எழுத்துரு அளவு Larger Font Smaller Fontகருஞ்சட்டை

ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதத்தில் வெளியாகியுள்ள கேள்வி - பதில்களுக்கு நமது சாட்டையடிகள் இங்கே.

கேள்வி 1: யாக குண்டத்தில் பட்டுப்புடவைகள், பழங்கள், நாணயங்கள் ஆகியவற்றைப் போடுவதற்கு பதிலாக  அவைகளை ஏழைகளுக்கு அளிக்கலாம் அல்லவா?

விஜயபாரதம் பதில்: மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடத்தட்டும், அது அவர்களின் நம்பிக்கை. நீங்கள் நடத்தும் யாகத்தில் அவைகளை போடாமல் தானம், அன்னதானம் செய்யுங்களேன்.
நமது சாட்டை

பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை?  என்று கேட்பதுபோல் இருக்கிறதா இல்லையா  இந்த பதில்!

கேட்ட கேள்வி என்ன? யாகக் குண்டமான நெருப்பில் பட்டுப்புடவை, பழங்களைப் போடுவது சரியா என்பதுதான். ஆம்! சரி என்று விஜயபாரதத்தால் நியாயம் கற்பிக்க முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு அப்படியே ஆமாம் சாமி போடும் காலமல்லவே இது.

உண்ண உணவும், உடுக்க உடையும் அற்று அல்லல் படும் மக்கள் இன்னும் நாட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள்.  20 கோடி மக்கள் நாள்தோறும் இரவு உணவின்றி படுக்கைக்குச் செல்லுகின்றனர். அப்படி இருக்கும் போது மத மூட பக்தியினால் உணவுப் பொருள் களை நெருப்பில் போட்டுக் கரியாக்குவது முட்டாள் தனமும் - மத மூர்க்கதனமும்தானே. அதை ஒப்புக் கொள்ளும் உள்ளம் கிடையாதே. அதனால் ஏதாவது சொல்லி தப்பிக்க வேண்டுமே என்பதற்காக நீங்கள் வேண்டுமானால் ஏழைகளுக்கு தானம் செய்ய லாமே என்று திசை திருப்புகிறது ஆர்.எஸ்.எஸ். வார ஏடு.

ஒரு நல்லரசு என்றால் உணவுப் பொருள்களை பாழ்படுத்தும் இந்த கிறுக்கர்களை தண்டிக்க வேண்டுமே.

கேள்வி 2: தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நின்றால் தான் தேசபக்தியா என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதே!

பதில்: அது சரி நீதிமன்றங்களில் நீதிபதிகள் உள்ளே வரும் போது எழுந்து நின்றால்தான் மரியாதையா என்று சிலர் கேட்கக்கூடுமே.

நமது சாட்டை

இந்த நியாயம் - தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது காஞ்சி ஜூனியர் சங்கராச்சாரியார் விஜேயந்திர சரஸ்வதி குத்துக்கல்லாக உட்கார்ந்து இருந்தாரே அந்த இடத்தில். அதைப் பற்றி எழுத என்னத் தயக்கம்?

விஜயபாரதத்தின் பேனாவுக்கு சுளுக்கு ஏற்பட்டு விட்டதோ!

கேள்வி 3: நம்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி வந்த பிறகுதான் கல்வியில் முன்னேற்றம் என்கிறார்களே?

பதில்: ஆங்கிலேயன் வந்து சுமார் 300 வருஷமாச்சு. ஆனால் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்ம முப்பாட்டன் தஞ்சை பெரியகோயில் போன்று ஏராளமான கோயில்களை கட்டினார்களே அவர்கள் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார்கள்?

நமது சாட்டை

ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வியை கொடுக்காதே என்று சொன்ன மதம், உலகத்திலேயே இந்துமதம்தான்! சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே. அவன் படித்தால் நாக்கை அறு, கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று. படித்து வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்று எந்த ஆங்கிலேயேனும் (கிருத்தவனும்) சொல்ல வில்லை. அர்த்தமுள்ள இந்துமதம்தானே சொன்னது.  உண்மையை சொல்லப்போனால் கிருத்துவன் இந்தியா வெங்கும் நுழைந்து கல்வி, மருத்துவம் இரண்டையும் வளர்த்தான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாயிற்றே!

கோயில் கட்டினான் என்று மூக்கை சொரிந்து விடுகிறதே விஜயபாரதம் - அந்த சோழ மன்னன்கள் யாருக்கு கல்வியை கற்பித்தார்களாம்?

11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தெ.ஆ. மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக்கழகம் கண்டனர்.  அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. உபகாரச் சம்பளம் வேறு தரப்பட்டது. 45 வேலி நிலம் அக்கல்லூரிக்கு அளிக்கப் பட்டது. வேதங்களும், சமஸ்கிருத இலக்கணங்களும், ஆரியருடைய மீமாம்ச வேதாந்த தத்துவங்களுமே அங்கே சொல்லித் தரப்பட்டது.பாண்டிச்சேரிக்கு அருகே திருபுவனத்திலும் சோழ அரசர்கள் ஒரு கல்லூரியை ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்கும் அளிக்கப்பட்டது. 260 மாணவர்களும், 12 ஆசிரியர் களும் அங்கு இருந்தனர். இதிகாசங்களும் மனுதர்ம சாஸ்திரங்களும் அங்கு கற்பிக்கப்பட்டன. 12ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் திருவாவடுதுறையில் ஒரு கலை மன்றம் கண்டனர். அங்கு வடமொழியில் உள்ள சாரக சமிதை, அஷ்டாங்க இருதய சமிதை இரண்டு பாடங்களும் கற்பிக்கப்பட்டன. (ஆர்.சத்தியநாதய்யரின் இந்திய வரலாறு) சோழ அரசர்கள் காலத்தில் கல்வி பார்ப்பனர்கள் வயிற்றில் அறுத்து வைக்கப்பட்டது என்பதுதானே உண்மை. வாள் எடுத்தால் வைரிகளை வீழ்த்தும் தமிழ் வேந்தர்கள் தர்ப்பைப்புல்லுக்கு முன் மண்டியிட்டனரே. இதை எடுத்துச் சொன்னால் குருமூர்த்தி அம்பிகள் குலக்கல்வி விஜய பாரதங்கள் கோ என்று கதறுவது ஏன்?

கேள்வி 4: ‘தீபாவளி’ ஆரியன் பண்டிகை என்கிறார்களே தி.க.வினர்?

பதில்: அவர்கள் அகராதியில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் எல்லாம் தமிழன் பண்டிகை போலும்.

நமது சாட்டை

ரம்ஜான், கிறிஸ்துமஸ் கொண்டாடும் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழர்கள் தான். உங்கள் சீக்கு பிடித்து இந்துமதம் இந்நாட்டிற்குரிய மக்களைப் பார்த்து தீண்டாதே- நெருங்காதே -படிக்காதே என்று மனித வெறுப்பை விதைத்தது. அவன் பார்த்தான்; நம்மை தீண்ட மறுக்காத - நமக்குக் கல்வி கொடுக்க தயங்காத மதத்தை, மார்க்கத்தை தழுவிக் கொண்டான். அந்த மார்க்கத்தின் படி அந்தப் பண்டிகைகளைக் கொண்டாடு கிறான்.

ஆனால் விஜயபாரதம் சொல்லும் தீபாவளி தமிழ்நாட்டிற்குள் எப்போது அடியெடுத்து வைத்தது?  நாயக்க மன்னர்கள் காலத்தில் தானே திணிக்கப்பட்டது.

“தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த நாளன்று மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை  -செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் 16ஆம் நூற்றாண்டில் இருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக்  கொண்டாப்பட்டு வரும் பெருநாளாகும். இது பற்றி பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் இருந்ததில்லை என்கிறார் அ.கி.பரந்தா மனார்.” (நூல்: மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம் 433 - 434)

இரண்யாட்சன் என்பான் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான் என்றும் மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து கடலுக்குள் குதித்து பூமியை மீட்டான் என்றும் - பூமாதேவிக்கும், மகாவிஷ்ணுவாகிய பன்றிக்கும் காதல் பீறிட்டு கலவியில் ஆரம்பித்து நரகாசுரன் என்ற குழந்தை பிறந்ததாகவும், அந்த நரகாசுரன், பூதேவர் களாகிய பிராமணர்களுக்குத் தொல்லை கொடுத்தான் என்றும், பூதேவர்களான பிராமணர்களை காப்பாற்றிட மகாவிஷ்ணுவும், அவன் மனைவியும், நரகாசுரனை எதிர்த்து சண்டை போட, மகாவிஷ்ணுவாகிய கிருஷ்ண பரமாத்மா மயக்கம் போட்டு விழுந்தான் என்றும், அவன் மனைவி சத்யபாமா அம்பை வீசி நரகாசுரனைக் கொன்றதாகவும், அப்படிக் கொல்லப் பட்ட நரகாசுரனின் விருப்பப்படி அந்நாள் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகவும், கொஞ்சமும் வெட்கமின்றி கதை எழுதி வைத்ததோடு அதை பெருமையாகப் பேசுவதற்கு வெட்கமில்லையா விஜயபாரதமே!

கேள்வி 5: சுகிசிவம் காஞ்சி பெரியவரை, ஈ.வெ.ராவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளாரே?

பதில்: அவர் அப்படி பேசினாரா... என்ன பேசினார் என்று உறுதியாக தெரியாது;  ஒருவேளை பேசியிருந்தால் ‘யானைக்கும் அடி சறுக்கும்‘ என்று  எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

நமது சாட்டை

உண்மைதான் ‘சுகி’ சிவம் இந்த இருவரையும் ஒப்பிட்டு பேசியிருக்கக் கூடாததுதான். பிறவியில் பேதம் பேசும், வருணாசிரமம் பேசும் சங்கராச்சாரி எங்கே? பேதம், எந்த வடிவத்திலும் கூடாது, அனுமதிக்க முடியாது என்று மானுடத்தின் மாண்பை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார் எங்கே? நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று கூறும் மனிதத்தன்மைக்கு எதிரான சங்கராச்சாரியார் எங்கே?  தம் அறக்கட்டளை மூலம் கல்வி நிறுவனங்களை மருத்துவமனைகளை ஏற்படுத்தி, அவற்றை அனைத்தும், அனைவருக்கும் என்னும் சமத்துவ சமதர்ம கோட்பாட்டைப் பரப்பிய படி வாழ்ந்து காட்டிய தந்தைபெரியார் எங்கே? இந் நிலையில் இருவரையும்  ஒப்பிட்டு சுகிசிவம் அவர்கள் பேசியது தவறுதான். நாமும் ஒப்புக்கொள்ளவே செய்கிறோம். (இதில் ஒன்றிலாவது விஜயபாரதத்துடன் ஒத்துப்போனால் விஜயபாரதக் கூட்டத்திற்கு சந்தோசம் ஏற்படக்கூடுமே)

கேள்வி 6: கேரளத்தில் கம்யூனிஸ்ட் அரசு

கோயில்களில் தலித்துகளை அர்ச்சகர்களாக நியமித் துள்ளது பற்றி?

பதில்: அர்ச்சகர்களாக நியமித்தது இருக்கட்டும், அப்படியே இரண்டு தலித் சகோதரர்களை அவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பிலோ, அகில இந்திய கமிட்டியான பொலிட் பீரோவிலோ நியமிக்கட்டுமே பார்க்கலாம்.

நமது சாட்டை

பார்ப்பனர்களிடத்திலும் அவர்களின் பாஜகவிலும் சங் பரிவார்களிடத்திலும்சரி கேட்ட கேள்விக்கு நேரிடையான பதில் கிடைக்கவே கிடைக்காது. திசை திருப்புவதுதான் அவர்களின் பூணூல் தனத்திற்கு உரித்தான “திருக்கல்யாண” குணம்.

கேரளத்தில் தலித்துகளை அர்ச்சகர்களாக கம்யூ னிஸ்ட் அரசு நியமித்ததை விஜயபாரதம் வரவேற் கிறதா? எதிர்க்கிறதா? நாணயமான பதில் அளிக்க வக்கில்லாமல், வக்கணை வாய்க் கோணல்கள் எதற்கு?

தலித்துகள் கட்சியின் தலைமைப் பொறுப்பிலே வருவதற்கு  கம்யூனிஸ்ட் கட்சியில் சட்டத் தடையோ, விதிமுறைகள் தடையோ கிடையாதே, தலைமைப் பதவிக்கு பொருத்தமான ஒருவர், தன் உழைப்பாலும் உண்மையான விசுவாசத்தாலும் தகுதியாலும் வருவதற்கு கண்டிப்பாக கதவுகள் திறந்தே இருக் கின்றன. ஆனால் விஜயபாரதத்தின் இந்து மதத்தில் இந்நிலை உண்டா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று பயிற்சி கொடுத்து ஆகமங்களையும், மந்திரங்களையும் கற்பித்து தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்ற ஹிந்துக்களை அர்ச்சகர் ஆக்கினால் ஆகமங்கள் தடுக்கின்றன என்று உச்சநீதிமன்றம் வரை சென்ற உச்சிக்குடுமிகளை விஜயபாரதங்கள் கண்டித் ததுண்டா - தடுத்ததுண்டா?

பா.ஜ.கவே பார்ப்பனீயத்தின் மறு பதிப்புத்தானே - அதனிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner