எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் உட்பட பல்வேறு முக்கிய தீர்மானங்களை வலியுறுத்தி

தமிழ்நாட்டில் ஏப்.25 முழு அடைப்புப் போராட்டம்

* 22ஆம் தேதி தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம்

* 'நீட்' தேர்வு தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு அங்கீகாரம் தேவை

தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள்

சென்னை, ஏப்.16 சென்னை கலைஞர் அரங்கில், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் இன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

இரங்கல் தீர்மானம் (4ஆம் பக்கம் காண்க)

தீர்மானம் - 1 :

விவசாயிகளும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தியப் பிரதமருடன் சந்திப்பு

நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 34 நாட்களாக இந்திய நாட்டின் தலைநகராம் டில்லியில் பாம்பு தின்னும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், முழு நிர்வாணப் போராட்டம், சேலை கட்டிய போராட்டம் என்று பல் வேறு வடிவங்களிலான போராட்டங்களை தொடர்ந்து தமிழக விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டங்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் சென்று ஆதரவு தெரிவித்தாலும், மாநில முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக விவசாயிகளை டில்லி சென்று சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களின் விவசாயிகளுக்கு தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தமிழக நலன்களுக்காக - குறிப்பாக விவசாயிகளின் நலன்களுக்காகத் தன்னெழுச்சியான முறையில் ஜனநாயக ரீதியில் போராடுவது விவசாயிகள் அமைத்துள்ள போராட்டக் களத்திற்கு வலிமை சேர்த்துள்ளது.  அதேநேரத்தில் நாட்டின் தலைநகரில் இத்தனை நாட்களாக உயிரைப் பணயம் வைத்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அழைத்துப் பேசி அவர்களது பிரச்சினைகளை விவாதித் துத் தீர்வு காணச் சிறிதும் ஆர்வம் காட்டாமல் இருப்பது குறித்து இக்கூட்டம் ஏமாற்றத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. ஆகவே டில்லியில் போராடும் விவசாயிகளுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து பிரதமர் அவர்களைச் சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி உரிய தீர்வு காணத் தேவை யான முயற்சிகளை மேற்கொள்வதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் - 2 :

காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு உடனே உருவாக்கப்பட வேண்டும்

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத் திற்குத் தண்ணீர் கிடைக்காததால் தமிழக விவசாயிகள் சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.  02.-06.-1990இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, 25-.06.-1991இல் இடைக்காலத் தீர்ப்பு வெளி வந்தது. பிறகு 05-.02.-2007 அன்று இறுதித் தீர்ப்பும் வெளிவந்து, அந்த இறுதித் தீர்ப்பு 19.-02.-2013 அன்று அரசிதழிலும் வெளியிடப்பட்டு விட்டது. ஆனாலும் இந்தத் தீர்ப்பை நடை முறைப்படுத்தத் தேவையான காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 30-.09.-2016 அன்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும், மத்திய அரசு அமைக்க முன்வரவில்லை. தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, கடந்த 05.-09.-2016 அன்றிலிருந்து இன்று வரை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள், எதையுமே கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில் திடீரென்று அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளுக்கும் “அனைத்து நதிநீர் தாவாக்கு களுக்கும் ஒரே நிரந்தர நடுவர் மன்றம்“ (ஷிவீஸீரீறீமீ றிமீக்ஷீனீணீஸீமீஸீt ஜிக்ஷீவீதீuஸீணீறீ யீஷீக்ஷீ ணீறீறீ வீஸீtமீக்ஷீstணீtமீ ஷ்ணீtமீக்ஷீ பீவீsஜீutமீs) அமைப்பதற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்திருப் பதன் மூலம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினால் தமிழகத் திற்குக் கிடைத்த உரிமைகள் தட்டிப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒற்றை நடுவர் மன்றம், இந்த நடுவர் மன்றம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, புதிய பிரச்சினைகளைத் தோற்று வித்திடக் கூடும் என்பதால், அந்த அமைப்பே தேவை யற்ற ஒன்று என்ற கருத்தும் பரவலாக நிலவுவதால், அதை மத்திய அரசு மறுபரிசீலனைக்கு உட்படுத்திட வேண்டும்.  எந்த வகை யிலும் காவிரி இறுதி தீர்ப்பு பாதிக்கக் கூடாது . ஏற்க னவே உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் கடந்த அய்ந்து வருடங்களாகக் குறுவை, சம்பா உள்ளிட்ட அனைத்து வகை விவசாயமும் பாதிக்கப்பட்டு, காவிரி டெல்டா பகுதியே வறண்ட பிரதேசமாகி விட் டது. ஆகவே நீண்ட காலமாகப் போராடி காவிரி நடுவர் மன்றத்தின் வாயிலாகக் கிடைத்திடப் பெற்றிருக்கும் தமிழக உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில், உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை ஏற்கெனவே நடுவர் மன்றம் ஆணையிட்டவாறு அமைத்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், அவற்றைத் தாமத மின்றி அமைத்திட, மத்திய அரசுக்கு மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு முழு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 3 :

விவசாயிகளின் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்க!

தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போனதால் கூட் டுறவு வங்கிகளிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களிலும் வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்த முடி யாமல் வறுமையில் வாடும் விவசாயிகள் அங்கே டில்லி ஜந்தர் மந்தரிலும், இங்கே மாநிலம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்த கடந்த கால வரலாறு மத்திய அரசில் உண்டு என்றாலும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு.உர்ஜித் பட்டேல் அவர்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது வங்கிகளின் கடன் கொள்கைக்கு எதிரானது என்று கூறியதற்கும், அதை ஏற்றுக் கொண்டு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்தற்கும் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. உத்தரப்பிரதேசத்தில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கும் ஆட்சி பா.ஜ.க ஆட்சி. அதே கட்சியான பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மத்தியில் நடைபெறுவதால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உதவிட வேண்டுமென்றும் மத்திய அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 4 :

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய மறுத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் அனைத்துத் தரப்பு விவசாயிகளின் கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், இதுவரை விவசாயிகள் கடன்களை அதிமுக அரசு தள்ளுபடி செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டு இருப்பதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மாண்புமிகு நீதியரசர்கள் விவசாயிகளின் துயர நிலையறிந்து அவர்களுக்குத் துணைபுரியும் வண்ணம் அளித்துள்ள தீர்ப்பை அதிமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், அனைத்து தரப்பட்ட விவசாயிகளுக்கும் 2017--18 ஆம் ஆண்டிற்குரிய மத்திய காலக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை வங்கிகள் கடன் வசூல் நடவடிக்கைகளை உடனடியாக ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டுமென்றும் மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5 :

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களைத் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்

தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியாலும், விவசாயம் பாதிக்கப்பட்டதாலும் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டார்கள். ஆனால் அதிமுக அரசோ 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாகக் கற்ப னையாக ஒரு கணக்கைக் காட்டி, விவசாயிகளின் தற் கொலையை மனசாட்சியின்றி மறைத்ததற்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது. அனைத்து மாவட்டங்களும் வறட்சியில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்று 10-.1-.2017 அன்று அறிவிப்பு வெளியிட்ட அதிமுக அரசு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் தனியாக அறிக்கை கேட்டுப் பெற்று அவர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும் என்று உறுதியளித்தது. ஆனால் இதுவரை தற்கொலை செய்து கொண்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித நிதியுதவியும் வழங்கவில்லை. அவர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி அல்லல்பட்டுத் தவிக்கின்றன. 13.-04.-2017 அன்று விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கில், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்காமல் மாநில அரசு அமைதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாநில அரசு தன் கடமையிலிருந்து தவறி விட்டது. விவசாயிகளை வறுமையிலிருந்து மீட்க சுட்டு விரலைக் கூட அசைக்காமல் ஒரு மாநில அரசு வேடிக்கை பார்ப்பதா? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு தீபக் மிஸ்ரா அவர்கள் தலைமையிலான அமர்வு அதிமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தக் கூட்டம், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் அனைத்திற்கும் உரிய நிதியுதவி வழங்கி, வறுமையில் வாடும் அந்த விவசாயிகளின் குடும்பங்களைக் காப்பாற்ற அதிமுக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 6 :

காவிரி டெல்டா பகுதிகளை,

சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திடுக!

காவிரி டெல்டா பகுதிகள் விவசாயத்தில் நலிவடைந்து, விவசாயிகளுக்கு தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. பயிர்க்காப்பீட்டுத் தொகை கூட குறித்த காலத்தில் கிடைப்பதில்லை. விவசாயிகளின் பிள்ளைகள் வாங்கிய கல்விக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. விவசாயிகளின் விளைபொருட் களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல், நெல் விவசாயிகள், கரும்பு விவசாயிகள், மஞ்சள் விவசாயிகள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களின் விளை பொருட்களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், விவசாயத்தில் மிகவும் நலிவடைந்த காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.  தங்களுக்கு ஏற்பட்ட பயிர்சேதங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியி ருக்கும் நிலையில், நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 5,465 ரூபாயும், மானாவரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் மட்டுமே அறிவித்து, அந்த நிவாரணம் அனைத்தும் விவசாயிகளுக்கு போய்ச் சேரவில்லை என்பதை இக்கூட்டம் பதிவு செய்கிறது.  எனவே, சிறு மற்றும் குறு விவசாயிகள் என்று பாகுபாடு பார்க்காமல், அனைத்து விவசாயிகளுக்கும் நெற்பயிர் மற்றும் மானாவரி பயிர் நிவாரணத்தை உயர்த்தி வழங்கிட அதிமுக அரசு உடனே நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 7 :

விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிடுக!

வறட்சியின் காரணாக தமிழகம் முழுவதும் விவசாயம் பொய்த்துப் போனதால், விவசாயிகள் மட்டுமன்றி, விவசாயத் தொழிலாளர்களும் மிகப் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  அவர்களுடைய குடும்பங்கள் ஒரு வேளை உணவுக்கும் தவிக்கின்ற நிலை உருவாகி உள்ளது. எனவே, மீன்பிடித் தடை காலங்களில், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் போல, விவசாயம் பொய்த்துப் போயிருக்கும் இக்காலம் முழுவதும் தமிழகத்தில் உள்ள  விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கிட வேண்டுமென மத்திய, மாநில அரசு களை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 8 :

அண்டை மாநிலங்கள் தடுப்பணைகள்

கட்டுவதைத் தடை செய்க!

தமிழகத்தின் உரிமைகளை அபகரிக்கும் விதமாக ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டுகிறது. கேரளா, பாம்பாற்றில் தடுப்பணைகளைக் கட்டுகிறது; நெய்யாற்றிலிருந்து தமிழகத்திற்குச் சேர வேண்டிய நீரைத் தடுக்கிறது; சிறுவாணி நீரைத் தேக்கி வைக்கத் திட்டம் போடுகிறது. கர்நாடக மாநிலமோ மேகதாதுவில் புதிய அணை கட்டத் திட்டம் தீட்டி நிதியே ஒதுக்கியிருக்கிறது. போதாக்குறைக்கு ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரை ஆழமான ராட்சதக் கிணறுகள் தோண்டி கர்நாடக அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது. அண்டை மாநிலங்களுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தியோ அல்லது சட்டபூர்வமாக அணுகியோ தமிழகத்தின் உரிமை கள் பாதிக்கப்படாதவாறு அதிமுக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசும் தமிழக நலன்களைப் பாதிக்கும் புதிய அணைத் திட்டங் களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 9 :

மீத்தேன் திட்டமும், ஹைட்ரோ கார்பன்

திட்டமும் கைவிடப்பட வேண்டும்

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டத்தையும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமாக துவங்க மாட்டோம் என்று மத்திய அரசு பலமுறை உறுதியளித்தது. தமிழக பா.ஜ.க. தலைவர்கள், மத்திய அமைச்சர் ஆகியோர் விவசாயிகள் விரும்பவில்லை என்றால் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது என்று நெடுவாசலில் போராடிய விவசாயப் பெருங்குடி மக்களிடம் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் இந்த வாக்குறுதிகளை எல்லாம் மீறி இப்போது மீத்தேன் திட்டம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிடுவது முற்றிலும் தமிழக விவசாயிகளின் நலனுக்கு மாறானது. விவசாயிகளும் கிராம மக்களும் நெடுவாசலில் போராடிக் கொண்டிருக்கும் போதே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தனியார் கம்பெனிகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டதை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது. மீத்தேன் திட்டத்தையும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் நிறைவேற்றுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், அதிமுக அரசு அதற்குரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 10 :

நெல் - கரும்புக்கு நியாய விலை!

நெல்லுக்கும் கரும்புக்கும் மற்ற விளை பொருள்களுக்கும் அடிப்படை ஆதார விலையை கட்டுபடியாகும் வகையில் உரிய முறையில் நிர்ணயித்தால்தான் விவசாயிகளால் தொடர்ந்து  வேளாண்மை செய்ய முடியும். மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசு நெல் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு 1,520 ரூபாய் என நிர்ணயித்தபோது, விவசாயிகள் இது நியாயமான விலை அல்ல எனத் தெரிவித்ததையடுத்து, நெல் கொள்முதல் விலையை குவிண் டாலுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் என்று அனைத்து விவசாயிகளும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.  அதுபோலேவே கடந்த  சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு டன் கரும்புக்கு அ.தி.மு.க அரசு நிர்ணயித்த 2,850 ரூபாய் என்ற ஆதாரத் தொகையினால் விவசாயிகள் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாயினர். தற்போதுள்ள நிலையில், ஒரு டன்னுக்கு ரூ.4ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகிறார்கள்.  அவர்களின் நியாய மான  கோரிக்கையை ஏற்று ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாயும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2.500 ரூபாயும் வழங்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 11 :

கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்குக!

கடந்த 2015--16 ஆம் ஆண்டில் கரும்பு டன்னுக்கு ரூ.2,300 அளிக்கப்பட்டது. அப்போது  சர்க்கரை  விலை  டன்னுக்கு ரூ.26 ஆயிரம் என விற்கப்பட்டது. ஆனால்  சர்க்கரை விலை டன்னுக்கு ரூ.40 ஆயிரம் விற்கப்பட்டபோதும் மத்திய அரசு ரூ.2,300  அளிப்பதை விவசாயிகள் எதிர்த்து வருகிறார்கள். இந்தத்  தொகையும் முழுமையாக அவர் களுக்கு வழங்கப்படவில்லை. கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கான தொகையை சர்க்கரை  ஆலைகள் நிலுவையில் வைத்துள்ளன. உடனடி உத்தரவாக தனியார் சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்துள்ள ரூ 1,850 கோடியும், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலை களில் நிலுவையாக வைத்துள்ள 450 கோடி ரூபாயும் சேர்த்து 2,300 கோடி ரூபாயை  உடனே  வழங்கவும் ஆணை பிறப் பிக்க வேண்டும்.  மக்களவைப் பொதுத்தேர்தலில் விவசாயிகளுக்கு குறிப்பாக, கரும்பு விவசாயிகளுக்கு அளித்த  வாக்குறுதிகளை மத்திய அரசும், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கொடுத்த வாக்குறுதிகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டம் வலி யுறுத்துகிறது.

தீர்மானம் - 12 :

முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை

152 அடி உயர்த்திட உடனே நடவடிக்கை வேண்டும்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியும், பிறகு 152 அடி வரையும் உயர்த்திக் கொள்ளலாம் என்று 27-.2-.2006 மற்றும் 7-.5.-2014 ஆகிய  தேதிகளில் வழங்கிய தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 142அடி நீர் மட்டம் உயர்த்தப்பட்டாலும், இன்னும் 152 அடி உயர்த்து வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்படவில்லை என்பதை இந்தக் கூட்டம் கவலையுடன் பதிவு செய்கிறது. ஆகவே  தென் மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளை மனதில் கொண்டு, முல்லைப் பெரியாறின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 13 :

சட்டப்பேரவைச் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டுக!

விவசாயிகள் தற்கொலை, பயிர்க்கடன் தள்ளுபடி, நியாயமான அளவுக்கு உயர்த்தப்பட வேண்டிய வறட்சி நிவாரணம், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பைப் பாதிக்கும் உள்நோக்கத்துடன் அமைக்கப்படும் அனைத்து நதிநீர் தாவாக்களுக்குமான நிரந்தர நடுவர் மன்றம், கரும்பு, நெல் விவசாயிகளுக்குக் கட்டுபடியாகக் கூடிய நியாயமான கொள்முதல் விலை, கரும்புக்கான நிலுவைத் தொகை, ஆறுகள் மற்றும் அணைகளைத் தூர்வாருதல், மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம்  உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள்  சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகாண வலியுறுத்தி, டெல்லி மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால்  பொது அமைதிக்குச் சோதனை ஏற்பட்டு தமிழகத்தில் நெருக்கடியானதும் - அசாதாரணமானதுமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே விவசாயிகளின் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தீர்மானங்கள் மேற் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழகச் சட்டமன் றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண் டும் என்று இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது

தீர்மானம் - 14 :

குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கப்

போர்க்கால நடவடிக்கை தேவை

பருவ மழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. அனைத்து மாவட் டங்களிலும் குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. குறிப்பாக, சென்னை மாநகரத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீரையோ, பாலாறு நதி நீரையோ, காவிரி நதி நீரையோ, சிறுவாணி நீரையோ உரிய அளவு பெறத் தவறிய அதிமுக அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தால் இன்றைக்கு தமிழக மக்கள் குறிப்பாகத் தாய்மார்கள் இதுவரை இல்லாத அளவிற்கு ஆங்காங்கே குடிநீருக்காகக் காலிக் குடங்களுடன் போராட் டங்களிலும், மறியல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக அரசு மக்களின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யவோ, இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி நீர் ஆதாரம் அளிக்கும் ஏரிகளைத் தூர் வாரவோ எவ்வித முயற்சியும் எடுக்காமல் மக்கள் படும் அவதிகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அதிமுக அரசு மேலும் தாமதமின்றிப் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குடிநீர் கிடைக்காத இடங்களில் லாரிகள் மூல மாகவோ அல்லது வேறு வழிகள் மூலமாகவோ மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டுமென்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 15 :

முழு மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்துக!

மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற அதிமுக அரசு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூடாமல் இருப்பதும், அப்படி மூடிய கடை களை அதே பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி களில் திறப்பதற்கு முயற்சி செய்வதும் கடும் கண்டனத் திற்குரியது. அதே போல் உச்சநீதிமன்றம் 15-.12.2016 மற்றும் 31.-03.-2017 ஆகிய தேதிகளில் அளித்த தீர்ப்புகளில் இருந்து திசைதிருப்பிட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை வகை மாற்றம் செய்ய மாநில அரசு முயற்சிப்பதைக் கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தன்னெழுச்சியாகப் போராடும் மக்களைத் தடுக்கும் நோக்கத்தில் திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அமைதியாகப் போராடிய பெண்கள் மீது கண்மூடித்தனமாகத் தடியடி நடத்திய காவல்துறைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளுவதோடு, தடியடி நடத்தி வன்முறை யில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், மக்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த இடத்திலும் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்றும்,

சட்டம்-ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு, சமுதாய முன்னேற்றம், சாலை விபத்துக்களை தடுப்பது உள்ளிட்ட வற்றை மனதில் கொண்டு மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் மது வருவாயை விட மக்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் மிகமுக்கியம் என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்த விரும்புகிறது.

அதனால் டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மாற்று பணி வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 16 :

நீட் தேர்வு கூடாது

தமிழக மசோதாவுக்கு உடனடி ஒப்புதல் தேவை! மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் நீட் தேர்வு 18.7.2013 அன்றே உச்சநீதிமன் றத்தால் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு மறு சீராய்வு மனுவை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அவசரமாகத் தாக்கல் செய்து, அந்தத் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போதே நீட் தேர்வு அமலுக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி பாடத் திட்டம் இருக்கிறது. தனித்தனி பயிற்று முறை இருக்கிறது. ஆகவே அனைத்து மாணவர்களுக்கும் அகில இந்தியத் தேர்வு என்பது கிராமப்புற மாணவர் களையும், நகர்ப்புறத்திலுள்ள ஏழை எளிய மாணவர்களையும் பெரிதும் பாதிக்கும். நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு நகர்ப்புறத்தில் உள்ள பயிற்சி வசதிகள், கோச்சிங் மையங் கள் கிராமப் புறங்களில் இல்லை. ஆகவே நகர்ப்புற மாண வர்களுடன் கிராமப்புற மாணவர்கள் சரிசமமாக போட்டி யிட்டு நுழைவுத் தேர்வை எழுத முடியாது. நகர்ப்புறத்திற்கு மருத்துவர்கள் தேவை என்பதைப் போல், கிராமப் புறங்களுக்கும் மருத்துவர்கள் தேவை. ஏனென்றால் கிராமப்புற சுகாதாரம் மிகமுக்கியம் என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பின் சாராம்சத்தைக் கூட எடுத்துக் கொள்ளாமல் மத்திய அரசு நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மத்தியில் திணித்தது.

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க 1.3.2017 கடைசி தேதி என்ற நிலையில் அனைத்துக் கட்சிகளின் வற்புறுத்தலின் பேரில் 1.2.2017 அன்று தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இப்போது மே 7-ஆம் தேதி நீட்தேர்வு நடைபெறவுள்ள சூழ்நிலையில், அதிமுக அரசு மாணவர்கள் எதிர்கால நலன் பற்றியோ சமூகநீதி பற்றியோ எவ்வித அக்கறையும் காட் டாமல், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெறாமல் செயலிழந்து நிற்கிறது. இதனால் கிராமப்புற மாணவர்களும், நகர்ப் புறத்தில் உள்ள ஏழை மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்பியிருந்த வேளையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நட்டா அவர்கள், மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் கட்டாயம் நீட் தேர்வு நடக்கும். இந்த தேர்வில் பங்கேற்கும் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறோம் என்று கூறியிருப்பதை இந்த கூட்டம் அதிர்ச்சியுடன் பதிவு செய்கிறது. தமிழக சட்ட மன்றத்தின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அமைச்சர் இப்படி பேட்டி கொடுத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று கொடுமையாக இருக்கிறது. ஆகவே   நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கு அதிமுக அரசு உடனடியாக அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 17 :

கடும் வறட்சி நிலவும் இந்நேரத்தில் ரேசன் கடைகளில் பொருட்கள் தங்குதடையின்றி வழங்குக!

கடும் வறட்சி நிலவும் இந்த நேரத்தில் மாநிலம் முழுவதும் பொது விநியோகத் திட்டம் மிகவும் கவனமாக செயல்படுத்தப்பட வேண்டியது மிக மிக அவசியம். ஆனால் தற்போது ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வில்லை என்று தாய்மார்கள் ஆங்காங்கே போராடும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதிலும் உள்ள ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்ப தற்கு அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கூட்டம் மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 18 :

தேசிய பேரிடர் மாநிலமாக அறிவித்திடுக!

தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால், கடும் வறட்சி நிலவுகிறது.  வறட்சி மற்றும் வர்தா புயல் நிதியாக 62 ஆயிரம் கோடியே 138 ரூபாய் மத்திய அரசிடம் நிதி கோரியும், வெறும் 2014.45 கோடி ரூபாய் மட்டும் வறட்சி நிவாரணமாக மத்திய அரசு வழங்கியிருப்பதற்கு இந்த கூட்டம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஆண்டுதோறும் தமிழகத்தில் பெய்யும் மழையின் அளவு 20 சதவிகிதத்திற்கும் குறைவாகப் பெய்த காரணத்தால், இந்த வறட்சியை தேசியப் பேரிடராக மத்திய அரசு கருதி, தமிழகம் முழுவதையும் தேசியப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து, சட்டப்படி தேசியப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண் டிய அனைத்து உதவிகளையும் செய்வதுடன், மாநில அரசு கோரிய நிதி முழுவதையும் மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 19 :

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்

வறட்சி மற்றும் காவிரி நீர் கிடைக்காத கொடுமையின் காரணமாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 25.4.2017 அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது  என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களையும் - முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கான காரணங்களையும் மக்களுக்கு விளக்கிடும் வகையில், சென்னையில்  22-.4.-2017 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.

விவசாயிகளின் நலன் கருதி மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில், தொழிற் சங்கங்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேராதரவு தந்து விவசாயிகளின் துயர் துடைக்க துணை நிற்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறது.

 

இரங்கல் தீர்மானம்

தற்கொலை செய்து மாண்ட

விவசாயிகளுக்கு இரங்கல்

தமிழக விவசாயிகள் மத்திய மாநில அரசுகளின் பயனற்ற அணுகுமுறையினாலும் பரிவு சிறிதும் இல்லாத நடவடிக்கைகளினாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து  பெரும் துயரத்தில் உள்ளனர். பட்டினிச் சாவு தவிர்க்கப் பட்டு வந்த மாநிலத்தில்  தற்போது தற்கொலைச்  சாவுகள் அதிகரித்துள்ளன. குறுவை-சம்பா சாகுபடி மட்டுமின்றி, மானாவாரி பயிர்களைக் கூட விளைவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதால் உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகள், வானம்  பார்த்து ஏங்கி நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தாங்கிக் கொள்ள முடியாத கடன் சுமை, திருப்பி செலுத்த இயலாத வங்கிக் கடன், விவசாயிகள் பெற்ற கடன் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பெற்ற கல்விக் கடன் ஆகியவற்றை வசூலிக்க வங்கி அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடிகள் போன்றவற் றால்  இதுவரை 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

 

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் (தி.மு.க.) ஆர்.எஸ். பாரதி, எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் (தி.மு.க.) டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி.,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சு. திருநாவுக்கரசர், விவசாய பிரிவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பவுன்குமார், தமிழ் மாநில குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ் மாநில குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார், திராவிடர் கழகம் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் குமாரதேவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாகிருல்லாஹ், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர்

ஈ.ஆர். ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்

என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கள் கட்சி தலைவர்  பொன். குமார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மாநில பொதுச்செயலாளர் மலர் இரா. ஆறுமுகம், இந்திய சமூக நீதி இயக்கம் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், இந்திய சமூக நீதி இயக்கம் பொதுச் செயலாளர் பா.ஸ்டீபன் ஜெப மாரிஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில துணைப் பொதுச்செயலாளர் திருச்சி வெங்கடேஷ், எம்.ஜி.ஆர். கழகம் நிறுவனத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆர். கழகம் பொதுச்செயலாளர் ராமலிங்கம், ஆதித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழ்மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், பி.எம். அம்மாவாசி (நிறுவன தலைவர், அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு)), எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம்), இனிகோ இருதயராஜ் (தலைவர், கிறிஸ்த்துவ நல்லெண்ண இயக்கம்), பஷீர் அகமது (தலைவர், இந்திய தேசிய லீக்), எம். தங்கவேல் (பொதுச்செயலாளர், நமது கொங்கு முன்னேற்றக் கழகம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner