எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இரங்கல் கூட்டத்தில் கழகத் தலைவர் உரை

குன்னூர், டிச.6  போர்க்களத்தில் தளபதிகள் களப்பலியானாலும், முன்னேறுவதுபோல, நம் பணி தொடரும் - தொடரவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

4.12.2018 அன்று மறைந்த கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களுக்கு நடைபெற்ற வீர வணக்கம் செலுத்தும் இரங்கல் கூட்டத்தில் (5.12.2018)  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கலுரையாற்றினார்.

அவரது இரங்கலுரை வருமாறு:

தன்னுடைய இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்பான் போர் வீரன்

எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற, எங்கள் இயக்கத்திற்கு ஏற்பட்டி ருக்கின்ற ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு - தாங்கொணாத சோகம் - வற்றாத துயரம் இவைகளின் மத்தியில் புண்ணுக்குப் மருந்து போடுவதைவிடப் போல, கவுதமனானாலும், கழகமானானாலும், இந்தக் குடும்பத்திற்கும், இயக்கத்திற்கும் ஆறுதல் சொல்ல வந்திருக்கின்ற அத்துணைத் தலைவர்களுக்கும் நன்றி! உங்கள் பயணத்தில் சோர்ந்து விடாதீர்கள். உங்கள் பயணத்தில் இழப்பு அதிகம்தான், ஆனால், நீங்கள் போர்க்களத்தில் நிற்கிறீர்கள், போர்க் களத்தில் நிற்பவர்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும், அந்த இழப்பை, ஒரு பக்கத்தில் அடக்கம் செய்துவிட்டு, தன்னுடைய இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்பான் போர் வீரன். அதுதான் போர்த் தளபதிக்கு அடையாளம் என்று  உற்சாகம் ஊட்டுவதுபோல இருக்கிறது தலைவர்களின் இரங்கல் செய்தி கள்.

போர் வீரன் போய் விட் டானே என்பதற்காக, போர்த் தளபதி சோர்ந்துவிடுவதில்லை. உடன்இருக்கின்றஇராணுவ வீரர்களைக்கொண்டுதங்களுடைய கடமைகளை உடனடியாக நிறைவேற்றுவதில்தான் கண்ணுங்கருத்துமாக இருப் பார்கள் அவர்கள்.

போரில், கண்ணீரைத் துடைக்கக்கூடநேரமில்லை வீரர்களுக்கு. அப்படிப்பட்டவர்களையெல்லாம் நாம் வர லாறாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அதுதான் கடைசி விடை என்று எங்களுக்குத் தெரியாது!

அப்படிப்பட்ட ஒரு சோக நிலையில், செல்வியின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

நேற்று முன்தினம், அதற்கு முன் நாள் இரவு - ஒரு நீண்ட உரையாடல் - எங்கள் குடும்பத்தினரோடு உணவுக் கூடத்தில் இரவு 10.30 மணிவரை பேசினோம். அதுதான் கடைசி விருந்து என்று எங்களுக்குத் தெரியாது. அவர் விடைபெற்றுக் கொள்ளும்பொழுது, அதுதான் கடைசி விடை என்று எங்களுக்குத் தெரியாது. (கழகத் தலைவர் அவர்களுக்கு கண்ணீர் ததும்பியது).

ஆனால், நாங்கள் தளரக்கூடாது. நாங்கள் அஞ்சக் கூடாது. நாங்கள் இழப்பின் பிடியில் சிக்கி மூலையில் ஒதுங்கிவிடக் கூடாது.  நான் ஒரு அருமையான ஆயுதத்தைத் தயாரித்தேன். பட்டறையில்  பளபளத்த ஆயுதம் அது. கூர்மையான ஆயுதம். மற்ற இயக்கங்களில் இப்படிப்பட்ட ஒரு ஆயுதம் இல்லையே என்று எல்லாக் கட்சிக்காரர்களும் பாராட்டுகின்ற நேரத்தில், எங்கள் சோகம் அதிகமாகிறது. ஆறுதலும் பெறுகிறது. இரண்டும் முரண்பட்ட ஒரு நிலை.

அந்த சூழ்நிலையில், செல்வி அவர்களுடைய இழப்பைக் கேட்டு, உடனடியாக நம்முடைய தளபதி, வைகோ போன்றவர்கள், இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்தக் குடும்பம் திராவிட இயக்கக் குடும்பம், பொதுவாழ்க்கையில் எப்படி இருக்கவேண்டும் என்று இந்தக் குடும்பத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

ஜாதி, மதம், கட்சியை எல்லாம் தாண்டி...

எல்லோரும் ஒரே கருத்துள்ளவர்கள் அல்ல; கிறித்துவ நண்பர்கள், ஆசிரியர்கள், இசுலாமிய சகோதரர்கள், மத நம்பிக்கை உடையவர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள், அத்தகைய நம்பிக்கை ஜாதி, மதம், கட்சியை எல்லாம் தாண்டி, ஒவ்வொரு கோணத்திலும் அவரை நேசிக்கிறார்கள்.

அவர் பிரசவம் பார்த்த பிள்ளைகள், அவரை வந்து பார்க்கிறார்கள். அவர் பிரசவித்த பிள்ளைகளைவிட, அவர் பிரசவித்த கொள்கைகளுக்கு ஆற்றல் அதிகம். அவர்களால்

அடையப் போகிற வெற்றி மிக அதிகம்!

செல்விகளை திரும்ப உருவாக்க எங்களால் முடியும்

ஆகவேதான், அவருடைய மறைவு என்பது, இனிமேல் நாம் எவ்வளவு பேசினாலும், செல்வியைத் திரும்பப் பெறமாட்டோம். ஆனால், செல்விகளை திரும்ப உருவாக்க எங்களால் முடியும் என்கிற அந்தத் துணிச்சல் எங்களுக்கு உண்டு.

காரணம், அவர்கள் போட்ட பாதையும், அவர்கள் நடந்து காட்டிய விதமும், இப்பொழுது படமாகிவிட்டது மட்டுமல்ல, நமக்குப் பாடமாகவும் என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருப்பார்கள்.

எனவே, அப்படிப்பட்ட செல்வியின் இறுதிப் பயணம் இன்னும் சில மணித்துளிகளில் தொடர இருக்கின்ற இந்த நேரத்தில், உங்கள் ஆறுதலுக்கு, தலைவர்களுடைய ஆறுதலுக்கு, சகோதரர் வைகோ அவர்கள், என்னால் இறுதிப் பயணத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று திரும்பத் திரும்ப அவருடைய தொலைப்பேசி வந்துகொண்டே இருக்கிறது. தி.மு.க. தலைவர் ஆறுதல் மற்றொரு பக்கம்!

காரணம், இந்த இயக்கம் என்பது இருக்கிறதே, ரத்த பாசத்தைவிட கொள்கை பாசத்தால் நிரப்பப்பட்ட ஒரு இயக்கம். ஆகவே, அதெல்லாம் எங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஆறுதல்.

எனவே, எங்கள் பயணம் தொடரும். இந்த நேரத்தில், ஒன்றை சொல்லவேண்டும். வயதான காலத்தில், பிள்ளைகள் வழியனுப்ப வேண்டும். பிள்ளைகளை பெற்றோர் வழியனுப்புவது என்ற கொடுமையான சோகம் வேறு இருக்க முடியாது. அதுபோன்ற ஒரு நிலைதான் எனக்கு.

இந்தக் குடும்பத்திற்கு முழுக்க முழுக்க பாதுகாவலனாக இருப்போம்

எனவேதான், இன்றைக்குத் தவிர்க்க முடியாத அளவிற்கு நாம் இருந்தாலும், இந்தக் குடும்பத்திற்கு முழுக்க முழுக்க பாதுகாவலனாக இருப்போம்; இயக்கம் இருக்கும். இயக்கத்திற்கு அவர்கள் பாதுகாவலர்களாக இருப்பார்கள்.

அழகாக இங்கே சொன்னார்கள், நான் மேலும் மேலும் அதையே சொல்ல விரும்பவில்லை.

ஒரு நெகட்டிவ், ஒரு பாசிட்டிவ் - இவை இரண்டும் சேர்ந்து மின்சாரம் வரும். அதுபோன்று உணர்ச்சிவயமே பட்ட உணர்ச்சிவயமானவர் எங்களுடைய சகோதரர் கவுதமன். உணர்ச்சிக்கு இடந்தராமல், அறிவுக்கே இடங்கொடுத்து அறிவு முதிர்ச்சியுடன் பார்க்கக்கூடியவர் படமாகி உள்ள எங்கள் செல்வி.

ஆகவேதான், நான் கவுதமனுக்கு ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னேன். இந்தத் துக்கத்திற்கு சொன்ன வார்த்தை ஒன்றுதான்.

கவுதமன் நீ வெறும் கவுதமனாக இருக்கக்கூடாது; பிறைநுதல் செல்வி கவுதமன். கவுதமன் பிறைநுதல் செல்வி அல்ல என்று சொல்லி, இனிமேல் என்னுடைய பயணத்தில் அதிகமாக கவுதமன் அவர்கள் தொடரு வார்கள். அதுதான் அவருடைய துயரத்தை மறப்பதற்கு வழி. குடும்பத்தினை அவருடைய பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறி, அவருடைய இறுதிப் பயணத்தைத் தொடக்குவோம்.

சென்னை பெரியார் திடலில் வீர வணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி

இறுதியாக ஒன்று, வருகின்ற 18 ஆம் தேதி, காலை 11.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில், ஒரு வீர வணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

எங்கள் மறைந்த பொருளாளர் சாமிதுரை அவர்களுக்கு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், கலைஞர் அவர்கள், படத்தினைத் திறந்து வைத்தார்.

இந்தப் பொருளாளருக்கு அநேகமாக, நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், வைகோ அவர்கள் முன்னிலை வகிக்க, மற்ற தலைவர்கள் பங்கேற்று, எங்கள் துயரத்தை அவர்கள் களைந்து, எங்கள் சோகத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டு, அவர்கள் எங்களைத் தட்டிக் கொடுத்து, எங்கள் பயணத்தை மீண்டும் தொடர வைப்பார்கள் என்ற அறிவிப்பையும் செய்கிறேன்.

அன்றைக்கே தலைமைச் செயற்குழுவும் கூடி, இரங்கலைத் தெரிவிக்கும் என்று கூறி, என்னுரையை முடிக்கிறேன்.

வீர வணக்கம், வீர வணக்கம்,

வீர வணக்கம், வீர வணக்கம்!

எங்கள் வீர வேங்கைக்கு

வீர வணக்கம், வீர வணக்கம்!

எங்கள் பெண் புலிக்கு

வீர வணக்கம், வீர வணக்கம்!

எங்கள் கொள்கை சிங்கத்திற்கு

வீர வணக்கம், வீர வணக்கம்!

வீர வணக்கம், வீர வணக்கம்!!

பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணுக்கு

வீர வணக்கம், வீர வணக்கம்!

செல்விகளை உருவாக்குவோம்

பயணத்தைத் தொடருவோம்!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முழக்கமிட, அனைவரும் அதனை வழிமொழியும் வகையில் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner