எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர்

ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019)

தொகுப்பு: மின்சாரம்

* தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி

* பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி கொள்ளைக் கூட்டணி

* நீட்' தி.மு.க. அணியின் கொள்கை என்ன? பி.ஜே.பி. அணியின் கொள்கை என்ன?

* மோடி கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று?

* உணவில்கூட மத வெறியா?

* மோடியின் ஊழல் வானத்தில் பறக்கிறதே!

* வீட்டில், நாட்டில் விளக்கெரிய நீங்கள் என்ன செய்யவேண்டும்?

எனக்கு வயது 86. 17 தேர்தல்களைச் சந்தித்து வந்தி ருக்கிறேன். இந்த 17 ஆம் மக்களவைத் தேர்தலைப்போல இவ்வளவு மோசமான தேர்தலை நான் சந்தித்ததில்லை.

***

கூட்டணிக்குப் 'புது தத்துவம்!'

கூட்டணிக்குப் புது தத்துவம் சொல்லுகிறார்கள்; கொள்கை வேறு - கூட்டணி வேறு என்பதுதான் அந்தத் தத்துவமாம்.'

***

காலையிலும், மாலையிலும் மாறி மாறி தகவல்கள் வருகின்றன. ஒரே நேரத்தில் இரு அணிகளிலும் இருவரை அனுப்பி கூட்டணி பேசுகின்றனர். மாட்டுச் சந்தையில் வாயால் பேசமாட்டார்கள்; கையில் துணியைப் போட்டுப் பேசுவார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. தேர்தல் கூட்டணியிலும் அதுதான் நடக்கிறது.

***

யுத்த களத்தைப்போல் தேர்தல் களத்திலும் முதல் பலி உண்மைதான்!

யுத்த காலத்தில் முதல் களப்பலி உண்மை என்பார்கள். இப்பொழுது தேர்தல் களத்தில் நரேந்திர மோடி அதைத் தான் செய்துகொண்டுள்ளார்.

***

மூர்மார்க்கெட் மோடியும் - பிரதமர் மோடியும்!

மோடி வித்தை என்று சொல்லுவார்கள். மூர்மார்க் கெட்டில் மோடி மஸ்தான் கீரிக்கும் - பாம்புக்கும் சண்டை என்று கூறுவான்; கூட்டம் கூடிடும். இந்தத் தாயத்தை விலை கொடுத்து வாங்கினால் தீராத நோயெல்லாம் தீரும்; பேய்ப் பிசாசு அண்டாது என்று கதை அளப்பான். இந்தத் தாயத்தை நீங்கள் வாங்காது போனால், இரத்த வாந்தி எடுப்பீர்கள் என்று அச்சுறுத்துவான். அவ்வளவுதான், யாரிடமாவது கடன் வாங்கியாவது அந்தத் தாயத்தை வாங்குவான். கடைசியாக கீரிக்கும், பாம்புக்கும் இதே இடத்தில் நாளை சண்டை என்று கூறி பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்பி விடுவான். அந்த மோடிக்கும், இந்த மோடிக்கும் அதிக வேறுபாடு இல்லை.

***

மோடி என்ற சொல்லுக்கு

அகராதி தரும் பொருள் என்ன?

மோடி என்ற சொல்லுக்கு அர்த்தம் பார்க்க அகராதி யைத் தேடினேன்; அதில் சொல்லப்பட்டுள்ள பொருள் என்ன தெரியுமா? மோடி என்றால், செருக்கு, பகட்டு, வஞ்சனை என்ற பொருள் என்று தமிழ் அகராதி சொல்லுகிறது.

***

தி.மு.க. தலைமையில் அமைந்திருப்பது கொள்கைக் கூட்டணி. எதிர்க் கூட்டணி கொள்ளைக் கூட்டணி - கொத்தடிமைகளின் கூட்டணி.

***

போராட்டக் களத்தில் பூத்த மலர்

இந்தக் கூட்டணி வெறும் தேர்தலுக்காக இணைந்த கூட்டணியல்ல. போராட்டக் களத்தில் பூத்த மலர்! அந்தப் போராட்டக் களங்களை உருவாக்கியதில் திராவிடர் கழகத்துக்கு முக்கிய பங்குண்டு

இது பதவிக்காக அல்ல - மக்கள் உதவிக்காக!

நாங்கள் எந்த கூட்டணியும் இல்லை;  அதே நேரத்தில் நாங்கள் இல்லாமல் இந்தக் கூட்டணியும் இல்லை.

***

என் உயிருக்குக் குறி!

இந்தத் தேர்தல் சுற்றுப்பயணத்தில் திருச்சியிலும், திருப்பூரிலும் என் உயிருக்குக் குறி வைக்கப்பட்டது. ஏனிந்த ஆத்திரம்? எங்கள் கருத்து மக்களுக்கு, வாக் காளர்களுக்குப் போய்ச் சேரக்கூடாது என்கிற ஆத்திரம்! பொதுவாக வெற்றி பெறும் நிலையில் உள்ளவர்கள் ஏதும் பிரச்சினை, கலவரம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலே கவனமாக இருப்பார்கள்.

தோல்வி காணும் நிலையில் உள்ளவர்களோ ஆத்திரத் தில் வீண் வம்புக்கும், கலவரத்துக்கும் ஆளாவார்கள்.

***

ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. வருமான வரித் துறை ஏவப்படுகிறது - மிரட்டப்படுகிறது. அதன்மூலம் அடிபணிய வைக்கப்படுகிறது.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப் பட்ட சோதனை என்ன ஆனது? அதைப்பற்றி அதற்குப் பிறகு ஏதாவது தகவல் கசிந்ததுண்டா?

***

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். எல்லாம் டில்லி உத்தரவிட்டால், ஓ! எஸ்''தான்.

***

கொத்தடிமை ஆட்சி!

எந்த அளவுக்குக் கொத்தடிமை என்றால், தமிழ்நாட்டில் பி.ஜே.பி. போட்டியிட வெறும் அய்ந்தே இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கிற இடத்தில்தான் அ.தி.மு.க. இருக்கிறது. வாங்கிக் கொள்ளும் இடத்தில் இருக்கும் பி.ஜே.பி.யோ கொடுக்கும் இடத்தில் உள்ள அ.தி.மு.க.வை மிரட்டுகிறது, ஆணை பிறப்பிக்கிறது.

பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா, நான் இராமேசுவரம் போகிறேன். நீங்கள் மதுரைக்கு வாருங்கள் என்று ஆணை பிறப்பிக்கிறார். ஆணைக்கு அடிபணிந்து இபி.எஸ்., ஓ.பி.எஸ்.சும் மதுரைக்கு ஓடுகிறார்கள் - இராமேசுவரத்திலிருந்து அமித்ஷா வரும்வரை காத்துக் கிடக்கிறார்கள்.

வந்தவர் என்ன சொல்லுகிறார்?

இந்தக் கூட்டணிக்குப் பெயர் அ.தி.மு.க. கூட்டணி யல்ல. பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் என்றார்.

ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் என்ன சொன்னார்கள். எஸ்', எஸ்' என்றனர்.

இது கொத்தடிமைக் கூட்டணி என்று சொன்னது இந்த அர்த்தத்தில்தான். தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் நுழைந்ததுண்டா? இப்பொழுது எல்லாம் தலைகீழ்தான்.

***

இந்தக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் பி.ஜே.பி.யின் கொள்கை என்பது மதவெறி, ஜாதி வெறி, அதிகார வெறியே!

***

பி.ஜே.பி. பார்வையில்  அ.தி.மு.க. கழகம் இல்லையா?

கழகமே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று சொன்ன பி.ஜே.பி. - இப்பொழுது அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்தது ஏன்? ஒருக்கால் அ.தி.மு.க.வை கழகம் என்று ஏற்றுக்கொள்ளவில்லையோ! எப்படி சொன்னாலும் இவர்களுக்கு உறைக்கப் போவதில்லையே!

***

'நீட்' தி.மு.க. அணியின் கொள்கை என்ன?

பி.ஜே.பி. அணியின் கொள்கை என்ன?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, தி.மு.க. தேர்தல் அறிக்கை, பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீட்' கூடாது என்பது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை. நீட்' வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யும் என்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.

ஆனால், பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து ஏன் கருத்து இல்லை?

தினத்தந்தி'க்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி அதுபற்றி ஏதாவது கூறினாரா?

ஆனால், தமிழகத் தேர்தலுக்குப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாட்டுக்கு வந்து என்ன சொல்லியிருக்கிறார்?

நீட்' முடிந்து போன ஒன்று என்கிறார். அ.தி.மு.க. அரசுகூட என்ன சொல்லுகிறது? நீட்' வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக, நீட்'டைத் தமிழில் எழுத உரிமை வேண்டும் என்றுதான் அ.தி.மு.க. கேட்டுக் கொண்டுள்ளது என்று பியூஸ் கோயல் போட்டு உடைத்துவிட்டாரே, இதுகுறித்து மறுப்பு எதையும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஏன் சொல்லவில்லை - மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றுதானே பொருள்?

ஏனிந்த இரட்டை வேடம்?

Begger has no choice என்பார்களே, அதுதானே, இது?

இந்தியாவிலேயே ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. 29 மருத்துவக் கல்லூரிகள் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டன.

தமிழ்நாட்டு மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு, முதல் தலைமுறையாகப் படித்து வெளிவரும் அவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்க வேண்டாமா?

1200-க்கு 1176 மதிப்பெண் பெற்ற அரியலூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த, மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவுக்கு ஏன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை? இந்த நீட்'தானே அதற்குக் காரணம்?

***

மோடி கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று?

கடந்த தேர்தலின்போது மோடி கொடுத்த வாக்குறுதிகளின் நிலை என்ன? ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடப்படும் என்றாரே - போட்டாரா? ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்கப்படும் என்றாரே - அளித்தாரா?

கேட்டால், பக்கோடா விற்கலாமே என்று நையாண்டி செய்கிறார்.

***

'மேக்கின்' இண்டியா இதுதானா?


நான் டீ விற்றவன் என்கிறார். டீ விற்றவர் அணியும் சட்டையின் மதிப்பு ரூ.10 லட்சம். (அதில் நரேந்திர மோடி என்று பெயர்ப் பொறிப்பு வேறு) ஒருமுறை உடுத்திய உடையை மறுமுறை உடுக்கமாட்டாராம், இந்த ஏழை மகன். மேக்இன் இண்டியா' என்பவரின் உடை இங்கிலாந்திலிருந்து வருகிறது.

***

பதவி ஏற்ற இடத்திலேயே வாக்குறுதியை நிறைவேற்றியவர் முதலமைச்சர் கலைஞர்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞரை எடுத்துக் கொள்ளுங்கள், சொன்னதைச் செய்யக்கூடியவர்கள் - யார் என்பது தெரியும்.

கலைஞர் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அந்த மாத்திரத்திலேயே தலைமைச் செயலகம்கூட செல்லாமல், பதவிப் பிரமாணம் எடுத்த அந்த இடத்திலேயே கோட்டையிலிருந்து கோப்புகளைக் கொண்டு வந்து அவர் கையொப்பம் போட்ட முதல் ஆணை என்ன தெரியுமா? விவசாயிகளின் ஏழாயிரம் கோடி ரூபாய்க் கடனைத் தள்ளுபடி செய்ததுதான்.

அதேநேரத்தில், பிரதமர் மோடியை எடுத்துக் கொள்ளுங்கள்,

விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த் துவோம் என்றாரே - நடந்ததா? 22 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதுதான் மோடி ஆட்சியின் சாதனை!

***

ராமர் கோவில் கட்டுவார்களாம்!

இந்தத் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லுகிறார்? ராமன் கோவில் கட்டுவோம் என்கிறார். ஒரு தேர்தல் அறிக்கையில் இதுபோல மதப் பிரச்சினையை முன்னிறுத்தலாமா?

அயோத்தியில் பூஜை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று  உச்சநீதிமன்றத்திலே மனு போட்டார்கள்.

உச்சநீதிமன்றம் நல்ல சூடு கொடுத்துவிட்டது - அனுமதியெல்லாம் கொடுக்க முடியாது என்பதோடு, உச்சநீதிமன்றம் நிறுத்திக் கொள்ளவில்லை. அமைதியாக மக்களை எல்லாம் வாழ விடமாட்டீர்களா?' என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றம் மண்டையி லடித்து உத்தரவு போட்டுவிட்டதே - பட்டும் புத்தி வரவேண்டாமா?

***

உணவில்கூட மதமா?

உணவில்கூட மதவாதத்தைத் திணித்த அரசு மோடி அரசு.

நான் எதை உண்ணவேண்டும் என்பதை மோடிதான் முடிவு செய்யவேண்டுமா? மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டிய அரசு மாட்டுக் கறி உண்ணாதே என்று தடை போடுவது என்ன நியாயம்? பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாழ்த்தப் பட்டவர்களை அடித்துக் கொன்றவர்கள்தானே!

உண்மை என்னவென்றால், இந்தியாவிலேயே மாட்டுக் கறியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முதலிடம் மோடியின் குஜராத்துக்கே!

ஏனிந்த இரட்டை வேடம்?

***

மோடியின் ஊழல் வானத்தில் பறக்கிறது


ஊழலற்ற ஆட்சி என்கிறார். அதாவது உண்மையா? ரபேல்' ஊழல் போதாதா? எல்லோரும் தரையில்தான் ஊழல் செய்வார்கள் - மோடியோ வானத்தில் அல்லவா ஊழல் செய்கிறார்!

காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானம் ஒன்றின் விலை ரூ.714 கோடி. மோடி ஆட்சியிலோ ஒரு விமானத்தின் விலை ரூ.1611 கோடி. உச்சநீதிமன்றத்திலே பொய்யான தகவல் அளிக்கப்பட்டு, மறு விசாரணை நடந்துகொண்டுள்ளது. நீதிமன்றத்திலே அரசு தரப் பில் என்ன சொன்னார்கள்? ஆவணங்கள் திருடு போய்விட்டன என்றனர்.

இவர்தான் காவலாளி ஆயிற்றே, எப்படி திருடுப் போகும்? காவலாளி ஒத்துழைப்பு இருந்தால்தானே அந்தத் திருட்டு  நடந்திருக்க முடியும்? உச்சநீதிமன்றம் நறுக்கென்று ஒரு கேள்வியைக் கேட்டது, திருடுப் போயிற்றா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; ஆவணத்தில் இருப்பது உண்மைதானே என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

***

56 அங்குல மார்பளவு உள்ளவருக்கு 2 அங்குல இதயம் இல்லையா?

பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்தார். தமிளர்களே வண்ணக்கம்!' என்று ஆரம்பிப்பார்.

புயலால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் வார்த்தை கூறியதுண்டா?

56 அங்குல மார்பளவு கொண்டவர் நமது பிரதமர் மோடி; ஆனால், இரண்டு அங்குல இதயம் இல்லாமல் போய்விட்டதே!

***

இன்றைய தினம் என்ன நிலைமை? கோ பேக் மோடி' என்ற குரல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல - அசாமிலும் கேட்க ஆரம்பித்துவிட்டதே! ஒரிசாவிலிருந்து வந்த தகவல் அங்கு ஒரு இடம்கூட  மோடிக்குக் கிடைக்காது என்பதுதான்.

10 மணியாகப் போகிறது - நேரம் நெருங்கி விட்டது - இந்த இரு ஆட்சிகளுக்கும் கூட நேரம் நெருங்கிவிட்டது.

***

உதயசூரியன் - கை சின்னங்களில் பொத்தான்களில் விளக்கெரிந்தால் உங்கள் வீட்டிலும், நாட்டிலும் விளக்கெரியும்!

மறவாதீர்கள்! உங்கள் சின்னம் உதயசூரியன் - கை. 18 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள் - இந்தச் சின்னங்களுக்கான பொத்தான்களை நன்றாக அழுத்துங்கள் - வெளிச்சம் வருகிறதா என்பதை உறுதி செய்யுங்கள்!

அங்கு விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டிலும், நாட்டிலும் விளக்கு எரியும், வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமதுரையில் முத்து முத்தாகக் கருத்துகளையும், தகவல்களையும் வாரி இறைத்தார்.

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner