எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* அனிதா - பிரதீபா - சுபஸ்ரீகள் தற்கொலைக்குக் காரணம் நீட்' தேர்வே!

* எம் அருமைச் செல்வங்களே, அவசரப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்!

நீட்' தேர்வில் தோல்வி காரணமாக தொடர்ந்து மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அவசரப்பட்டு தற்கொலை செய்துகொள்ளாதீர் - நீட்'டை ஒழிக்கும்வரை தொடர்ந்து போராடுவோம் - உதயசூரியன் ஆட்சியில் உதிக்கட்டும் - கட்டாயம் வழி பிறக்கும்  என்று  கூறியுள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின்மீது நீட்' (Neet) என்ற மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினைத் திணித்ததால், கடந்த இரண்டாண்டுகளில், தமிழ்நாட்டுப் பிள்ளைகள் - ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் உள்பட பலரும் - இனி எளிதில் எம்.பி.பி.எஸ். படிப்பு படிக்கவே முடியாது என்ற அளவுக்கு நம்பிக்கை இன்மையும், விரக்தியும் மாணவ இளந்தளிர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து, தற்கொலைகள் பெருகும் சமூக அவலங்கள் அன்றாடச் செய்திகளாகி விட்டன!

பழியும் - பலியும்!

மாநிலப் பாடத் திட்டத்தில் 80 முதல் 90 விழுக்காடு பிள்ளைகள் படித்து - கடினமாக உழைத்து எஸ்.எஸ்.எல்.சி.யில் 500 மதிப்பெண்ணுக்கு 490 மதிப்பெண் வாங்கும் தாழ்த்தப்பட்ட சமூக மாணவ, மாணவிகள் - அவர்கள் 12 ஆம் வகுப்பான பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1125 மதிப்பெண் வாங்கிடும் அளவுக்கு கடினமாக உழைத்து வெற்றி பெற்றாலும், நீட்' தேர்வின் முறை அவர்களைத் தோல்வியுறவே செய்து பழிவாங்குகிறது.

பழி வாங்குவதோடு பலி வாங்குவதாகவும் அமைந்து விடுவது, நம்மைப் போன்ற சமுதாயப் பணியாளர்கள் இதயங்களில் ரத்தக் கண்ணீர் வடியச் செய்து வருகின்றன!

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த - மருத்துவம் படித்து, சமூகத் தொண்டாற்றும் கனவைச் சுமந்த - அரியலூர் மாவட்ட ஏழை மூட்டைத் தூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் - தாயில்லாப் பிள்ளை எங்கள் செல்வம் அனிதா சென்றாண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டது நாட்டில் அதிர்வலைகளை உருவாக்கியது!

மனிதாபிமானம் கொண்ட அத்துணை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் தங்கள் பிள்ளையை இழந்ததாகவே கருதி சிந்திய கண்ணீரும், காட்டிய உணர்வுகளும் உலகறிந்த ஒன்று.

அனிதாவைத் தொடர்ந்து ஒரு பிரதீபா!

இவ்வாண்டு அதைவிட மிஞ்சிய சோகம்! நம் மக்களின் இதயத்தைச் செந்தேள் கொட்டியதுபோல், அனிதாவைத் தொடர்ந்து அதேபோன்ற ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் கிடைத்தற்கரிய செல்வம் செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) அருகேயுள்ள பெருவளூர் கிராமத்து, அன்றாடக் கூலி கட்டடத் தொழிலாளி - எங்கள் சகோதரன் சண்முகத்தின் இரண்டாம் மகள் பிரதீபா - இவர் பத்தாவது வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண்களும், பிளஸ் டூ வகுப்பில் 1200 மதிப்பெண்களுக்கு 1125 மதிப்பெண்களும் பெற்ற நிலையில், சென்ற ஆண்டு, இந்த ஆண்டு - இரண்டு ஆண்டுகளில் கடுமையாக உழைத்தும்கூட, நீட்' தேர்வில் தோல்வியையே அடைந்தார்!

அதற்குக் காரணம் அவரது அறிவுக் குறைவோ, திறமைக் குறைவோ அல்ல; மாறாக இவ்வாண்டு நடந்த நீட்' தேர்வில் தமிழ் வினாத்தாள்களில் ஏற்பட்ட மொழி பெயர்ப்புத் தவறுகளேயாகும்!

இதை அவரே தனது கண்ணீர்க் கடிதத்தில் எழுதி யுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்குமுன் எழுதிய அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி நடந்த நீட்' தேர்வை தமிழ் மொழியில் எழுதினேன். தமிழ் மொழியில் உள்ள வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு, கேட்கப்பட்டு இருந்தன. எனவே, அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.''

இதை நீட்' தேர்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவே எழுதியுள்ளார்.

பிரதீபாவைக் கொன்றது நீட்' தேர்வே!

இதுதான் பிரதீபாவின் கடைசி மரண வாக்குமூலம்.

எனவே, பிரதீபாவைக் கொன்றது நீட்' தேர்வுதான் என்பதை எவரே மறுக்க முடியும்?

தொடர்ந்து இரண்டாண்டு தொடர்ந்து உழைத்து, தேர்வுகள் எழுதி - மருத்துவர் ஆகும் கனவைச் சுமந்த எங்கள் செல்வத்திற்கு கடைசியாக திணிக்கப்பட்ட முடிவு மரணம்தானா?

இது நீட்' தேர்வினால் ஏற்பட்ட கொலை அல்லாமல் வேறு என்ன? மனச்சாட்சி இருந்தால் மத்திய - மாநில மற்றும் நீட்' தேர்வை ஆதரித்து நியாயம் கூறும் வன்னெஞ்சர்களே, இப்பெண்ணின் உயிரின் விலை வெறும் 7 லட்சம் ரூபாய்தானா? உடனே நிதி வழங்கி விட்டால், பிரச்சினை தீர்ந்து விட்டது என்று ஆகிவிடுமா?

திருச்சியிலிருந்து மற்றொரு தற்கொலை இடி!

அப்பெண்ணை புதைத்து, புதை குழியின் ஈரம் காய்வதற்குமுன்னே மற்றொரு நெஞ்சைப் பிளக்கும் கொடுஞ்செய்தி!  நீட்' தேர்வின் உயிர்ப் பசிக்கு மற்றொரு தமிழ்ச்செல்வம் திருச்சி மாவட்டத்தில் சுபஸ்ரீ' தற்கொலை என்பது!

ஒரு ஏழை கண்டக்டரின் மகள் - எங்கள் வீட்டுப் பிள்ளை - நீட்' தேர்வின் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை என்பதுதான் அந்தக் கொடுஞ்செய்தி!

அருமை மாணவச் செல்வங்களே, இப்படிப்பட்ட அநியாய அவசர முடிவுக்கு உங்களை பலியிட்டுக் கொள்ளாதீர்கள்!

இருட்டு விடியும்; வெள்ளி முளைக்கும் - விடியல் தோன்றும்  - உதயசூரியனின் புதிய தி.மு.க. ஆட்சியை உருவாக்கி  நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதி விலக்குச் சட்டம் கொண்டுவரச் செய்வதுதான் நம்முன் உள்ள மிக முக்கிய பணி! அவசரப்பட்டு  உயிரை மாய்த்துக் கொள்ளும் பணியில் ஈடுபடாதீர்!

அடுத்துவரும் ஆட்சியால்

விடியல் கிடைக்கும்!

அடுத்து உதயமாகும் ஆட்சியில் இதற்கு வழிபிறக்கும்!

21 ஆண்டுகள் கடுமையான தொடர் போராட்டம் நுழைவுத் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தி வெற்றி பெற்று, முதலமைச்சர் கலைஞர் சட்டமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு நுழைவுத் தேர்வினை ஒழித்துக் கட்டவில்லையா? நமது மாணவர்களின் கனவை நன வாக்கியதை இங்கு நினைவூட்டுகிறோம்!

பிரதீபாவின் குடும்பச் சூழல்!

நேற்று கழகத் தோழர்களோடு பெருவளூர் சண்முகம் இல்லம் சென்று அக்குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொல்லச் சென்றிருந்தோம்; எங்கள் இதயம் வெடிப்பதைப் போல சொல்லொணா சோகம் எங்களைத் தாக்கியது!

அந்த ஏழை தாழ்த்தப்பட்ட சகோதரன் சண்முகம் வீடோ ஒரு சிறிய இல்லம். ஒரே ஒரு அறை. அந்த அறையில் உள்ள கட்டிலில் பிரதீபாவின் தாய், நினைவிழந்து கிடக்கிறார்; மகளை அடக்கம் செய்ததுகூட அவருக்குத் தெரியாது போலும்; எம்.சி.ஏ. இறுதியாண்டு படிக்கும் பிரதீபாவின் அக்கா, அக்கம்பக்கத்து உறவுகள் - சண்முகத்திற்கு ஆறுதல் கூறக்கூட முடியாத மனநிலை!

10 ஆம் வகுப்பு வரை படித்து, ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து, உடலுழைப்பு கட்டடத் தொழில் அன்றாடம் செய்து, அந்த வருவாயில் மூன்று பிள்ளைகளுக்கும் கல்விக் கண்களைத் திறந்துவிட பெருமுயற்சி செய்தார் தனி மரமாக நின்று!

இதுபோன்ற குடும்பங்களிலிருந்து டாக்டர்'' வந்தால் தானே சமூக மாறுதல் ஏற்பட முடியும்! அதைத்தான் திரா விடர் இயக்கங்கள், தந்தை பெரியார், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்களும் விரும்பினர்!

அறப்போருக்கு ஆயத்தமாவீர்!

எனவே, பெற்றோர்களே, உறுதிகொண்ட நெஞ்சத்தோடு, நீட்' ஒழிப்பு அறப்போரில் சிப்பாய்களாக அணிவகுக்க ஆயத்தமாவீர்!

இழந்தவர்களைப் பெற முடியாவிட்டாலும், இருக்கும் செல்வங்களை - நம் உரிமைகளை இழக்காமல் இனிவரும் தலைமுறையினர் வெற்றி பெறும்வரை ஓயாமல்  இச்சூளுரையை அனிதாக்கள், பிரதீபாக்கள், சுபஸ்ரீக்கள் மற்றும் மறைந்த பல பெற்றோர்கள் சார்பில் மேற்கொள்வோம்! சமூகநீதியாம் சுயமரியாதைப் போராட் டத்தை முன்னெடுப்போம்!

 

கி.வீரமணி

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை

8.6.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner