எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.22  தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் தகவல் பரிமாற்ற கருவிகளை ஏன் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நல அமைப்பு சார்பில் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க கடந்த 1984 ஆம் ஆண்டில் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக இலங்கை கடற்படை செயல்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய மனித உரிமை மீறல்களை இந்திய வெளியுறவுத்துறை கண்மூடி வேடிக்கைப் பார்த்து வருகிறது. கடந்த 34 ஆண்டுகளாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கத் தவறிவிட்டது. எனவே இந்த விவகாரத்தை பன்னாட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுச்செல்ல மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் மவுரியா, மத்திய அரசு சார்பில் உதவி தலைமை வழக்குரைஞர் ஜி.கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது தமிழக மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், மீனவர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் சென்னையில் 150, கடலூரில் 42, தூத்துக்குடியில் 97, நாகப்பட்டினம் 122, கன்னியாகுமரியில் 96 என மொத்தம் 507 படகுகளில் தகவல் பரிமாற்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் 6 ஆயிரம் தகவல் பரிமாற்ற கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இந்த தகவல் பரிமாற்ற கருவியை ஒரு படகில் பொருத்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவாகிறது. இந்த தொகையில் மத்திய அரசின் பங்காக ரூ.90 ஆயிரமும், மாநில அரசின் பங்களிப்பாக ரூ.18 ஆயிரமும், படகின் உரிமையாளரின் பங்களிப்பாக ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் இந்த தகவல் பரிமாற்ற கருவிக்கான நிதி ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்புக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தகவல் பரிமாற்ற கருவிகளை கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் ஏன் வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த கருவியை மீனவர்களின் படகுகளில் பொருத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை ஒரு வார காலத்துக்குள் மத்திய மாநில அரசுகள் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner