எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்ணல் அம்பேத்கர் 128 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை

அம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து

பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை! தேவை!!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்த எச்சரிக்கையுடன் கூடிய  அறிக்கை

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 128 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடும் இந்தக் காலகட்டத்தில், அவர்தம் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்யப் புறப்பட்டுள்ள கொள்கை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது - இன்றைய காலகட்டத்தில் முக்கிய தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

தந்தை பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்ட தலைவர் புரட்சியாளர் பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.

அவரது 128 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (14.4.2018).

உலகெங்கும் வாழும் சமூகநீதிச் சிந்தனையாளர்களும், சமூகநீதிப் போராளிகளுமான இளைஞர், மாணவர் உலகம், எங்கும் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் (Periyar - Ambedkar Study Circle) என்று உருவாக்கி, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி,  மனிதநேயம்  ஆகிய லட்சியங்களில் இருபெரும் புரட்சியாளர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல் இருப்பவர்கள் என்பதால் அப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு - இன்று இளைஞர்களிடையே!

திரிபுவாதங்களிலிருந்து பாதுகாப்பது முக்கிய தேவை!

இது ஒருபுறம் இருக்க, தற்போதைய தேவை டாக்டர் அம்பேத்கரின் இலட்சியங்களைப் பொருத்தவரை பரப்ப எடுத்துக்கொள்ளவேண்டிய முயற்சிகளைவிட, அதிமுக்கியம் - அவசரக் கவனம் செலுத்திட வேண் டியது - அவருடைய லட்சியங்களை, திரிபுவாதங்களிலிருந்தும், திசைத் திருப்பல்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டியதேயாகும்; காரணம், காவிகள் (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) டாக்டர் அம்பேத்கரை அணைத்து அழித்திட ஆர்வம் காட்டுகின்றன, திட்டமிடுகின்றன.

உண்மையான அம்பேத்கர் கொள்கையாளர்கள் இப்படிப்பட்ட அவரது கொள்கை எதிரிகளின் புகழ்மாலை - பாராட்டு வஞ்சகமான நஞ்சு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். புத்தத்தை அணைத்து, ஊடுருவி இந்தியாவை விட்டு விரட்டியதுபோல் பாபா சாகேப்பின் கொள்கையும் ஆகிடும் அவலத்திற்கு ஆளாக்கி விடக்கூடாது! இதில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

கொள்கை எதிரிகள் புகழ்ந்தால்...

ஒருவரை கொள்கை எதிரிகள் புகழும்போது - மகிழ்வதைவிட, மிகுந்த எச்சரிக்கையுடன், தொலைநோக்குப் பார்வையுடன் - எக்ஸ்ரே கண்களால் அதைக் கணித்தாக வேண்டும்.

பெரியார் - அம்பேத்கர் லட்சியங்கள் ஒரு சமூக விஞ்ஞானம்.

அதனைத் தடுத்திட இனி எவராலும் முடியாது. ஆனால், திசை திருப்பி, திரிபுவாதம் மூலம் அடிப்படையைத் தகர்த்துவிட முடியும்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அவரது சிலைக்கு மட்டும் காவி வண்ணத்தை அடிக்கவில்லை; அவரது சீலத்தையும் காவிமயமாக்கும் அபாயம் உண்டு.

எனவே, தேவை தேவை முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு நடவடிக்கை!

வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்!

வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்!

வருக அவர் விரும்பிய புதிய புத்துலகு - பேதமிலா பேருலகு!

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.

சென்னை    
14.4.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner