தந்தை பெரியார் கையில் உள்ள கைத்தடி
மூடநம்பிக்கை, பெண்ணடிமைத் தகர்ப்பின் அடையாளம்!
தந்தை பெரியார் நினைவு நாளில் பேராசிரியர் உலகநாயகி பழனி உரத்த குரல்!
சென்னை, ஜன . 8- தந்தை பெரியார் கையில் உள்ள கைத்தடி மூடநம்பிக்கை, பெண்ணடிமைத் தகர்ப்பின் அடையாளம் என்றார் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி அவர்கள்.
24.12.2016 அன்று உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
ஆக்கபூர்வமான தலைவர்
அய்யா ஆசிரியர்
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய தமிழக ஆசிரியர் என்று நாமெல்லாம் போற்றி மகிழ்கிற வைக்கம் வீரரின் மாபெரும் நிழலாக இன்றைக்கு இருக்கின்ற தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புக் கூட்டத்திற்கு சிறந்ததொரு பெருமை யையும், ஆக்கபூர்வமான தலைவர் என்கிற ஒரு செயல் பாட்டையும் உடைய அய்யா ஆசிரியர் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.
அரசியல் நாகரிகம் என்பதை 80 ஆண்டுகளுக்குமுன்னால் வடிவமைத்துக் கொடுத்து, இன்றைக்கு ஒரு மிகச் சிறந்த பகுத்தறிவுப் பகலவனாக, பெண்ணினம் எழுந்து நிற்பதற்குரிய ஒரு வழிகாட்டிப் பாதையை நமக்கெல்லாம் தந்துவிட்டுச் சென்ற பெருந்தகை தந்தை பெரியார் அவர்கள்.
இந்த டிசம்பர் 24 - வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நினைவு நாள்.
எங்கள் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கடந்த 30 ஆண்டு களாக நான் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.
பகுத்தறிவு சிந்தனையாளருடைய
பெருமை என்ன?
அந்தப் பல்கலைக் கழகம் சென்னைப் பல்கலைக் கழகத் தினுடைய தன்னாட்சி கல்லூரிகள் நிறுவனத்தில், தந்தை பெரியார் சிந்தனைகள் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு என்ன தகவலைக் கொண்டு போய் தரப் போகிறோம் என்று, நான் படித்த காலத்திலிருந்து, நான் பேராசிரியராக வந்த இன்றுவரை, பல்கலைக் கழகங்களால் பாடத் திட்டத்தில், தைரியமாக, துணிவாக நம்முடைய ஈரோட்டுப் பெரியாரின் நற்சிந்தனைகளை பாடத் திட்டத்தில் வைக்கக்கூடிய ஒரு துணிவு - எந்த ஆசிரியர்களுக்கும் உருவாகாத காலகட்டத்தில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, வருகிற இளைஞர் இனம் - கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக, ஈ.வெ.ரா. பெரியார் யார்? ஈரோட்டுத் தந்தை யார்? பகுத்தறிவுப் பகலவன் யார்? தென்னகத்தின் மிகப்பெரிய சாக்ரட்டீஸ் என்று போற்றப்பட்ட இந்தப் பகுத்தறிவு சிந்தனையாளருடைய பெருமை என்ன? என்பதை தெரியாத தலைமுறை வாழ்ந்து வரக்கூடிய ஒரு காலகட்டத்தை கடந்த ஒரு 35, 40 ஆண்டுகாலமாக நாம் பார்த்து வருகிறோம்.
இந்தச் சூழ்நிலையில், ஒரு மதச் சார்பை மிக முக்கிய கொள்கையாகக் கொண்டிருக்கக்கூடிய எங்கள் கல்லூரியில், நான் முதன்முதலாக 15 ஆண்டுகளுக்கு முன்பாக, தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் என்பதை பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பாடத் திட்டத்தில் வைத்தேன். படித்தே தீரவேண்டும் என்று வைத்தேன். எங்கள் கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., டிகிரி முடிந்து போகும் மாணவிகள், தந்தை பெரியாரின் சிந்தனைகளைத் தனிப் பாடமாக அவர்கள் வடிவமைத்துக் கொண்டு, அந்தப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு போகாமல், அவர்கள் டிகிரியை முடிக்க முடியாது. அதனை ஒரு தனித்தாளாக வைத்தேன்.
20 ஆண்டுகளுக்குமேலாக கல்லூரி பாடத் திட்டத்தில் மனப்பாட பகுதியே கிடையாது
இதற்காக தமிழ் வழிக் கல்வி படிக்காத மாணவிகள் எப்படி இதனைப் படிப்பார்கள் என்கிற ஒரு கேள்வி வந்தபொழுது, அதனை அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்து, தந்தை பெரியாரின் பதினைந்து சிந்தனைகளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கவேண்டும் என்று ஒரு மனப்பாடப் பகுதியை நான் வைத்தேன்.
அய்யா சிலம்பொலி அவர்கள் நன்கு அறிவார் - கிட்டத் தட்ட 20 ஆண்டுகளுக்குமேலாக கல்லூரி பாடத் திட்டத்தில் மனப்பாடப் பகுதியே கிடையாது. எல்லாவற்றையும் எடுத்து விட்டார்கள். ஆனால், இன்றைக்கும் நற்றிணையில் தொடங்கி, குறுந்தொகையின் ஈறாக, அப்படியே எட்டுத் தொகை நூல்கள் அனைத்தையும் மனப்பாடமாக சொல்கிற சிலம்பொலி அய்யா இன்றைக்கு மேடையில் இருக்கிறார் என்று சொன்னால், அவர் காலகட்டத்தில் அது மனப்பாட பகுதியாக இருந்து, விருப்பத்தாலும், ஆர்வத்தாலும், தமிழ்மீது கொண்ட பற்றாலும் படித்தார்கள்.
பல்கலைக் கழகத்
தமிழாசிரியர்களிடம் எதிர்ப்பு
ஆனால், இன்றைக்குத் தமிழாசிரியர்களே பாடத் திட்டத்தில் இருக்கும் பாடல்களை மனப்பாடம் செய்வதில்லை. இப்படிப்பட்ட சூழலில், பெரியாரின் சிந்தனைகளைப் பாடத் திட்டத்தில் வைக்கவேண்டும் என்று போராடிய பொழுது, எனக்கு எதிர்ப்பு யாரிடத்திலிருந்து வந்தது தெரியுமா? பல்கலைக் கழகத் தமிழாசிரியர்களிடம் இருந்துதான் வந்தது. ஆனால், அதையும் மீறி நான் அந்த சிந்தனைகளைக் கொண்டு வந்தேன்.
எங்களது வணக்கத்திற்குரிய பேராசிரியர் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர் தவமணி அவர்கள் பல மேடைகளில் இந்தக் கருத்தினை எடுத்து மிக ஆழமாகக் கூறியிருக்கிறார்கள்.
இந்தச் சிந்தனையைப் பார்க்கலாம். கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு, தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் தொலைக்காட்சியில் தொல்.திருமாவளவன் அவர்கள் பெரியாரின் சிந்தனைகள் குறித்து உரையாற்றுகிறார். அடுத்த நாள் மேடைப் பேச்சுக் கலையில், உன் நெஞ்சம் கவர்ந்த மேடைப் பேச்சாளர் ஒருவர் குறித்து ஆய்வு கட்டுரை வழங்குக என்று நான், ஒரு வகுப்புத் தேர்வில் கேள்வி ஒன்றைக் கொடுத்தேன்.
150 மாணவிகள் நெஞ்சம்
கவர்ந்த பேச்சாளர்
நீங்கள் நம்பினால், நம்புங்கள் 150 மாணவிகள் நெஞ்சம் கவர்ந்த பேச்சாளர் தொல்.திருமாவளவன் என்று எழு தினார்கள்.
அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொருள் என்ன தெரியுமா? ஈ.வெ.ரா. பெரியாரின் நற்சிந்தனைகள் குறித்து தொல்.திருமா அவர்கள் பேசிய பேச்சு.
இன்றைக்கு கிறித்தவக் கல்லூரிகளில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஒரு கிறித்துவக் கல்லூரி. அந்தக் கல்லூரிக்குப் பெயரே - கம்யூனிட்டி காலேஜ். ஒரு மதத்தைப் போதிக்கின்ற, மதபோதகர் மட்டுமே வந்து போகிற கல்லூரி. பாதிரியாரை மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும் - பாரதியார்கூட அவர்களுக்குத் தெரியாது. அப்படி பயில்கின்ற மாணவிகள். அந்த மாணவிகள் மத்தியில், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., மாணவி களுக்கு மூன்றாவது பருவத்தில் ஒரு பாடத் திட்டத்தை வைத்தேன்.
நான் நினைக்கிறேன், இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனைகளை யார் உள்வாங்கிக் கொண்டு, அதனை அடுத்த தலைமுறையினருக்குத் தராமல் இருக்கிறார்களோ, அவர்கள்தான் தேசத் துரோகிகள் என்று நான் சொல்வேன். அடுத்த தலைமுறையினருக்கு இன்னும் அதனைத் தரவில்லையே!
இங்கே சிலம்பொலி அய்யா அவர்கள், பெரியாருடைய நட்பையும், பண்பையும் பற்றி பேசுகின்றபொழுது, மனம் ஏங்கி தவிக்கிறது. எப்படி இன்னும் சிலம்பொலி அய்யாவிட மிருந்து நிறைய கருத்துகளைப் பதிவு செய்யப் போகிறோம் என்று உள்ளம் துடிக்கிறது.
அப்படிப்பட்ட துடிப்பினை, கல்லூரி வரலாற்றில், ஒரு 17, 18 வயது நிரம்பிய பிள்ளைகளுக்கு, கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் கல்லூரியில் இந்தப் பணியினை நான் செம்மையாக செய்து வருகிறேன்.
ஈரோட்டுத் தந்தை தான் என்று தைரியமாகச் சொல்லலாம்
பாவேந்தர் பாரதிதாசனுடைய எழுச்சிச் சிந்தனை களையும், தமிழ்ப் புரட்சிக் கவிதைகளையும் எங்களுடைய மாணவிகள் மனப்பாடமாக ஒப்புவிக்கின்ற அந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறேன். அதற்குக் காரணம், எப்படிப்பட்ட பெரியாரின் சிந்தனைகளை பாடத் திட்டத்தில் வைத்தேன் என்று ஒரு குறிப்பு.
பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., படிக்கின்ற மாணவிகளுக்கு, பெண்ணுரிமைச் சிந்தனை இந்த உலகத்தில் மிக எளிமையாக சொன்ன புரட்சிப் பாவலன், ஒரு புரட்சி விடியல், ஒரு மறுமலர்ச்சி யார் என்று சொன்னால், ஈரோட்டுத் தந்தை தான் என்று தைரியமாகச் சொல்லலாம்.
ஒற்றை வரியில் சொல்லவேண்டுமானால், ‘‘ஆணுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ, அத்தனையும் பெண் ணுக்கு இருக்கவேண்டும்; அதுதான் பெண்ணுரிமை’’ என்று சொன்னார்.
ஆனால், இதனை மாற்றிப் புரிந்துகொண்ட பெண்ணி னமே, பெண்களே - ஆண்களைத் தாக்கிப் பேசுவதுதான் பெண்ணுரிமை என்று நினைத்துக்கொண்டு, அதற்கு ஒரு புதுப் பெயரை ‘பெமினிசம்’ என்று வைத்துக்கொண்டு, இது பெண்ணியத் தாக்கம் என்று சொல்லி, ஆண்களை மேடை களிலும், எழுத்துகளிலும், படைப்புகளிலும் தாக்கிப் பேசுவது தான் பெண்ணுரிமை என்று சிந்தித்த காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள் சொன்ன பெண்ணுரிமை எது என்பதை மிகத் துல்லியமாக, கல்லூரி காலகட்டத்திலேயே ஒரு மேடை பேச்சாளராக நம்முடைய அன்புத் தோழி வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் மிகப்பெரிய சாட்டையடியெல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.
“பெரியாரின் நற்சிந்தனையும்
- மனிதநேய மன வளர்ச்சியும்’’
அப்படிப்பட்ட ஒரு நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு இப்படிப்பட்ட சிந்தனைகளை பாடத் திட்டத்தில் வைக்கலாம் என்று நினைத்து, ‘‘தந்தை பெரியாரின் நற்சிந்தனையும் - மனிதநேய மன வளர்ச்சியும்’’ என்று அதற்குத் தலைப்பு கொடுத்து, ஒரு 10 பொன்மொழிகளை நான் தேர்ந்தெடுத்து வைத்தேன்.
அதில் முதல் செய்தி,
பக்தி வந்தால் புத்தி போய்விடும்
புத்தி வந்தால் பக்தி போய்விடும்
இதனை கிறித்துவக் கல்லூரியில் பாடத் திட்டமாக வைக்க முடியுமா? எங்களுடைய கல்லூரி முதல்வர் என்னை அழைத்து,
‘‘என்னம்மா, நம்முடைய கல்லூரி, கம்யூனிட்டி காலேஜ்; இங்கே நாம் கிறித்துவ மதத்தைப்பற்றியும், கடவுளைப்பற்றியும், ஆண்டவரைப்பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்ற இடத்தில், நீங்கள் பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்று சொல்கிறீர்களே, இது நம்முடைய கல்லூரி யின் பாடத் திட்டத்திற்கே முரண்பாடாக இல்லையா?’’ என்று என்னிடம் கேட்டார்கள்.
மனிதனை மனிதனாக மதிக்கக்
கற்றுக் கொள்கிற பக்தி
நான் சொன்னேன், ‘‘இல்லை, நீங்கள் நினைக்கின்ற பக்தி வேறு; ஈ.வெ.ரா. பெரியார் சொன்ன பக்தி வேறு. அவர் சொல் கின்ற பக்தி என்ன தெரியுமா? மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்கிற பக்தி; இதில் எங்கே இறைவன் இருக்கிறான்’’ என்று கேட்டேன்.
இப்படிப்பட்ட ஒரு துணிச்சல் என்னைப் போல் ஒரு 10 பேராசிரியர்களுக்கு இருந்திருந்தால், இன்றைக்கு நூறு பேர் ஆந்திராவில் இருந்து இங்கே வந்திருக்கிறார்கள்; நான் ஒரு லட்சம் பேரை ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றிருப்பேன். அந்தத் துணிவுதான் நமக்குத் தேவை.
எனவே, ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் சொன்ன கொள்கை என்ன? அவரைப் போல் மரணத்தை மிக எளிமையாகப் பார்த்தவர்கள் யாரும் இருக்க முடியாது.
ஒரே வரியில்
மரணத்தைப்பற்றி சொன்னார்
ஒருவர் இறந்துவிட்டால், அதற்கு ஏன் செத்த பிணம் என்று தெரியுமா? உடலில் இருக்கின்ற சத்துப் போனதால், செத்துப் போனது என்றார். ஒரே வரியில் மரணத்தைப்பற்றி சொன்னார்.
ஆகவே, இந்தப் பிறப்பு - இறப்பு இவை இரண்டுக்கு மிடையில் சிறப்பு என்று ஒன்று இருக்கிறது பாருங்கள், அது தான் பகுத்தறிவு கொள்கை. அந்தப் பகுத்தறிவு கொள்கைதான், மனித வாழ்வின் மிகப்பெரிய சிறப்பு என்பதை தன்னுடைய வாழ்நாளில் மிக அழகாகப் பதிவு செய்தார்.
அவருடைய மரணத்தைப்பற்றி சொல்லும்பொழுது,
நான், காங்கிரசு இராமசாமியாக ஒரு காலத்திலும், சுய மரியாதை இராமசாமியாக ஒரு காலத்திலும், திராவிடர் கழக இராமசாமியாகத் தற்காலத்திலும் இருந்து வருகிறேன். காங்கிரசு இராமசாமியாக இருந்த காலத்தில் இறந்திருந்தால் ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர், ‘இந்து’ ஆசிரியர் உள்பட பல காங்கிரசுக்காரர்களும், அய்யர், அய்யங்கார்களும் துக்கம் கொண்டாடியிருப்பார்கள். சுயமரியாதை இராமசாமியாக இருந்த காலத்தில் இறந்திருந்தால் ஒரு சுயமரியாதைக்காரப் பார்ப்பனர் தவிர்த்த மற்ற பார்ப்பனர்கள், வைதீகர்கள் எல்லாரும் சந்தோசப்பட்டபடி இருப்பார்கள். ஆனால், இன்று மறைய நேர்ந்தாலோ திராவிடர்கள் அனைவரும் துக்கம் கொண்டாடலாம் என்று கருதுகிறேன் என்றார்.
மனிதநேயத்தின் வாழ்வுரிமையைப்பற்றி தந்தை பெரியார்
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார் என்று சொன்னால், அவருடைய சிந்தனை எவ்வளவு பெரிய சிந்தனை - இதுபோல், யாராவது மரணத்தைப்பற்றி பேச முடியுமா? தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தைப்பற்றி பேச முடியுமா? மரணத்தை மிக மிக துச்சமாகப் பார்த்தவர், மனிதநேயத்தின் வாழ்வுரிமையைப்பற்றி சொல்லும்பொழுது - தந்தை பெரியார் எப்படி சொல்கிறார் என்றால்,
புகழைத் தேடி அலைகிற கூட்டமோ, புகழைத் தேடி அலையாதே! புகழ் உன்னைத் தேடி வரவேண்டும்; அது எப்படி வரும். அழிந்து போகின்ற பொருள்களின்மீதும், அழிந்து போகின்ற மெட்டீரியலிசம் என்று சொல்லக்கூடிய இந்த உலகாயுதத்தின்மீது நீ ஆசை வைத்திருக்கின்ற வரை புகழ் உன்னைத் தேடி வரப்போவதில்லை. ஒரு சிறு பொருளை - அந்த சிறு பொருளைத் தேடி, தேடிய அந்த சிறு பொருளும் அடுத்தவருக்கென்று நீ விட்டுச் செல்லுகிற பொழுது, உனக்கான புகழ், நீ மறைந்த போதும் தேடி வரும் என்று சொல்லக்கூடிய ஒரு தைரியம், ஒரு தன்னம்பிக்கை, ஒரு துணிவு - இது எத்தனை சிந்தனையாளர்களுக்குப் பிறக்க வாய்ப்பிருக்கிறது. இதனை நாம் அடுத்த தலைமுறையினருக்கு எப்படி கொண்டு போய் சேர்க்கப் போகிறோம்.
அந்தப் பாடத்திட்டப் பொன்மொழியில் நான் வைத்த இன்னொரு அருமையான சிந்தனை.
அடிமை விலங்கை எப்பொழுது உடைத்தெறியப் போகிறோம்
அடிமையிலேயே இனிமை காணும் பெண்கள்.
சிறிய பெண்ணாக இருக்கும்பொழுது தந்தைக்கு அடிமை; வளர்ந்ததும் கணவனுக்கு அடிமை; அதன் பிறகு பிள்ளை களுக்கு அடிமை; வயதானவுடன் பேரப் பிள்ளைகளுக்கு அடிமை. இப்படி அடிமை விலங்கையே பூட்டிக்கொண்ட வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெண்ணினமே, இந்த அடிமை விலங்கை உடைத்தெறிய நீ விருப்பப்படவில்லை. ஏன் தெரியுமா? அந்த அடிமை வாழ்க்கையே உனக்கு வசதியாக இருக்கிறது என்பதால், நீ அப்படியே வாழ்ந்து கொண்டிருக் கின்றாயோ என்று கேட்டாரே, பெரியார்!
அவருடைய சிந்தனையைக் கொண்டு போய் பாடத் திட்டமாக வைத்தபொழுதுதான், எங்கள் வகுப்பில் உள்ள ஒரு மாணவி, இந்த அடிமை விலங்கை எப்பொழுது உடைத் தெறியப் போகிறோம் என்று பேசினார்.
நண்பர் தீபக் அவர்கள் இங்கே உரையாற்றியபொழுது, என் உள்ளம் அந்த நினைவைத்தான் அசை போட்டபடியே இருந்தது.
முதல் அய்.எப்.எஸ். அதிகாரியாக
வந்த செல்வி பெனோ
அடிமையே வசதியாக இருக்கின்ற காரணத்தினால், அடிமையாகவே இருந்து வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று கருதுகிற பெண்கள் இருக்கின்ற வரை பெண்ணுரிமை எப்படி பேசப்படும் என்று தந்தை பெரியார் சொன்ன கொள்கையை, அந்த 18 மாணவியிடம் கொண்டு போய் சேர்த்தபொழுது, அந்த மாணவி சொன்னாள், அந்த மாணவி கண் பார்வை இழந்த மாணவி. 65 ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற சுதந்திர இந்தியாவில், முதல் அய்.எப்.எஸ். அதிகாரியாக வந்த செல்வி பெனோ தான். அவரைப்பற்றிதான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைதான்
இன்றைக்கு முதல் இண்டியன் பாரீன் சர்வீஸ் அதிகாரி யாக, பிறப்பால் கண் பார்வை இழந்த ஒரு மாணவி - இன் றைக்கு சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்டதற்குக் காரணம், தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைதான். பெண்களே, அந்த விலங்கினை நீங்கள் பூட்டிக் கொள்ளா தீர்கள் என்றேன்.
நகை, பணம் இவை இரண்டும் பெண்களுக்குப் போதாத காலத்தைத் தருவது. காலம் வருகிறபொழுது, இவைகளை தேடி வைத்துக் கொள்ளாதீர்கள் பெண்களே! நகைப் பின்னா லும், பணப் பெட்டி பின்னாலும் செக்கு மாடு சுற்றி வருவது போல நீங்கள் புற உலகை வாழ்க்கை, அந்தஸ்து, வெளி உலக போர்வை என்று இதன் பின்னால் நீங்கள் சுற்றிச்சுற்றி வரு வீர்களேயானால், உண்மை வாழ்வை நீங்கள் இழந்து விடுவீர்கள்.
பெண்கள் நாட்டின் கண்கள் என்கிற தத்துவத்தை இந்த சமூகம் மறந்துபோகும் என்கிற சிந்தனைதான் - இன்றைக்கு அந்தப் பெண்ணை வெளியுலகத்திற்கு எடுத்துக்கொண்டு வந்து - ஒரு மிகப்பெரிய அதிகாரியாக - இந்திய சுதந்திர நாட்டின் முதல் வெளியுறவுத் துறை அதிகாரியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சொன்னால், அதற்குக் காரணம், தந்தை பெரியாரின் சிந்தனைகள் உள்ளுக்குள் சென்றதினுடைய விளைவுதான், இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு அதிசயப் பெண்ணை நம்மால் காண முடிந்தது என்பதை நன்கு புரிந்துகொள்ளலாம்.
இன்றைக்குப் பெண்கள் மூடநம்பிக்கையை அறுத்தெறிய வேண்டும். மறுமலர்ச்சிப் பாதையைப்பற்றி சிந்திக்கின்ற பெண்கள், மூடநம்பிக்கையை விட்டு விலகவேண்டும்.
பெரியார் இல்லையென்றால் பெண்ணினத்தின் புரட்சியை எல்லாம் நாம் பார்த்திருக்க முடியாது
கல்லிலே, மரத்திலே குங்குமம் பூசி, இதைக் கடவுள் என்று சொல்லி சுற்றிவரும் பெண்ணினமே, உன் வாழ்க்கையே கல்லாகிப் போனதே, அதனை என்றைக்கு நீ மாற்ற போகிறாய்? என்று தட்டிக் கேட்டு, அந்தப் பெண்ணை வெளியுலகத்திற்கு அழைத்து வந்தாரோ, அந்த ஈரோட்டுத் தந்தை, பகுத்தறிவுப் பகலவன் இல்லை என்று சொன்னால், என்னைப் போன்ற பெண்ணினம் இப்படி மேடையில் முழங்க, இத்தனை ஆண் மக்கள் கேட்க முடியுமா? இதனைக் கொண்டு வந்தவர் யார்? ஈரோட்டுத் தந்தை. அவர் இல்லை என்று சொன்னால், இன்றைக்கு இந்தப் பெண்ணினத்தின் புரட்சியை எல்லாம் நாம் பார்த்திருக்க முடியாது.
முத்தாய்ப்பான மூன்று கருத்து
மூன்று கருத்தை முத்தாய்ப்பாக ஈரோட்டுப் பெரியார் அவர்கள், மனிதநேயத்தின் மறுமலர்ச்சியாகத் தருகிறார்.
முதல் கருத்து - மூடநம்பிக்கை
இரண்டாவது கருத்து- பழக்கவழக்கங்கள்
மூன்றாவது கருத்து - வேண்டாத புராணக் கதைகள்.
எத்தனைக் கதைகள். இன்றைக்குத் தொலைக்காட்சியில் வரும் சீரியலைப் பார்த்தால், வாழ்க்கை உருப்படும்படியாக இருக்கிறதா? ஒருவன் மனைவியை இன்னொருவன் இழுத்துக் கொண்டு போவதும், அதனைப் பெரும் பெரும் பெரியோர்கள் விரிவுரை செய்வதும். இதுமட்டுமா? திருமணம் ஆனவன் என்று தெரிந்துதான், அவன்மீது இவளுக்குக் காதலே பிறக்கிறது. இப்படிப்பட்ட கொடுமைகளை யெல்லாம் இன்றைக்குத் தொலைக்காட்சிகளில் சீரியசாக - நாம் சீரியலாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
துன்பத்திலிருந்து மீண்டு வெளிவரக்கூடிய ஒரு கலங்கரை விளக்கம் தந்தை பெரியார்
இந்தத் துன்பங்கள் எல்லாம் விட்டு விலகவேண்டும் என்று சொன்னால், வீட்டிற்கு ஒரு நூலகம் வைப்போம் என்று அறிஞர் அண்ணா சொன்னதைப்போல, வீட்டிற்கு ஒரே ஒரு பெரியார் சிந்தனை நூல் மட்டும் இருந்தால் போதும், அந்த இல்லம், மிகப்பெரிய துன்பத்திலிருந்து மீண்டு வெளிவரக்கூடிய ஒரு கலங்கரை விளக்கமாக ஈ.வெ.ரா. பெரியார் அவர்களுடைய பகுத்தறிவு சிந்தனைகள் ஒளி தரும்.
இப்படிப்பட்ட பகுத்தறிவு சிந்தனைகளில், மனிதநேய வாழ்வுரி மையைப்பற்றி சொல்லும்பொழுது சொல்கிறார், இந்த உலகத்திற்கு எது தேவை தெரியுமா?
‘‘தனக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே’’ புறநானூற்றுப் பாவலன் சொன்ன, தனக்காக வாழக்கூடிய அந்த சுயநலத்தை நீக்கி, பிறருக்காக வாழக்கூடிய பொதுநலம் எங்கே பேசப்படுகிறதோ, அதுதான் மனித வாழ்வுரிமையின் அடிப்படை சட்டம் என்பதை தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கருத்துகளை நாம் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
பெரியார் திடலுக்கு வந்தால் மட்டும்தான் இளைஞர்களைப் பார்க்கிறேன்
இதுவரை நாம் செய்த மிகப்பெரிய தவறு - பெரியார் திடலுக்கு வந்தால் மட்டும்தான் இளைஞர்களைப் பார்க்கிறேன். வேறு எந்தக் கூட்டத்திலும் இளைஞர்களைப் பார்க்க முடிவதில்லை. இந்த மேடைக்கு வந்தால்தான் இளைஞர்களைப் பார்க்க முடியும். அதே போல், இந்தக் கூட்டத்தில்தான் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமாக பெண்கள் வந்து, மகிழ்ச்சியோடு தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்ற இந்தக் காட்சியைப் பார்க்கிறேன்.
சுயமரியாதைத் திருமணத்தைப்பற்றிச் சொல்லுகின்றபொழுது, ஒரே ஒரு வரியில் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
சுயமரியாதைத் திருமணத்தின் அடிப்படை சிறப்பு என்ன தெரியுமா? விட்டுக் கொடுத்து வாழ்வது - கலப்புத் திருமணம் செய்துகொண்டு வாழ்வது - இவையெல்லாவற்றையும்விட முக்கியம் அறத்தால் வருவதே இன்பம் என்று வாழ்வதே என்று சொன்னார்.
இதுதான் அவருடைய சுயமரியாதைத் திருமணத்தின் அடிப்படை நாதம். அறத்தால் வருகிற இன்பம் - நீத்தாரினுடைய வழிபாட்டைப் பற்றியும் - நீத்தார் பெருமையை குறித்தும் - இந்த உலகத்தில் மறைந்த வர்களின் வாழ்நாளைக் குறித்தும், தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனையில், என் நெஞ்சம் கவர்ந்த செய்தி,
80 ஆண்டுகளுக்கு முன்னால்
பெரியார் அவர்கள் சொன்னார்
ஆத்மா ஒன்று இருக்கிறது; அது இந்த உலகத்தில் அலைந்து கொண்டிருக்கிறது. அந்த ஆத்மாவும், மறுபிறவியும் மக்களை ஒரு புதைகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி, அந்த மூடநம்பிக்கைகளை எப்படியாவது அவர்களுடைய உள்ளத்திலிருந்து பிடுங்கி எடுத்து எறியவேண்டும் என்று பாடுபட்டாரே, அந்த வேர்களுக்கெல்லாம், பண்பாடு, பண்பாடு என்று சொல்லி, ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சி என்று சொல்லி, எங்கேயோ ஒரு அதல பாதாளத்திற்கு இன்றைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது.
80 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், சட்டசபைப் பக்கம் பகுத்தறிவு உள்ளவன் போக முடி யுமா? என்று கேட்டார்.
சுயமரியாதை உள்ளவன் சட்டசபை பக்கம் போக முடியுமா? என்று கேட்டார்.
இன்றைக்கு சட்டசபை, பகுத்தறிவும், சுயமரியாதையும், ஆழ்ந்து சிந்திக்க சிந்தனையும் உடைய ஒரு சட்டசபையாகவா இருக்கிறது? என்பதை நினைத்துப் பாருங்கள்.
மனிதன் மனிதனாக வாழவேண்டும்
பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘மக்களே நீங்கள் செய்த மாபெரும் குற்றம் என்ன தெரியுமா? சுயநலக்காரனைத் தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பினீர்களே, இதைவிட புத்திசாலிகள் இந்த உலகத்தில் வேறு எங்கே இருக்க முடியும். உங்களுக்கு நீங்களே நெருப்பு வைத்துக் கொண்டீர்கள் என்று சொல்லக்கூடிய ஒரு துணிவு - 80 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் அவர்கள் என்ன கருத்தைச் சொன்னாரோ, அந்தக் கருத்து இன்றைக்கும் பொருந்துகிறது என்று சொன்னால், ஏன் ஆந்திராவில் இருந்து நூறு இளைஞர்கள் வரமாட்டார்கள். இன்றைக்கும் அந்தக் கருத்து அப்படியே பொருந்துகிறது என்பதை நன்றாக நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
இப்படி, சுயமரியாதை இயக்கமாக இருக்கட்டும்; பகுத்தறிவுப் பாதையாக இருக்கட்டும்; மனிதன் மனிதனாக வாழவேண்டும். அதுதான் உண்மை என்பதை உலகத்திற்கு வலியுறுத்தி,
புகழைத் தேடி அலையாதீர்கள்
மானுடத்தின் வலிமையைத் தேடி அலையுங்கள் என்று சொல்லி,
சுயநலத்தை நீக்கி, பொதுநலம் பேணுகின்றவர்களுக்குப் புகழ் தானே வரும். இதுதான் மனித வாழ்வுரிமையின் நியதி என்று உலகத்திற்குச் சொல்லிவிட்டுப்போன, தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் - மனதிற்கு ஒரு மிகப்பெரிய வலிமையையும், மிகப் பெரிய எழுச்சியையும் தரக்கூடிய ஒரு நன்னாள் என்று சொல்லி,
மூடநம்பிக்கையை ஒழித்து, தன் கையில் கைத்தடியாக வைத்து கொண்ட தந்தை பெரியாரைப் பின்பற்றுவோம்; வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய வெளிச்சத்தை நாம் காண விரும்புவோம் என்று கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி அவர்கள் உரையாற்றினார்.