சிங்கப்பூர் பயணம் - சுற்றுலா அல்ல!
இயக்கத் தோழர்கள் பல்துறைப் பெருமக்கள் சந்திப்பு
வழக்கம்போல் படிப்பு, எழுத்துப் பணிகள், சற்று ஓய்வு! சிங்கப்பூர் பயணம் பற்றி தமிழர் தலைவர்
இரண்டு வார காலம் சிங்கப்பூர் பயணம் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அப்பயணம் குறித்து எழுதியவை இங்கே.
அண்மையில் சிங்கப்பூர் நாட்டிற்கு ஒரு குறுகிய கால பயணம் சென்று நேற்று முன்னிரவு சென்னை திரும்பினோம்.
கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட இடையறாத சுற்றுப் பயணங்களும், தொடர்ச்சியான அடர்த்திமிகு நிகழ்வுகளும் சற்று உடல்சோர்வை ஏற்படுத்தின - மனச்சோர்வை அல்ல!
அதிலிருந்து விடுபட்டு இளைப்பாறிடும், ஒரு மாறுபட்ட சூழ்நிலை ஒரு வகை புத்தாக்கத்தை ஏற்படுத்துவது இயல்பு என்ற எதிர்ப்பார்ப்பினாலும், தமிழ்நாட்டில் நடைபெறும் - கொள்கை வயப்பட்ட அரசியலுக்குப் பதில் "கொள்ளை" மயப்பட்ட நிர்வாண அரசியலின் அதி நாற்றத்திலிருந்து தற்காலிகமாக தள்ளியிருந்து சற்று, ஆரோக்கிய காற்றை - சுற்றுச்சூழல் மாசுபடாத நாட்டின் வளர்ச்சியை கற்றுக் கொண்டு திரும்பவும் இவையெல்லாவற்றிற்கும் மேலாக, அங்குள்ள குருதிக்குடும்ப, கொள்கைக் குடும்பத்து உறவுகளைச் சந்தித்து மகிழ்ந்துரையாடி, உறவாடித் திரும்பவும் அங்கு சென்றோம்; திரும்பினோம்.
புத்தகக் கடைகள்
சிங்கப்பூருக்குச் சென்றால் நான் பெரிதும் “படையெடுக்கும்” முதல் இடம் - பிரபல புத்தகக் கடைகள் தானே! அங்கே சென்று சில புத்தகங்கள் வாங்கிப் படித்துப் பயனடைந்து வருகின்றேன் - சில புத்தக அறிவுச் சுளையின் சுவையை உங்களிடம் பிறகு பகிர்ந்து கொள்வேன்.
சென்று இறங்கிய நாளிலேயே இரண்டு துயரச் செய்திகள் எங்களைத் தாக்கின. ‘விடுதலை ராதா’, என்ற விடுதலை தொட்டிலில் வளர்ந்த நம் பிள்ளை ராதா மறைந்தார் என்ற செய்தி; மற்றொன்று சில மணிநேரத்தில் சுமார் 32 ஆண்டுகளுக்கு மேல் நமது நம்பிக்கைக்குரிய வகையில் நம்முடைய தஞ்சை கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த நண்பர் ப.முத்துக்கிருஷ்ணன் அவர்களது மறைவுச் செய்தி - அன்று முழுவதும் இதிலிருந்து வெளியே வர இயலாத துயரத் தாக்குதல்!
பிறகு இயற்கை நியதிப்படி, இயல்பு நிலைக்குத் திரும்பி, அங்கு புத்தகங்கள் படித்தும், ‘விடுதலை', ‘உண்மை'க்கு வழமைபோல் எழுதியனுப்பும் கடமையையும் செய்து சற்று மாற்றமடைந்தோம்.
தொடர் பணிகள்தான் எப்போதும் நம் துயர் துடைக்கும் மாமருத்துவம் ஆகும்; இல்லையா?
பெரியார் பெருந்தொண்டர்கள் சந்திப்பு
குருதிக் குடும்பத்தவர்களுடன் காலத்தைச் செலவிட்டு மகிழ்வதைவிட, நமக்கு அதிகமான அளவு மகிழ்ச்சி இயக்கத் தோழர்கள், இயக்கத்திற்காக அடிநாளில் தொண்டூழியம் செய்து, இன்று சற்று முதுமையில் ஓய்விலிருக்கும் ஒப்பிலாத் தொண்டறச் செம்மல்களைச் சந்தித்து, மரியாதை செய்து - பேசி மகிழ்வதே, நம் இலட்சியப் பயணத்திற்கு மேலும் உரமூட்டும் உற்சாக, உத்வேகப் பணியாகும்!
அதை குறுகிய நாள்களிலும் செய்து குதூகலித்தோம்!
முதுபெரும் பெரியார் தொண்டரும், திருவாரூர் தந்த தியாகபதி, கருஞ்சட்டை அணிந்து வந்தே வணக்கம் தெரிவிக்கும் தோழர் மானமிகு ஆரூர். சபாபதி அவர்கள் - தற்போது 84 வயது. ஓர் அறுவை சிகிச்சையில் (நாக்குப் பகுதி) பேச்சில் சற்று சங்கடம் என்றாலும், பொருட்படுத்தாமல் வழக்கமான நகைச்சுவையுடன் பேசிடும், சிங்கப்பூர் தொலைக்காட்சி நடிகர் அவர்.
அவரைப் பார்க்க இல்லம் செல்ல நாங்கள் அனைவரும் விழைந்தோம். அவரோ "இல்லை நானே வந்து பார்க்கிறேன்" என்றார். சிங்கப்பூரின் மய்யப் பகுதியில் ‘தேக்கா' என்ற "லிட்டில் இந்தியாவில்" உள்ள தோழர் இலியாஸ் அவர்களது "சங்கம் டெக்ஸ்டைல்ஸ் கடைக்கு வருகிறேன். அங்கு வந்து சந்திப்போம்" என்றார். அது பலரைச் சந்திக்கும் ஒரு சந்திப்பு நிலையம் என்றால் மிகையல்ல!
ஆரூர் சபாபதி அங்கே வந்தார். எங்கள் குடும்பத்தவருடன் உரையாடி மகிழ்ந்தார்; மகிழ்ந்தோம். முதுபெரும் பெரியார் தொண்டர் தி. நாகரெத்தினம் அவர்களுடன் இயக்கப் பணியாற்றிய முதுபெரும் தோழர். 50 ஆண்டு காலமாக அறிவேன். எப்போது சென்னை வந்தாலும் பெரியார் திடலைத் தவிர்க்காதவர். கழக நிகழ்ச்சிகளுக்கு வந்து கலந்து கொண்டு, சந்திக்கத் தவறாதவர்.
தொலைபேசி மூலமும், நேரிலும் சந்திப்பு
அவருக்குச் சிறப்புச் செய்து பாராட்டி மகிழ்ச்சி அடைந்தோம் - இருபுறத்திலும் அம்மகிழ்ச்சி!
அதற்கு முதல் நாள், சிங்கப்பூரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தாளராக, கருத்தாளராக, இலக்கிய விமர்சகராக விளங்கும் முதுபெரும் குடிமகனான அய்யா திரு. ஏ.பி. இராமன் அவர்கள் சில நாள்களுக்கு முன் ஒரு விபத்துக்கு ஆளாகி, கால் முறிவு ஏற்பட்டு சிங்கப்பூரின் பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டுள்ள செய்தி அறிந்து (சிங்கப்பூர் செல்லும்போது தவறாது சந்திக்கும் நண்பர்களில் அவரும் ஒருவர், அக்கிரகாரத்து அதிசய மனிதர்!). அவரைக் குடும்பத்துடன் சென்று சந்தித்து நலம் விசாரித்து, உரையாடிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பினோம்.
அடுத்த கணமே நமது நலம் விசாரணை - அன்பை - அவர் வழமைபோல் - முகநூலில் ஒரு சிறு குறிப்புச் செய்தியாகவே வெளியிட்டு நமது வருகையை எல்லோருக்கும் ஊரறியச் செய்து விட்டார்.
பல தொலைப்பேசிகள் - நேரில் சந்தித்து நண்பர்கள் விசாரிப்பு அதன் விளைவு!
அதுபோலவே சிங்கப்பூரில் உள்ள கொள்கைத் தோழரும், முதுபெரும் பெரியார் தொண்டருமான சிறுவணிகர் மானமிகு
கே. இராமசாமி அவர்களை - நாளும் தவறாமல் ‘விடுதலை', ‘உண்மை', ஏடுகளைப் படிக்கும் வெளிநாட்டு வாசகர்களில் முன் வரிசையாளர். எளிமை, சிக்கனம், அடக்கம், திட்டமிட்ட உழைப் பினால் முன்னேறியவர். சட்ட எரிப்பு வீரர், குத்தாலம் பண்டிட் சீனிவாசன் அவர்களின் உறவினர், பெரியார் மய்ய செயற்குழுவின் உறுப்பினர், தவறாது சந்திக்கும் குடும்ப நண்பர் மானமிகு தி. நாகரெத்தினம், மூர்த்தி, முருகு சீனிவாசன் போன்ற கழக நண்பர்கள் வாழ்ந்த காலந்தொட்டே அடக்கமான இயக்க ஆதரவாளர், இன்று வரையில்!
அவருக்குச் சிறப்புச் செய்து, மகிழ்ச்சி அடைந்தோம். அவரும் 80 வயது தாண்டிய முதுகுடிமகன்.
85 வயது எம்.ஆர். சந்திரன்
சிங்கப்பூர் சென்றவர்க்கெல்லாம் சிறப்பு உபசரிப்பாளராகத் திகழ்ந்து, முதுமை காரணமாக விளம்பர வெளிச்சத்தைத் தவிர்த்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நமது 50 ஆண்டு காலத் தோழர் எம். இராமச்சந்திரன் ஆகிய தோழர் எம்.ஆர். சந்திரன், அவரது வாழ்விணையர் திருமதி. பிரேமா ஆகியவர்கள் தவறாது சந்தித்து வருபவர்கள். எங்கள் குடும்பத்துப் பிள்ளைகள் உட்பட அனைவரிடமும் பாசமும், பற்றும், நெருக்கமும் கொண்டவர்கள் என்ற முறையில் அவர்களை வரவழைத்து சில மணி நேரம் பேசி மகிழ்ச்சி அடைந்தோம். 85 வயது நிறைந்த தோழர் எம்.ஆர். சந்திரன் மயிலாடுதுறைக்காரர்; நண்பர் நாகரெத்தினமும், இவரும் இயக்கப் பணிகள் முதல் எல்லா வகைகளிலும் இரட்டையர் போல் வாழ்ந்தவர்கள் ஆவார்.
முதுமையில் இப்படி நண்பர்களை அதுவும் ஒத்தக் கருத்துடைய நெடுநாளைய தோழர்களை சந்தித்து உறவாடுதலைவிட மனதிற்கு இதமானது வேறு எது?
அதுபோலவே உள்ளிக்கோட்டையில் இருந்து சென்று சிங்கப்பூரில் திராவிடர் கழகம் வளர்த்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்; தலைமைக்கு எத்துணை கட்டுப்பாடு காத்த கடமை வீரர்; மானமிகு தோழர் எஸ்.டி. மூர்த்தி. வாழும் காலத்தில்! பின்னாளில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனை, வீடு என்று மாறி மாறி வந்த நிலையிலும், ஆண்டு தோறும் இயக்கப் பணிகள் குறைவின்றி நடக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தவர் மூர்த்தி அவர்கள்.
அவரது வாழ்விணையர் திருமதி சுசிலா அவர்களும், அவர்களது அன்பு மகன் மதியரசன், இவர் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயற்குழு உறுப் பினர்களில் ஒருவர்!
குடும்ப உறவுகளைப் போல இந்த கொள்கை உறவுகளும் பழகிடத் தவறியதில்லை. அவர்களும் புறப்படு முன்பும் வந்து பேசி மகிழ்ந்ததும் மன நிறைவை அளித்தது!
பெரியார் சேவை மன்றத்தினர்
பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் அன்புத் தோழர் கலைச்செல்வம் - மலையரசி தம்பதியினர் பணிச்சுமைகளுக் கிடையிலும் வந்து சந்தித்தனர்; விமான நிலையத்திற்கும் வந்து வழியனுப்பத் தவறவில்லை.
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் முருகு. சீனுவாசன் குடும்பம், நாகரெத்தினம் குடும்பம், மூர்த்தி குடும்பம் - இப்படி எல்லோரும் ஒருவருக்கொருவர் கொள்கையால் பிணைக்கப்பட்ட அன்புக் குடும்பங்கள் - அவர்களின் வழித்தோன்றல்களான கலைச்செல்வம் - மலையரசி, மாறன் - கவிதா, சுசிலா, மதியரசன் குடும்பத்தினர் - இப்படி பலரும், செயலாளர் பூபாலன் குடும்பம் என்றும், பேராசிரியர் இரத்தினகுமார், இராஜராஜன் - தமிழ்ச்செல்வி என்றும் பற்பல குடும்பங்களைச் சந்தித்து மகிழ்பவர்கள் நாங்கள்.
அதுபோலவே சிங்கப்பூரின் சீரிய பகுத்தறிவாளர், "கவிமாலை" உருவாகக் காரணமான கவிஞர் 'புதுமைத் தேனீ' மா. அன்பழகன் அவர்களையும் புறப்படும் நாளில் சந்தித்து மகிழ்ந்து விடை பெற்றோம்.
சிங்கப்பூரின் தமிழ்த் தொண்டரும், சிறந்த சமூக இலக்கிய ஆர்வலருமான முதுபெரும் நண்பர் திரு. சங்கரன் அவர்கள் மிகுந்த பெரியார் - அண்ணா - கலைஞர் மற்றும் திராவிடர் இயக்கப் பற்றாளர். எப்போது போனாலும் நலம் விசாரித்து உரையாடத் தவற மாட்டார். கடலூர் முதுநகரில் அவருக்கு உறவுகளும், உடைமைகளும் உண்டு. எனவே எங்கள் குடும்ப நண்பர்களில் பெருமிதத்துக்குரிய பெரியவர். அவரும் ஒவ்வொரு முறையும் விமான நிலையம் வந்து வழியனுப்பத் தவறாதவர். அவரது தமிழ்ச் சேவையைப் பாராட்டி, அவருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தியதில் எங்களுக்குத்தான் எத்துணை மகிழ்ச்சி!
கொள்கை நட்பு நமக்குக் குறையாச் செல்வம் அன்றோ!
பணி நிமித்தம் சிங்கப்பூரில்
வந்துள்ள தோழர்கள் சந்திப்பு
பணிக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ள கருஞ்சட்டைத் தேனீக்களான கழகத் தோழர்கள் விடுமுறை நாள் என்றில்லாத நிலையில், வீடு தேடி வந்து தங்கள் பாசப் பிழிவைக் கொட்டி மகிழ்ந்தனர்! நாங்களும் இவர்களது கடமை உணர்வைக் கண்டு வியந்து மகிழ்ந்தோம். கடல் கடந்தும் கொள்கை மறத் தோழர்கள் கட்டுப்பாட்டுச் சிப்பாய்கள் எண்ணிறந்தவர் அங்கே உளர் என்றாலும் சிலர் மட்டும் வேலை நாளிலும் வந்து சந்தித்தனர் வீட்டில். மானமிகு தோழர்கள், செந்துறை மதியழகன், ஒரத்தநாடு அறிவரசு, திருவண்ணாமலை சிவா, தெற்குநத்தம் சாமிநாதன், சாலைகிராமம் (சிவகங்கை மாவட்டம்) சேது ஜெகதீசன் இப்படிப் பலரும் (விமான நிலைய வழியனுப்பிலும் வந்தனர்) அனைவருக்கும் எங்கள் மகிழ்ச்சி கலந்த அன்பு நன்றி உரித்தாகும்.
"செம்மொழி" ஆசிரியர் நண்பர் இலியாஸ் அவர்கள் சிங்கப்பூரின் புதுவளர்ச்சி பற்றி விளக்கிடும் வாய்ப்பை ஒவ்வொரு முறையும் ஏற்படுத்தத் தவறாதவர் - புதிய நாடாளுமன்றக் கட்டடம் அலுவல் முறைபற்றித் தெரிந்திட வற்புறுத்தி வாய்ப்பை ஏற்படுத்தினார்; அதுபற்றி நாளை எழுதுவோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
18-6-2017