எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசு பணியில் இருக்கும் மருத்துவர்களின்

முதுநிலைப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா?

நீதிமன்றத் தீர்ப்புக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டம் செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

தமிழ்நாட்டுக்கு ஏன் நிரந்தர ஆளுநர் இல்லை? - கி.வீரமணி கேள்வி

அரசுப் பணியில் இருந்துவரும் மருத்துவர்களுக்கு முதுநிலைப் பட்டப் படிப்பிற்கு அளித்து வந்த 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருப்பது அதிர்ச்சிக்குரியது. தமிழ்நாடு அரசு அவசர சட்டம்மூலம் இவ்வாண்டுக்கான வாய்ப்புப் பறிபோகாமல் தடுத்திட ஆவன செய்யவேண்டும்  என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

சமூகநீதி மீது இடிக்கு மேல் இடி விழுந்து கொண்டிருக்கிறது. இதில் மத்திய பி.ஜே.பி.,க்கு முதலிடமா? நீதிமன்றத்திற்கு முதலிடமா? என்ற போட்டிப் பந்தயம் நடைபெறுவதாகத் தெரிகிறது.

‘நீட்’டை எடுத்துக்கொண்டால் மத்திய பி.ஜே.பி. அரசும், நீதிமன்றமும் கைகோத்துக் கொண்டு சவாரி செய்கின்றன.

அரசு பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கான வாய்ப்பைத் தடுப்பதா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 17 ஆம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் இரண்டாண்டுகள் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முதுநிலை கல்வி பெறுவதற்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது - தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த நடைமுறையாகும்.

இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இது தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றம் அப்படியொரு தீர்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

எந்த நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கினாலும், அது தவறுதான். முதுநிலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் அதிகம் தேவைப்படும் காலகட்டம் இது. இரண்டாண்டுகள் கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு மேலே படிக்க ஊக்கம் கொடுக்கவேண்டியது ஓர் அரசின் கடமையாகும். இந்த நிலையில், தேவையில்லாமல் எதற்காக நீதிமன்றம் இதுபோன்ற பிரச்சினைகளில் மூக்கை நுழைக்கவேண்டும்? மக்கள் விகிதாச்சார மருத்துவர்கள் தேவை பூர்த்தியாகிவிட்டதா? இல்லையே! பணியாற்றும் மருத்துவர்களிடம் இது மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்திவிடும்.

தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம்!

கல்வி வளர்ச்சி என்று வருகின்றபோது தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகும், சமூகநீதி செழித்துக் குலுங்கும் பூமியாகும். இங்குப் பின்பற்றப்படும் நடைமுறை இந்தியாவுக்கே தேவைப்படும் ஒன்றாகும்.

இன்னும் சொல்லப்போனால், சமூகநீதிக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்து, தந்தை பெரியார் முக்கால் நூற்றாண்டுகளுக்குமேல் உழைத்து உருவாக்கிய தனித்தன்மை என்னும் மணம் கமழும் நிலமாகும் (Soil Psychology).

தனிச் சட்டம் கொண்டு வந்து

69 சதவிகிதத்தைக் காத்த மாநிலம்

50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு விஞ்சக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் கூறிய நிலையில், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை புதிய சட்ட ரீதியாகப் பாதுகாத்த பெருமை திராவிடர் கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் உரித்ததாகும்.

தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே அறிந்திராத முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சமூகநீதியில் வருமான அளவு கோலைக் கொண்டு வந்த காரணத்தால் கனமான தோல்வியைப் பரிசாக அளித்த சமூகநீதி மண்!

நீதித் துறையிலும் தேவை இட ஒதுக்கீடு!

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்ற குரலை ஓங்கி ஒலிப்பதிலும் இந்த மண்தான் முன்னணிப் படையாக இருக்கப் போகிறது.

‘நீட்’ என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியாவிலேயே தனி மாகாணமாக நின்று எதிர்த்துத் தன் தனித்தன்மையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

‘நீட்’டின் பாதிப்பை ஓரிரண்டு ஆண்டுகளில் அனுபவித்த நிலையில், மற்ற மற்ற மாகாணங்களும் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கத்தான் செய்யும்.

மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக

ஏன் அறிவிக்கவில்லை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’டை எதிர்த்து நிறைவேற்றப் பட்ட சட்டம் என்னாயிற்று? என்பதை மத்திய அரசு அதிகாரப் பூர்வமாக அறிவிக்காதது ஏன்?

ஆளுங்கட்சி கோஷ்டிச் சண்டை முடிவது எப்போது? உண்மை யான ஆட்சி - ஆளுமை செயல்படுவது எப்போது? - இதுதான் இன்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி.

அது ஒருபக்கம் இருக்க, இப்பொழுது அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள சமூக அநீதியைத் தடுத்து நிறுத்திட அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறோம்.

பிரதமரிடம் வலியுறுத்தி

வெற்றி பெறவேண்டும்

வரும் ஞாயிறன்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரைச் சந்திக்கும்பொழுது, தமிழ்நாட்டின் கொதி நிலையை நேரடியாக எடுத்துக்கூறி, தமிழ்நாட்டின் நலனையும், சமூகநீதி உறுதியையும் நிலைநாட்டி வருமாறு வற்புறுத்துகிறோம்.

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner