எழுத்துரு அளவு Larger Font Smaller Font

117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா?

நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ!

கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள அணியை அழைக்காமல், ஆர்.எஸ்.எஸ்.காரரான ஆளுநர் குறைந்த எண்ணிக்கையுள்ள பி.ஜே.பி.யை அழைத்தது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல, குதிரை பேரத்தை' ஊக்குவிக்கக் கூடியது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கருநாடகத்தில் ஆளுநர் (இவரது பின்னணி தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரர். ஜனசங்கம் என்ற பாரதீய ஜனதா கட்சிக்கு முன்னோடி  அரசியல் அமைப்பை குஜராத்தில் தோற்றுவித்தவர் என்ற தகுதி'யைப் பெற்ற, பழுத்த காவிக் கட்சியின் மாறாப் பற்றாளர்) அரசியல் சட்ட நெறிமுறைகளை விளக்கிடும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, 2006 இல் வந்த மற்றொரு வழக்கில் முறையே 7 நீதிபதிகள் அமர்வு, 5 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்புகளையே மதிக்காமல், 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததோடு, அவரது கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் (நீண்ட) அவ காசத்தையும் தந்து, நன்றாகக் குதிரை பேரம் நடத்துங்கள் என்று மறைமுகமாக ஊக்குவிப்பதுபோல கால நீட்டிப் பும் தந்துள்ளதன்மூலம் - அரசியல் சட்டத்தை செயல் படுத்தவேண்டிய வேலிகளே பயிரை மேய்ந்த கதை'யாக ஆக்கிவிட்டது.

ஆளுநரின்யுக்தானுச்சாரம்'(Discretion)என்பது யதேச்சையானது அல்ல; அரசியல் சட்ட நெறிமுறை களுக்கு உட்பட்டதே! இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ற அளவுகோல்களையும் வைத்தே அவர் எடுக்கவேண்டிய முடிவுகள் ஆகும்!

117 பெரிதா? 104 பெரிதா?

காங்கிரசு - மதச்சார்பற்ற ஜனதா தளம், 2 சுயேச்சைகள் உள்பட 117 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவோடு, அத்தனைப் பேர்களையும் ராஜ்பவனுக்கு அழைத்துச் சென்றும், அத்தனை எம்.எல்.ஏ.,க்களின்  கையொப்பமிட்ட கடிதத்தையும் குமாரசாமி அவர்கள் கொடுத்த பிறகும், ஆளுநரின் முடிவு மாறவே இல்லை.

தேர்தல் கூட்டணிகள் தேர்தலுக்கு முன்பா? முடிவுகள் வந்த பின்பா? என்பதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாம் சட்டப்படி ஏற்கத்தக்கதே என்பது உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு தந்த பெரும்பான்மைத் தீர்ப்பு.

29 பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு டெபாசிட்' காலி!

காங்கிரசு அமைச்சர்கள் 15 பேர் தோற்றுள்ளனர்; முதல்வர் சித்தராமையா ஒரு தொகுதியில் தோற்றுள்ளார். எனவே, எங்களைத் தான் கருநாடக வாக்காளப் பெரு மக்கள் விரும்புகின்றனர்'' என்பது சரியான வாதமல்ல.

காரணம், பதிவான மொத்த வாக்குகளில் பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவிகிதம் 36.3 தான். ஆனால், காங்கிரசு கட்சிப் பெற்ற வாக்கு சதவிகிதம் 37.9 ஆகும்.

அதுமட்டுமல்ல, பா.ஜ.க. 29 தொகுதிகளில் தனது டெபாசிட்டை இழந்துள்ளது! சில தொகுதிகளில் (தமிழ் நாடு போலவே) நோட்டோ'விடமும் பா.ஜ.க. தோற் றிருக்கிறது - அதாவது சில தொகுதிகளில் பா.ஜ.க. வாங்கிய வாக்குகள் நோட்டா'வின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவானது.

தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் அ.தி.மு.க.

அறுதிப் பெரும்பான்மை பெற வாய்ப்பில்லாமல் - நேர்வழியில் ஜனநாயகத்தைக் கடைப்பிடித்தால், 104 பேர்கள் வெற்றி என்பது கருநாடக மக்கள் பா.ஜ.க.வை ஆளுங்கட்சியாக்கிட வாக்காளர்கள் தயங்கியே உள்ளார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

அதேபோல, பி.ஜே.பி. தலைவர் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் அவசரமாக தமிழ்நாடு அ.தி.மு.க. முதல்வரும், துணை முதல்வரும் வாழ்த்துச் சொல்வது சம்பிரதாய வாழ்த்தாக இல்லாமல், கொள்ளை மகிழ்ச்சி யைத் தெரிவிப்பதுபோல, தென்னாட்டில் முதல் நுழைவை இதன்மூலம் திறந்துள்ளீர்கள்'' என்று புளகாங்கிதம் அடைந்து தங்கள் கட்சியின் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டுள்ளனர். (இது எப்படியோ போகட்டும்).

104 பெரிதா? 117 எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கைப் பெரிதா? என்றால், கருநாடக ஆளுநருக்கு 104 தான் பெரிது என்பதோடு, 104 அய் 117-க்கு பக்கத்தில் எப்படி யாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று ஆசி கூறியுள் ளதுபோல, 15 நாள் நீண்ட கால அவகாசமும் தந்துள்ளார்.

பி.ஜே.பி. மேற்கொள்ளும் பேரம்!

ஏற்கெனவே மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி அவர்கள், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, (குறைந்தபட்சம் 8, 9 எம்.எல்.ஏ.,க்கள்) 100 கோடி ரூபாயும், மந்திரி பதவியும் தரப்படும் என்ற பேரம் நடைபெறுகிறது என்று கூறியுள்ள நிலையில், இந்த இரண்டு வார கால அவகாசத்தில் குதிரை பேரம், ஆயாராம் காயாராம்' இனி தாராளமாக நடைபெறும்.

காங்கிரசும் சரி, மதச்சார்பற்ற ஜனதா தளமும் சரி, சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பது என்பது அவ்வளவு எளிதா?

நிலையான அரசு (Stable Government) அமைய வேண்டும் என்பதுதானே ஆளுநரின் எண்ணமாக இருக்கவேண்டும்; அதற்கு முரணான போக்கு தற்போதுள்ள நிலவரம்; நாளும் ஜனநாயகப் படுகொலை தொடர்ந்து நடந்தே தீரும்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடுநிசியில்கூட வழக்கை விசாரித்து இரவும், பகலுமாக நீதி' வழங்குவதற்கு நண்பர் ப.சிதம்பரம் அவர்கள் சல்யூட்' என்று கூறியிருக்கிறார். அதில் எல்லாமே அடங்கிவிட்டது!

நடுநிசி சுதந்திரம் என்று விடியும்?

ஜனநாயக வேலிகளின் நிலை எப்படி பரிதாபமாக உள்ளது - நாடு பார்க்கிறது!

பாமர மக்களுக்கும் - வெகுமக்களுக்கும் இதேபோல எல்லா வழக்குகளிலும் உச்சநீதிமன்றக் கதவுகள் திறந்தால் - விடியும்வரை விசாரித்தால் நல்லது!

நாடு எங்கே போகிறது?

நள்ளிரவில் வந்த நடுநிசி சுதந்திரம்தானே! விடியலை நோக்கி நாம் காத்திருக்கத்தானே வேண்டும்!

 

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

17.5.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner