எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜன. 25- தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது எழுந்து நிற்காமல் உயர்ஜாதி வன்மத்தோடு ஆசனத்தில் அமர்ந்திருந்த காஞ்சி ஜூனியர் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதியைக் கண்டித்துத் தலைவர்கள் கண்டனக் கணைகளை ஏவியுள்ளனர். மாணவர்களும் சங்கராச்சாரியார் படத்திற்குத் தீ மூட்டினர்.

சென்னையில்  நேற்று முன்தினம் (23.1.2018) ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, காஞ்சிபுரம் இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. தேசியகீதம் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்ற தன்மூலமாக தமிழ் மொழியை அவமதித்துள்ளார். இதுகுறித்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. விஜயேந்திரர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மக்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்த்தாய் வாழ்த்தின்போது நிகழ்வில் கலந்து கொண்ட தமிழகத்தின் ஆளுநர் எழுந்து நிற்கிறார். ஆனால், விஜயேந்திர சுவாமிகள் எழுந்து நிற்காதது கண்டிக்கத்தக்கது. திமுக சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அதுவும் ஆளுநருக்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது, தமிழ்த்தாயை அவமானப்படுத்தியதாக நான் கருதுகிறேன்.

தியானம் என்பது அவருடைய விருப்பம். அவர் எப்படி வேண்டுமானாலும் தியானம் இருக்கலாம். ஆனால், தேசிய கீதம் இசைக்கிறபோது ஏன் தியானத்தில் இல்லை? ஒரு தவறு நடந்து விட்டது. அதனை மறைப்பதற்காகவே இப்படி தந்திரமாக செய்திகள் பரப்பப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன்.

வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அமர்ந்திருந்த செயல் தமிழ் மொழியையும், தமிழர்களையும் அலட்சி யப்படுத்தி, அவமானப்படுத்திய செயலாகும்.கடவுள் நம்பிக்கையில் மாறுபட்ட கருத்துள்ள தந்தை பெரியார்கூட தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப் பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது அது போன்றே எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். இப்படிப்பட்ட மரபுகளையும், நாகரிகப் பண்புகளையும் முறியடிக்கும் வகையில் காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி நடந்துகொண்ட செயலை மதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மற்றும் காஞ்சி சங்கரமடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Òசென்னையில் 23.1.2018 அன்று நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் மேதகு பன்வாரி புரோகித் அவர்கள் பங்கேற்றுள்ளார். அதே நிகழ்ச்சியில் காஞ்சி சங்கர மடத்தைச் சார்ந்த இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்.  அந்நிகழ்ச்சியைத் தொடங்கும் போது வழக்கம் போல தமிழ்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டுள்ளது. அப்போது மேதகு ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்றுள்ளனர். ஆனால், விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்க விரும்பாமல் அமர்ந்தபடியே இருந்துள்ளார். நிகழ்ச்சியின் நிறைவாக தேசியப் பண் இசைக்கப்பட்டுள்ளது. அப்போது விஜயேந் திரர் அவர்கள் எழுந்து நின்று தேசியப் பண்ணுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அவர் தேசிய பண்ணுக்கு மட்டும் எழுந்து நின்றிருப்பது அவர் வேண்டுமென்றே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.

தமிழை ‘நீச பாஷை’ என்று தொன்று தொட்டுக் கூறி வரும் இவர்கள் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்த்தாயை தமிழ்மண்ணிலேயே மேதகு ஆளுநர் கலந்துகொண்ட அவையிலேயே அவமதித்துள்ளார். தமிழ் மொழியின் மீதுள்ள அவரின் வெறுப்புணர்வு எத்தகையது என்பதை அவரது இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. தமிழக ஆளுநரே எழுந்து நின்ற அந்த அவையில் தமிழை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே மேதகு ஆளுநரையும் ஒட்டுமொத்த அந்த அவையையும் விஜயேந்திரர் அவமதித்துள்ளார். அவை நாகரிகம் என்பது அனைவருக்குமான ஒரு பொது நாகரீகமாகும். அத்தகைய உயர்ந்த நாகரிகத்தையும் அவரால் பின்பற்ற இயலவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆறு கோடிக்கும் மேலான தமிழர்கள் வசிக்கும் தமிழ் நாட்டிலேயே மடம் அமைத்து தமிழர்களின் உழைப்பைச் சுரண்டிப் பிழைத்து வரும் இவர்கள் தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் ஒரு கிள்ளுக் கீரையாக குறைத்து மதிப்பிடுகின்றனர் என்று தெரியவருகிறது.

அத்துடன், தமிழர்களால் என்ன செய்துவிட முடியும் என்கிற இறுமாப்பும் அவரிடம் மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது. தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் மதிப்பளிக்க முடியாது என்று வெளிப்படையாகவே செயல்படும் விஜயேந்திரர் போன்ற தமிழர் விரோத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் நேராது என்கிற துணிச்சல் வளர்ந்துள்ளதை விஜயேந்திரரின் நடவடிக்கைகளின் மூலம் அறியமுடிகிறது.

விஜயேந்திரரின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. தாய்த் தமிழை மட்டுமின்றி தமிழக ஆளுநரையும் அந்த அவையையும் அவமதிக்கும் வகையில் அநாகரீகமாக நடந்துகொண்ட விஜயேந்திரர் மீது தமிழக அரசு உரிய வழக்கைப் பதிவுசெய்ய வேண்டும்.  அத்துடன் அன்னைத் தமிழை அவமதித்த விஜயேந்திரர் வெளிப்படையாக தமிழ்மக்களிடையே வருத்தம் தெரிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.’’

முத்தரசன்

சி.பி.அய். மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவிஞர் வைரமுத்துவை கண்டித்தவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த காஞ்சி விஜயேந்திரரையும் கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

============================


விஜயேந்திரர் உருவப்படம் எரிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்த காஞ்சி சங்க ராச்சாரி விஜயேந்திரரைக் கண்டித்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தஞ்சை அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் விஜயேந்திரர் உருவப் படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மன்னர் சரபோஜி கல்லூரி, அன்னை வேளாங் கண்ணி கலைக்கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, பாரத் கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், அடைக்கலமாதா கல்லூரி, பொன்னையா ராமஜெயம் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்கள் பெருந் திரளாக கலந்துகொண்டு தங்களது கண்டனத் தைத் தெரிவித்தனர். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என்றும், தமிழகம் தழுவிய அளவில் மாணவர் போராட்டம் வெடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner