எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா?

நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம்  சுனாமியாக வெடிக்கட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

மோடி உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவரா - அமித்ஷா இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவரா?

தாழ்த்தப்பட்டோர்மீது தொடர்ந்து ஏவப்படும் வன்முறைகள், தீண்டாமை அனுசரிப்பு இவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட இயற்றப்பட்ட சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியைக் கண்டித்து நாளை (16.4.2018) காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற உள்ள அனைத் துக் கட்சி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை அரசியல் சட்ட வரைவுக்குழு தலைவராகப் போட்டு, அவருடைய பரந்த சட்ட ஞானத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டு, பிறகு அவரை அரசியலில் கறிவேப்பிலையாக்கியது - அங்கே ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனக் கும்பல் ஒன்று.

அண்ணல் அம்பேத்கர் வெளிப்படுத்திய வேதனை!

அவரே பிறகு சொன்னார் - மாநிலங்களவையில் 1953இல் ஆந்திரா மொழி வழி மாநில பிரிவினை மசோதா விவாதத்தின்போது.

"என்னை வாடகைக் குதிரையாக்கிக் கொண் டார்கள் என்றாலும், சில சமூகநீதிக்கு முன்னுரிமை தருவதிலும், பீடிகையில்,

சுதந்திரம், (Liberty)
சமத்துவம் (equality)

சகோதரத்துவம் (Fraternity)

இவைகளை கொள்கை தத்துவங்களாகவும், மதச் சார்பின்மைக்கு அடிகோலியும் பல அடிப் படை உரிமைகளுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்த முடிந்தது" என்றார் அவர்.

அதில் 17ஆம் பிரிவு "தீண்டாமை" ஒழிக்கப் பட்டு விட்டது. எந்த  ரூபத்தில் அதைக் கடைப் பிடித்தாலும் அது சட்டத்தில் தண்டனை தரக்கூடிய விதியாக  நுழைத்தார்.

1955இல் தனிச் சட்டம்

அதனை செயல்படுத்த, 1955இல் 'தீண்டாமை யை'க் கடைப்பிடிப்பவருக்குத் தண்டனை தர வழி செய்திட சட்டம் கொணர்ந்தனர்.

இதற்கெல்லாம் முன்னோடியாக, பிரிட்டிஷார் ஆண்ட போதே, 1938இல் தொடங்கி 1948 வரை 1) ஒரிசா, 2) பம்பாய் 3) கிழக்குப் பஞ்சாப், 4) அய்த ராபாத் 5) சென்னை ஆகிய மாநிலங்களில் 21 சட்டங்கள் கோயில் நுழைவுக்கே அனுமதியளித்து நிறைவேற்றப்பட்டன.

ஆனால் அவைகளில் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்தன.

தந்தை பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபின், இந்த கோயில் நுழைவுக்குத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், மற்றவர்களையும் இணைத்து மதுரை, ஈரோடு, திருவண்ணாமலை கோயில்களுக்குள் நுழைந்து பூசை செய்யப் போராட வைத்தார்!

1922 - திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் பெரியார்

அதற்குமுன் 1922இல் திருப்பூர் காங்கிரசு மாநாட்டில், கோயில் நுழைவு "தீண்டாதாருக்கு"த் தேவை என்று தீர்மானம் கொண்டு வர, அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாதய்யர் ஆவார். (ஆதாரம்: திரு.வி.க. எழுதிய வாழ்க்கைக்  குறிப்புகள்)

அதற்குப் பிறகே 1948இல் கோயில் நுழைவுச் சட்டங்கள் சில மாநிலங்களில் காங்கிரசு ஆட்சி களில் கொண்டு வரப்பட்டன!

1976இல் மீண்டும் ஒரு சட்டம்!

தீண்டாமைக்கெதிராக மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய தனிச் சட்டம் 1955இல் இயற்றப்பட்டதை, இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் 1976இல் PCR Act (Protection of Civil Rights) என்று நிறைவேற்றப்பட்டது; காரணம் தீண்டாதார் என்ற உழைக்கும் சகோதரர்களுக்குப் போதிய பாதுகாப்பை முந்தைய 1955 சட்டம் அளிக்கவில்லை என்பதைத் தொடர்ந்து அச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் மீது உயர் ஜாதி வெறியினர் நடத்திய தாக்குதல், வன்கொடுமைகள், வன்புணர்ச்சி உட்பட, ஜாதி பஞ்சாயத்துக்கள் மூலம் தண்டனை அளிப்பது போன்ற அநாகரீகக் கொடுஞ் செயல்கள் பெருகியதைத் தடுக்கவே அவர் வேகப்படுத்தினார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது...

ராஜீவ்காந்தி பிரதமராக வந்தபிறகு 1989இல் அச்சட்டம் பலமுறை மாற்றப்பட்டு தண்டனைகள் அதிகப்படுத்தப்பட்டன.  சமூகக் கொடுமைகள் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எதிராகக் குறையவில்லை என்பதால் -- Scheduled castes and the scheduled Tribes Prevention of Atrocities  (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) என்ற சட்டத்தின் மூலம் கூர்முனைப்படுத்தப்பட்டது.

இவ்வளவு இருந்தும் உயர் ஜாதித் திமிரும் மமதையும், கொண்டவர்கள், உழைக்கும் அந்த தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களை பிள்ளைப் பூச்சிகளாக, புன்மைத் தேரைகளாக மண்ணுக்கும் கேடாய் நடத்திய நிலை மாறவில்லை!

குற்றமிழைத்த உயர்ஜாதியினர்மீது காவல்துறையினர் FIR போடுவதற்கேகூட, போராட்டங்கள் நடத்தும் அவலம்!

பிணங்களைத் தூக்கிச் செல்வதற்குக்கூடத் தடைகள்!

தாழ்த்தப்பட்டோர் இறந்தால்  பிணங்களைத் தூக்கி சுடுகாட்டுக்குச் செல்ல, நீதிமன்ற ஆணையைக்கூட மதிக்காத ஜாதி வெறி ஆணவம் தமிழ்நாட்டில்கூட நடந்ததே!

இந்த நிலையில், அண்மையில் டாக்டர் சுபாஷ் காஷிநாத் மகாஜன் என்பவருக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் (Dr. Subash kashinath Mahajan Vs State of Maharastra and ANR.)  என்ற வழக்கில் 20.3.2018இல் உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை உடனே கைது செய்யக் கூடாது என்றுகூறி, கொஞ்ச நஞ்சம் இருந்த அச்சட்டத்தின் பல்லையும் பிடுங்கி விட்டது!

காரணம் சரியானபடி தக்கவகையில் சட்ட நிபுணர்களை சமூகநீதியில் நம்பிக்கை உள்ள வழக்குரைஞர்களை வைத்து வாதாடவே இல்லை. இன்று மோடி அரசு அம்பேத்கர் படத்தைத் தூக்கிப் பிடித்து கபட நாடகம் ஆடுகிறது!

நாடே கிளர்ச்சி சுனாமியால் சூழப்பட்டுள்ளது.

'சட்டத்தை நானே எரிப்பேன்' என்றாரே அம்பேத்கர்

இந்த நிலைகளை நன்கு புரிந்த டாக்டர் அம்பேத்கர் "சட்டத்தை நான்தான் எழுதியதாக அடிக்கடி சொல்லுகிறீர்கள்; அதே அரசியல் சட்டத்தை எரிப்பதிலும் நான்தான் முதல் ஆளாக இருப்பேன்" என்று மாநிலங்கள் அவையில் மேற் காட்டிய விவாதத்தில் மனம் நொந்து பேசினாரே!

மொத்தம் 31 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்றத்தில்  இப்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி உண்டா?

உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதியினர்

பிற்படுத்தப்பட்டவர் கூட கிடையாதே! ஒரே ஒரு பெண் நீதிபதி அவரும் விரைவில் ஓய்வு பெறப் போகிறார்; எல்லாம் பார்ப்பன - மற்ற உயர்ஜாதியினரின்  ஏகப் போக சாம்ராஜ்யம்தான்!

பா.ஜ.க. போன்ற பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் இழிந்த, வேதனைத் தீயில் வெந்து கருகுவதாக சமூகநீதி ஆக்கப்பட்டது பார்த்தீர்களா?

16ஆம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் -

எழுச்சி பெறட்டும்!

தமிழ்நாட்டில் திமுக, திராவிடர் கழகம், காங்கிரசு, இரு கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் இணைந்து நாளை நடத்தப் போகும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கருப்புக் கொடி போராட்டம் போல வலிமையாகச் செய்து, சமூகநீதி - பெரியார் மண்ணில் தலை தாழாது பறக்கட்டும்! ஜாதி - தீண்டாமையை ஒழிக்க அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் இயற்றியதையும் செயல்படுத்தாத தமிழக அரசின் போக்கினையும், அதில் கண்டித்தாக வேண்டியதும், செயல்பட வைப்பதும் மிக முக்கியமானதாகும்!

அணி திரண்டு பணி முடிக்க வாரீர்! வாரீர்!!

 

 

 

தலைவர்

திராவிடர் கழகம்

 

================

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் இலட்சணம்

இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் தினை செயலற்றதாக்கியவர்கள் பார்ப்பன, உயர் ஜாதியினர், படித்த கூட்டமும்கூட!

சில எடுத்துக்காட்டுகள்:

1. வடநாட்டில் (உ.பி.யில்) முன்பு பிளாக் டெவலப்மண்ட்   (BDO) ) அலுவலகத்தில் கீழ்நிலை வேலை பார்த்த ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தனர் - அங்குள்ள அலுவலக உயர்ஜாதி அதிகாரிகள். இதன்மீதான வழக்கு வராமல் தடுத்து விட்ட நிலையில், மகளிர் அமைப்பினர் போராட்டத்திற்குப் பிறகு வழக்கு முதற் கட்டத்தில் குற்றமிழைத்தோருக்குத் தண்டனை கிடைத்தது; மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் அத்தண்டனைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆயினர். காரணம் அத்தீர்ப்பில் கூறப் பட்டது என்ன தெரியுமா?

"இவர்கள் உயர்ஜாதியினர், பாதிக்கப் பட்ட பெண் தாழ்த்தப்பட்டவர், அவருடன் வன்புணர்ச்சி செய்திருக்கவே மாட்டார்கள்" என்பதுதான்! என்னே விசித்திரம்! (மகாபாரதத்தின் பராசரர் - மச்சகந்தி கதை கூடவா அந்த நீதிபதிக்கு தெரியாது?)

2. மற்றொன்று, உ.பி.யில் மாற்றப்பட்ட ஒரு மாவட்ட நீதிபதிக்குப் பதிலாக வந்தவர் உயர் ஜாதி நீதிபதி, மாற்றப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர்; அந்த நாற்காலியைக் கழுவி சுத்தம் செய்து, பிறகே அதன் மீது அமர்ந்து நீதி விசாரணையைத் துவக்கினார். இதுதான் சட்டத்தின் லட்சணம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner