எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீதிமன்றத்தில் "ஆரியத்தின் அம்பாக" செயல்பட்டு  பழியை ஏற்றது அதிமுக அரசு

நாட்டில் நடந்தது - நடப்பது ஆரிய - திராவிடர் போராட்டமே!

பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்வீர் அருமைத் தோழர்களே!

மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தின் அருகே கலைஞர் அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு என்பதன் பின்னணியில் இருப்பது ஆரியமே! 'ஆரியத்தின்' அம்பாகவே செயல்பட்டது அதிமுக அரசு; நடப்பது ஆரிய, திராவிடர் போராட்டமே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

'மானமிகு சுயமரியாதைக்காரன்' என்பதைப் பெருமைபடச் சொன்ன ஈரோட்டுக் குருகுல மாணவரும், தி.மு.க.வின் 50ஆண்டு கால ஒருமித்த தலைவரும், அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருமான திராவிட இனத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம், சென்னை மெரினா கடற்கரையில் பகுத்தறிவுக் குடும்பத்தின் பார் போற்றிய தலைவர் தந்தை பெரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் அண்ணாவின் நினைவிடம் அருகே கலைஞரின் மரணத்திற்குப்பின் அடக்கம் செய்யப்பட்டது - நேற்று. பல லட்சணக்கான மக்கள், பல முக்கிய அனைத்திந்திய தலைவர்கள் காஷ்மீர், மே. வங்காளம், டில்லி, உ.பி., மற்றும் தென்னக மாநிலத் தலைவர்களின் வீர வணக்கத்துடன், அரசுமரியாதையுடன் (ராணுவ மரியாதையுடன்), புதைக்கப்பட்டது - இல்லை இல்லை விதைக்கப்பட்டது!

இடஒதுக்கீட்டுக்குப் போராடியவர் தனது இடஒதுக்கீட்டிலும் வென்றார்

வாழ் நாள் முழுதும் இடஒதுக்கீட்டுக்குப் போராடி, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கும், பெண்களுக்கும், இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த அந்த மகத்தான தலைவர் விரும்பிய இடஒதுக்கீடு கிடைத்தது. அவரை அடக்கம் செய்வதற்கு 14 மணி நேர சட்டப் போராட்டம் - நீதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வாதாடிப் பெற்ற நல்ல தீர்ப்பு - வரலாற்றில் என்றென்றும் மறக்கப்படவே முடியாத போராட்டம் ஆகும்.

முயற்சி எடுத்தவர்களுக்குப் பாராட்டு

இதற்கு முயற்சி எடுக்க வைத்த தி.மு.க. செயல் தலைவர், சகோதரர் தளபதி மு.க. ஸ்டாலின், திமுகவின் சட்டத்துறை வழக்குரைஞர், கலைஞரால் 'வின்' 'சன்' என்று பாராட்டப்பட்ட மூத்த வழக்குரைஞர் வில்சன், சண்முகசுந்தரம் போன்ற வழக்குரைஞர்கள், வழக்கினை தொடுத்த திமுக அமைப்புச் செயலாளர் நண்பர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. உள்ளிட்ட அனைவரும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள் ஆவார்கள்!

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நியாயத் தராசை 'ஓர்ந்து கண்ணோடாமல்' தேர்ந்து பிடித்து, தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட  பொய்யான வாதங்களைப் புறந்தள்ளி - உண்மையின் - நேர்மையின் பக்கம் நின்று, அவசர வழக்கில் உரிய நேரத்தில் நல்லதீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு. குலுவாடி ரமேஷ், ஜஸ்டீஸ் திரு. எஸ்.எஸ்.சுந்தர் ஆகிய இருவர் கொண்ட அமர்வுக்கு உலகெங்கும் வாழும் பல கோடி நன்றியுள்ள மக்கள் மகிழ்ந்து, வரவேற்றுப் பாரட்டுகின்றனர்.

அய்ந்தே மணி நேரத்தில் அசாதாரண செயல்பாடுகள்!

தீர்ப்பு கிடைத்த பிறகு இடையில் அய்ந்தே மணிநேர இடைவெளியில் பணிகளை ஒருங்கிணைத்த அருமை சகோதரர்கள் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அய். பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எ.வ. வேலு, திருச்சி கே.என். நேரு, தியாகராயநகர் ஜெ. அன்பழகன் மற்றும் திமுக செயல் வீரர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

தமிழக அரசின் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்,   பொதுப் பணித்துறைப் பொறியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பானது. 5 மணி நேரத்தில் அற்புத வரலாற்றுச் சாதனை நிகழ்ந்து, கலைஞர் தம் பெரு விருப்பம், செயலாக மலர்ந்தது; வரலாறாக உயர்ந்து நின்ற இந்தக் காட்சிக்கு அனைத்திந்திய தலைவர்களே சாட்சிகளாக வந்து அமர்ந்து, முப்படையினரும் சூழ  அண்ணா நினைவிடம் அருகே கலைஞரின் நினைவிடம் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கான  அடிகோல் நடைபெற்றது.

வெறும் நினைவிடமல்ல -  விதைப் பண்ணை!

அங்கே  உருவாக இருப்பது வெறும்  நினைவிடம் மட்டுமல்ல, உண்மையில் விதைப்பண்ணை, ஆம் வீரிய திராவிட விதைப் பண்ணை என்பதை வருங்கால வரலாறு வையகத்துக்கு உணர்த்தும்.

இதில் குறிப்பட வேண்டிய உண்மை எது தெரியுமா?

புறத்தோற்றத்தில் நேற்று நடைபெற்றது சட்டப் போராட்டம் தமிழக அரசுக்கும், திமுகவுக்கும்!

அகத் தோற்றத்தில், அடி நீரோட்டம் என்ன தெரியுமா?

இது ஒரு ஆரிய - திராவிடப் போராட்டம்!

பழைய "தேவ - அசுரப் போராட்டத்தின்" - 'புதிய வடிவம்!'

ஆரியத்தின் அம்புகள்

ஆரியம் எய்திட்ட அம்புகளாகி, பரிதாபத்திற்குரிய, அவமானத்தை சுமந்து அழிக்க முடியாத கறையை தனது அரசின்மீது ஏற்றிக் கொண்டது இன்றைய அதிமுக அரசு!

உண்மையில் இந்தப் போரை நடத்தியது ஆரியப் பாதுகாப்பாளரான ஆர்.எஸ்.எஸ். - குருமூர்த்திகள் வடிவில், கிரிஜாக்களும், வைத்தியநாதன்களும்தான்; போலி வாதங்களை எடுத்து வைத்துத் தோற்றுப் போனது ஆரியம்!

'பேச நா இரண்டுடையாய் போற்றி' என்று அண்ணா தனது 'ஆரியமாயை'யில் குறிப்பிட்டாரே - அது காலத்தை வென்ற உண்மையின் ஒளி வீச்சு என்பதைப் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு கண் மூடிகளுக்கு!

காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரிப்பு நாடகத்தை நடத்திய குருமூர்த்திகள், கலைஞரை புகழ்ந்துப்பேசி,  அதை வெளி உலகத்திற்கு காட்டி - ஓரிரு நாள்களில் கலைஞர் விருப்பத்தை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்டு, அமைச்சரவை அம்புகளை ஏவ விட்ட இரட்டை நாக்கு, இரட்டை  வேடம் கலைந்து விட்டது.

பழியை ஏற்ற அதிமுக அரசு

அரசியல்  நாகரிகம், மனிதநேயம், அண்ணா கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் பண்புகளை எள்ளளவும் உணர்ந்ததாக  இல்லை அவர் பெயரில் ஆட்சியை நடத்தும் எடப்பாடி அரசு.  கலைஞரின் குடும்பத்தினர், முக்கிய உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற கட்சி பொறுப்பாளர்களும் நேரில் சென்று  பார்த்து, வேண்டுகோள் மனு கொடுத்தும், பண்பில், நயத்தக்க நாகரிகத்தில் உயர வேண்டிய அரிய வாய்ப்பை ஆரியத்தின் அம்பாகியதால், இழந்து வரலாற்றில் பழியை அதிமுக அரசு வாங்கிக் கட்டிக் கொண்டது; தேவையா?

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிகார ஆணவத்தின் முதுகெலும்பை முறித்தது!

வாழ்நாள் முழுவதும் எதிர் நீச்சலில் வென்ற நம் இனமானத் தலைவர் கலைஞர் மறைந்தும் மறையாமல் வென்றார்!

மூக்குடைப்பட்டார்கள்

இதுவரை பெரியாரையே மறந்தவர்கள், பெரியாரைப் பயன்படுத்தி நீதிமன்றத்தை திசைத் திருப்பி, வைத்திகள் மூலம் வாதாடி வெற்றி பெற கனவு கண்டு மூக்குடைபட்டார்கள்!

ராஜாஜி, காமராசர்களையெல்லாம் தேடி, பொய்யான வாதங்களை எடுத்து வைத்தும், நீதிபதிகள் சலித்துப் பார்த்து உண்மையை அறிந்தனர்!

என்றாலும் வேறு மறைமுகமான வகையில்   வழக் கினையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு பார்ப்பனரை ஏவி விட்டு உச்சநீதிமன்றத்திற்குச் சென்று ஆரியம் தூண்டி அதிலும் தோற்றது!

ஆம் தேவாசுரப் போராட்டம்தான்!

தேவ - அசுர, 'பிராமண' - சூத்திர, ஆரிய - திராவிடப் போராட்டத்தின் புதிய வடிவம்!

அவர்கள் திருந்தி விட்டார்கள் என்று பேசும் அரைவேக்காட்டு அறிவாளிகள் - நம் இனத்து பெருந்தன்மைப் பூச்சுவாசிகள் - பாடம் பெற வேண்டியவர் ஆவார்கள். இது பெரியார் பூமிதான்!

இங்கே ஆரிய சரக்கு - சூழ்ச்சி வெல்லாது!

தோற்கும் என்பதை 'திராவிடச் சூரியன்' தனது கதிர்களை அகலமாக்கிக் காட்டியுள்ளது!

ஆரியக் காரிருளை விரட்டியுள்ளது!

என்றும் திராவிடம் வீழாது வெல்லும் வெல்லும்!

வாழ்க எதிர் நீச்சல் வீரர் கலைஞர்!

 

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

9.8.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner