மானமிகு ஆசிரியர்
அவர்களே
நீவிர்
கண் விழித்தபோதே
கருப்புச் சூரியனையா
கண்டீர்!
பேச நாக்கைச்
சுழற்றியபோது
பெரியாரையா
உச்சரித்தீர்!
கரும்பலகையில் நீ
எழுதிய முதல் சொல்
பகுத்தறிவா?
மனப்பாடம் செய்த
முதல் பாடல்
சுயமரியாதையா?
உன் விளையாட்டுத்
திடல்
ஈரோடா?
உன் மேசை
எழுதுவதற்கா
மேடை ஏறிப் பேசுவதற்கா?
ஊர் சுற்றும்' பழக்கம்
பத்து வயதில்
உம்மைப் பிடித்ததால்
வந்தது தானா -
இன்றுவரை?
எண்பத்தாறு
வயதிலும்
உன் நடையின்
வேகம்
கஜா புயல்'தானா?
உன் வீடு என்பது
அடையாறா -
ஊர் சுற்றுவதால்
நேரம் கிடையாதா?
பிஞ்சில் பழுத்தல்
என்பதற்குப்
புதுப்பொருள்
பிழிந்தது
நீ தானா?
ஆசிரியர் நீங்கள்
அது எப்படி?
அய்யா கருத்தை
அன்றாடம் போதிப்பதாலா?
வித்தியாசமானவர்
நீங்கள்
விடுதலை'க்கு
ஆசிரியர் என்றாலும்
விடுதலை ஏது உங்களுக்குப்
பெரியாரை விட்டு?
- கவிஞர் கலி.பூங்குன்றன்