எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

எங்களின் ஈடு இணையற்ற தியாகத் தாயாம் அன்னை மணியம்மையார் அவர்களது 99ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று!

எங்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி - உங்களது வருகையால், வாழ்வால், தொண்டறத்தால், துணிவால்தான் தந்தை பெரியார் என்ற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தத்துவ கர்த்தாவாக, உலகத் தலைவராக, உயர்ந்து ஒளிதரும் அந்த பகுத்தறிவுப் பகலவர் வாழ்வு நீண்டது; கண்ட இயக்கம் நிலைத்தது. சாதித்தது. சரித்திரம் படைத்தது! படைத்துக் கொண்டே இருக்கிறது.

எம் அன்னையே! தங்களது வீரம், இந்திய நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வீரம்!

"வடக்கே நீங்கள் இராவணனையும் மற்ற (எம்மின) அசுரர்கள் உருவங்களையும் எரிப்பதை டில்லியில் 'ராம்லீலா" என்ற பெயரில் நடத்தினால் இதோ எங்கள் தமிழ்நாட்டில் - தென்னாட்டில் இராமனையும், அவரது வகையறாக்களையும் எரிக்கும் அடையாள பூர்வ எழுச்சியாக - எதிர்வினையாக - 'இராவண லீலா'வை நடத்தி சாதித்து சரித்திரம் படைத்த தீரம் சொல்லத் தகுமோ! பிறர் வெல்லத் தகுமோ!

தந்தையைக் காக்க தன்னையே எரித்துக் கொள்வதுபோல், தன் உடல் நலம் பாராது அவர்தம் உயிரைக் காத்த நமதியக்க காவல் அரணே! தலைமைத் திறனே!

"நெருக்கடி காலம்" என்ற புயலையும் புன்னகையுடன் சந்தித்து, 'குஞ்சுகளைக் காக்கும் தாய்க் கோழி'போல வட்டமிட்ட வான் பருந்தை, வளையாது நெளியாது விரட்டிய எம் வீராங்கனையே!

உங்களது பற்றற்ற உள்ளத்தின் 'பளிச்' சென்ற வெளிப்பாடு - நீங்கள் அய்யா போலவே அத்துணைச் சொத்துக்களையும் மக்களுக்கே தந்த அருட்கொடையே - பெரியார்  - மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்!

அந்த ஆலம் விழுது இன்று பல்கலைக் கழகம் உட்பட எவ்வளவு பரந்து, விரிந்து பல்துறைத் தொண்டறத்தின் பல் கதிர்களாய் ஒளிர்கின்றன!

இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது கழகத்தின் தலைநகரின் அடையாளம் "பெரியார் திடல்" (சென்னை) அல்லவா! தங்களது தொலை நோக்கினால் அல்லவா அது எங்களது பாசறையாய், மக்களுக்குப் பயனுறு கொள்கைக் கோட்டமாய் இன்றும் பயன்படுகிறது! என்றும் பயன்படும் என்பது உறுதி.

அடுத்த ஆண்டு உங்கள் நூற்றாண்டின் தொடக்கம்! புதிய பொன்னேட்டை இணைப்போம் தாயே!

 

சென்னை      தலைவர்,

10.3.2018                                                   திராவிடர் கழகம்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner