எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, பிப். 22 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், திராவிட மாணவர் கழக சார்பாக அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம்  3.2.2019 அன்று மாலை 5 மணி  முதல் 8 மணி வரை மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ்.அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் வரவேற்று கல்லூரி மாணவி சொ.நே.அறிவுமதி உரை யாற்றினார். நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழகத்தினைச்சார்ந்த கவிஞர் சுப.முருகானந்தம் தலைமையேற்று உரையாற்றி னார். திராவிடர் கழகத்தின் தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர்  தே.எடிசன்ராசா, மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மண்டலச் செயலாளர் ந.முருகேசன், மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, மாவட்டச் செயலாளர் அ.முரு கானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்க உரையினை ஆற்றிய திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் கூட்டத்தின் நோக்கத்தைக் குறிப்பிட்டார். நாட்டில் நிகழும் அஞ்ஞான நிகழ்வுகளைக் கண்டு, திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ் நாடு முழுவதும் இப்படிப்பட்ட அறிவியல் மனப்பான்மை கருத்தரங்குகளை நடத்தும்படி ஆணையிட்டுள்ளார். அந்தவகையில் மதுரை யில் 3.2.2019 அன்று இந்த அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாதந்தோறும் கருத்தரங்கம் நடைபெறும். பெருவாரியாக தோழர்கள் புதிய நண்பர்களோடு கலந்துகொள்ள வேண்டும்.தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு போன்றவற்றிற்கும் மதுரையிலிருந்து தோழர்கள் நிறைய எண்ணிக்கையில் கலந்துகொள்ளவேண்டும் எனும் கோரிக்கையை வைத்தார்.

'பொய்மை அறிவியல்' என்னும் தலைப்பில் உரை யாற்றிய மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, அறிவியல் மனப்பான்மை வளர நிறைய அறிவியல் அறிஞர்களின் தன் வரலாற்று நூல்களைப் படிக்கவேண்டும். அறிவியல் கண்டுபிடிப்பு களுக்குக் காரணம் தேவை மற்றும் மாற்று யோசனை. லேட்டரல் திங்கிங் என்று சொல்லக்கூடிய மாற்றுச் சிந்தனைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு தந்தை பெரியார் ஆவார். போனைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல், டைனமோவைக் கண்டுபிடித்த மைக்கேல் ஃபாரடே போன்றோரின் வாழ்க்கை வரலாறு அவர்களின் கண்டுபிடிப்புகளுக்குக் காரணம் தேவை மற்றும் மாற்று யோசனை என்பதனைத் தெரியப்படுத்தும். நமது நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும் அதனை மூட நம்பிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்குக் காரணம் மத வாதிகளும் அவர்களின் பழமைக் கொள்கைகளுமே ஆகும். அறிவியல் மனப்பான்மை என்னும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நூலினைப்பற்றியும் குறிப்பிட்டு, ஊடகங்களால் பரப்பப்படும் பொய்மை அறிவியல் பற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner