எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 18 மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, மாண வரணியின் சார்பில் தமிழகம் முழுவதுமிருந்து பல முனைகளிலிருந்தும்  இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் நடைபெறுகிறது. இன்று 18.3.2017 தொடங்கி 21.3.2017 முடிய இளைஞரணி, மாணவரணியின் இரு சக்கர வாகனப்பரப்புரை பயணக்குழு 5 குழுக் கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விருத் தாசலத்தை அடைகின்றன.


முதல் குழு சென்னை தாம்பரத்தில் இன்று (18.3.2017) தொடங்கி 21.3.2017 அன்று விருத்தாசலத்தில் பரப்புரை பயணத்தை நிறைவு செய்கிறது. முதல் பயணக்குழு சென்னை தாம்பரத்தில் தொடங்கி தென்சென்னை, வட சென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, கல்லக்குறிச்சி கழக மாவட்டங்கள் வழியாக விருத்தாசலத்தை அடைகிறது. முதல் பயணக்குழு செல்லும் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் கழகப் பொறுப்பாளர்கள் உரிய ஏற்பாட்டினை செய்துள்ளார்கள்.

முதல் பயணக்குழுவின் பிரச்சாரப்படையின் ஒருங்கிணைப்பாளர் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் முதல் குழுவை ஒருங்கிணைத்தார்.

இன்று (18.3.2017) காலை சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து கழக இளைஞரணி, மாணவரணி பரப்புரைப் பயணக்குழுவின் பயணம் வெற்றிபெற வாழ்த்துகளைக் கூறி, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கழகக் கொடியை அசைத்து பரப்புரைப்பயணத்தைத் தொடங்கிவைத்தார்.
மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த் திபன் தலைமையில் சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை  பயணம்குறித்த விளக்க வுரையாற்றினார்.

சென்னை மண்டல தலைவர் தி.இரா. இரத்தினசாமி, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், செந்துறை இராசேந்திரன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் தொடக்கவிழாவில் பங்கேற்றனர்.

முதல் குழு சென்னை தாம்பரத்தில் தொடங்கி தென்சென்னை கழக மாவட்டத்தில் ஈக்காட்டுத்தாங்கல், வடசென்னை கழக மாவட்டத்தில் புரசைவாக்கம் தானா தெரு, ஆவடி மாவட்டத்தில் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பயணக்குழுவினர் நீட் தேர் வுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டனர்.

முதல் பயணக்குழுவில் 35 இரு சக்கர வண்டிகளில் இளைஞரணி, மாணவரணி தோழர்கள்  விருத்தாசலம் வரை செல்கின்றனர். உடன் ஒரு ஜீப் வாகனமும், மினி லாரி வாகனமும் தோழர்களுடன் செல்கின்றன.

எழுச்சியுடன் தொடங்கியுள்ள பயணக்குழுவினரை ஊக்கப்படுத்தும் வண்ணம் தாம்பரத்தில் சாலைகளில் கழகக்கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை யின் அனைத்துப்பகுதிகளிலும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெரிதும் ஆர்வமுடன் திரண்டார்கள்.

மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்த்து கழகம் களம் காணுவதை உணர்ச்சிப்பெருக்குடன் பொதுமக்கள் கண்டு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

'நீட்' தேர்வை எதிர்த்து இரு சக்கர வாகனப் பரப்புரை துவக்கியது.
தருமபுரியில் த. யாழ்திலீபன் தலைமையிலான குழு 35 வாகனங்களுடன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. ஆத்தூர் அ. சுரேஷ் குழுவினை ஒருங்கிணைத்து செல்கிறார். வே. தமிழ்செல்வன், 'நீட்' எதிர்ப்புக் குறித்து  விளக்கவுரையாற்றினார்.

கோவையில் ஈரோடு தே. காமராஜ் தலைமையிலான குழு 31 வாகனங்களுடன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. கோவை ஆ. பிரபாகரன் குழுவினை ஒருங்கிணைத்து செல்கிறார். பழனி. சே.மெ. மதிவதனி 'நீட்' எதிர்ப்புக் குறித்து உரையாற்றினார்.

தென்காசியில் மதுரை ஏ. பிரபாகரன் தலைமையிலான குழு 25 வாகனங்களுடன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இராஜபாளையம் இல. திருப்பதி குழுவினை ஒருங்கிணைத்து செல்கிறார். குடந்தை ச. அஜிதன் 'நீட்' எதிர்ப்புக் குறித்து உரையாற்றினார்.

கடலூரில் விருத்தாசலம் பா. வெற்றிசெல்வன் தலைமையிலான குழு 27 வாகனங்களுடன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. உரத்தநாடு இர. தர்மசீலன் குழுவினை ஒருங்கிணைத்து செல்கிறார். க.பெ. தமிழமுதன் 'நீட்' எதிர்ப்புக் குறித்து உரையாற்றினார்.

புரசைவாக்கம் வருகை தந்த இரு சக்கர வாகனப் பேரணியை வரவேற்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே. சேகர்பாபு, ரவிச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். உடன்: எழும்பூர் ஏகப்பன், பன்னீர்செல்வம், புரசை அன்புசெல்வன்  மற்றும் தி.மு.க. முன்னணியினர் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner