எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.21  மேக்கேதாட்டு அணை தொடர்பாக கருநாடக அரசு தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக் கையை (டிபிஆர்) நிராகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேக்கேதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க கரு நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனு மதிக்குத் தடை கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் மனுக்களைத் தாக்கல் செய்தது. மேலும், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராகத் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் மனுக்களுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கருநாடக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், மேக்கேதாட்டு அணைத் திட்டம், காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கு எதிராக உள்ளது.  மாதந்தோறும் திறக்கப்பட வேண்டிய காவிரி நீரின் அளவையும், நீர்ப் பிடிப்புப் பகுதிகளின் இயற்கையான நீரோட்டத்தையும் மேக்கேதாட்டு அணை பாதிக்கும் எனத் தெரிவித்தது.

கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மேக்கேதாட்டு அணைத் திட் டம் தொடர்பான விரிவான ஆய்வு திட்ட அறிக்கை (டிபிஆர்) தாக்கல் செய்யப் பட்டுவிட்டதால், தமிழக அரசின் மனு செல்லத்தக்கதல்ல. தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது.  இந்நிலையில், இது தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரள அரசு சார்பில் வழக்குரைஞர் பிரகாஷ், கருநாடக அரசு சார்பில் வழக்குரைஞர் மோகன் கத்தார்கி ஆகியோர் ஆஜராகி, தமிழக அரசின் மனுவுக்குப் பதில் அளிக்க அவகாசம் கோரினார். மத்திய அரசும் தனது சார்பில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்தே, ஜி. உமாபதி ஆகியோர்,  இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். அப்போது, பதிவாளரிடம் மனுவைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்கும் வகையில் வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில்,  மேக்கேதாட்டு விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த விவகாரத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, தமிழக அரசின் மனுவை விசாரித்து நீதி வழங்க வேண்டும். தமிழக அரசின் மனு செல்லத்தக்கதல்ல என்ற கருநாடக அரசின் வாதம் ஏற்புடையதல்ல. மேக்கேதாட்டு அணை தொடர்பான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner