமல் தடுக்கப்படுவது, இந்தப் பிரிவின்படி  -அந்த வகையில், நக்கீரன்' கோபால் குற்றம் செய்திருக்கிறாரா?

தடுப்பது மட்டுமல்ல - அப்படி தடுப்பதிலும் ஓர் உள்நோக்கமும் இருக்கவேண்டும். அவ்வாறு சகோதரர் கோபால் விஷயத்தில் நடந்திருக்கிறதா?

நாட்டில் கருத்துரிமைக்கு இடம் கிடையாதா? அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையா நாட்டில் நடந்து கொண்டுள்ளது?

மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் தந்தை பெரியார், கடைசியில் என்ன கூறி முடிப்பார் தெரியுமா?

நான் எனக்குப் பட்ட கருத்துகளைக் கூறியிருக்கிறேன். அவற்றைத் தள்ளுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதால், எனக்குச் சொல்லுவதற்கும் உரிமை உண்டு என்றும் கூறுவார்.

அத்தகு நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் யாரையும் காப்பாற்றுவதற்கல்ல - கருத்துரிமையை, ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காகவே கூட்டப் பெற்றது என்றார்.

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

நிகழ்ச்சியில் இறுதியாக முரசொலி சார்பில் உரையாற்றிய தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்,

தமிழ்நாட்டின் எந்த உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும், முதல் குரலைக் கொடுப்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் என்று குறிப்பிட்ட தி.மு.க. தலைவர், தமிழ்நாட்டின் ஆளுநர் பதவி விலகும்வரை நமது போராட்டம் தொடரும் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். (முழு உரை 8 ஆம் பக்கம் காண்க).

பங்கேற்றோர்

இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, திமுக வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, மேனாள் அமைச்சர் க.பொன்முடி, கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் அமிர்தம், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்,  மு.பெ.பாலசுப்பிரமணியன்,  பூச்சிமுருகன், வழக்குரைஞர் கிரிராஜன், துறைமுகம் காஜா, திண்டிவனம் சிறீராமுலு, ஊடகவியலாளர்கள், கருத்துரிமை செயற்பாட்டாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner