எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'விடுதலை' ஏட்டின் சார்பில் ‘பத்திரிக்கைச் சுதந்திரப் பாதுகாப்பும் பாராட்டும்’ நிகழ்ச்சியில் தி.மு. கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் சூளுரை!

சென்னை, அக். 12 -`விடுதலை’ நாளிதழ் சார்பில், நேற்று (11.10.2018) மாலை, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, `பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்பும் பாராட்டும்’ எனும் நிகழ்வில் சிறப்புரையாற்றிய தி.மு.கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,  `` நிர்மலா தேவியின் ஜாமீன் மனு

8 முறை  ரத்து செய்யப்பட்டதால்தான் நாங்கள் சந்தேகிக்கி றோம்’’ என்றும் ``தமிழக ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யும் வரை போராடு வோம்,  போராடுவோம், வெற்றிபெறு வோம்’’ என்றும், குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந் திருக்கக்கூடிய  ஜனநாயகத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய வகையில் நம்முடைய நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை கைது செய்து அதன் மூலமாக நடந்து முடிந் திருக்கக் கூடிய  சர்வாதிகாரத்தைக் கண்டிக்கக் கூடிய வகையிலே. நம்முடைய எழுத்துச் சுதந்திரத்தை, பேச்சு சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில்  இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

கோடி கோடியாகக் கொடுத்தாலும்

கிடைக்காத விளம்பரம்!

இங்கே சொன்னார்கள்; கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரம் கோபாலுக்கு கிடைக்காது’’ என்று  நம்முடைய முத்தரசன்  சொன்னார், நூறு கோடியல்ல ஆயிரம் கோடி கொடுத்தாலும் இந்த விளம் பரம் கிடைக்காது என்று சொன்னார். நான் சொல்லுகிறேன்; ஆயிரம் கோடியல்ல எத்தனை ஆயிரம் கோடி கொடுத்தாலும் இந்த விளம்பரம் கிடைக்கவே கிடைக்காது. அது நம்முடைய நக்கீரன் கோபாலுக்கு கிடைத்திருக்கிறது.

நம்முடைய கோபால் அவர்களை கைது செய்து அதுவும், விமான நிலையத்திற்குச் சென்று கைது செய்து. பத்து மணி நேரத் தில் அவரை விடுதலை செய்திருக்கிறார் கள். விடுதலை செய்ததற்குப் பிறகு ஒரு நாள் இடைவெளியிலே நம்முடைய ஆசிரியர் அவர்கள் இந்தக் கூட்டத்தை  ஏற்பாடு செய் திருக்கிறார்கள்.  எப்பொழுதுமே ஒரு பிரச்சினை வருகிற போது திராவிடத்திற்கு, திராவிட இயக்கத்திற்கு அதுவும் நம்முடைய கருத்து சுதந்திரத் திற்கு ஆபத்து வருகிறபோது, முதன் முதலில் குரல் கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கக் கூடியவர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள் என்பது எல்லோருக் கும் நன்றாக தெரியும்.  அந்த வகையிலே இன்றும்  அவர்கள் இந்த முயற்சியிலே ஈடுபட்டு இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து எங்களை எல்லாம் கலந்து கொள்ள வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், கோபால் அவர்களை ஏன் கைது செய்தீர் கள்? என்று கேட்பதற்காகக்கூட அல்ல. இதற்கெல்லாம், நம்முடைய நக்கீரன் கோபால் அவர்கள் பயப்படப் போவதில்லை, அவர் பொடா வைப் பார்த்தவர், தடாவைப் பார்த்தவர், எத்தனையோ அவதூறு வழக்கு களைச் சந்தித்தவர், எத்தனையோ முறை சிறையில் அடைபட் டிருந்தவர். எனவே, இதுபற்றியெல்லாம் ஒரு சிறு துளி அளவும் கூட அவர் கவலைப்படப்போவது இல்லை. அத்தனை பொடா, தடாவைப் பார்த்த கோபால் அவர்கள் இந்த எடப்பாடியைப் பார்த்தா பயந்துவிடப்போகிறார்? ஜெயல லிதாவையே பார்த்தவர் அவர் அட்டைப் படத்திலே ஜெயலலிதாவை ஹிட்லர் போல சித்தரித்தவர் அவர். ஹிட்லருக்கே பயப்படாதவர் இந்த ஜோக்கருக்கா பயந்து விடப் போகிறார். ஹிட்லருக்கே பயப்படாதவர், இந்த எடுபுடிக்கா பயந்துவிடப் போகிறார்?

நிர்மலாதேவியைப் பார்த்து

பயப்படும் ஆளுநர்!

இன்றைக்கு கோட்டையில் இருக்கக் கூடியவர்கள் எல்லாம், இவ்வளவு ஊழல் செய்திருக்கிறோமே; வழக்குகள் எல்லாம் போடப்பட்டிருக்கிறதே என்று அதற்கு பயந்து கொண்டிருக்கிறார்கள். கோட்டை யில் இருக்கக் கூடியவர்கள் ஊழலைப் பார்த்துப் பயந்துகொண்டிருக்கிறார்கள். கிண்டியில் இருக்கக்கூடியவர் இன் றைக்கு யாருக்குப் பயந்து கொண் டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அதைக் குறிப்பிட நான் பயப்படவில்லை, நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டி ருக்கிறார். இதைச் சொல்லுகின்ற காரணத்தால் என்மீதும் வழக்கு வரும். வரவேண்டும் -  வரவேண்டும் என்று எதிர்பார்த்துத்தான் நான் பேசுகிறேன்.

சமுதாயத்திற்காக - மொழிக்காக

சிறை செல்பவர்கள் நாங்கள்!

முத்தரசன் சொன்னார், அவர் பேசுகிற போதே நாங்கள் சொல்லிக்கொண்டிருந் தோம், ``இன்றிரவே முத்தரசன் வீட்டிற்கு காவல்துறை போகப்போகிறது’’,  என்று அதுபற்றி  கவலைப்படவில்லை.  நாங்கள் எல்லாம் ஏதோ ஊழல் செய்துவிட்டு, கொள்ளையடித்துவிட்டு, சொத்து சேர்த்து விட்டு அதற்காக 200 கோடி ரூபாய் ஃபைன் பெற்று விட்டு, அதற்காக நான்கு வருடம் ஜெயிலில் போய் இருக்க வேண்டிய அந்தத் தண்டனையைப் பெறக்கூடியவர்கள் அல்ல நாங்கள். நாட்டிற்காக - நாட்டினுடைய பிரச்சனைகளுக்காக - சமுதாயத்திற்காக  - நம்முடைய இனத்திற்காக - நம்முடைய மொழிக்காக அதற்குச் சிறை செல்வதிலே என்றைக்கும் நாங்கள் தயங்காதவர்கள். அந்த உரிமை கலந்த அந்த உணர்வோடு தான் நம்முடைய நக்கீரன் கோபால் அவர்கள் தன்னுடைய பத்திரிகையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய நிலைமைகளை, உண்மைகளை எழுதினார்.

கவர்னர் அவர்கள் மீது ஒரு சந்தேகம், ஒரு பிரச்சனை வருகிறது. அந்தப் பிரச்சனை வந்த நேரத்திலே உடனே நாம் குரல் கொடுத்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல, எல்லா கட்சித்தலைவர்களும் குரல் கொடுத்திருக்கிறோம், எல்லா அமைப்புகளைச் சார்ந்தவர்களும் குரல் கொடுத்திருக்கிறோம்.

பிரச்சினைக்கு உரியவரே

விசாரணைக்கு உத்தரவிடும் வினோதம்!

நிர்மலா தேவி என்ற ஒரு பெண்; அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வருகிறது. தொலைக் காட்சிகளில் செய்திகள் வருகிறது. அவர் பேசிய பேச்சுக்கள் ஒலிபரப்பப்படுகிறது, அப்படி ஒலிபரப்பப் படுகிற நேரத்திலே அதிலே கவர்ன ருடைய பெயரும் அடிபடு கிறது. எனவே இதில் உரிய விசாரணை நடத்திட வேண்டும்,  நீதி விசாரணை தேவை என்று சொல்லுகிறோம். உயர்நீதி மன்றத்தின் நீதிபதி அந்த விசாரணையைத் தலைமையேற்று நடத்திட வேண்டு மென்று சொல்கிறோம். அதையும் தாண்டி சி.பி.அய். இதில் விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.

பிரச்சினை வந்தவுடன், கோரிக்கை வைக்கப்பட்டவுடன் கவர்னரே அறிவிக் கிறார்; அவரே ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கிறார்.  ``திருடனே...."" ஏதோ? சொல்வார்களே, அப்படிச் சொல்ல மாட்டோம், பயந்து அல்ல; நாகரிகம் கருதி.

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலே விசாரணைக் கமிஷன் அமைக்கிறார், ஆளுநர். அவர் விசாரித்து, 14.5.2018 அன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கவர்னரி டம் தாக்கல் செய்திருக்கிறார்.

அதன்பிறகு அதற்கு உயர்நீதிமன்றத்திலே தடை உத்தரவு பெறப்பட்டிருக் கிறது. இதில், சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டுமென்று ஒரு பிரச்சினை வந்த காரணத்தால், அதுவரை சந்தானம் தந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என்று, ஒரு தடை உத்தரவு வழங்கப்பட்டி ருக்கிறது.

நக்கீரன் கோபாலுக்குத்

துணையாக நாங்கள் இருக்கிறோம்!

நான் கேட்கிற ஒரே கேள்வி, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு ஏறத்தாழ ஆறு மாத காலம், 16.4.2018 - அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்றோடு அவர், 178-வது நாளாக, சிறையில் இருக்கிறார்.

ஏறக்குறைய எட்டு முறை அவரது ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப் பட்டிருக்கிறது என்று சொன்னால், அங்கே தான் சந்தேகப்படுகிறோம். சந்தேகப் படவில்லை, உறுதி செய்கிறோம். நக்கீரன் கோபால் எழுதியிருப்பது உண்மை.

நக்கீரன் கோபால் அவர்களே! நீங்கள் எழுதியது ஒன்றும் தவறு இல்லை. கவலைப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம்,  உங்களுக்குப் பக்கத்தி லேயே. (கைதட்டல்)  உங்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல இது. ஒட்டுமொத்த பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கக் கூடிய பிரச்சினை என்ற காரணத்தால் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.

124 சட்டப்பிரிவுகளை எல்லாம் இங்கே குறிப்பிட்டார்கள். தமிழகத்தின் ஆளுநர் விதிகளை மீறி, மரபுகளை மீறி, அவருக்கு இருக்கின்ற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி - இன்றும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால் எடுபிடியாக இங்கு ஒரு ஆட்சி இருக்கின்ற காரணத்தால், மத்தியில் உள்ளவர்களின் உத்தரவை ஏற்று, அதனை நடைமுறைப் படுத்தும் ஒரு ஆட்சி இங்கு நடைபெறு வதால், ஆளுநர் என்ற பதவியின்  பெயரிலே மாவட்டம் மாவட்டமாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தார்கள் என்று ஒரு வழக்கு என்று சொன்னார்களே, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஆளுநர் பணி செய்திருக் கிறார். குப்பை கூட்டும் பணி செய்து கொண்டிருக்கிறார். குப்பை இல்லாத இடங்களில் குப்பையைக் கொண்டு போய்க் கொட்டி, அங்கு குப்பையை அள்ளும் பிரச்சினை  இன்று கவர்னருக்கு!

ஏற்கனவே தி.மு.க.வை

மிரட்டிய ஆளுநர் மாளிகை!

இன்று மாலைப் பத்திரிகையில் ஒரு படம் வந்திருக்கிறது. திருநெல்வேலிக்குப் போய் தாமிரபரணியிலே புஷ்கர விழாவிலே கலந்து கொண்டு நீராடிக் கொண்டிருக்கிறார். செய்த பாவத்தை யெல்லாம் துடைத்துக் கொள்ளப் போயிருக்கிறார்.

124 எனும் பிரிவைப் பயன்படுத்திடுவோம் என ஏற்கனவே மிரட்டல் விடப்பட்டது. தமிழகத்தில் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆளுநருக்கு தி.மு.க. சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தினோம். நியாயமாக ஆட்சியில் இருப்பவர்கள்தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்; கண்டிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாத காரணத்தால் எதிர்க்கட்சியான தி.மு.க. அந்தப் பணியைத் தொடர்ந்து செய்தது. அப்போது திடீரென ஒரு மிரட்டல், ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு மூலம் வருகிறது.

``இனிமேல் கறுப்புக் கொடி காட்டினால், ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தால், 124 எனும் சட்டத்தைப் பயன்படுத்தி 7 வருடம் சிறைத் தண்டனை வழங்கப்படும்’’ என்று மிரட்டினார்கள்.  அப்போது நாங்கள் சொன்னோம், ""7 வருடம் அல்ல, நீங்கள் ஆயுள் தண்டனையே கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்"" என்று, சொன்னோம். ஏனென்றால்  எங்களுக்குத் தேவை சுதந்திரம், நாட்டின் ஜனநாயகம்!

நீதிமன்றத்தில் கோபால் நிறுத்தப்பட்ட நேரத்தில், நீதிபதி தந்த தீர்ப்பின் அடிப்படையில், ""இந்து"" ராம் அவர்கள், ஏற்கனவே இதற்கென ஒரு கூட்டமைப்பு வைத்திருந்தாலும், ஏற்கனவே முதலமைச் சரைச் சந்தித்து பிரச்சினைகளைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தாலும்,  ``இந்து"" ராம்  அவர்கள், நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி, இன்று இந்தத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொன்னால், அதனை வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம்; மகிழ்கிறோம்.  அதற்காக நக்கீரன் கோபால் அவர்களை இன்றைக்கு ஒருங்கிணைந்து பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.

கோபாலுக்கு ஒரு நீதி?

எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?

இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் இருந்த கோபால் அவர்களைச் சந்தித்துவிட்டு, நடந்தவைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, வெளியில் வந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது நான் சொன்னேன்; ஒரு வாதத்திற்கு, கோபாலைக் கைது செய்ததை நாம் ஏற்றுக் கொண்டாலும், மத்திய ஆளும் பா.ஜ.க.வின்  முக்கியத் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா  நீதிமன்றத்தை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி அவர் தந்த பேட்டி, காவல்துறையைக் கொச்சைப்படுத்தி அவர் பேசிய அந்தப் பேச்சு, அதற்கு அவர் மீது போடப்பட்ட வழக்கு, அந்த வழக்கின் அடிப்படையில் அவரைக் கைது செய்யும் துணிச்சல் ஏன் இந்த ஆட்சிக்கு வரவில்லை?

இந்து அறநிலையத் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் வீட்டுப் பெண்களை எல்லாம் கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜா மீது, ஏன் இந்தச் சட்டம் பாயவில்லை.

எச்.ராஜா - எஸ்.வி.சேகரை

கைது செய்யும் யோக்யதை இல்லை!

``நாட்டில் தந்தை பெரியாரின் சிலையே இருக்கக் கூடாது, அடித்து நொறுக்குங்கள்’’ என்று பேசிவிட்டு இன்னமும் தெம்போடு, தைரியத்தோடு, காவல்துறையின் துணையோடு உலாவிக் கொண்டிருக்கக் கூடிய அந்த எச். ராஜாவைக் கைது செய்ய இந்த ஆட்சிக்கு யோக்கியதை இல்லை.

திரைப்பட நடிகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் - அவரும் பி.ஜே.பி.யைச் சார்ந்தவர். பத்திரிகையில், தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் நிருபர்களை எல்லாம் எவ்வளவு கொச்சைப்படுத்தி, அசிங்கமான வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்! அவர்மீது வழக்குப் போடப்பட்டது, நீதிமன்றமே கைது செய்யச் சொல்லி உத்தரவு போடுகிறது, அவரைக் கைது செய்யும் துணிச்சல் இந்த ஆட்சிக்கு  வந்ததா? வரவில்லையே!

மத்திய அரசின் துணையோடு

தமிழகத்தில் எடுபிடி ஆட்சி!

இவர்கள் செய்து கொண்டிருக்கும், இந்த அக்கிரமம், ஊழல்களுக்கு எல்லாம், மத்தியில் இருக்கும் ஆட்சி நடவடிக்கை எடுத்துவிடும் என்று ஒரு அச்சம் இவர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் எப்படியும் இந்த ஆட்சியிலே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையிலே, எடுபிடியாக இன்று ஒரு கொடுமையான, சர்வாதிகார ஆட்சி, மத்திய அரசின் துணையோடு தமிழகத்தில்  நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டம் வந்திருக்கிறது.

இங்கே ஆசிரியர் அவர்கள் சொன்னதைப் போல, `முரசொலி’க்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது.

`முரசொலி’யின் சார்பில் சூளுரை!

தலைவர் கலைஞர் அவர்களுக்கு, என்னதான் சொந்தப் பிள்ளைகளாக 6 பிள்ளைகள் இருந்தாலும், ""எனது மூத்த பிள்ளை முரசொலிதான்"" என்று அன்போடு தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்த முரசொலி யின் சார்பில் நான் வந்திருக்கிற காரணத்தால், நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

கவர்னரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை ஆசிரியர் வீரமணி அவர்கள், உங்கள் ஆதரவோடு இங்கே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறாரே, அதற்கொப்ப, ஆளுநர் பதவி விலகுகிற வரையில் இங்கு அமைந்துள்ள இந்த அமைப்பின் சார்பில் தொடர்ந்து போராடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்! எனச் சூளுரைப்போம்.

இவ்வாறு தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner