எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாய் மாவட்டமான தருமபுரி மாவட்டம், அரசு வருவாய் மாவட்டமான கிருட்டிணகிரி, கழக மாவட்டமான திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு மய்யப்பகுதியில் மத்தூர் என்னும் சிறு நகரம் ஆனால் அந்த சிறு நகரமோ தந்தை பெரியாரின் கொள்கைக் கோட்டையாக திகழ்கிறது.

மத்தூரை கொள்கைக் கோட்டையாக்க பெரியாரின் பகுத்தறிவு நீர் பாய்ச்சிய பெருந்தொண்டர்கள் ஊத்தங்கரை பழனியப்பன், இனாம்காட்டுப்பட்டி ஆசிரியர் கி.சிதம்பரம், கதிரம்பட்டி பொன்னுச்சாமி, வையாபுரி என பலர் உழைத்து மறைந்த தோழர்கள் ஏராளம். அவர்களின் உழைப்பால் இன்றும் கழகத்தின் கொள்கை கோட்டையாக மத்தூர் பகுதி தலை நிமிர்ந்து நிற்கிறது. மத்தூரைச் சுற்றி கழகத்தின் கருத்துப் பாய்ச்சல் கண்ட கிராமங்களாக நடுப்பட்டி, பாண்டவர் குட்டை, போச்சம்பள்ளி, சூளகரை, கல்லாவி, தருமதோப்பு பொடார், அண்ணாநகர், கண்ணன்ட அள்ளி, செட்டியப்ப நகர், எல்லாம் கொள்கை குடும்பங்களாக வாழுகின்ற பெரியார் புரமாகவே இருக்கின்றன.

மத்தூரில் ஜூலை 28ஆம் தேதி தருமபுரி மண்டல இளைஞர் எழுச்சி மாநாடு என்று தமிழர் தலைவர் அறிவித்ததும் முதல் நாள் கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் ஒரு மணி நேரத்தில் அளிக்கப்பட்ட தொகை ரூ. 75 ஆயிரம்.

சும்மா இருக்குமா கருப்புத் தேனீக்களின் கூட்டம், மண்டலம் மட்டும் அல்ல, மாவட்டம் மட்டுமல்ல, மண்டலத்திற்குட்பட்ட 3 மாவட்டங்களில் தருமபுரி, கிருட்டிணகிரி, ஓசூர், திருப்பத்தூர், ஊத்தங்கரை போன்ற பெருநகரங்களிலும், போச்சம்பள்ளி, கல்லாவி, சாமல்பட்டி, நடுப்பட்டி, சந்தூர், அரசம்பட்டி, போன்ற சிற்றூர்களிலும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் கழக ஓவியர் மத்தூர் திராவிடராசன் குழுவினர் சிறப்பாக சுவரெழுத்துப் பணியை செய்துள்ளனர்.

இவ்வளவும் நடந்த பிறகு சும்மாவா இருக்கும் நயவஞ்சகர்களின் நரிக்கூட்டம்? முகநூலில் பதியவிட்ட உண்மை செய்திக்கு பதில் சொல்ல முடியாமல் ஊதிப் பெரிதாக்கி ஊளையிட்டது நயவஞ்சகர்களின் நரிக்கூட்டம், கடமை தவறாத! காவல்துறை சும்மாவா இருக்கும்? ஊளையிட்ட நரிகளின் மனம் புண்படுகிறது எனக் கூறி மாநாடு நடத்திட தடை போட்டார்கள். பெரியார் தொண்டர்களாயிற்றே! செயல்பாடுகள் வீரியம் பெற்றன. தடைகள் என்னும் செய்திக்குப் பின்னர் தோழர்களின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. தடைகளைக் கடந்தே, அதை உடைத்தெறிந்தே, அதை தாண்டியே பழக்கப்பட்டவர்களாயிற்றே கழகத் தோழர்கள்!

நாம் மாநாட்டிற்கு செய்த விளம்பரத்தைக் காட்டிலும் நமக்கு எதிரானவர்கள் முகநூலில் செய்த விளம்பரம் நல்ல பயனளித்தது. அவர்களுக்கு நமது பாராட்டுகளும் நன்றியும்.

தான் ஏற்றுக்கொண்ட கொள்கை தன்னோடு மட்டும் இருந்து விடக்கூடாது என்றெண்ணி, தன் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரும் பெரியாரை அறிய வேண்டும் என்பதற்காக முனைவர் மு.இராசேந்திரன் அவர்கள் தனது பள்ளியில் தந்தை பெரியார் சிலையை வைத்துள்ளார். அதை ஜூலை 28 அன்று காலை தமிழர் தலைவர் திறந்து வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். மாலை மத்தூரில் மண்டல இளைஞரணி மாநாடு, மாநாட்டில் ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு என சிறப்பான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

மண்டல மாநாடு என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதைக் கடந்து மாபெரும் நாடாக நடக்க உள்ளது. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

மாநாடு சிறப்படைய மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, கிளைக் கழக பொறுப்பாளர்களென அனைவரும் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். நன்கொடை திரட்டலில் ஆண் தோழர்களோடு பெண் தோழர்களும் இணைந்து சந்தை, கடை வீதி என நிதி திரட்டி சாதனை படைத்துள்ளார்கள்.

பெரியார் எவர்? எனக் காட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறியதைப் போல

தமிழன் மானம்

தவிடு பொடி ஆகையில்

வாழாது வாழ்ந்தவன்

வடுசுமந்து சாகையில்

"ஆ" என்று துள்ளி மார்பு தட்டிச்

சாவென்று வாழ்வென்று

பார்ப்பேன் என்று பார்ப்பனக் கோட்டையை

நோக்கிப் பாயும் இவ்

வருஞ்செயல் செய்வார் அல்லல்

பெரியார் எவர்?

நம் பெரியார் வாழ்கவே!

எனப் பாடியதை போல, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும் பாடுகிறார் இதோ!

கொத்தும் பணக்கழுகு கொள்ளைப் பெருச்சாளி

எத்திப் பிழைக்கவே சுத்தும் நரிக்கூட்டம்

ரத்தவெறி கொண்டலையும் யுத்தப்பெரும் முதலை

பித்தம் பிடித்தலையும் பேதக் குரங்குகள்

திட்டம் உடைந்தது சித்தம் தெளிந்தது

தேசத்தில் மாசற்ற தீபம் பிறந்தது

ஒற்றுமை மக்களின் ஒற்றுமை வந்தது

உலகம் விடிந்தது, கலகம் ஒழிந்தது.

சோர்ந்த கைகள் உயர்ந்தது.

என்று பட்டுக்கோட்டையாரும் பாடியுள்ளார். தடைகள் என்பது நமக்கு புதிதல்ல அதைப் பழையதாக்கிக் கொண்ட பெரியார் தொண்டர்கள் பழகி விட்டார்கள். பட்டம் பதவிகளுக்கு தலைவைத்தும் படுக்காத தமிழர் தலைவர் அழைக்கிறார். வாரீர் வாரீர், மத்தூர் நோக்கி மடமை போக்க!! வாரீர் வாரீர்!!!

- அ.தமிழ்ச்செல்வன்

பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner