எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விவாத மேடை

கருஞ்சட்டை

தமிழ்நாடு ஆர்.எஸ்.எசைச் சேர்ந்த மூன்று மாநிலப் பொறுப்பாளர்கள் சென்னை திராவிடர் கழகத் தலைமையகத்தில் பெரியார் திடலில் சந்தித்து ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஓர் ஆங்கில ஆவண புத்தகத்தையும் "உயர உயரப் பறந்திட" (கே.கே.சாமி) என்ற தமிழ் நூலையும் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளித்தார்கள். (27.2.2018)

பதிலுக்குக் 'கீதையின் மறுபக்கம்', இல்லாத இந்து மதம் உள்ளிட்ட சில நூல்களையும் அளித்தார் ஆசிரியர்.

ஆசிரியரிடம் அளிக்கப்பட்ட "உயர உயரப் பறந்திட..." எனும் தமிழ் நூலில் 3ஆம் கட்டுரை  'காலம் மாறிப் போச்சு" என்பதாகும்.

அந்த நூலில் (பக்கம் 15) ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கே உரித்தான ஒரு பொய் மூட்டை அவிழ்த்துக் கொட்டப் பட்டுள்ளது.

இதோ அந்தத் தகவல்

1970இல் சேலத்தில் தி.க. நாத்திகர்களின் நாத்திக மாநாடு ஊர்வலத்தில் ஸ்ரீராமர் படத்துக்கு செருப்பு மாலையிட்டு, விளக்குமாத்தினால் பூசை செய்தனர். ஹிந்து சமுதாயம் இரையுண்ட மலைப் பாம்பு போல் சொரணையற்று இருந்தது. இந்த நிலை இன்று அடியோடு மாறி விட்டது. உதாரணமாக தம்மம் பட்டியில் விநாயக சதுர்த்தியின் போது விநாயகர் படத்துக்கு செருப்பு மாலையிட்டு விளக்குமாத்து "பூசையுடன்" புறப்பட இருந்த ஊர்வலத்தைத் துவக்கி வைக்க அங்கு வந்த திக வீரமணி அவர்களின் காரை, பள்ளி மாணவர்கள் தட்ட கார் பின் வாங்கி (ரிவர்ஸ் ஆகி) தப்பிச் சென்றது. நீறு பூத்த நெருப்பாக இருந்த ஹிந்து உணர்வு "ஹிந்து என்று சொல்லுவோம். தலை நிமிர்ந்து வெல்லுவோம்" என சீறுகின்ற நல்ல பாம்பாய் எழுச்சி பெற்றுள்ளது. காலம் மாறி விட்டதா.. இல்லையா?" என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் காணப்படும் அப்பட்டமான கோயபல்ஸ் தனத்தை என்னவென்று சொல்லுவது!

சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடு எப்பொழுது நடந்தது என்பதில்கூட தடுமாற்றம்; 1971 ஜனவரி 23, 24 நாள்களில் நடைபெற்றது மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு; 1970இல் நடந்ததாக அவ்வளவுப் பொறுப்புணர்ச்சியுடன் ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் எழுதுகிறார்.

அம்மாநாட்டு ஊர்வலத்தில் நடைபெற்ற நிகழ் வினையும் உண்மைக்கு மாறாக பச்சையான பொய்மையைப் பேனாவில் நிரப்பி எழுதியுள்ளார்.

உண்மையில் நடந்தது என்ன? சேலத்தில் நடைபெற்ற அந்த எழுச்சிமிகு மூடநம்பிக்கை ஒழிப்பு  ஊர்வலத்தில் தந்தை பெரியார் ரதத்தில் அமர வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

தந்தை பெரியாருக்குக் கருப்புக் கொடி காட்டப் போவதாக அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய பிஜேபியின் முன்னாள் பெயர்) அனுமதி பெற்றிருந்தனர்.

கருப்புக்கொடி தந்தை பெரியாருக்கென்ன புதுசா? என்ற முறையில் அன்றைய திமுக ஆட்சியில் அதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது.

கருப்புக் கொடி காட்டியவர்கள் கருப்புக் கொடியைக் காட்டி விட்டு மரியாதையாக கலைந்து செல்ல வேண்டியது தானே!

அன்றைய ஏடுகளில் வெளிவந்த செய்திப்படி 50 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் அணி வகுத்துச் சென்ற அந்த எழுச்சிமிகு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின் வீச்சினைக் கண்டு ஆத்திர அலைகளால் அலைக்கழிக்கப்பட்ட ஜனசங்க வெறியன் ஒருவன் தந்தை பெரியாரை நோக்கிச் செருப்பை வீசினான்.

அதற்குள் அறிவுலக ஆசான் சென்ற அந்த வாகனம் சற்று நகர்ந்ததால், அடுத்து "ராமன்" உருவம் கொண்டு செல்லப்பட்ட டிரக்குக்கு நேராக வந்த அந்த செருப் பினைக் கருஞ்சட்டைத் தோழர் ஒருவர் இலாவகமாகப் பிடித்து "எங்கள் தலைவர்மீதா செருப்பு வீச்சு? இதோ பார் எங்கள் சம்பூகனின் தலையைச் சீவிய வருணாசிரம வாதி உங்கள் இராமனுக்குச் சாத்துபடி!" என்று சரமாரியாக சாத்தினார் என்பதுதான் உண்மையாக நடந்தது.

இவற்றையெல்லாம் மறைத்து விட்டு, ஏதோ திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸின் ஆதர்ச  புருசன் ராமனை செருப்பாலடித்தாகவும், விளக்குமாற்றால் பூசை செய்ததாகவும் அபாண்டமாக எழுதியுள்ளது.

இதில் விளக்கமாற்று எங்கிருந்து வந்தது என்றுதான் தெரியவில்லை; ஒருக்கால் அந்தப் பூசையும் நடந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களே என்னவோ! (எழுதியவர் சூத்திரர்தானே!)

இந்தப் பிரச்சினையை 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற  தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிரச்சார சாதனமாகப் பயன்படுத்தினர்.

இராமனை செருப்பாலடித்த திக ஆதரிக்கும் திமுகவுக்கா ஒட்டு என்று கோயில் கதவு அளவு பெரிய சுவரொட்டிகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு நாடு பூராவும் ஒட்டினர். 'துக்ளக்' சிறப்பு இதழை வெளியிட்டது. 'தினமணி' ஏடோ அய்யப்பனை எல்லாம் வேண்டிக் கொண்டது. திமுக தோற்க வேண்டும் என்று.

இவ்வளவுக்கும் ஆச்சாரியார் ராஜாஜியோடு, காம ராசரும் (ஸ்தாபன காங்கிரஸ்) கூட்டு சேர்ந்து தேர்தலைச் சந்தித்தனர்.

தேர்தல் முடிவு என்ன தெரியுமா? இராமனை செருப்பாலடிக்குமுன் சட்டமன்ற தேர்தலில் (1967) திமுகவுக் குக் கிடைத்த இடங்கள் 138 இராமனை செருப்பாலடித்த பிறகு திமுகவுக்குக் கிடைத்த இடங்கள் 183. (1971).

இதுதான் தமிழ்நாடு - அவாளின் குருநாதர்  ராஜாஜியோ இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது என்று (கல்கி 4.4.1971) ஒப்பாரி வைத்தாரே!

இரண்டாவதாக இன்னொரு தகடுதத்தம் அதே நூலில்:

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி யில் ஆர்.எஸ்.எஸ். கட்டவிழ்த்த வன்முறை நடந்த வருடம் தேதி எல்லாம் தெரியாது போலும். அத னால் என்ன நாமே சொல்லுகிறோம். 28.8.1987 அதைப்பற்றி ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் திரு.கே. குமாரசாமி என்ன எழுதுகிறார்?

தம்மம்பட்டியில் விநாயகர்  சதுர்த்தியின்போது விநாயகர் படத்துக்கு செருப்பு மாலையிட்டு விளக்கமாற்று பூசையுடன் புறப்பட இருந்த ஊர்வலத்தைத் துவக்கி வைக்க அங்கு வந்த தி.க. வீரமணி அவர்களின் காரை பள்ளி மாணவர்கள் தட்ட கார் பின் வாங்கி (ரிவர்ஸ் ஆகி) தப்பிச் சென்றது . நீறுபூத்த நெருப்பாக இருந்த ஹிந்து உணர்வு 'ஹிந்து என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து வெல்லுவோம்" என சிறுகின்ற நல்ல பாம்பாய் எழுச்சி பெற்றுள்ள காலம் மாறிவிட்டதா  இல்லையா? என்று தனக்குத் தானே மாலை சூட்டிக் கொண்டு முதுகையும் தட்டிக் கொண்டிருக்கிறார் நூலாசிரியர்.

இதில் கூறப்பட்ட தகவல் எந்த அளவுக்கு உண்மை? இவர் எழுதியபடி தம்மம்பட்டி ஊர்வலத்தில் செருப்பு மாலை அணிவிப்பெல்லாம் ஏதுமில்லை. இது ஆர்.எஸ்.எசுக்கே உரிய அபாண்ட பழி!

வன்முறையாளர் திட்டமிட்டு தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தது உண்மைதான்; பொதுக் கூட்ட மேடையையே கொளுத்தினர் என்றால்  ஆர்.எஸ்.எஸ் காரர்களின் அநாகரிகக் காட்டுமிராண்டிதனத்தின் டிகிரி எத்தகையது என்பது விளங்காமல் போகாது.

இதையெல்லாம் செய்தது பள்ளி மாணவர்களாம் - நம்புங்கள். செய்த செயலுக்கு பொறுப்பேற்கும் அடிப் படை நாகரிகமில்லாத கோழைகளுக்குப் பேனா ஒரு கேடா?

வன்முறையை வீரமென்று எழுதுவது ஆர்.எஸ்.எஸ். அகராதிக்கே உரித்தான அசிங்கமும், ஆபாசமும் ஆகும்.

ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் எழுதியபடி திராவிடர் கழகத் தலைவர் பின் வாங்கிச் சென்று விட்டாரா?

எதிர்ப்பு வரும் பொழுதுதான் எரிமலையாக வெடித்துக் கிளம்புவது என்பது கருஞ்சட்டை ரத்தத்திற்கே உரித்தான வீறுகொண்ட காவிய வரலாறு!

கருஞ்சட்டைத் தோழர்கள் அவசர அவசரமாக மற்றொரு பொதுக் கூட்ட மேடையை உருவாக்கிட, அந்த மேடையில் எந்த நோக்கத்துக்காக தம்மம்பட்டிச் சென்றாரோ அதனை நிறைவேற்றும் வகையில் அந்தப் பொதுக் கூட்டத்தில் வீராவேசமாகப் பேசி முடித்துதான் திரும்பினார் - தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு இன்று வரை வீரிய சத்து சற்றும் குறையாமல் வீறு நடைபோட்டு வரும் மானமிகு  தலைவர் கி. வீரமணி அவர்கள்!  தம்மம்பட்டியில் மட்டுமல்ல மம்சா புரத்தில் (20.7.1982) அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்ட நிலை யிலும் திட்டமிட்டபடி திருவல்லிபுத்தூர் பொதுக் கூட்டத்தில், தன் தீரம்மிக்க உரையை நிகழ்த்தியே விடை பெற்றார். வடசென்னையில் (11.4.1985) அரங்கேற்றப்பட்ட வன்முறையின் போதும், தன் கடன்பணி செய்து கிடப்பதே என்பதை செயலில் காட்டியவர்தான் தமிழர் தலைவர் வீரமணி.

உண்மையான வீரமிருந்தால் உண்மையை எழுதி விவாதப் போர் நடத்த - முன் வரட்டும் - சந்திக்கத் தயார்!

வாலியைக் கொல்ல மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு கோழைத்தனமாக அம்பு  வீசிய ராமனை அவதாரக் கடவுளாகக் கொண்டவர்கள் கோழைத்தனமாக பொய்யையும், புரட்டையும் எடைக்கு எடை சேர்த்து எழுதுவது இயல்புதானே! அவர்கள் என்றென்றும் திருந்தமாட்டார்கள் என்பதற்கான அடையாளதான்

திரு. குமாரசாமியின் கட்டுரை.

இப்பொழுதெல்லாம் தி.க. முன்பு போல் செய்ய முடியாதாம் - அப்படியொரு அற்ப ஆசை! 2015ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) தாலி அகற்றும் நிகழ்ச்சியையும், 'மாட்டுக் கறி விருந்தையும் தடுக்க இதே ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள், கும்பல் ஆட்ட பாட்டம் போட்டார்களே - ஏன் நீதிமன்றம் கூட சென்றார்களே - பெரியார் திடலை முற்றுகையிடு வோம் என்று முண்டா தட்டினார்களே. அவற்றை யெல்லாம் தூசாகத் தட்டி வெற்றிகரமாக நினைத்ததை செய்து முடித்துக் காட்டியது திராவிடர் கழகம் என்பதை மறக்க வேண்டாம் மண்ணுருண்டைகளே!


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner