எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

சென்னை, ஜன.10 தமிழகத்தில் 3,500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேரில் மனு அளித்தனர்.

மேலும் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி- தொடக்கக் கல்வி இயக்குநர்கள் ஆகியோரிடமும் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் 3,500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பது என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்ததாகத் தெரிகிறது. இதன் மூலம் அங்கு செயல்பட்டு வரும் 3,500 சத்துணவுக் கூடங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் 3,500 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கு பணியாற்றும் சமையலர்கள், முற்றிலுமாக முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் தலைமை ஆசிரியர்கள் பதவியிலிருந்து பணி இறக்கம் செய்யப்பட்டு பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு இல்லாமல் போகும்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடக்கக் கல்வித் துறையை தனித்தனியாகப் பிரித்து தனி அலுவலர்களை நியமித்து அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுத்தார். ஆனால் தற்போதைய பள்ளிக் கல்வித் துறை, நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது நிர்வாகச் சீர்கேடுகளுக்கும், அதிகாரக் குவியலுக்கும் மட்டுமே வழிவகுக்கும்.

இந்த நடவடிக்கையால் கிராமப்புறங்களில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி உரிமைகள் பறிபோகும். எனவே, தொடக்கப் பள்ளியை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினை அரசு கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு 5 டிஎம்சி குடிநீர்: 4 மாநிலம் ஒப்புதல்

மேலாண்மை வாரிய கூட்டத்தில் முடிவு

சென்னை, ஜன.10 தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து 2ஆவது தவணைக் காலமான ஜனவரி 1ஆம் தேதி முதல் 4  டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்.

இது தொடர்பாக தமிழக அரசு ஆந்திர நீர்வளத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியது. ஆனால், ஆந்திர  அரசிடம் இருந்து பதில் வரவில்லை. இதை தொடர்ந்து, மத்திய நீர்வள ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.  இதை  தொடர்ந்து மத்திய நீர் வள ஆணையம் சார்பில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியம் கூட்டத்தில் பங்கேற்க 5 மாநில அரசுகளுக்கு அழைப்பு  விடுத்தது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் நேற்று மாலை 3 மணியளவில் கிருஷ்ணா நிதி நீர் மேலாண்மை வாரியம் கூட்டம்  நடந்தது.

சுமார் 3 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகராட்டிரா மாநில நீர்வளத்துறை  செயலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை  நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம்,  சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழக அதிகாரிகள்  தரப்பில், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது.  இந்த நீர் இருப்பை கொண்டு 1 மாதம் தான் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். அதன்பிறகு குடிநீர் தட்டுபாட்டு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே,  தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி 4 மாநில அரசுகளும் தண்ணீரை பங்கிட்டு கொடுத்தால் சென்னை மாநகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி  செய்ய முடியும். குறைந்தது 5 டிஎம்சி கொடுத்தால் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலகட்டம் வரை எங்களால் சமாளித்து கொள்ள முடியும்  என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, 4 மாநில நீர்வளத்துறை செயலாளர்களும் தண்ணீர் தர ஒப்புக் கொண்டனர்.

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner