Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.24-மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் க.இசக்கிமுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தில் தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினை தலைமை கழகம் அனுப்பி வைத்தது. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்கெனவே தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி நடக்க இருந்த மதுரை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இருப்பினும் மதுரை தி.மு.க நிர்வாகிகள் சிலர் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பதை பத்திரிகைகளில் வெளியிட்டு இருந்தனர்.

அது பற்றி விவரம் கேட்டு அந்த நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. தலைமைக் கழகத்தின் சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் தேர்வுக்காக மதுரை சென்ற போதும், அங்கு தலைமைக் கழகம் அறிவித்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதும், மதுரை மாநகர் தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதங்களை சிலர் மதிக்கவில்லை.

மதுரை மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் க.இசக்கிமுத்து எழுதியுள்ள பதில் கடிதத்தில், டி.கே.எஸ். இளங்கோவனுக்கு எங்களை கேள்வி கேட்க உரிமை இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் தலைமைக் கழகத் தை மதிக்காமல் இவ்வாறு எழுதியிருப்பது கட்சியின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறிய செயல். எனவே, மதுரை மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் க.இசக்கிமுத்து கட்சியின் சாதாரண உறுப்பினர் உள்பட எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுகிறார். அடுத்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் போதும், அவர் உறுப்பினராக சேரவும் தகுதியற்றவர் என்று தலைமைக் கழகம் அறிவிக்கிறது. அவரைத் தவிர மற்றவர்களிடம் கேட்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கு அவர்கள் அனுப்பும் விளக்கத்தைப் பொறுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Banner