எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அகமதாபாத், ஏப்.8-குஜராத் மாநிலத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை முறியடிக்க தேசியவாத காங்கிரசு கட்சி மற்றும் அய்க்கிய ஜனதா தளம் கூட்டணியாக இணைந்து 'கட்பந்தன்' என்கிற அமைப்பைத் தோற்றுவித்துள்ளன.

சரத் பவாரைத் தவைராகக் கொண்டுள்ள தேசியவாத காங்கிரசு கட்சியின் பொறுப்பாளர் பிரபுல் படேல், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தொடர்பாளரும் பொதுச்செயலாளருமான கே.சி.தியாகி ஆகியோர் கூட்டாக இணைந்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜகவை எதிர்த்து மாபெரும் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணி குஜராத் மாநிலத்திலிருந்து தொடங்கப்படுகின்றது.

இந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தனியாக இருந்தால் எதிர்க்கட்சிகள் பாஜகவை தோற்கடிக்க முடியாது என்பதால் பாஜகவுக்கு எதிராக 'கட்பந்தன்' என்கிற பெயரில் மாபெரும் கூட்டணியை தேசிய வாத காங்கிரசு, அய்க்கிய ஜனதா தளம் இணைந்து ஏற்படுத்தியுள்ளன.

பாஜகவைத் தோற்கடிக்க மத்தியிலும், மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

கே.சி.தியாகி கூறும்போது, “நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவேதான் மாபெரும் கூட்டணி என்று இந்தக்கூட்டணியை குறிப்பிடுகிறோம். குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்தே இங்கிருந்தே மாபெரும் கூட்டணி முயற்சியைத் தொடங்கியுள்ளோம். மத்தியில் வலிமையான எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அண்மையில் சரத் பவார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை  நிதிஷ்குமார் சந்தித்தார்’’ என்றார்.

தேசியவாத காங்கிரசு கட்சியின் பிரபுல் படேல் கூறும்போது, கருத்து ஒற்றுமையுள்ள கட்சிகள் குஜராத் மாநிலத்தில் இந்தக் கூட்டணியை வரவேற்கின்றன என்றார்.

குஜராத் மாநிலத்தில் தேசியவாத காங்கிரசு கட்சியின் சார்பில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கந்தால் ஜடேஜா மற்றும் ஜெயந்த் படேல் ஆகியோர் உள்ளனர். 182 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் சோட்டு வாசவா என்பவர் அய்க்கிய ஜனதா தளக்கட்சியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு உறுப்பினர் ஆவார்.

 

logo

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner