எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பு  சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, ஜன.13  அரசு பிறப்பித்த ஆணைகளை அந்த அரசே செயல்படுத்த தவறுவது என்ன நியாயம் என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

5.1.2019 அன்று காலை 10 மணியளவில் தென்மண்டல எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பு (சென்னை) சார்பில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இந்திய அரசின் அரசாணையை நடைமுறைப்படுத்தாத எல்.அய்.சி. மத்திய அலுவலகத்தையும், துரோகத்திற்குத் துணை நிற்கும் தென்மண்டல மேலாளரைக் கண்டித்தும் நடைபெற்ற தொடர் முழக்கக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய தென் மண்டல எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பு  என்று சொல்லக்கூடிய இந்தக் கூட்டமைப்பு - தென்பகுதியில் இருக்கக்கூடிய ஆயுள் கார்ப்பரேசன் பாதுகாப்பு அமைப்பில், பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பணியாளர்களின் பேரமைப்பாக இது பதிவு செய்யப்பட்டு, மிகத் தெளிவான வகையில், இங்கே நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்த அமைப்பின் தலைவர் அருமை நண்பர்கள் யோகநாதன் அவர்களே, பொதுச்செயலாளர் திருக்குமார் அவர்களே, பொருளாளர் லாடியஸ் ஜெயக்குமார் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் எனக்கு முன் வந்து இங்கே உரை யாற்றிச் சென்ற அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே,மேடையில் வீற்றிருக்கின்ற, எதிரில் வீற்றிருக்கின்ற அருமைத் தோழர்களே, ஊடகவியலா ளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழகம் தொடர்ந்து போராட்டம் நடத்தியிருக்கிறது!

எல்.அய்.சி.யைப் பொறுத்தவரையில், மண்டல் கமிசன் வருவதற்கு முன்பே, திராவிடர் கழகம் தொடர்ந்து, அதில் ஒரு ஜாதியினருடைய ஆதிக்கம் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு அமைப்பாக அது இருந்துகொண்டு - பொது அமைப்பு, பொது நிறுவனம் என்கிற பெயராலே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டித்து, எல்.அய்.சி. கட்டடத்திற்கு முன்பு போராடியிருக்கிறோம். சில தோழர் களுக்கு அது நன்றாக நினைவிருக்கும்.

மண்டல் கமிசன் தீர்ப்பு வந்த பிறகு, சட்டபூர்வமான உரிமை என்னவோ, அதைத்தான் நம்முடைய தோழர்கள் இந்த அமைப்பின் மூலமாகக் கேட்கிறார்கள். அதிகாரிகளுடைய கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், அவர்களுக்கு மனமில்லை. காரணம் என்னவென்றால், உயர்ஜாதிக்காரர்களுடைய ஆதிக்கம் இன்னமும் குறையாமல் அங்கே இருப்பதுதான்.

மக்கள் வரிப்பணத்தாலே அந்த நிறுவனம் நடை பெறுகிறது.  அதில் காப்பீட்டுப் பணம் கட்டுபவர்கள் மிகப்பெரும்பாலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் - பெரும்பான்மை மக்கள்தான். அவர்கள் கட்டுகின்ற பணத்திலிருந்துதான் இந்த சிறு பான்மை மக்கள் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

குறுகிய எண்ணத்தோடு நடந்துகொண்டிருக்கிறார்கள்!

அரசியல் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அரசியல் சட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். எப்படி புறக்கணிக்கிறார்கள் என்றால், மறைமுகமாக எப்படியாவது அரசு கொடுத்த சலுகையை, நாங்கள் செய்ய விடாமல் தெரு வாசல் வழியாகக் கொடுப்பதை, கொல்லைப்புற வழியாகப் பறித்துக்கொள்வோம்; ஜன்னல் வழியாகத் தூக்கிப் போட்டுவிடுவோம் என்ற குறுகிய எண்ணத்தோடு நடந்துகொண்டிருக்கிறார்கள். இதற்காக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டும் என்கிற நிலை வந்திருக்கக்கூடாது.

இன்னுங்கேட்டால், சட்டப்படிதான் இவர்கள் கேட் கிறார்கள். 27 சதவிகிதம் என்பதே மிகவும் குறைவு. நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் தொகையை எடுத்துக்கொண்டால், 88 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதம் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பார்த்தீர்களேயானால், சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசாங் கத்தில் 15 சதவிகிதம், 7.5 சதவிகிதம் என்று ஆக மொத்தம் 23 சதவிகிதம் என்று வந்தார்கள். 50 சதவிகிதத்திற்குமேல் போகக்கூடாது என்று மந்திரம்' சொல்லி ஏமாற்றியதுபோல, இவர்கள் ஒரு தந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் சரியான தீர்ப்பல்ல. அது போகிற போக்கில் சொல்லப்பட்ட ஒன்று.

அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு, எல்லோரையும் மிரட்டினார்கள். மண்டல் அவர்கள், எங்களுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 52 சதவிகிதம் பரிந்துரை செய்திருக்கிறேன் என்றார், 1980 ஆம் ஆண்டு.

38 ஆண்டுகளுக்கு முன்பு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 52 சதவிகிதம்; அதேபோன்று, தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்களுடைய எண்ணிக்கை இப்பொழுது அதிகம். இந்தியாவினுடைய மக்கள் தொகை பெருகியிருக்கிறது என்றால்,  எப்படி பெருகியிருக்கிறது? யார் இருக்கிறார்கள்? என்பதை நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப் படவில்லை.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மராத்தி பார்ப்பனரை நியமித்தார்கள்!

ஏற்கெனவே இருந்த முதல் ஆணையமான காகா கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை நாடாளு மன்றத்தில் வைக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மராத்தி பார்ப்பனரை நியமித்தார்கள். நண்டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைப்பதுபோன்று' என்கிற பழமொழி உண்டு. அதுபோன்று அவரை நியமித்தார்கள். அதனுடைய விளைவு, நாடாளுமன்ற அலமாரிக்குள்ளேயே சென்றது, விவாதத்திற்குக்கூட வரவில்லை.

ஆனால், பெரியார் திடலில் மண்டல் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தோம். மண்டல் ஆணைய அறிக் கையை வெளியிடவேண்டும் என்று நாம் சொன்னோம். ஜஸ்டிஸ் போலே, சுப்பிரமணியம் ஆகியோருக்கு வரவேற்பு கொடுத்தோம். மண்டல் அவர்கள் எங்களிடம், நாங்கள் அறிக்கையை தயார் செய்து கொடுக்கலாம்; அப்படி நாங்கள் அறிக்கை கொடுத்தாலும், அதனை அலமாரியில் வைத்துவிடுவார்கள். இதை நீங்கள்தான் வேகமாக செய்ய முடியும்'' என்றார்.

அதற்குப் பிறகு இந்தியா முழுவதும் 46 மாநாடுகள்; 16 போராட்டங்கள் நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாக அது வெளிச்சத்திற்கு வந்தது.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதலில் வேலை வாய்ப்பு என்று நடைமுறைப்படுத்தினார். அதற்குப் பிறகு தி.மு.க. இடம்பெற்ற மத்திய காங்கிரசு அரசில், மத்தியக் கல்விக் கூடங்களிலும் இட ஒதுக்கீடு என்று சொல்லி,  அர்ஜூன் சிங் அவர்கள் மத்திய கல்வி அமைச்சராக இருந்தபொழுது நடைமுறைப்படுத்தினார்கள்.

அது ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறதே தவிர, இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. நமக்காக சமைத்து வைத்ததை, யாரோ ஒருவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பசியேப் பக்காரர்கள், பசியேப்பக்காரர்களாகவே இருக்கிறார்கள்; புளியேப்பக்காரர்கள்,  இடித்துத் தள்ளிவிட்டு, அவனே அமர்ந்துகொண்டிருக்கிறான்.

வெறும் 11 சதவிகிதத்தைத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்

அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, 27 சத விகிதத்தை பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுத்தார்களா என்றால், இல்லை. ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்டதில், வெறும் 11 சதவிகிதத்தைத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் இரண்டு பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளில், ஒருவருக்கு பணிக்காலம் முடிவடையப் போகிறது. தாழ்த்தப்பட்ட நீதிபதி எட்டு ஆண்டுகளாக ஒருவர்கூட கிடையாது. நாட்டையே நிர்வாகம் செய்வது, உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும்தான்.

தயிர் சாதம், சாம்பார் சாதம் சாப்பிடுவதாக இருந்தால் கூட, பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிட்டிகேசன் போட்டு, நீதிபதி சொல்வார், நீங்கள் சாம்பார் சாதம் சாப்பிடுவது நல்லது'' என்று.

ஏனென்றால், அரசாங்கம் நடைபெற்றால்தானே, நீதிபதிகளுக்கு வேலை இருக்காது. அவர்களின்மேல் தவறு கிடையாது. எதற்கெடுத்தாலும், நீதிமன்றத்திற்குச் சென்றால்தான், நீதி கிடைக்கும் என்ற நிலை இன்றைக்கு இருக்கிறது.

அங்கே நீதி சொல்கிறவர்கள், உள்ளபடியே பாதிக்கப் பட்டவர்களாக இருந்தால்தான், சரியான பார்வை இருக் கும். அவர்கள் வசதியாக இருந்தார்கள் என்றால், அந்தப் பார்வையோடு தீர்ப்பளிக்க முடியாது.

இங்கே பொறுத்தவரையில் நண்பர்களே, 27 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நாடு தழுவிய அளவில் கடைபிடிக்கவில்லை. வெறும் 11 சதவிகி தத்தைத்தான் கொடுத்திருக்கிறார்கள்.

அரசு ஆணையை செயல்படுத்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்!

உங்களுடைய நான்கு கோரிக்கைகளை நான் படித்துப் பார்த்தேன், மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

அரசு ஆணைகளை செயல்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள். அதற்காக ஒரு ஆர்ப்பாட்டம் என்றால், என்ன அர்த்தம்?

அரசாணையை செயல்படுத்தாதே என்று சொல்லித் தான் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஏனென்றால், ஒரு சில அரசு ஆணைகள், நியாயத்திற்கு விரோதமாக இருந்தால், அந்த அரசு ஆணையை செயல்படுத்தாதே, அரசு ஆணையை எரிப்போம் என்றுதான் போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன.

இங்கே நடைபெறும் ஆர்ப்பாட்டம், அதற்குத் தலை கீழாக இருக்கிறது.

அரசு ஆணைகள் நான்கு. அந்த நான்கு ஆணை களையும் செயல்படுத்துங்கள் என்பதற்காக இந்தப் போராட்டம்.

அரசியல் சட்டத்தை செயல்படுத்துங்கள் என்று எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியைப் பார்த்து கேட்பது போன்று இருக்கிறது.

விடுதலை'யில் அறிக்கை எழுதுவோம்!

இதுகுறித்து விரிவான அறிக்கையை  விடுதலை'யில் எழுதி, ஆங்கிலப் பத்திரிகையான மாடர்ன் ரேசனலிஸ்ட் டிலும்' எழுதி,  மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதனை அனுப்புவோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, இந்தப் பிரச்சினை குறித்து அவர்களிடம் சொல்லி, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பச் சொல்லுங்கள். வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும்' என்பதுபோல, நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், வேடிக்கையாக என்ன சொல்லியிருக்கிறார்கள், தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்'' என்பது பைபிள் வாசகம். இத்தனைக்கும் அது கடவுள் இருக்கும் இடம்; அவர்கள் சொல்கிறபடி, தேவாலயம்; நாங்கள் அதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அதைக்கூட கடவுள் திறந்து வைக்கவில்லை; அவருக்கே தைரியம் இல்லை. மூடித்தான் வைத்திருக்கிறார்கள். தட்டினால்தான் திறக்குமே தவிர, சும்மா இருந்தால் முடியாது. அங்கே தட்டினாலாவது திறக்கும்; ஆனால், இங்கே உடைத்தால்தான் திறக்கும் என்று சொல்லக்கூடிய அளவில் நிலைமை இருக்கிறது.

ஆயுள் கார்ப்பரேசன் என்பது மற்றவர்களுக்குக் கார்ப்பரேசன் இருக்கிறதோ இல்லை, அவர்களுக்கு இல்லவே இல்லை. அதனால், விட்டுக் கொடுக்கின்ற மனசு கிடையாது.

எழும்பூரில் ரயில் ஏறி, வண்டி காலியாக இருக்கும் பொழுது படுத்தவனை தியாகராயர் நகர் அல்லது சைதாப்பேட்டை வந்தவுடன், டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்த ஒருவர், அய்யா கொஞ்சம் எழுந்திருங்கள் என்று சொன்னால், படுத்துக்கொண்டிருப்பவனோ, அடுத்த பெட்டியைப் பாருங்கள்'' என்பான்.

காலங்காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்....

ஏனென்றால், அவன் கொஞ்சம் நேரம் தூங்கிவிட்டான் பாருங்கள், அந்த வசதியை அவனால் விட்டுக்கொடுக்க மனசு வரவில்லை. கொஞ்ச தூரம் தூங்கியவனுக்கே அடுத்தவர்களுக்கு இடம் கொடுப்பதற்கு மனசு வரவில்லை. ஏதோ இழப்பு மாதிரி அவனுக்குத் தெரிகிறது என்றால், காலங்காலமாக அனுபவித்துக் கொண்டிருப்பவனை, எங்களுக்கு இடம் கொடுங்கள் என்றால், அவன் சுலபத்தில் ஒப்புக்கொள்வானா? இதுதான் சமூகநீதி. நாம் கேட்பது ஒன்றும், பெரிய அளவிற்கு வேப்பெண்ணெய் குடிப்பதோ, விளக்கெண்ணெய் குடிப்பதோ கிடையாதே!

காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் நாங்கள்

சமூகநீதி என்பது, எல்லோருக்கும் எல்லாமும்;

அனைவருக்கும் அனைத்தும்!

இதைப் பங்கிட்டுக் கொடு என்கிறோம். காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் நாங்கள் என்கிறோம்.

முக்கியமான நான்கு அரசு ஆணைகளை நடை முறைப்படுத்த வேண்டும் என்பதே எல்.அய்.சி. பிற்படுத்தப் பட்டோர் ஊழியர்  நலச்சங்கத்தின் கோரிக்கை ஆகும்.

இந்த நான்கு அரசு ஆணைகள் - இந்த அரசு ஆணைகளைத்தானே செயல்படுத்தக் கோருகிறோம். அரசு ஆணைகளுக்கு விரோதமாக நடந்தால்தான் தவறு.

அரச ஆணைகளை செயல்படுத்தாத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமா? இல்லையா? இதைத்தான் மத்திய அரசினை நாம் கேட்கிறோம்.

அவர்களே போட்ட அரசு ஆணைகளை செயல் படுத்த வேண்டாமா? நடைமுறையில் ஒரு குடும்பம் போன்று ஒரு அலுவலகம் இருக்கவேண்டாமா? அப் பொழுதுதானே பணிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். எலியும் - பூனையுமாக இருந்தால், அதனால் என்ன பயன்? ஆகவேதான், பூனை, எப்பொழுது எலியைப் பிடிப்பது என்கிற கவலையில் இருந்தால், எப்படி நமக்கு சமூகநீதி கிடைக்கும்.

குறைகளைத் தீர்க்கும் கூட்டங்களை நடத்தவில்லை!

1997 இல் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையின்படி, எல்.அய்.சி. நிர்வாகம் தனது நிர்வாகக் குழுவில், தீர்மானம் கொண்டு வந்து, நலச் சங்கத்தை அங்கீகரித்ததும், அகில இந்திய எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து, பிற்படுத்தப்பட்டோர் மக்களின் பிரச்சினைகளை, குறைகளைத் தீர்க்கும் கூட்டத்தினை நடத்தியிருக்கவேண்டும். ஆனால், இந்த அரசாணையின்படி, எல்.அய்.சி. நிர்வாகம், பிற் படுத்தப்பட்டோர் மக்களுக்கான பிரச்சினைகளை, குறைகளைத் தீர்க்கும் கூட்டங்களை நடத்தவில்லை. எனவே, இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானதே!

1997 முதல் 2013 ஆம் ஆண்டுவரை 16 ஆண்டுகள் நடத்தியது, பல போராட்டங்களை. 2013 ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நாடாளுமன்றக் குழு, எல்.அய்.சி. நிர்வாகத்திற்குக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இறுதியாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் திரு.எஸ்.கே.கார்வேந்தன் அவர்கள் மும்பையில் உள்ள எல்.அய்.சி. மத்திய அலுவலகத்தில், நேரிலேயே வந்து இந்த அரசாணையைக் கொடுத்த பின்னரே, எல்.அய்.சி. நிர்வாகம், நமது நலச் சங்கத்துடன், முறைசாராக் கூட்டத்தினை 16 ஆண்டு களுக்குப் பிறகு ஏற்பாடு செய்தது.

இந்த எல்.அய்.சி. நிர்வாகம், இந்த முறைசாராக் கூட்டங்களை, ஏதோ கடமைக்கு நடத்துவதைப்போல நடத்துகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, நமது நலச்சங்கம், எல்.அய்.சி. நிர்வாகத்திடம் கேட்டால், அதற்கு அவர்கள், எந்த ஒரு தொழிற்சங்கமோ அல்லது சங்கமோ எல்.அய்.சி.யால் அங்கீகரிக்கப்படவில்லை. No Union Association Regaiganance என்று சொல்வதே நியாயப்படி, சட்டப்படி தவறானது.

ஏனென்றால், ஏற்கெனவே இச்சங்கம் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு உதாரணமும் காட்டியிருக்கிறார்கள். வங்கிகள், வருமான வரித்துறை அலுவலகங்களில், சங்கங்களுக்காக இடமே ஒதுக்கியிருக்கிறார்கள்.

கல்கத்தாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

சில ஆண்டுகளுக்குமுன், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவிற்காக கல்கத்தாவிற்கு எங்களை அழைத்திருந்தார்கள், நம்முடைய கருணாநிதி அவர்களின் மூலமாக.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது; ரிசர்வ் வங்கியின் சார்பாக அய்யா விழா நடைபெற்றது. அங்கே உள்ளே சென்றதும், ஒரு பெரிய நூலகத்திற்கு இடத்தை ஒதுக்கி, அங்கே பெரியார், அம்பேத்கர் படங்களை வைத்தி ருந்தார்கள். அங்கே ஏராளமான இளைஞர்கள்; பயிற்சி பெற வந்தவர்கள் நிறைய பேர் இருந்தனர். சங்கத்தை அங்கீகரித்திருக்கிறார்கள், நூலகம், அலு வலகம் மற்றவை எல்லாம் வைத்திருக்கிறார்கள்.

இங்கே நீங்கள் கோரும் கோரிக்கையில், உங்களுக்கு இடம் கொடுக்கவேண்டாமா? என்று கேட்கிறீர்கள். நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் அல்ல என்று சொல்கின்ற பதில், திட்டமிட்ட, ஒரு தவறான பதிலாகும்.

தொழிற்சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஆனால், இதில் எல்லா கட்சிக்காரர்களும் இருப்பார்கள்; எல்லா கருத்துள்ள வர்களும் இருப்பார்கள்.

சென்னையிலேயே 168 காலிப் பணியிடங்கள்!

இன்னொரு உதாரணம் சொல்லவேண்டுமானால், அவர்கள் தவறாகக் கொடுத்துவிட்டு, எத்தனை பேர் வகன்சி என்றால்,

மொத்தம் போஸ்ட் - பேஸ்ட் - ரொஸ்ட்டவர்படி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 பணிகள், இந்தியா முழுவதும். 197 காலிப் பணியிடங்கள் உள்ளதாக எல்.அய்.சி. நிர்வாகம் சொல்கிறது.

இந்தியா முழுவதும் 197 காலிப் பணியிடங்கள்தான் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அதற்கு, நம்முடைய தோழர்கள், இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தெளிவான ஒரு பதிலை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, இரண்டு கோட்டங்களில், (சென்னை கோட்டம் 1, சென்னை கோட்டம் 2) மட்டும் 168 காலிப் பணியிடங்கள் இருக்கிறது என்று.

காலிப் பணியிடங்கள் உள்ள கணக்கை தவறாக சொன்னால், நீட் தேர்வில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளால், எல்லோரையும் தோல்வி யடைச் செய்தார்கள். அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், உச்சநீதிமன்றம் சொன்னதே, அதுபோன்ற உதாரணமாக,

நாங்கள் முதலில் தவறாகக் கூட்டி விட்டோம்; அதனை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்'' என்கிறார்கள்.

சென்னையில் உள்ள இரண்டே இரண்டு கோட்டங் களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் 168 என்று உள்ளதை, இந்தியா முழுவதும் 197 காலியிடங்கள் என்றால், இதைவிட பட்டை நாமம் வேறு ஏதாவது உண்டா? இதைவிட அசிங்கம் வேறு உண்டா? அந்த நிர்வாகிகள் அந்தத் துறையில் இருக்கத் தகுதி உண்டா? இவர்களுக்குப் பெயர் தகுதி - திறமைக்குப் பிறந்தவர்கள் என்று. நம்மாட்கள் பதவிக்கு வந்தால், தகுதி கிடையாது, திறமை கிடையாது என்பார்கள்.

நான்கு கோரிக்கைகளும் சட்டப்படி உள்ள நமது உரிமைகள்

இதை அவர்கள் தெரியாமல் செய்யவில்லை; தெரிந் தேதான் செய்திருக்கிறார்கள். தூங்குகிறவர்களை எழுப்ப லாம்; தூங்குவதுபோல், பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியுமா? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

இதுபோன்ற அக்கிரமங்கள் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தேர்வுகளில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந் தவர்கள் கட்டாயம் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நியாயங்கள் கிடைக்கும்.

ஏற்கெனவே காகாகலேல்கர் ஆணையத்தில் உள்ளது போன்று, முழுவதும் மேல்ஜாதிக்காரர்கள், ஆதிக்க ஜாதிக் காரர்கள், பார்ப்பனர்கள் அல்லது உயர்ஜாதிக்காரர்கள் இவர்களே பெரும்பாலும் அமர்ந்து கொண்டு, கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இப்படி வரிசையாக கோரிக்கையை எடுத்துச் சொல்லி, கடைசியாக 12 ஆவது பரிந்துரையின்படி, அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கப் பணிகளைக் கவனிக்க, அலுவலக இட வசதி செய்து தரவேண்டும். ஆகவே, நண்பர்களே, இந்த நான்கு கோரிக்கைகளும் சட்டப்படி உள்ள நமது உரிமைகள். இவை சலுகைகளோ, பிச்சையோ கேட்பதல்ல.

சலுகை கேட்டால், உனக்கு வாய்ப்பு இருக்கிறது - செய்யலாம், செய்ய முடியாது என்பதற்கு.

அதேபோன்று, பிச்சை கேட்டால், நான் பிச்சை போடமாட்டேன் என்று சொல்வதற்கு உனக்கு உரிமை இருக்கிறது.

ஆனால், சட்டப்படி போட்டிருக்கிற அரசு ஆணையை செயல்படுத்தவில்லை என்றால், இதற்காக எத்தனை முறை ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டியிருக்கிறது.

காவல்துறையினர் அவர்களது பணிகளை விட்டுவிட்டு, பாதுகாப்பிற்காக நிற்கிறார்கள். உங்களுடைய பணிகள் பாதிக்கப்படுகிறது. ஆனாலும், நண்பர்களே, இந்த சமுதா யத்திற்கு ஒரு தெளிவான விடுதலை வேண்டும். சமூக எதிரிகளாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நமக்கு மட்டும் எதிரியல்ல. நாட்டினுடைய, சமூகத்தினுடைய வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது போன்றதாகும்.

உங்களுக்கு நாங்கள் என்றைக்கும் துணையாக இருப்போம்

ஆகவேதான் நண்பர்களே! உங்களுடைய நான்கு கோரிக்கைகளையும் நிறைவேற்றுகின்ற வரையில், உங் களுக்கு நாங்கள் என்றைக்கும் துணையாக இருப்போம்.

தொடர்ந்து எழுதுவோம்; நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர்களையும் பார்த்து, இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசும்படியாக செய்யவேண்டும்.

அதற்கடுத்து, இப்பிரச்சினைக்கு சரியான நடவடிக் கையை மேற்கொள்ளாவிட்டால், ஒரு குறிப்பிட்ட அவ காசத்தைக் கொடுப்போம். ஒரு சில மாதங்களுக் குள்ளாக அதனை செய்யவில்லை என்றால், நீதிமன் றத்திற்குச் சென்று நம்முடைய உரிமைகளை நிலை நாட்டுவோம்.

நீதிமன்றம் சில நேரங்களில், இப்படியும், அப்படியுமாக இருக்கும். அது வேறு விஷயம். இருந்தாலும், உலகம் முழுவதும் இந்த அநீதி தெரிந்துவிடும்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து வெளியே பரவலாக செய்தி தெரியாது. ஆனால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், என்ன ஒரு வாய்ப்பு என்றால், தீர்ப்பு சாதகமாக வருகிறதோ இல்லையோ, விஷயம் வெளியில் வந்துவிடும், அதுதான் மிகவும் முக்கியம். அதை வைத்து நாம் நாடாளுமன்றத்தில் கேட்கலாம்.

ஆகவே, நாங்கள் என்றைக்கும் உங்களுக்குத் துணை யாக இருப்போம். உங்கள் கோரிக்கை நியாயமானது. நீதி யின்பாற்பட்டது. அதை செய்யவேண்டும்.

அரசு அதிகாரிகளாக இருப்பவர்களின் கடமை என்ன?

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும் என்பது அரசு ஆணை. இல்லை தலைக்கவசத்தை தலையில் அணியாமல், பெட்ரோல் டாங்கில்தான் வைத்துக்கொண்டு செல்வோரை தடுத்து நிறுத்தி, தலைக்கவசம் தலைக்குத்தான், பெட்ரோல் டாங்குக்கு அல்ல என்று காவல்துறையினர் சொல்வதற்கு உரிமை உண்டு அல்லவா! அதேபோன்றதுதான், அரசு போட்ட அரசாணைகளை, நிறைவேற்றுவதுதான் அரசு அதிகாரிகளாக இருப்பவர்களின் கடமை.

ஆகவே, அதிகாரிகளான பெருமக்களே, இதுவரை நீங்கள் தவறு செய்திருக்கலாம். இனிமேலாவது அந்தத் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்; அப்படி நீங்கள் திருத்திக் கொள்ளாவிட்டால், நீங்கள் திருத்தப்படுவீர்கள், அதுதான் மிக முக்கியமானது என்பதை எடுத்துச் சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,

போராடுவோம், வெற்றி பெறுவோம்!

இவ்வளவு நேரம் அனுமதித்த காவல்துறையினருக்கும் நன்றி கூறி என்னுரையை நிறைவு செய்கிறேன்.

தோழர்களே, தொடர்ந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்!

போராடுவோம், வெற்றி பெறுவோம்!

வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி! வாழ்க அம்பேத்கர்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner