எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இப்படி பேசியவர்கள் காலத்தில்தான், பெண்கள் மீதான மத அடக்குமுறைகள் மிகுந்த காலகட்டத்தில்தான் பெண்களுக்கு கல்வி கொடு, பெண்களுக்கு சொத்துரிமை கொடு, சம உரிமை கொடு, பெண்களை இழிவுப்படுத்தும் தேவதாசி முறையை ஒழி, விதவைகளுக்கு மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்காதே.. விதவை கைம்பெண்களுக்கு மறு திருமணம்.. இப்படியான கலகக்குரல் உறு மியவர் அய்யா பெரியார் அவர்கள். பெண்களின் வளர்ச்சிக் கும், முன்னேற்றத்திற்கும் பெரியார் ஆற்றிய தொண்டினை பாராட்டி 1938ல் தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு 'பெரியார்' என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. 1938ல் தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் பண்டித நாராயணி, வ.பா. தாமரைகண்ணி, நீலாம்பிகை, மூவலூர் ராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட பெண்கள் குழு முன்னின்று நடத்தியது. இந்த மாநாட்டில் 'பெரியார்' எனப் பெண்கள் பெயரிட்டு அழைத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். "இந்தியாவில் இதுவரை சீர்திருத்த  தலைவர்கள் செய்யாமல் போன வேலைகளை நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதால், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் வேறு ஒருவர் இல்லை என்பதைக் கருத்தில் கண்டு அவருடைய பெயரை சொல்லாலும், எழுத்தாலும் 'பெரியார்' என்ற சிறப்பு பெயரால் அழைக்க வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   பெ ரி யா ர்   அ வர் களைப்பற்றி சொல்ல வேண்டு மானால் சொல்லிக் கொண்டே போகலாம். அவை எண்ணில் அடங்காதவைகள். எனது எழுத்து குறிப்பில் மட்டும் அனைத்தையும் அடக்கிவிட முடியுமா என்ன? அது ஒரு சாதனைக்கடல். அவருக்கு நிகராக எவரும் ஏற முடியாத சரித்திர மலை. ஆனால் பெரியாரை ஏதாவது குற்றம் சொல்லி அவரை சறுக்கிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டு பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று இதன்மூலம் தமிழையும் குறையாக்கி, பெரியார் அந்த தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று தமிழர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள பற்றை பகையாக்கி பார்க்கும் ஆரிய சூழ்ச்சி... தமிழை இப்படி சொன்னார், இப்படி சொன்னார் என்று பொதுக் கூட்டங்களிலும், டிவி விவாதங்களிலும் சொல்பவர்கள் யார் என்று பார்த்தால் இந்த பி.ஜே.பி காரன். இந்து பெயரால் அமைப்பு நடத்துகிறவன். மொத்தத்தில் பெரியாருக்கு எதிரானவர்கள். அவரை பிடிக்காதவர்கள். இந்த வியாக்கியான வாதிகள் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார் என்பதை மட்டும் கண்டுபிடித்து, இந்த குருட்டு புத்தியாளர்கள் ஏன் அப்படி சொன்னார் என்கின்ற எதிர்பதத்தை ஆராயாமல் விட்ட அறிவிலிகள். ஏன் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்? அந்த கால கட்டத்தில் பழைமையான மொழி, நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றமடையா மொழி, வெறும் பக்தி மற்றும் இலக்கியம் மட்டுமே இருந்த மொழியை, அதை நவீன காலத்துக்கு ஏற்ற மொழியாக தமிழ் மாற்றமடைய வேண்டும் என்ற அர்த்தத்தில் பெரியார் அவர்கள் இந்த தமிழை முற்றிலும் ராமகாவியம், கிருஷ்ணன் கதா என்று இல்லாத கற்பனைகளை எல்லாம் இம்மொழியில் திணித்து தமிழை காட்டுமிராண்டி மொழியாக வைத்துள் ளார்கள் என்றார்.

பெரியாரை குறை கூறும் கோமாளிகள் தமிழை ஆக்கிரமித்துள்ள ராமகாவியம், கிருஷ்ண கதா போன்றவை ஆன்மீகம் சார்ந்து இருப்பதைத்தான் பெரியார் தமிழை இப்படி சொன்னார் என்பதை மறைத்து மொட்டையாக தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். அத்துடன் பெரியார் இன்னொன்றையும் சொன்னார். "நான் தமிழை திட்டுவதால் கோபமடைந்த புலவர்கள் யாராவது நல்ல தமிழில் அறிவியல் நூல்களை எழுதி கொடுத்தால் அதை எனது சொந்த செலவில் வெளியிட்டு அவர்களுக்கு பாராட்டும், பரிசும் அளிக்க தயாராக உள்ளேன்" என்றும் சொன்னார் பெரியார்.

வெறும் தமிழ் மொழிப்பற்று, மொழியில் புலமை மட்டுமே தமிழினத்தை உயர்த்திவிடாது. ஆங்கில அறிவு கல்வி அவசியம், அப்போதுதான் தமிழர் வாழ்வு ஏற்றமடையும் என சொன்னார் பெரியார். இன்றைய நிலைமையை பார்த்தால் பெரியாரின் தொலைநோக்கு புரிகிறது. தமிழ்நாட்டினர் பிற மாநிலத்தலைவர்களை விட கூடுதலாக பெற்றுள்ள ஆங்கில மொழி அறிவால் தான் கணினி தொழில் நுட்ப வேலைகளில் கோலோச்சுகிறார்கள்.

பெரியாரை அறியாதவர்கள், அவர் யார் என்று புரியாதவர்கள், பெரியாரை படிக்காதவர்கள் பெரியார் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என நக்கலாய் பேசுபவர்களுக்காவும் பெரியார் யார் என புரிந்துகொள்ள சில சொற்ப தகவல்கள்.

1. பெரியார் தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய் தனது 94ஆம் வயது வரை மக்கள் பணியில் ஈடுபட்டவர்.

2. செல்வ குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி) சமூகத்தின் அடிதட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காக தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்,

3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றாதவர். அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர். தனது வாழ்நாளில் ஏறக்குறைய 8,200 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து சுமார் 11000 நிகழ்ச்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியவர். முதிர்ந்த வயதிலும், சிறுநீரக பாதிப் பால் மூத்திர வாளியை கையோடு பிடித்துக்கொண்டு சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பேசியவர்.

4. அக்காலத்திலேயே விதவை மறுமணத்தை வலியுறுத்தியவர். பெண்களுக்கு சொத்து உரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

5. மனிதர்கள் அனைவரும் சமம். அவனுக்குள் மேல் சாதி, கீழ்சாதி என்ற பிரிவினை இருக்கக்கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.

6. ஜாதிகள் மதத்தினால்தான் தோன்றுகின்றன. எனவே மதத்தை தூக்கி எறிந்தவர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொன்னவர்.

7. இல்லாத கடவுளையும், சாஸ்திரங்களையும் சொல்லி மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர். அவர் வாழ்ந்த காலத்தில் மதத்தின் பெயரால் குறிப்பிட்ட சமூக மக்கள் பிற சமூக மக்களின் மீது செலுத்திய ஆதிக்கத்தை, மதத்தின் பெயரை சொல்லிக்கொண்டு அவர்கள் மட்டுமே அனுபவித்த சலுகைகளை கண்டு கொதித்துதான் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக்கினார்.

8. பெரியார் புதிய உலகின் தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி என்று அய்க்கிய நாடுகள் அமைப்பின் யுனெஸ்கோ அமைப்பால் பாராட்டப்பட்ட - பெரு மனிதர்.

9. தம் இயக்க தோழர்களை சாதி மறுப்பு, மத மறுப்பு, விதவை திருமணங்களை செய்து கொள்ள ஆதரித்தவர்.

10. பெரியாரிடம் பலர், உங்களின் எல்லா கொள்கையும் பிடித்திருக்கிறது. கடவுள் மறுப்பை தவிர என சொல்லியபோது, கை நல்லா இருக்கு. கால் நல்லா இருக்கு, மூக்கு முழி எல்லாமே நல்லா இருக்கு, உயிர் மட்டும்தான் பிடிக்கவில்லை எனச் சொல்வதுபோல் இருக்கிறது. நீங்கள் சொல்வது என - பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்.

11. கடவுள் இல்லை என்பதற்கு அவர் சொல்லும் விளக்கம். "நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன். அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணர முடியவில்லை . அதனால்தான் கடவுள் இல்லை என மறுக்கிறேன்" என்று கடவுள் மறுப்புக்கு விளக்கம் அளித்தார். பெரியார் சிந்தனைகள் இதுபோல் நிரம்ப உண்டு. இது சொற்பமே.. அய்யா பெரியார் அவர்கள் சாதனை நாயகர். வரலாற்றின் பொக்கிஷம். அவரை அறியாத, அவரது ஆளுமை திறன்களை புரிந்திராத வெற்று வீணர்கள், தீமை புத்தி படைத்த தீய சக்திகள் பெரியாரை செருப்பால் அடிப்பேன், அவரது சிலையை உடைப்பேன் என்று சொல்பவர்களே..,

பெரியார் சிலை என்பது கல்லும் மண்ணுமல்ல. அது மானமும் அறிவும் கொண்டது. அது வாழிபாட்டிற்கல்ல. வழி காட்டுதலுக்கு..

நீங்கள் வழிபட்டுக்கொண்டிருக்கின்ற சிலைகளை எல்லாம் அகற்றிவிட்டு சொல்லுங்கள். பெரியார் சிலை வேண்டாம் என்று. அகற்றிவிடுவோம்.

அதேபோல் எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற சமூக நீதியை வழங்கிவிட்டு சொல்லுங்கள் பெரியார் சிலை வேண்டாம் என்று. அகற்றிவிடுகிறோம்.

சூத்திர இழிவை துடைக்க எங்களது சந்ததிகளை அர்ச்சகர்களாக்கிவிட்டு சொல்லுங்கள். பெரியார் வேண்டாம் என்று. அப்புறப்படுத்திவிடுவோம்.

சாதி இழிவும், மதவாதங்களும் ஒழிந்து, பெரியார் கண்ட திராவிட இயக்கத்தின் நோக்கங்கள் நிறைவேறவே அய்யா பெரியார். அண்ணல் அம்பேத்கர் சிலைகளே தவிர, அதை வைத்து மணி, அடித்து, விபூதி பூசி, பூச் சூட்டி, பத்தி கொளுத்தி, கற்பூரம் ஏற்றி வழிபட அல்ல... என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அய்யா பெரியார் அவர்கள் விதையாக விதைக் கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்தால் அரை நூற் றாண்டுகள் ஆகிவிடும். இத்தனை ஆண்டுகள் கடந்து விட்ட பின்னும் அவர் சிலையாக இருந்தாலும் உயிர்ப் புடன் இருந்துகொண்டு தமிழக மக்களை அவர்பால் உணர்வுடன் இருக்கச் செய்து கொண்டிருக்கிறார். அவர் முழங்கிவிட்டு சென்ற கொள்கை முழக்கங்களை மங்காமல் பாதுகாத்து கொண்டிருக்கிறார். எந்த நேரத்தில் அதற்கு பங்கமும், பாதிப்பும் வரும்போது அதற்கான எதிர் வினைகள் எப்படி தமிழகத்தில் எதிரொலிக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து நின்ற போதெல்லாம் வாய் திறக்காமல் மௌனம் காத்திருக்கும் பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று சொன்னதின் விளைவாக தமிழகம் தீ பிழம்பானதைக் கண்டு 24 மணி நேரத்தில் அவர்கள் பயந்து தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்கள். இதுபோன்று அவர்கள் இப்படி அவசர அவசரமாக வாய் திறந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்களா? பெரியார் என்கின்ற பெரும் சக்தி அவர்களை மிரட்டி உள்ளது. அவர்களும் மிரண்டுதான் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்கள் என்று தானே அர்த்தம்? பெரியார் என்ன பெரிய ஆளா? என்று ஏளனமாக பார்த்தவர்களே.. பழித்தவர்களே... இப்போது புரிகிறதா? பெரியாரை யார் என்று நினைத்தீர்கள்..?

(நிறைவு)

- சி.வி. புரட்சி வேந்தன், புதுச்சேரி நன்றி: நீதிக்கான விடியல் ஏப்ரல் 2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner