எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விவசாயிகள் குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஜன.18- பிரதமரின் பயிர் காப்பீடுத் திட்டத்தில் சேரும் விவசாயிகள் குறைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தால் காப்பீடு நிறுவனங்களுக்குதான் கொள்ளை லாபம் கிடைக்கிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகளுக்கு புதிய பயிர்காப்பீடு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். 2015ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் 3.09 கோடி விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். 2016ஆம் ஆண்டு  காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்த போது இந்த எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரித்தது. அதாவது 4.03 கோடி பேர் காப்பீடுதிட்டத்தில் பதிவு செய்தனர் என வேளாண் அமைச்சக புள்ளி விவரம் மூலம்தெரியவந்துள்ளது.

ஆனால், இயற்கைப் பேரிடர் உட்பட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் இந்தத்திட்டத்தில் காப்பீடு பலனுக்கு விண்ணப்பித்தால், இவற்றை ஆய்வு செய்யும் பணிகள் மிக தாமதமாகவே  நடக்கின்றன என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், காப்பீடு பலனும் மிக தாமதமாகவே கிடைக்கிறது. அதாவது, காப்பீடுபலன் கிடைக்க சுமார் 6மாதம் முதல் 9 மாதங்கள் ஆகின்றன என விவசாயிகள் தரப்பில்  கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டில் இருந்தே இந்த காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

2017ம் ஆண்டில் பிரதமர் பயிர்காப்பீட்டில் 3.48 கோடிபேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். 2018ம் ஆண்டில் இது  3.33 கோடியாக குறைந்து விட்டது. 2017ம் ஆண்டு மத்தியில் இருந்து விவசாய கடன்கள் பல தள்ளுபடி செய்யப்பட்டதும் பயிர் காப்பீட்டில் சேர்வோர் எண்ணிக்கை சரிவுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.

விவசாயிகள் ஆர்வம் குறைந்து வருவது ஒருபுறம் இருக்க, இதற்கு மாறாக, பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்தில் மாநிலங்களின் பங்களிப்பு கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.

இதனால், இந்தத் திட்டம் விவசாயிகளை விட காப்பீடு நிறுவனங்களுக்குதான் பலன் தருகிறது என விவசாய சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது. 2015&2016 நிதியாண்டில் பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியமாக ரூ.5,614 கோடி வசூலித்துள்ளன. 2016&2017 நிதியாண்டில் இது ரூ.22,362 கோடியாகவும், 2017&2018 நிதியாண்டில் இது ரூ.25,046 கோடியாகவும் அதிகரித் துள்ளது. சம்பா மற்றும் குறுவை பயிர் காப்பீடுகள் இரண்டும் இதில் அடங்கும். மேற்கண்ட புள்ளி விவரங்கள், பயிர்க்காப்பீடு சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களுக்கே லாபத்தைக்  குவிக்கின்றன என்பதை மெய்ப்பிப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவிக் கின்றன.

* 2015ஆம் ஆண்டு 3.09 கோடி விவசாயிகள் பயிர்க்காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்தனர்.

* 2016ஆம் ஆண்டு காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்து 4.03 கோடி ஆக இருந்தது.

* 2017ஆம் ஆண்டு காப்பீட்டில் சேரும் விவசாயிகள் எண்ணிக்கை 3.48 கோடியாகவும், 2018இல் 3.33 கோடியாகவும் சரிந்தது.

* காப்பீடு நிறுவனங்கள் 2015&16இல் ரூ. 5,614 கோடி, 2016&2017 ரூ.22,362 கோடி, 2017 - 20-18 ரூ.25,046 கோடி பிரீமியம் வசூலித்துள்ளன.

பயிர்க் காப்பீடுத் திட்டங்களை வங்கிகள் மூலம் காப்பீடு நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. பயிர்க் கடன் வாங்கும் விவசாயிகளிடம் கடன் தொகையில் இருந்து பிரீமியத்தை வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன. காப்பீடு வேண்டுமா என்பதை விவசாயிகளிடம் வங்கிகள் கேட்பதில்லை. அதோடு, பயிர்கள் சேதம் அடைந்தால் அவற்றை ஆய்வுசெய்ய போதுமான கள அதிகாரிகள் இல்லை. எனவே, இழப்பீட்டை சரியாக மதிப்பீடு செய்வது சவாலான பணியாக உள்ளது.

இது போன்ற காரணங்களால் காப்பீடுத் திட்டங்கள் மீதான விவசாயிகள் நம்பிக்கை குறைந்து வருகிறது என சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner