எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரிமைகளை விட்டுக் கொடுப்பதை நியாயப்படுத்தும் ஆட்சி தமிழ்நாட்டில்!

குடந்தையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

குடந்தை,ஜூலை 7   தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி நடக்கிறது - உரிமைகளை விட்டுக் கொடுப்பதைவிட, விட்டுக் கொடுப்பதை நியாயப் படுத்தும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறதுஎன்று செய்தி யாளர்களுக்குத்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

இன்று (7.7.2018) குடந்தைக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

1943 ஆம் ஆண்டு குடந்தை அரசினர் கல்லூரியில், ஜாதியை உயர்த்துகின்ற வகையில், பார்ப்பன மாணவர் களுக்குத் தனி தண்ணீர் பானையும், கீழ்ஜாதிகாரர்களுக்கு இன்னொரு பானையும் வைத்திருந்தபொழுது, அதனை எதிர்த்து ஆரம்பித்த போராட்டம் மிகப்பெரிய அள விற்கு நடைபெற்றது.

குடந்தை மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள்

தந்தை பெரியாரின் அனுமதி பெற்று திராவிடர் கழகத்தின் சார்பில் 1943 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட மாணவர் கழகம் - இன்றைக்கு அதே குடந்தை யில் பவள விழாவை சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது.

திராவிட மாணவர் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் அந்த மாநாட்டிற்கு வர விருக்கிறார்கள்.

அம்மாநாட்டில் பல முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றி, அடுத்த கட்டமாக தமிழகத்தில் மாணவர் களுடைய கல்வியை பாதிக்கக்கூடிய அளவிற்கு, மத்திய அரசு தொடர்ந்து தன்னுடைய பணிகளை செய்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக நீட் தேர்வின் மூலமாக எவ்வளவு குளறுபடி ஏற்பட்டது; ஆர்.எஸ்.எஸ்.சினுடைய திட்டங்களை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்பதற்காக, 11 அம்ச திட்டம் என்று சொல்லி, வேதங்கள், பழைய புராணங்களை முன்னிலைப்படுத்தி நாங்கள் பாடத் திட்டங்களாகக் கொண்டுவரவிருக்கிறோம் என்று உத்தரவு போடுகிறார்கள், வெளிப்படையாகவே!

மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல், உடனடியாக அதனை செயல்படுத்தக் கூடிய அளவிற்கு, ஆர்.எஸ்.எஸ். ஒரு கூட்டம் போடுகிறார்கள்; உடனடி ஒரு அறிவிப்பு கொடுத்து, 11 அம்ச திட்டம் என்று சொல் கிறார்கள். உடனே அதை ஏற்றுக்கொண்டு, மத்திய கல்வித் துறையான மனிதவள மேம்பாட்டுத் துறை செயல்படுகிறது.

அதுபோலவே, சமஸ்கிருதம், வேதம் இவைகளைப் படித்தால் போதும்; தனியார் சொல்லிக் கொடுத்ததாக, தானே ஒரு சான்றிதழைக் கொடுத்து 10 ஆம் வகுப்பிற்குச் செல்லலாம். இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளை மத்திய அரசு செய்கிறது; இதனையெல்லாம் கண்டித்து ஆழ்ந்த முடிவெடுக்கக்கூடிய ஒரு மாநாடாகத்தான் நாளைய மாநாடு நடைபெறவிருக்கிறது. அதில் சில புதிய திட்டங்களையும் அறிவிக்க இருக்கிறோம்.

பொதுப் பட்டியல் என்றால் என்ன?

செய்தியாளர்: கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக் குக் கொண்டுவருவதற்கு ஏதாவது வழிவகை இருக் கிறதா?

தமிழர் தலைவர்: தாராளமாக. அது ஒன்றுதான் நிரந்தர மான தீர்வு. நாளைய மாநாட்டில் அதை தீர்மானமாகவும் நிறைவேற்றவிருக்கிறோம். அடுத்து வரக்கூடிய ஆட்சிகள் எதுவாக இருந்தாலும், தமிழகத்தில் இருக்கக் கூடிய மாநில சுயாட்சி, மாநில உரிமைகளைப்பற்றி பேசுகின்ற கட்சிகள் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கும் இந்த உணர்வுகளை உருவாக்கவேண்டும். அது மேற்கு வங்காளமாக இருந்தாலும், அசாமாக இருந் தாலும், குஜராத்தாக இருந்தாலும், உத்தரப்பிரதேச மாநிலமாக இருந்தாலும், அந்தந்த மாநிலங்களுக்கென்று தனித்தனியாக இருக்கக்கூடிய மாநிலப் பட்டியல் என்று இருக்கிறது- அதனை தெளிவுபடுத்தவேண்டும்.

நீட் தேர்வு வந்தபொழுதுதான் அதனை உணர்ந் தார்கள். ஆனால், மத்திய அரசு அந்த உணர்வை மதிப்ப தாகத் தெரியவில்லை. நடைமுறையில், குறைந்தபட்சம் ஒரு மரியாதைக்காகவாவது மோடி அரசு, மாநில அரசுகளை கேட்பதேயில்லை.

இன்னுங்கேட்டால், கல்வியை மாநிலப் பட்டியலி லிருந்து, நடுப்பட்டியலுக்குக் கொண்டு போனார்கள்.

யூனியன் லிஸ்ட் - மத்திய அரசுக்கு உரிய அதிகாரங் கள், மாநில அரசுக்கு உரிய அதிகாரங்கள்

இந்த இரண்டையும் தாண்டி, மூன்றாவதாக ஒன்று இருக்கிறது -அதற்கு கன்கரண்ட் லிஸ்ட் என்று ஆங் கிலத்தில் பெயர் சூட்டியிருக்கிறார்கள் - அரசியல் சட் டத்தை வகுத்த டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரும், அவருடைய குழுவினரும்.

கன்கரண்ட் லிஸ்ட் என்று சொன்னால், பொதுப்பட்டி யல் என்று தமிழில் மொழி பெயர்க்கிறார்கள். ஆனால், அது தவறு.

அது பொதுப்பட்டியல் அல்ல; மத்திய அரசும், மாநில அரசும் சட்டம் செய்யலாம் என்பது உள்நோக்க அர்த்தமாக இருந்தாலும், அதற்குப் பொதுப் பட்டியல் என்று சட்டத்தில் சொல்லவில்லை. கன்கரண்ட் லிஸ்ட் என்றால், ஒத்திசைவுப் பட்டியல் என்பதுதான் சரியான சொல்லாகும். இரண்டு பேருக்கும் அதிகாரம் இருக்கக்கூடிய இடத்தில், என்ன செய்யவேண்டும் என்றால், முதலில் மாநில அரசினுடைய ஒப்புதலைப் பெற்றுத்தான் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது என்பது நிரந்தரத் தீர்வு.

ஆனால், இப்பொழுது இருப்பதைக்கூட அவர்கள் அரசியல் சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தவில்லை.

ஒத்திசைவு என்று சொன்னால், முதலில் ஒரு சட்டத் தைக் கொண்டு வருவதற்கு முன், மாநில அரசினுடைய ஒப்புதலைப் பெற்றுத்தான் கொண்டு வரவேண்டும். கன்கரண்ட் என்றால், ஒத்துப்போதல் என்று அர்த்தம். அதனை இந்த மத்திய அரசு செய்யவில்லை.

மதுரை உயர்நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் அவர்கள் தொடுத்த வழக்கில், நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை சொன்னபொழுது, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில், நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.

சி.பி.எஸ்.இ. சர்வாதிகாரமாக நடந்துகொண்டிருக் கிறதே இது என்ன நியாயம்?

எந்த அகராதியைப் பயன்படுத்தி மொழி பெயர்த் தீர்கள்?

மொழி பெயர்ப்பு கேள்விகள் எல்லாம் தவறாக இருக்கிறதே, இப்படி தவறான கேள்விகள் இருக்கும்போது எப்படி சரியான பதிலை எதிர்பார்ப்பீர்கள்? தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

எனவே, நீட் தேர்வுகுறித்து ஆரம்பத்திலிருந்து திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து சொன்ன அந்தக் குற்றச்சாட்டு, இன்றைக்கு நிரூபணமாகி இருக்கிறது.

இந்த நீட் தேர்வு என்பது தமிழகத்தை மட்டும் வஞ் சிக்கவில்லை. எல்லா மாநிலங்களிலும் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எனவேதான், நீட் தேர்வு போன்றவைகளையும், மற்ற கல்வித் துறையில் இருக்கக்கூடிய காவி மயமாக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். திட்டங்களையும் எதிர்த்து மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சாரத்தினை நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் முன்னிருந்து நடத்தும்.

ஆளுநர் பதவி எதற்கு?

செய்தியாளர்: டில்லி மாநில ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டும்தான் மரியாதை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் திருக்கிறதே அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: அரசியல் சட்டத்தையே மத்திய அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. மாநில ஆளுநர் களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய பணி என்னவென்றால், கவர்னர் ஆட்சியின்பொழுதுதான் அவர்களுக்கு வேலை. மற்றபடி நெருக்கடி காலகட்டத்தில், டில்லிக்குத் தகவல் கொடுப்பதுதான் அவர்களுடைய வேலை. ஒவ்வொரு இடத்திற்கும் சென்று போட்டி அர சாங்கம் நடத்துவது அவர்களுடைய வேலை கிடையாது

உதாரணம், எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஆளுநர் சொல்வதும்; அதைவிட மிகக் கேவலம், நம்முடைய  அமைச்சர்கள், ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்று, தாங்கள் அடிமைகள் ஆவதற்குப் போட்டிப் போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளை இவர்களை தியாகம் செய்வது இருக்கிறதே, இது இன்னும் மோசமானது.

ஒரு உதாரணம், கவர்னருடைய பெயரில்தான் உத்தரவுகள் வரும், அரசியல் சட்டப்படி,  ஆளு நருடைய ஆணைப்படி''. ஆனால், நடைமுறையில், அது கவர்னர் போடுவது கிடையாது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் கூடி செய்யக்கூடிய உரிமை அது.

ஆளுநர் சார்பிலேயே இன்றைக்கு அறி விப் புகள் வருகிறது. இன்னுங்கேட்டால், அம்மா, அம்மா என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல் கிறார்களே, அந்த அம்மா ஆட்சியில்கூட இந்த நிலை கிடையாது.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற பெயரில், ஆளுநர் படிக்கிறாரே, அதனை தயாரிப்பது அமைச்சர்கள். சட்டமன்றத்தில் படிப்பதுதான் ஆளுநருடைய வேலையே தவிர, அதில் என்ன கொள்கை இருந்தாலும், அவர் படித்துத்தான் ஆகவேண்டும். படிக்க முடியாது என்று அவர் சொல்லமுடியாது.

ஆளுநர் உரை என்பதால், அதனை நானேதான் எழுதுவேன்; அமைச்சரவைக்கு அந்த அதிகாரம் இல்லை என்று ஆளுநர் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அதே நிலைதான், வேறு வகையில் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது.

ஆகவேதான், ஆளுநருடைய அதிகாரம் என்பது, அது சட்டப்படி மேலெழுந்தவாரியான ஒன்று. ஆளுநருக்கு நேரிடையாக அரசுகளில் தலையிடுவதற்கோ,ஆய்வு செய்வதற்கோ இடம் கிடையாது.

அப்படியானால், மோடி அரசு என்னென்ன செய்கிறது என்று, மத்திய அரசில்  இருக்கக்கூடிய துறைகளையெல்லாம் ஆய்வு செய்யக்கூடிய நிலை இருக்கிறதா? என்று கேள்வி கேட்கவேண்டும்.

எனவே, இது தவறான ஒரு நிலை. திட்டமிட்டே மாநில அரசுகளைப் பழிவாங்குகிறார்கள். உதாரண மாக,  அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, டில்லிக்குத்தான் பொருந்தும்; பாண்டிச்சேரிக்குப் பொருந்தாது என்று ஒரு துணை நிலை ஆளுநர் சொல்கிறார் என்றால், யாருடைய தைரியத்தில் அவர் அப்படி சொல்கிறார்?

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்டஒரு அரசுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது. உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்தில் இருக்கின்ற நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதனைப் புறக்கணித்தால், அவர்கள் பதவிப் பிர மாணம் எடுத்துக்கொண்ட அரசியல் சட்டத்தையே புறக்கணிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையே!

செய்தியாளர்: ஆளுநருடைய செயல்பாடு, மத்திய அரசினுடைய செயல்பாடு போன்று இருக்கிறதா?

தமிழர் தலைவர்: மாதிரியில்லை; மத்திய அரசுதான். அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்று - அறிவிக்கப்படாத  ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறது. அறிவிக்கப்படாத மத்திய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களில் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சி நடத்துகிறார்கள் என்றால், ஒரு எம்.எல்.ஏ.,கூட இல்லாத நிலையில், ஆட்சி நடத்துகின்ற விந்தை தமிழ்நாட்டில் இருக்கிறது. பி.ஜே.பி.,க்கு ஒரு எம்.எல்.ஏ.,கூட கிடையாது, ஆனால், நடப்பது காவி ஆட்சிதான். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் இங்கே நடக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் உரிமைகளை விட்டுக் கொடுப்பது என்ற கொடுமைகளைவிட, விட்டுக் கொடுப்பதை நியாயப்படுத்துகின்ற அமைச்சர்கள் இருப்பது அதைவிட கொடுமையாகும்!

செய்தியாளர்: சத்துணவு முட்டை வழங்குவதில் ஊழல் நடந்திருக்கிறது என்கிறார்களே, அதுபற்றி உங்களுடைய கருத்து?

தமிழர் தலைவர்: அது பாராட்டவேண்டிய விஷயம். ஏனென்று சொன்னால், முட்டைக்குள் ளேயே புகுந்திருக்கிறார்கள் என்று சொன்னால், வேறு எங்கெங்கெல்லாம் புக மாட்டார்கள் என்று தெளிவாகத் தெரியும்.

இந்த ஊழலுக்கு இரண்டு அய்.ஏ.எஸ். அதிகாரி களும் உடந்தையாக இருந்து, அவர்களும் பலியாகக்கூடிய நிலையும் இருக்கிறது.

திரைப்படம், நாடகங்களில் நடைபெறக்கூடிய காட்சிகளைப் போன்று - ஒரு தகவல் கொடுக்கிறார்; ஹாய்' என்று ஒருவர் சொல்லிக் கொண்டு வருவார் என்று ஒருவர் சொல்கிறார்; அதேபோன்று ஒருவர் வருகிறார், தகவல்களையெல்லாம் பென் டிரைவில் கொடுத்து விடுங்கள் என்று சொல்கிறார். அவரை லைட் அவுஸ் பக்கத்திற்கு வாருங்கள் என்று சொல்கிறார்.

ஹாய்' என்று சொன்னவர் வருமான வரித்துறை அதிகாரி; தொலைபேசியில் ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள்.

எனவே, ஒரு நல்ல நாவல் எழுதலாம்; நாடகம் போடலாம்; திரைக்கதைக்கு நிறைய வசனங்கள் எல்லாம் இருக்கிறது. ஊழல் அறிவியல் பூர்வமாக நடக்கிறது என்பது எந்தக் காலத்தில், எந்தக் கட்டத்தில் என்பதற்கு உதாரணம் இது.

செய்தியாளர்: சேலம் எட்டு வழிச் சாலை அமைப்பதை எதிர்த்து அரசியல் கட்சிகள் பெரிய அளவிற்கு போராடாததற்கு என்ன காரணம்? சிறிய அமைப்புகள்தானே போராடுகிறது - அதற்கு என்ன காரணம்?

தமிழர் தலைவர்: துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றில் காட்டாத அவசரம் இதில் காட்டப்படுகிறது என்றால், அந்தப் பசுமை என்ற சொல்லை சற்றுப் பிரித்துப் பாருங்கள். உங்களுக்கு விடை தெரியும். அந்தச் சாலையால் 'ப' யாருக்கு? சுமை யாருக்கு? என்பது அனைவருக்கும் விளங்கும். நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner