எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நமது சிறப்புச் செய்தியாளர்


பாவூர்சத்திரம், ஆக.5 தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்திற்காக கோவில்களில் இழிவுபடுத்தப்பட்ட குடி யரசுத் தலைவர் மான மீட்புக்காகப் போராடுவதும், திராவிடர் கழகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள்.

குற்றாலத்தையடுத்த பாவூர் சத்திரத்தில் நேற்று (4.8.2018) மாலை நடைபெற்ற தந்தை பெரியார் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.

1968 ஆம் ஆண்டில் இதே பாவூர்சத்திரத்தில் தந்தை பெரியார் பேசியிருக்கிறார். இந்த ஊரில், பெரியார் தேநீர் நிலையம் நீண்ட காலமாக நடந்து வந்தது. தோழர் செல்லதுரை அதனை நடத்தி வந்தார்.

ஆண்டு முழுவதும்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியார் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் இது;. அடுத்த மாதம் செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள். ஆண்டு முழுவதும் தந்தை பெரியாருக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது என்பது பிரச்சார நோக்கத்தின் அடிப்படையில்தான்.

தந்தை பெரியார் அவர்களே இத்தகைய பிறந்த நாள் விழாக்களில் பங்கு கொண்டுள்ளார்கள். பிறக்காத கடவு ளுக்கே பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் பொழுது உண் மையிலேயே பிறந்தவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண் டாடுவதில் என்ன தவறு என்று கேட்டார்.

இந்தியாவுக்கே

தேவைப்படுகிறார் பெரியார்

தந்தை பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியா வுக்கே தேவைப்படுகிறார். இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர்தான்; முப்படைகளுக்கும் அவர்தான் தலைவர். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரைக் குடியரசுத் தலைவராக ஆக்கியுள்ளோம் என்று பி.ஜே.பி. பெருமையாகப் பேசலாம்.

ஆனால், அர்த்தமுள்ள இந்து மதம் என்று பெருமையாகப் பேசுகிறார்களே, அந்த இந்து மதத்தில் அவர் எப்படியெல்லாம் அவமதிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர்

அவமானப்படுத்தப்பட்டார்

ராஜஸ்தானில் உள்ள பிரம்மா கோவிலுக்கு குடியரசுத் தலைவர் தம் குடும்பத்தோடு வழிபடச் சென்றுள்ளார். அங்கு என்ன நடந்தது? கோவிலுக்குள் செல்ல அவர் அனுமதிக் கப்படவில்லையே! வேறு வழியின்றி  படிக்கட்டுகளில் அமர்ந்து பூஜை செய்து திரும்பியுள்ளாரே! அதோடு நிற்க வில்லை. ஒரிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவிலிலும் இதே அவமானம் குடியரசுத் தலைவருக்கு - இந்தியாவின் முதல் குடிமகனுக்கு நிகழ்ந்துள்ளதே!

இந்திய சுதந்திரத்தின் இலட்சணம்!

இதுதான் இந்திய சுதந்திரத்தின் இலட்சணமா? குடியரசுத் தலைவர் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக அவமதிக் கப்பட்டுள்ள நிலையில், அதனைக் கண்டித்தது திராவிடர் கழகம்தானே!

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும் அது குற்றமே என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 17 ஆவது பிரிவு கூறுகிறதே - அந்தச் சட்டம் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்ட விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள்மீது ஏன் பாயவில்லை?

பெண் அதிகாரி தாழ்த்தப்பட்டவர் என்பதால் தண்ணீர் கொடுக்க மறுப்பு

நேற்றைய மாலை மலரில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆளும் அந்த மாநிலத்தில் நடைபெற்ற வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

கால்நடை வளர்ச்சித் துறையைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி ஒரு கிராமத் திற்கு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கூட்டத்தில் பங்கு கொள்ளச் சென்றுள்ளார். அவர் நீரிழிவு நோயாளி; தாகம் எடுத்தது; குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டார். என்ன கொடுமை யென்றால், அந்தப் பெண் அதிகாரி தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்தவர் என்பதால், தண்ணீர் தர மறுத்துவிட்டனர்! இரண்டரை மணிநேரம் தாகத்தோடு பரிதவித்திருக்கிறார். நீரிழிவு நோயாளியான அந்தப் பெண் அதிகாரி உடல் நடுக்கமுற்ற நிலையில் அங்கிருந்து சென்று வேறு இடத்தில் தண்ணீர்க் குடித்துள்ளார். தாகத்திலும்கூட ஜாதியா? இதுதான் இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதமா?

மாவட்ட ஆட்சியரிடம் அந்தத் தாழ்த்தப்பட்ட பெண் அதிகாரி புகார் செய்ய, அவர் மாவட்டக் காவல்துறை அதிகாரியிடம் அந்தப் புகாரை அனுப்பினார் என்பது செய்தி.

ஒரு பக்கம் குடியரசுத் தலைவர், இன்னொரு பக்கம் ஒரு பெண் அதிகாரி.

தமிழ்நாட்டில் இதுபோல் நடக்குமா?

புத்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு

புத்தர் வாழ்க்கை வரலாற்றில் இதுபோல் ஒரு நிகழ்வு. தண்ணீர்த் தாகத்தோடு புத்தர் சென்றபோது, எதிரே ஒரு பெண் தண்ணீர்க் குடத்தைத் தலையில் சுமந்து வந்தார்.

அந்தப் பெண்ணைப் பார்த்துத் தண்ணீர் கேட்டார் புத்தர். அந்தப் பெண் என்ன சொன்னார் தெரியுமா?

நான் தண்ணீர் கொடுக்கத் தயார்தான்; ஆனால், நான் தாழ்ந்த ஜாதி - நீங்களோ அரச குமாரர், உயர்ந்த ஜாதி. ஒரு கீழ்ஜாதிப் பெண் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கக்கூடாது என்றார்.

அப்பொழுது புத்தர் சொன்னார், நான் உன்னிடம் தண் ணீர் தானே கேட்டேன். உன் ஜாதி என்ன என்றா கேட்டேன் என்று கேட்டார் என்பது புத்தர் வரலாற்றில் ஒரு நிகழ்வு.

இந்த ஜாதிக் கொடுமையை எதிர்த்துத்தானே தந்தை பெரியார் தம் மனைவியுடன் வைக்கம் சென்று போராடினார். தந்தை பெரியாரிடம் அடி வாங்கிய அந்த ஜாதிப் பாம்பு, இன்று கோவில் கருவறையில் பாதுகாப்பாகப் படம் எடுத்து ஆடுகிறது.

கோவில் கட்டியவன் தமிழன் - மணி அடிக்கப் பார்ப்பானா?

கோவில் கட்டியவன் தமிழன், மணி அடிக்கப் பார்ப்பானா? அந்தக் கோவிலைக் கட்ட ஒரு பார்ப்பான் ஒரு செங்கல்லை யாவது எடுத்துக் கொடுத்திருப்பானா? அவன் உழைப்பு அதில் எங்கே இருக்கிறது?

கோவிலை எல்லாம் கட்டி முடித்து, கருவறையில் கடவுள் சிலையையும் வடித்துக் கொடுத்துவிட்டு, எல்லாம் முடிந்த பிறகு, கும்பாபிஷேகம் நடத்திய பிறகு, கோவில் கட்டிய தமிழனை எல்லாம் வெளியில் நிறுத்திவிட்டானே!

சாமி சிலையைச் செதுக்கிய தமிழன், கோவிலைக் கட்டி முடித்த தமிழன், அந்தக் கோவில் கருவறைக்குள் சென்றால், அங்குள்ள சாமி சிலையைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும், தோஷம் வந்துவிடும் என்கிறானே அதனைக் கேட்டுக் கொண்டும் தமிழன் சொரணையற்றுக் கிடக்கின்றானே!
சூத்திரன் என்பது ராவ் பகதூர் பட்டமா?

எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா - இல்லையா என்பது வேறு பிரச்சினை. என் அண்ணன், என் மாமன், மச்சான் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்து, அவன் கருவறையில் நுழையக் கூடாது, அர்ச்சகனாகக் கூடாது - அவன் சூத்திரன் என்றால், நானும் சூத்திரன்தானே! சூத்திரன் என்றால், ராவ் பகதூர் பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
இந்த சூத்திர இழிவை ஒழிப்பதுதான் - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் போர்க்குரல் - திராவிடர் கழகத்தின் தொடர் போராட்டங்கள்.

திராவிடர் கழகம் எதற்காக?

இழிவுபடுத்தப்படும் மக்களின் சுயமரியாதையைக்  காப்பதே திராவிடர் கழகம்.

ஜாதி என்பதற்கு என்ன அடையாளம்? ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், முதலியார் ரத்தம், தாழ்த்தப்பட்டவர் ரத்தம் என்று உண்டா?
ஆபத்து நேரத்தில் ஜாதி பார்ப்பதுண்டா?

உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஓர் அய்யங்காருக்கு அவசர அவசரமாக ரத்தம் தேவைப்படும் நிலையில், அந்த ரத் தத்தைக் கொடுக்க ஒரு தாழ்த்தப்பட்ட சமூக தோழன் முன் வந்தால் - வேண்டாம் தாழ்ந்த ஜாதிக்காரன் ரத்தம் என்று அய்யங்கார் சொல்லுவாரா?

‘இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து ரொம்ப நாளாச்சு' என்றுதானே அய்யங்கார்ப் பார்ப்பனர் கூறுவார்?

தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டு மானால், அப்பொழுது மட்டும் ஜாதி தேவையில்லையா?

ஜாதி என்பது அறிவியல் ரீதியானது அல்ல; இந்த ஜாதி ஒழிக்கப்பட்டு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உலகம்தான் தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயம்!

உலகம் முழுவதும்
தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர்

இன்றைய தினம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகள் உலகம் முழுவதும் வரவேற்கப்படுகின்றன. அவர்களின் புகழ் உலகெங்கும் பரவி நிற்கிறது. இங்குள்ள கிணற்றுத் தவளைகள் கத்துவதை அலட்சியப்படுத்துங்கள்.

தந்தை பெரியார் காண விரும்பிய
சமுதாயம் படைப்போம்!

தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயத்தைப் படைப்போம் - அணி திரளுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

 

எது திராவிடம்

எது ஆரியம்?

ஜாதியற்ற பண்பாடு - திராவிடம்

வருணாசிரமம் - ஆரியம்

பெண்ணுரிமை - திராவிடம்

பெண்ணடிமை - ஆரியம்

சமத்துவம் - திராவிடம்

பேத நிலை - ஆரியம்

- பாவூர் சத்திரம் பொதுக்கூட்டத்தில்

தமிழர் தலைவர், 4.8.2018.

பாவூர்சத்திரத்தில் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

வரவேற்புரை: தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வீரன்

தலைமை: தென்மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர் டேவிட் செல்லதுரை

முன்னிலை: மாநில ப.க.துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி, தென்காசி கழக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன், தென்காசி கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகம், தென்காசி கழக மாவட்ட இளைஞரணி தலைவர் கோபால், தென்காசி கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முருகன், தென்காசி கழக மாவட்ட ப.க. செயலாளர் இராசய்யா, தூத்துக்குடி பெரியார் மய்ய பொறுப்பாளர் காசி

சிறப்புரை: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் எடிசன்ராசா, அமைப்புச் செயலாளர் செல்வம், நெல்லை மண்டலத் தலைவர் பால்ராசேந்திரம், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, நெல்லை மண்டல செயலாளர் வெற்றிவேந்தன், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், நெல்லை மண்டல மாணவர் கழக செயலாளர் சவுந்தரபாண்டியன், நெல்லை மாவட்டத் தலைவர் காசி, நெல்லை மாவட்ட செயலாளர் இராஜேந்திரன், குமரி மாவட்ட செயலாளர் கிருஷ்ணேஷ்வரி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியாரடியான், மேலமெஞ்ஞானபுரம் சீ.தங்கதுரை, மாநில ப.க. தலைவர் அழகிரிசாமி, திமுக கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன்,

மந்திரமா & தந்திரமா: ஈட்டிகணேசன்

நன்றியுரை: கீழப்பாவூர் அழகர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner