எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடமாநிலங்களில் உயர்நீதிமன்றங்களில் இந்தியில் வாதாடலாம்- இங்கு தமிழில் வாதாடக் கூடாதா?

இந்திய ஒருமைப்பாடு பேசுவோர் பதில் கூறட்டும்!

தமிழர் தலைவரின் உரிமைக் குரல் அறிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்கக் கூடாது - உரிமையில்லை என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தி பேசும் வடமாநிலங்களில் உயர்நீதி மன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கலாமாம், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அந்த உரிமை தமிழுக்குக் கிடையாதாம்.

வடக்கு - தெற்கு, தமிழ் -  இந்தி!

எதற்கெடுத்தாலும் வடக்கு - தெற்குப் பேசுகிறீர்களே, தமிழ் - இந்தி - சமஸ்கிருதம் என்று மொழிவாதம் பேசுவதுதான் திராவிட இயக்கமா என்று கேலி பேசுபவர்களும் உண்டு.

அவர்களெல்லாம் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டும். தந்தை பெரியார் காட்டி வந்த எதிர்ப்புணர்வும், திராவிட இயக்கம் கூறி வந்த வடவரின் ஒரு தலைபட்ச செயல்பாடுகளும் உண்மையின், நியாயத்தின் அடிப்படையானவை என்பதை இதுவரை அறியாதிருந்தால் இப்பொழுதாவது அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு இது.

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட

சட்டப் பேரவை தீர்மானம்

இவ்வளவுக்கும் தி.மு.க. ஆட்சியில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி சட்டப் பேரவையில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் பரிந்துரை, சென்னை உயர்நீதிமன்றத்தின் கொள்கை ரீதியான ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 348(2) ஆம் பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஒரு மொழியை அறிவிக்கக் குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு - அதனைத் தமிழுக்காக ஏன் பயன்படுத்தக் கூடாது?

'நீட்' தேர்வு விலக்கு என்றாலும், தமிழ் வழக்காடு மொழி என்றாலும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு என்றாலே மாற்றாந்தாய் மனப்பான்மை தானா?

இதில் என்ன கொடுமையென்றால் இடைக்காலத்தில் தமிழிலும் வாதாடலாம் என்று நிலை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்தது. அன்றைய தலைமை நீதிபதி ஏ.பி. ஷா இதற்குத் துணையாகவும் இருந்தார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழில் வாதாட நீதிபதி திரு. மணிக்குமார் அவர்கள் அனுமதியும் வழங்கினார். பிறகு வந்த தலைமை நீதிபதி அதற்கு முட்டுக்கட்டை போட்டார்.

இப்பொழுது பிரச்சினை - வடமாநிலங்களில் இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்? உச்சநீதிமன்றத்திற்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியாதா?

தேசிய ஒருமைப்பாடு பேசுவோர் சிந்திக்கட்டும்!

இந்திய தேசியம் என்றால் இந்திக்குத்தான் இடம், தமிழுக்கு இடமில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமா?

தேசிய ஒருமைப்பாடு பேசும் மேதாவிகள் இதற்குப் பதில் சொல்லட்டும். இந்தியாவை உடைக்கக் கூடியவர்கள் யார் என்பதையும் சிந்தித்துப் பார்க்கட்டும்!

தமிழ்நாடு அரசு வழக்கம்போல 'எழுதியிருக்கிறோம்... சொல்லியிருக்கிறோம்' என்று  வெறும் சம்பிரதாயரீதியாக நடந்து கொள்ளாமல் அண்ணாவை கட்சியின் பெயரில், வைத்துள்ளதற்காவது நாணயமாக நடந்து கொள்ளட்டும்! இல்லையேல் தமிழ்நாடு போராட்டக் களமாக மாறும் என்று எச்சரிக்கிறோம்!

 

தலைவர்,  திராவிடர் கழகம்


சென்னை
4.2.2018

 .
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner