எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்ச, உயர்நீதிமன்றங்களிலும் தேவை இடஒதுக்கீடு!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய பிற்படுத்தப் பட்டோர் நலக் கமிஷனுக்கு அரசமைப்புச் சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கும் சட்டத் திருத்தம் வரவேற்கத் தக்கது; - இதில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு அவசியம்.

சமூகநீதியில் மேலும் பெற வேண்டிய உரிமைகளுக்காக, அகில இந்திய அளவில் சமூக நீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் உரிய வகையில் செயல்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷன்  பி.பி. மண்டல் அவர்கள் தலைமையில் 1978இல் அமைக்கப்பட்டது - அன்றைய "ஜனதா" அரசினால். (20.12.1978 - மொரார்ஜி தேசாய் அரசினால்)

அதன் பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை மீண்டும் பிரதமரான திருமதி இந்திராகாந்தியிடம் 12.12.1980இல் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340ஆவது விதியின்படி காகாகலேல்கர் என்ற மராத்திப் பார்ப்பனர் தலைமையில் 29.1.1953இல் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை 30.3.1955 அன்று பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டது.

ஜாதியை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு கொடுப்பதே சரியானது என்ற அறிக்கையின் பரிந்துரையில் உறுப்பினர்களோடு ஒத்துக் கையெழுத்திட்ட அதன் தலைவர் காகாகலேல்கர், தனியே பிரதமர் நேருக்கு ஒரு கடிதம் எழுதி, எனது கருத்து அதுவல்ல; உறுப்பினர்களைத் திருப்தி செய்யவே கையொப்பமிட்டேன்; அரசு ஏற்க வேண்டியதில்லை என்று இரட்டை வேடம் போட்டார்.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதை

'நண்டைச் சுட்டு நரியைக் காவல்' வைத்ததின் விளைவு இது! அவ்வறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதம் நடத்தாமலேயே நாடாளுமன்ற நூலக அலமாரியின் தூசியுடன் கலந்தது

இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் (மண்டல்) கமிஷனுக்கு அந்நிலை ஏற்படாமல் பரிந்துரைகளை மத்திய அரசினை செயல்படுத்த  வைக்கும் ஆற்றல் - முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை இடஒதுக்கீட்டுக்காக 1951இல் கொண்டு வந்து நிறைவேற்ற வைத்த தந்தை பெரியார் பூமிக்கே - தமிழ்நாட்டிற்கே உண்டு என்று சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகம் அளித்த வரவேற்பை ஏற்று பதிலுரைத்த பி.பி. மண்டலும் அதன் முக்கிய உறுப்பினர்களும், ஜஸ்டீஸ் ஆர்.பி. போலே; கே. சுப்ரமணியம் போன்றவர்களும் குறிப்பிட்டனர் (30.6.1979).

திராவிடர் கழகம் நடத்திய

மாநாடுகள் - போராட்டங்கள்

அனைத்திந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தரப்படாத நிலையில், மத்திய அரசின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளில் இடஒதுக்கீடு தருவதற்கான பரிந்துரைகளை செயல்படுத்த முன்வந்த வடநாட்டு சமூகநீதித் தலைவர்கள் சவுத்திரி பிரம் பிரகாஷ், சந்திர ஜித்யாதவ், டி.பி. யாதவ், ராம் விலாஸ் பஸ்வான், கர்ப்பூரிதாக்கூர் போன்ற தலைவர்களை ஒருங்கிணைத்து, இந்தியாவின் பல மாநிலங்களிலும்,  தலைநகர் டில்லியிலும் திராவிடர் கழகம் 44 மாநாடுகள் 16 போராட்டங்களையும் (தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களையும் இணைத்து) நடத்தியது.  சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமரான போது மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் ஒன்றான கல்வி, வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை பிறப்பித்தார். (7.8.1990)

அதன் காரணமாக அவ்வாட்சிக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தந்த ஆதரவினை விலக்கி, அவரது ஆட்சியை பத்து மாதங்கள்கூட நிறையாத நிலையில் - கவிழ்த்தனர்.

தொடர்ந்து போராடியதன் விளைவாக மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்கள் மத்தியில் இந்திய அரசினால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனும் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

பல் இல்லாத ஓர் ஆணையம்!

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் ஓர் அரசியல் சட்டத் தகுதி பெற்ற (Constitutional Status) கமிஷனாக இல்லாததால் அது தனியே நடவடிக்கைகளை மேற் கொள்ள எடுக்க இயலாத 'பல் இல்லாத ஆணையமாக'  ஏதோ அது இயங்கி வந்தது!

இதனால் திராவிடர் கழகமும், திமுக மற்றும் பல்வேறு சமூக நீதிப் போராளிகளும், எப்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 338ஆவது பிரிவு தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷன்   (National Commission for Scheduled caste commission) தேசிய மலைவாழ் மக்கள் கமிஷன் (National Commission for Scheduled tribes) என்று அமைத்து அந்த மக்களுக்கு ஏற்படும் இடர்கள், தொல்லைகளை நீக்கி, விசாரணை நடத்தி நியாயம் வழங்கும் அதிகாரங்களுடன் இருக்க பிரிவு 338கி என்று உருவாக்கினார்களோ (2003இல் நிறைவேற்றிய அரசமைப்புச் சட்டம் 89ஆவது திருத்தப்படி) அதே போல, மக்கள் தொகையில் சுமார் 60 விழுக்காட்டிற்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோர் தேசிய கமிஷனுக்கும் அதே அரசமைப்புச் சட்டம் சட்டத் தகுதியை வழங்கி "பல் உள்ள ஆணையமாக்கிட வேண்டும்" என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

புதிய சட்டம் நிறைவேற்றம்

பல நாடாளுமன்றக் குழுக்கள் பிற்படுத்தப்பட்டோர் நலப்பாதுகாப்பு அமைப்புகளும் (ளிஙிசி) தொடர்ந்து எடுத்து வைத்தோம்; முற்போக்கான பல கட்சிகளும் இயக்கங்களும், எம்.பி.க்களும் ஆதரித்தனர்.

என்றாலும் தள்ளிக் கொண்டே வந்தது, பிரதமர் மோடி தலைமையிலான இவ்வரசில் இந்தக் கோரிக்கையைச் செயல்படுத்திடுவதன் மூலம் (சரிந்துவரும் செல்வாக்கை சரிக்கட்டவும் எண்ணம் - உள்நோக்கு இருந்தாலும்கூட) முதலில் மக்கள் அவையிலும் நேற்று மாநிலங்களவையிலும் எதிர்ப்பே இன்றி நிறைவேறியுள்ளது.

15.5.2017 அன்று  பூபேந்திர யாதவ் தலைமையில் நடந்த நாடாளுமன்ற தெரிவுக் குழு முன் (ஷிமீறீமீநீt சிஷீனீனீவீttமீமீ) புதுடில்லி நாடாளுமன்ற வளாகத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் என்ற முறையில் கருத்துக்கூற  மத்திய அரசால் அழைக்கப்பட்டு, சுமார் 40 நிமிடங்கள் விளக்கமாக எடுத்துரைத்த கருத்துகளில் பலவும் இந்த மசோதாவில் திருத்தமாகி நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்க்கட்சியினர் கூறிய கருத்துக்கள்

எதிர்க்கட்சியினர் கூறிய கருத்துக்களை பெண் உறுப்பினர்கள் அதில் நியமனம் பெற வேண்டும் என்பதும் மாநில பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்பதும் ஏற்கப்பட்டுள்ளது கொள்கை அளவில்.

மிகப் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பார்லிமென்டரி கமிஷன் ஏற்படுத்தியது முதல் கட்ட வெற்றியே! (காங்கிரசு அரசால்) இப்பொழுது அடுத்த கட்டம்; அதற்கென அதிகாரங்கள் தரப்படாத சட்டக் குறைபாடு இந்த சட்டத் திருத்தம் - அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளதால், அரசமைப்புச் சட்ட திருத்தம் - தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு மற்ற இரண்டு ஆணையங்கள்போல்  (SC, ST தேசிய ஆணையங்கள்) அதிகாரம் உரிமைகள்  பெற்ற, பிற்படுத்தப்பட்டோர்களின் உரிமைகள் நலவாழ்வு பாதுகாக்கப்பட, ஆங்காங்கு ஏற்படும்  குறைபாடுகளை நீக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

"மக்கள் கருத்து முன்னே செல்ல, சட்டம் நொண்டி அடித்துக் கொண்டுதானே பின்னால் வரும்" என்ற ஆங்கிலப் பழமொழிக்கொப்ப, சமூக நீதிக்கான கருத்தோட்டம், பிரச்சாரம்  இரண்டும் மேலோங்கினால் இதுவரை மறுக்கப்பட்ட சமூகநீதி இனி கிடைக்க இந்த ஏற்பாடு உதவும் - உதவ வேண்டும் என்று நம்புகிறோம். இது பா.ஜ.க.வின் உத்தியே. கொள்கை அல்ல. என்றாலும் வரவேற்பு!

நீதித்துறையிலும் தேவை இடஒதுக்கீடு

நீதித்துறையில், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்ற நீதிபதி பணி நியமனங்களில் ஒடுக்கப்பட்டோர் - தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் தரப்படல் வேண்டும்.

இனி அகில இந்திய அளவில் அனைவரையும் ஒருங்கிணைத்து, திராவிடர் கழகம் அந்த முயற்சிகளை மேற்கொள்ளும்.

இந்த சட்டம் நிறைவேற்றுவதற்குக் காரணமாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், எம்.பி.க்களுக்கும் நமது பாராட்டுகள்!

பெற்றது கை மண்ணளவே

- பெற வேண்டியது உலகளவு

சமூகநீதிப் பயணத்தில் பெற்றது கைம்மண் அளவு  - பெறாதது, பெற வேண்டியது உலக அளவு!

எனவே வாதாடுவதும், போராடுவதும் அவசியம் தொடர வேண்டும். இது அவசரம்.

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

7.8.2018

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner