எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ஊதியத்தில் பாலின வேறுபாடு கூடாது  *கவுரவக் கொலைகளைத் தடுத்திடுக!

* பாலியல் கல்வி, துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி தேவை

* நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 50% இட ஒதுக்கீடு அவசியம்

கணியூர் திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 15 தீர்மானங்கள்

கணியூர், மே 7 இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கும் மதவாத பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்துவதில் பெண்கள் முன்வரிசையில் நிற்கவேண்டும் என்பது உள்பட 15 வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் தாராபுரத்தையடுத்த கணியூரில் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி தலைமையில் நேற்று (6.5.2018) நடைபெற்ற திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன. தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

தந்தை பெரியார் அவர்களைத் தொண்ணூற்றைந்து ஆண்டுகாலம் வரை வாழவைத்து, தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு கழகத்தையும், அறக்கட்டளை களையும் பாதுகாத்து, இயக்கப் பணி, கல்விப் பணி களை வெகு சிறப்பாக ஆற்றியவரும், உலகில் ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை வகித்த முதல் பெண்மணியுமான அன்னை மணியம்மையார் அவர் களின் நூற்றாண்டு விழாவை 2019 மார்ச் மாதத்தில் எழுச்சியுடனும் சிறப்புடனும் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2:

முற்போக்குச் சிந்தனைகளும் செயல்பாடுகளும் தேவை

பெண்களின் திருமண வயது சட்டப்படி 18 ஆக இருந்தாலும் அவர்கள் படிக்க விரும்பும் காலம் வரை திருமணத்தைத் தள்ளிப் போடுவது, பாலியல் அடையாளம் தெரியாத அளவுக்கு பெண்கள் உடை அணிவதில் மாற்றம், தாங்கள் விரும்பி ஏற்கும் தோழரைத் திருமணம் செய்து கொள்வது - வயது அடைந்த ஒரு பெண்ணின் உரிமை என்பதை ஒப்புக்கொள்வது -பெண்ணின் பெற்றோர்கள் மணமகனுக்கு வரதட்சணை கொடுப்பது என்ற நிலைமை அறவே தவிர்ப்பது போன்ற முற்போக்கு சமத்துவ எண்ணங்கள் மலர வேண்டும் என்பதுதான் பெண்களின் உரிமைக்கு உத்தரவாதம் என்பதால் இவை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம், கல்வி முறை, ஊடகங்களின் ஒத்துழைப்பு வளர வேண்டும், பெருக வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இவற்றில் சட்டரீதியாகத் தேவைப்படுபவற்றிற்கு அரசுகள் உதவ வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3:

கல்விக் கூடங்களை மூடக்கூடாது!

இன்னும் நூற்றுக்கு நூறு கல்விக் கற்பிதம் என்பது நிறைவேற்றப்படாத நிலையில், குறிப்பிட்ட எண் ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கை இல்லையென்றால் அந்த வகுப்புகளை மூடுவது என்ற தமிழ்நாடு அரசின் முடிவு கண்டிக்கத்தக்கதாகும். இந்த வகையில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் 3,500 மூடப்படும் என்பது பெரும் அதிர்ச்சிக்குரியதாகும். இதனால் குறிப்பாக பெண்கள் இடைநிற்றல் (ஞிக்ஷீஷீஜீ-ளி) அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

பெண்களுக்கு வேலைவாய்ப்பு

புதிய பொருளாதாரக் கொள்கை உலகமயம் என்ற பெயராலும், மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியின் பல்வேறு சீர்கெட்ட பொருளாதார முடிவுகளாலும் சிறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள், கைத்தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது!

இதில் பெரும்பாலும் பெண்கள்தான் அதிக அளவில் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் என்று காங் கிரசு ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட் டத்தால் கிராமங்களில் ஆண்களுக்கும், பெண்களுக் கும் நாள்தோறும் ஓரளவுக்கேனும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. தற்போது அந்தத் திட்டமும் கிட்டத்தட்ட கைவிடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருவதால், விவசாயத்தில் 70 சதவீதம் ஈடுபட்டுவரும் பெண்களுக்கு வேலைவாய்ப்பின்மை பெரும் அளவில் ஏற்பட்டு விட்டது.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அதிக இடம் கிடைக்கும் வகையில் கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், தனியார்த் துறைகளிலும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்ய மத்திய, மாநில அரசுகள் வழிவகுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:

ஊதியத்தில் பாலின வேறுபாடு கூடாது

இந்திய அளவில் மட்டுமல்லாது பன்னாட்டு அளவிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 16 விழுக்காடு குறைவான வருமானம் ஈட்டுகின்றனர் என்ற உண்மையை அமெரிக்க நாட்டின் ஃபெர்ரி நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

தந்தை பெரியார் கூறும் பாலின சமத்துவம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதற்குமே அவசியம் என்பதைத்தான் இது உணர்த்துகிறது. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் இந்த ஆணாதிக்கப் போக்கை எதிர்த்து வெகுஜன இயக்கத்தை பெண்கள் மத்தியில் நடத்திட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. பாலின அடிப்படையில் ஊதிய நிர்ணயம் கூடாது - சமநிலை தேவை என்று இம்மாநாடு வற்புறுத்துகிறது.

குறிப்பாகக் கட்டுமான தொழில்களில் பெண்களுக்குத் தகுதியிருந்தும் மேஸ்திரி என்ற தகுதி அளிக்கப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகும். இதிலும் உரிய மாற்றம் தேவை என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:

முழு மதுவிலக்குத் தேவை! மதுப்பழக்கம் என்பது தனிமனிதனையும், குடும்ப வாழ்க்கையையும், சமூக அமைப்பையும் முற்றிலும் சீர்குலைப்பதால் முழு மதுவிலக்கை சட்டப்படி கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும் என்ற மத்திய- மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது!

ஆண்கள் குடிகாரர்களாக இருப்பதால் பெரும்பாலும் குடும்பத்தில் பெண்களும், பிள்ளைகளும் பெரும் பாதிப்புக்கும், அன்றாட சச்சரவுக்கும், பொருளாதார கஷ்டத்திற்கும் இடம் அளிப்பதால் டாஸ்மாக்குகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்று மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. பள்ளி மாணவர்கள், பெண்கள் மத்தியிலும் குடிப்பழக்கம் வளர்வது - மிகப் பெரிய ஆபத்தாகும் என்பதைப் பொறுப்போடு உணர்ந்து, முழு மதுவிலக்கைக் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும் என்றும், இதற்கான அழுத்தங்களை மகளிரே பெரிதும் முன்னின்று அரசுகளுக்குத் தர முன்வர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7:

பாலியல் கல்வி, தற்காப்பு, துப்பாக்கிப் பயிற்சிகள் தேவை!

பாலியல் வன்கொடுமை என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள்கூட இந்தப் பாதிப்புக்கு ஆளாகி வருவது வெட்கப்படத்தக்க ஒன்றாகும்.

இது தொடர்பாக தூக்குத் தண்டனை உட்பட தண்டனை அளிக்கும் (போக்ஸோ) சட்டம் வரவேற்கத்தக்கதே!

அதேநேரத்தில், இத்தகு சட்டத்தின்மூலம் மட்டுமே பாலியல் வன்கொடுமையைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. பாலியல் கல்வி இரு பாலருக்கும் அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சி, கராத்தே பயிற்சி, துப்பாக்கிப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. மத்திய, மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்த வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. போக்ஸோ சட்டத்தில் சிறுவர்களையும் பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8:

காதுகுத்தல், சடங்கு செய்வதைத் தவிர்த்திடுக!

குழந்தைகளுக்குக் காது குத்துதல், பருவம் வந்த பெண்களுக்குப் பூப்பு நீராட்டு விழா போன்ற சடங்குகள் செய்தல் போன்றவற்றை விழாவாக நடத்தும் மூடத்தனத்தைக் கைவிடுமாறு பெற்றோர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 9:

குழந்தையின் முதல் எழுத்தாக (மிஸீவீவீணீ*) தாய்ப் பெயர்.

குழந்தையின் தலைப்பு முதல் எழுத்தில் (மிஸீவீவீணீ*) தாயின் பெயரையும் இணைக்க வேண்டும் என்றும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தை தாய் அல்லது தந்தையாரின் ஜாதியைத் தேர்வு செய்துகொள்ள உரிமை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10:

தமிழில் பெயர் சூட்டுக!

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இம்மாநாடு பெண்களைக் கேட்டுக்கொள்கிறது. வேற்று மொழிகளில் பெயர் சூட்டுவது தமிழினத்தின் அடையாளத்தையே இழக்கும் ஆபத்தில் கொண்டுபோய்விடும் என்பதை இம்மாநாடு எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 11:

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு: சட்டத் திருத்தம் தேவை!

மக்கள் தொகையில் சரிபகுதி இருக்கக்கூடிய பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் மொத்தம் 552 இடங்களில் பெண்களுக்குக் கிடைத்திருக்கும் இடங்கள் வெறும் 62தான். விழுக்காடு அளவில் இது பதினொன்றே. அதுபோலவே இந்தியா முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4030, இதில் பெண்களின் எண்ணிக்கை 311, விழுக்காடு அளவில் வெறும் 8 சதவீதமே!

தேவே கவுடா பிரதமராக இருந்த காலகட்டத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டுக்காக மசோதா (108ஆம் திருத்தம்) 1996ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை, அது நிறைவேற்றப்படாதது - கட்சிகளைக் கடந்த ஆண் ஆதிக்க மனோநிலையைத்தான் இது உறுதிபடுத்துகிறது. இந்தப் பிரச்சினையில் மேலும் காலதாமதம் செய்யாமல் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உள்ஒதுக்கீட்டுடன் முதற் கட்டமாக நிறைவேற்றி, அடுத்து 50 சதவீதமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசையும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12:

கவுரவப் படுகொலையைத் தடுத்து நிறுத்துக!

கவுரவக் கொலை என்னும் பொருத்தமற்ற பெயரில் ஜாதியைக் கடந்து திருமணம் செய்துகொள்வோரை செய்யும் ஆணவப் படுகொலைகளுக்கு உடனடியாக சட்டரீதியாக முடிவு காணப்பட வேண்டும் என்றும், இதில் பெரும்பாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு, இதற்கு முடிவு கட்டுவதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்குத் தக்கப் பாதுகாப்புப் கொடுப்பதுடன், கிராம ஜாதிப் பஞ்சாயத்துகளை சட்டவிரோதம் என்று அறிவித்து, அது அறவே இயங்காத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் இம்மாநாடு அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 13:

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது

தற்போது நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முடிவினையும் மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.  நீதிமன்றங்களின் தவறான தீர்ப்பின் விளைவுகளிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 14:

தாலிக்குத் தங்கம் என்பதற்குப் பதிலாக மணமகளுக்கு வைப்பு நிதி வழங்கலாம்

தாலிக்குத் தங்கம் என்ற அரசின் முடிவு பெண்களை அடிமைச் சங்கிலிக்குள் பிணைப்பதால், அதற்குப் பதிலாக பலவகையிலும் நசிந்துள்ள திருமணம் ஆகும் பெண்ணின் பெயரால் கணிசமான அளவுக்கு வைப்புத் தொகைக்கு வழி செய்யலாம் என்று அரசுக்கு இம்மாநாடு பரிந்துரை செய்கிறது.

தீர்மானம் 15:

இந்துத்துவாவை வேரோடு வீழ்த்துவதில் பெண்களுக்குரிய முக்கிய பங்கு

இந்து ராஜ்ஜியம், இராம ராஜ்ஜியம் அமைப்போம் என்று பிஜேபி மற்றும் சங்பரிவார் கூறிவருவது - பொதுவாக வருணதர்ம, மனுதர்ம, பார்ப்பன ஆதிக்கச் சமூக அமைப்பை ஏற்படுத்துவதுதான் என்றாலும், குறிப்பாக பெண்கள் பிறவி அடிமைகளாக, இழிவுபடுத்தப்படும் அபாயம் இதில் முக்கியமாக இருப்பதால், இந்த இந்துத்துவ - காவி சித்தாத்தங்களை முற்றிலுமாக வீழ்த்துதல், அவர்களின் அரசியல் அதிகார பீடத்தைத் தகர்த்தல் என்பதில் மக்கள் தொகையில் சரிபகுதி எண்ணிக்கை கொண்ட பெண்கள் முன்வரிசையில் இருந்து வீறுகொண்டு செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner